எஸ்.பொ. என்றோர் இலக்கிய ஆளுமை





எஸ்.பொ. என்று பரவலாகத் தெரியப்பட்டிருக்கும் திரு.எஸ்.பொன்னுத்துரையின் பவள விழா ஆண்டு இது. பவள விழா மலர் வெளியிடப்பெற்றிருக்கிறது. தமிழ் நாட்டில் கடந்த மாதமளவில் விழாவெடுத்துக் கொண்டாடப்பட்டுமிருக்கிறது. நல்லது. கலாநிதி கா. சிவத்தம்பியின் பவள விழாக் கொண்டாட்டங்களினைத் தொடர்ந்து இது வந்தமை சந்தர்ப்பவசமானதுதான். எனினும், இந்தச் சந்தர்ப்பம் ஒரு ஒழுங்கில் அமைந்திருந்தது என்பதுதான் இங்கே விசேஷம்.

இது குறித்து ஓர் அலசலைச் செய்யவேண்டியது முக்கியம், ஆனாலும், எஸ்.பொ.வின் இலக்கியத் தகைமைகளை வரையறை செய்வதற்கான ஒரு பின்புலத்தை அமைப்பதே இவ் உரைக்கட்டின் நோக்கமாக இருக்கும். அதாவது, இது தன்னனுபவம் சார்ந்து வெளியிடப்பெறுவது.

ஆம், சிறிதுகாலமெனினும் எஸ்.பொன்னுத்துரையோடு எனக்கு அத்யந்தமான நட்பு இருந்தது. அதன் பகைப்புலத்திலேயே என் எழுத்தினைத் தொடர்வேன்.

நான் ‘இலக்கு’ சிற்றிதழை தமிழ்நாட்டில் இருந்தபோது ஆரம்பிக்கிறதுக்கிருந்த சில நாட்களின் முன்னதாகத்தான் 1997 இல் அவுஸ்திரேலியாவிலிருந்து எஸ்.பொ. தமிழகம் வந்தார். அந்த இதழின் நேர்காணல் அவரினதாகவே இருந்தது. அன்றிலிருந்துதான் அவரதும் என்னதும் பழக்கம் தொடங்கியது.

அதுவரை அவரது பழைய வாசகனாக மட்டுமே இருந்த நான், அவரது நட்பு வலயத்துள் வந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. வாசகனாக இருந்தவன் சக எழுத்தாளனாகப் பழக ஆரம்பித்தது எனக்கு மகிழ்ச்சி மட்டுமில்லை, பெருமையாகவும் இருந்தது.

நான் அவரை வாசித்த காலம் சிரமங்களூடானது. ஏனெனில் ஊரில் அவரை வாசிக்க ஆரம்பிக்கிற காலகட்டத்தில் எனக்கு மூத்தவர்கள் அவரை விருப்பத்தோடு வாசித்துக் கொண்டிருந்தார்கள். நூலகத்துக்கு வரும் வார மலர்களில் எஸ்.பொ.வின் எழுத்து வந்திருந்தால் இரண்டாவது தகவலாகத்தான் எமக்கு அதுபற்றிய செய்தி கிடைக்கும். ‘டேய், இண்டைக்குப் பேப்பரிலை பொன்னுத்துரையின்ரை சிறுகதை வந்திருக்காம்’ என்று ஒரு அண்ணன் சொல்லிவிட்டுப் போவான். நாங்கள் விழுந்தடிச்சுகொண்டு வாசிகசாலை போனால் ஏதாவது ஒரு பெரிசு அந்தச் சிறுகதையை அல்லது சிறுகதைப் பக்கத்தை வாசிததுக்கொண்டிருக்கும். அதற்கு முறை வைத்துக் காத்திருந்து அவரது கதையை வாசித்தவன் நான்.

‘தீ’ நாவலை ஒழித்தொழித்துப் படித்தது இன்றும் ஞாபகமாகவே இருக்கிறது. அது அறுபதுக்கள் என்பதை இப்போது நினைத்துப் பார்க்க மலைப்பாக இருக்கிறது.

எஸ்.பொ.வை விமர்சிக்க முடியும். விமர்சிக்கவும் வேண்டும். ஆனால் அதை ஒரு விமர்சக தளத்திலிருந்து செய்வதைவிட, வாசக தளத்திலிருந்து செய்வதே பொருத்தமாக, இப்போதைக்கேனும், இருக்குமென நம்புகிறேன்.

நான் அவரை வாசிக்க ஆரம்பித்த காலத்தில் பெரும் கலகக்காரரென அவர் பரவலாக அறியப்பட்டிருந்தவர். அது எஸ்.பொ.வுக்கு பிடித்தமான ‘சொல்’ என்பதையும் நான் அறிவேன். ஆனால் கலகத்திலுள்ள முக்கியமான தன்மை என்னவெனில், அதுவே உண்மையாக இருப்பதில்லை என்பதுதான். அது உண்மையைக் கண்டடைவதற்கான ஒரு உந்துதலை உண்டாக்குமே தவிர, அதுவே உண்மையாக இருப்பதில்லை என்பதுதான் அதிலுள்ள சூட்சுமம்.

‘கலகம் பிறந்தால் வழி பிறக்கும்’ என்று ஊரிலே ஒரு சொலவடை உண்டு. ‘நாரதன் கலகம் நன்மையில் முடியும்’ என்ற சொலவடை, அது எவ்வளவுதான் ஆசாடபூதித்தனமானதாக இருந்தாலும், அதனூடாக மக்களிடையில் வழங்கி வந்த அர்த்தம் ஆய்ந்துபார்க்க வேண்டியது. இவ்வாறிருக்கையில், கலகத்தை உண்மையென்று நம்பியதன் விளைவே, எஸ்.பொ. பின்னாளில் அடையாளம் மறந்தவரானதற்குக் காரணம் என்பது இப்போது புரிகிறது. கலகத்தின் மூலம் உண்மையை அறிவதற்குப் பதிலாக, கலகத்தையே கோஷமாக உச்சாடனப்படுத்தியதன் விளைவு அது. ‘நற்போக்கு இலக்கியக் கொள்கை’ அவர் அதை நிறுவ முனைந்த காலத்திலேயே உயிரோடு இல்லை என்பது எவ்வளவு துர்லபம்! அது ஒரு வெறும் கலகத்தின் எதார்த்தம்.

அவரது கலகக் குரலுக்கு அடுத்ததாய், அவரது கம்யூனிச எதிர்ப்பு முக்கியமானது. தான் இன்னுமே ஒரு மார்க்சீயன்தான் என அவர் இப்போதும் கூறுகிறார். அதை நாம் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆனால் அவரது கம்யூனிச எதிர்ப்பு கவனம் பெறவேண்டியது. ஒருவகையில் அது கலாநிதிகள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றோருக்கு எதிரானதாக மட்டுமே இருந்ததென்று கொள்ளமுடியும். ஒரு அய்ம்பது வருஷங்களாக இரண்டு கலாநிதிகளையும் வைத்து வாங்குவாங்கென்று வெளுத்து வாங்குவதற்கு வேறென்ன காரணமாம்? தாம் போட்ட வட்டத்துக்கு வெளியே பார்க்க மறுத்திருந்தவர்கள்தான் கலாநிதிகளும். ஆனால் இதையே தனக்கான பலமாக எஸ்.பொ. கொண்டது தவறான நிலைகளை அடையவே உதவியிருக்கிறது.

இந்த மனநிலைப்பாட்டிலிருந்து எஸ்.பொ. இன்றுவரை மாறவே இல்லை. மாறாதது மட்டுமில்லை, அவர் வளராதும் இருந்துவிட்டார். அவர் கேட்பது தனக்கானதைவிடவும் அதிகமாகவே என்றும் இருந்திருக்கிறது. இன்றும்கூட நிலைமை அதுதான். அவரது இலக்கிய வழியைப் பின்பற்றும் ஒரு படைப்பாளிகூட இன்று இல்லாதுபோனது அது காரணமானதாயே இருக்கமுடியும்.

அவரை ஒதுக்கிய கலாநிதிகளுக்கு அல்லது அவர் ஒதுக்கிய கலாநிதிகளுக்கு, அவர்களது ஆய்விலிருந்து சற்று விலகியேனும் வளர்ந்த ஒரு வட்டம் இருக்கிறது. இது எதைச் சொல்கிறது என்பது ஒதுக்கக்கூடிய அம்சமில்லை.

எஸ்.பொ. கை வைக்காத இலக்கியத் துறை இல்லை. நாவல், சிறுகதை, நாடகம், செய்யுள், கட்டுரை, மொழிபெயர்ப்பு  என பல்வேறு துறைகளில் கால்வைத்தவர் அவர். ஆனால் இவற்றில் பலவற்றில் அவரில்லையென்பதைக் காலமே காட்டியிருக்கிறது.

இவ்வளவும் ஒருவகையில் அவரது பலஹீனத்தின் பக்கமெனக் கொண்டால், அவரது பலமான பக்கம் அவர் அதிகமும் அக்கறைப் படாத எழுத்துச் சார்ந்ததாகவே இருக்கிறது. அதுதான் சிறுகதைத் துறை. எத்தனை கலாநிதிகள் வந்தாலும்தான் அந்த அடையாளத்தை அவரிடமிருந்து அழித்துவிட முடியாது.

‘தீ’ நாவல் இன்றைக்கு இல்லை. அது வெளிவந்த காலத்தில் ‘எழுத்து’ சஞ்சிகையில்கூட வாத-பிரதிவாதங்கள் பெரிதாக நடந்தன. மு.த., பிரமிள் போன்றவர்கள் அதில் பங்கு பெற்றிருந்தார்கள். அது நாவலாக வளரவில்லையென்பதை இத்தனை ஆண்டுகள் கழித்து அண்மையில்தான் நான் புரிந்துகொண்டது. அது நாவலாகவே இருக்கட்டும். ஆனால் தமிழ்ப் பரப்பில் அது நிலைக்கவில்லை என்பதுதானே நிஜம். கு.ப.ராஜகோபாலன் அளவுக்குக்கூட அதில் காம உணர்ச்சி கிடையாது. அதிலுள்ளதெல்லாம் வெறும் பாலின அவதி.

ஆனாலும் ஈழத் தமிழ்ப் பரப்பில் அது ஓரிடம் பெற்றிருக்கிறது. சி.வைத்தியலிங்கத்தினை மேவியும். எப்படி என்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. இதெல்லாம் இலக்கிய அரசியல். அதனால் அடுத்த கட்டத்துக்கு நாம் தாவலாம்.

‘முறுவல்’ தமிழ்நாட்டில் ஏதோ ஒரு வங்கி கொடுக்கும் பரிசினைப் பெற்ற நாடக நூல். அதுதான் முறுவலை வருவிக்கின்றதே தவிர, அதன் கட்டமைப்பல்ல, உள்ளுயிர் அல்ல என்பது நினைத்துப் பார்க்கவேண்டியது.

ஆனால் ஒரு காலத்தில் முடிசூடா மன்னன்போல் எழுத்துத் துறையில் விளங்கிய எஸ்.பொ., சிறுகதையில் சாதித்தது பிரமாண்டம்.

அவரது ‘தேர்’ சிறுகதை தமிழுள்ளளவும் நிலைக்கக்கூடியது. இன்னும் ஒரு சிறுகதை, ‘ஊழி’ என நினைக்கிறேன், அது பாதித்த அளவு ஈழத்து எந்த எழுத்தாளரின் எந்தச் சிறுகதையும் என்னைப் பாதிக்கவில்லை. இப்போதும் ஊழிச் சிவனின் ஊழிக் கூத்து என் செவியில் அலைமோதிக்கொண்டே இருக்கிறது. அந்த மொழியும், வசனச் சீரும் காலமுள்ளளவும் என்னில் அழியாது.

இந்தவகையில் பார்க்கப்போனால் அறுபதுக்கள் எஸ்.பொ.வின் தசாப்தம் ஈழத் தமிழிலக்கியத்தில். அவர் இன்னும் ஓரிரு தசாப்தங்களைத் தனக்காகச் சுவீகரித்திருக்கவேண்டியவர். ஆனால், நடக்காது போய்விட்டது. அது ஈழத் தமிழிலக்கியத்தின் துர்ப்பாக்கியமெனவே சொல்லத்தோன்றுகிறது.

000


தாய் வீடு 2006

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்