படைப்பினூடாக படைப்பாளியை அறிதல்


படைப்பினூடாக படைப்பாளியை  அறிதல் :
மு.த.வின்  படைப்புக்கள்   குறித்து 


ஈழத் தமிழிலக்கியத்தில் மு.த. என அழைக்கப்படும் மு.தளையசிங்கத்தின் இடம் நாற்பதாண்டுகளின் முன்னாலேயே வாசகப் பரப்பில் நிர்மாணம் பெற்றுவிட்டது. ஆனாலும் அது ஈழத்து இலக்கிய வரலாற்றில் போதுமான அளவு பதிவாகவில்லையென்பது தீவிர இலக்கிய வாசகர்களிடையே கடந்த சில பத்தாண்டுகளாக நிலவி வரும் மனக்குறையாகும். ஒருவகையில் மு.த.வின் பெயர் ஓர் இருட்டடிப்புக்கு உள்ளாகும் நிலைமையையும் அடைந்து கொண்டிருப்பதாய் அவர்கள் கருதினார்கள். இதற்கெதிரான முன்முயற்சிகள் சிறுபத்திரிகைகள் அளவிலேயே முதன்முதலில்  மேற்கொள்ளப்பட்டன.

‘அலை’ பத்திரிகை இதை பலதடவைகளில் முன்மொழிந்திருக்கிறது. அதன் ஆரம்ப கால ஆசிரியர்களில் ஒருவரான அ.யேசுராசா காட்டிய அக்கறை இவ்விஷயத்தில் முக்கியமானது. இவரே மு.த.வின் எழுத்துக்களை முதன்முதலாக சுந்தர ராமசாமியிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர். இது நடந்தது எண்பதுகளின் ஆரம்பத்தில். அதன் உடனடியாக சுந்தர ராமசாமியும் மு.த.வின் எழுத்தாளுமை குறித்து ஒரு கட்டுரை எழுதினார். அது அவர் ஆசிரியராக இருந்த காலாண்டிதழ்க் ‘காலச் சுவடு’ இதழில் வந்தது என ஞாபகம். அது ஒரு தனி பிரசுரமாக  பின்னால் வெளியிடப்பட்டது.

ஒரு வரலாற்றுத்  திசை மாறற் காலகட்டத்தில் அதற்கு உந்துவிசை தரக்கூடிய எழுத்துக்கள் போற்றப்படுவதும், வளர்க்கப்படுவதும் அவசியமான காரியங்களே. இடதுசாரி அரசியல் இயக்கத்தின் ஒரு முன்னணிப் போராளியாக முற்போக்கு இலக்கியம் வளர்ந்ததின் தாற்பரியம் இதுதான். பேராசிரியர்கள் கா.சிவத்தம்பியும், க.கைலாசபதியும் அதன் விமர்சனப் பிதாமகர்களாய் இருந்தார்கள் என்பதுதான் இக் காலகட்டத்திய விஷேசம். அவர்கள் முற்போக்குச் சார்ந்த எழுத்தாளர்களைத் தூக்கலாகப் பேசினார்களே தவிர, அத் தளத்திலிருந்து விடுபட்டிருந்த அல்லது மாறான படைப்பாளிகளை முற்றுமுழுதாய்ப் புறக்கணித்தார்கள் என்பது விசாரணைக்குரிய விவகாரம்.

இன்று பேராசிரியர் கா.சிவத்தம்பி மீது எஸ்.பொன்னுத்துரை சாட்டும் தன்னை முற்றுமுழுதாக அவர் புறக்கணித்தார் என்ற அபவாதம் உண்மையற்றது என்பதே எனது கருத்து. எஸ்.பொ. இக் குற்றச்சாட்டினைத் தெரிவித்த அக் குறிப்பிட்ட நேர்காணல் ஒரு சஞ்சிகையில் வெளிவந்ததன் பின்னர், உடனடியாகவே ஒரு தேடலில் இறங்கியபோது, அவர் மீதான மதிப்புவாய்ந்த என் மதிப்பீட்டளவுக்கு கா.சிவத்தம்பியும் கூறிவிட்டிருந்ததை அறிய முடிந்தது. மு.த. விஷயத்திலும் இது உண்மையே. ஆனாலும் மு.த.வின் படைப்பாளுமைக்கு மேலான விஷயங்களிலும் அவரது மேன்மையை நிலைநாட்ட வருமிடங்களில் முரண்களே எஞ்சும்.

மு.த.வின் படைப்பாளுமை தமிழ்நாட்டில் தெரிய வந்த எண்பதுகளின் ஆரம்பத்தில், அது இன்னொரு படைப்பாளியான சுந்தர ராமசாமி மூலமாகவே வெளிவர முடிந்திருந்தது. அது ஒரு சரியான அணுகுமுறையும்தான். ஆனால் இரண்டாமாயிரத்தின் முதல் தசாப்தத்தின் முற்பகுதியில் ஊட்டியில் மு.த.வின் படைப்புகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றபோது அதில் வெளியிடப்பெற்ற கருத்துக்கள், சுந்தர ராமசாமி வெளியிட்ட கருத்துக்களின் அணுகுமுறை சார்ந்ததாய் இருக்கவில்லை.

2002இல் இக் கருத்தரங்கு நடைபெற்றபோதுதான் ராஜநாயஹத்துக்கும் கருத்தரங்கு அமைப்பாளர்களுக்கும் இடையே நடைமுறை குறித்தான பிரச்சினை தோன்றியது. இணைய தளங்களில் அது குறித்த விவாதங்கள் நடந்தன. ஒருவகையில் நான் எழுதிய கட்டுரையொன்று அவ்விவாதங்களின் முடிவுப் புள்ளியானதெனினும், சில நண்பர்களை நான் இழக்க நேர்ந்ததின் காரணமாயும்  அது  அமைந்தது. கருத்தரங்கின் நடைமுறை ஒழுங்கு குறித்தே ராஜநாயஹத்துக்கும் அமைப்பாளர்களுக்கும் இடையே முரண் தோன்றியிருப்பினும், விவாதம் வேறு தளத்துக்கு நகர்ந்தது துர்ப்பாக்கியம். அதை அப்போது காலச்சுவட்டோடு- சு.ரா.வோடும்தான்- பேதப்பட்டிருந்தவர்களும் விரும்பவில்லை என்பதே நிஜம். ஆனால் பிரச்சினை அதுவல்ல, என்னளவில்.

மார்க்ஸீயம் ஒரு நவீன சிந்தனையாக அரசியல் சமூக தளத்தில் உலவ ஆரம்பித்த கணத்தில் ஒப்பதும் மிக்கதும் இல்லாததாகத்தான் இருந்தது. அது உடனடியாக அனைத்துச் சிந்தனையாளர் படைப்பாளிகளினதும் ஆதர்ஷத்தைப் பெற்றது. முதல் சோஷலிச குடியரசான சோவியத்துக்கு எதிரான அமெரிக்காவின் கருத்தியல் யுத்தத்தின் வயது சுமார் எழுபத்தைந்து ஆண்டுகள். அது ஜெயம் கொண்டதா இப்போதும் என்பது விவாத தளத்தில் நிச்சயப்படுத்தப் படுவதற்குரியதல்ல. ஆனால் இந்த அலையோடு தமிழ்நாட்டில் ஒரு மாயைக் கருத்துலகு விரிந்தது. அந்த வலையின் ஒரு கயிறாகத்தான் இலக்கியத் துறை கருதப்பட்டது. அதற்காதரவானவர்கள் நிச்சயமாக நன்றாகவே உழைத்தனர். இந்த உழைப்பின் அடையாளம்தான் மு.த. ஊட்டி கருத்தரங்கு. இது கைலாசபதியை அவர் தளத்திலிருந்து இறக்குவதற்கான முயற்சியுமாகும்.

கைலாசபதி-சிவத்தம்பி காலம்வரையில் பல்கலைக்கழக மட்டத்தில் மார்க்ஸீய விமர்சன முறைமை ஓர் அங்கீகரிக்கப்பட்ட விமர்சன முறையாக ஆகவில்லை. தமிழ்நாட்டில்கூட. நா.வானமாமலை, சிதம்பர ரகுநாதன் போன்றோர் ஏற்கனவே இவ் விமர்சனத் துறையில் ஈடுபட்டிருந்தாலும், பல்கலைக்கழக மட்டத்துக்கு மார்க்ஸீய விமர்சனத்தை இவர்களாலும் முன்னெடுக்க முடியவில்லை. சமூக நிலைப்படும் அந்த விமர்சன முறை பெருவழக்காய் ஆனதின் பின்னரே சிதம்பர ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’, பொன்னீலனின் ‘கானல்’ போன்றன தகுந்த இடம் பெற்றன எனச் சொல்லல்வேண்டும். இதற்காக தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ளை அவர்கள் புறக்கணித்தார்கள் என்றில்லை. அவர்கள் கல்கியையும், நா.பார்த்தசாரதியையும், சாண்டில்யனையுமே ஒதுக்கினர். இந்த அளவுவரை தீவிர இலக்கியவாதிகளுக்கும் உடன்பாடாகவே இருந்தமை நிஜமா, இல்லையா? ஆனாலும் இந்த விமர்சன ஆளுமைகள் நுண்ணரசியல் சார்ந்த இலக்கிய உலகில் பிரியப்படத் தக்கதாய் இருக்கவில்லை. எனவே மு.த., எஸ்.பொ. பிரச்சினை கிளப்பப்பட்டது.

மு.த.வின் முறை முடிய, எஸ்.பொ.வை அவர் தளத்துக்கு மேலாகத் தூக்குவதற்கும் ஒரு முயற்சி நடந்தது. ஆனால் அது செயங்கொள்ளவில்லை. ஈழத்து இலக்கிய வரலாற்றில் மு.த.வும், எஸ்.பொ.வும் ஒதுக்கப்பட்டதாய்க் குரல் கொடுத்தவர்கள், ஒட்டுமொத்த தமிழிலக்கிய வரலாறு இப் படைப்பாளிகளை ஒதுக்கி தமிழகத்தில் எழுதப்பட்டிருப்பதற்கு என்ன சொல்லப்போகிறார்கள்?

என்னுடைய விவாதமெல்லாம் இந்த வலைகளின் பின்னணி இல்லாமலே மு.த.வும், எஸ்.பொ.வும் சிறந்த ஆளுமைபெற்ற படைப்பாளிகள் என்பதுதான். அவ்வகையில் சிறுகதைத் துறையில் மு.த.வின் பங்கை விசாரிப்பதே என் முயற்சி. ஆனாலும் அதற்கான விரிந்த தளம் இதுவல்ல என்பதையும் நானறிவேன். ஒரு மேலோட்டமான பருவரைக் காட்சியை முன்வைப்பதே இங்கு எனக்கு முடியும்.

ஒவ்வொரு படைப்பிலும் ஒரு நுண்ணரசியல் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது நூறு வீதமான உண்மை. தான் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என படைப்பாளி எவ்வளவுதான் அறுதியிட்டுரைத்தாலும் இந்நுண்ணரசியல் அப்படைப்பில் இருக்கவே செய்யும். ஒரு படைப்பைக் கட்டவிழ்த்தல் மூலமாகவே இது கண்டுணரப்படுகிறது.

ஆரம்ப காலங்களில் ‘புதுயுகம் பிறக்கிறது’ சிறுகதைத் தொகுப்பில் தொழுகை, கோட்டை, புதுயுகம் பிறக்கிறது, இரத்தம் போன்றவை என் விருப்பத்துக்கு இசைந்த வரிசையில் நல்ல கதைகளாக இருந்தன. இன்று இக் கட்டுரைக்காகவே ஒரு மீள்வாசிப்பைச் செய்தபோது இரத்தம், தொழுகை, புதுயுகம் பிறக்கிறது, கோட்டை என்று அதன் வரிசைக் கிரமம் மாறிவந்தது. அது இயல்பானதுதான். என் வளர்ச்சியில் இந்த வாசிப்பும், அதன் வரிசைக் கிரமும் மாறுவது தவிர்க்கவியலாத அம்சம்.

‘தொழுகை’ சமூக அசைவியக்கதின் மீது விழுகிற அடியாகக் கருதப்பட முடிந்தால், ‘இரத்தம்’ அதன் அசைவிறுக்கத்தில் விழுகிற அடிதான்.

தொழுகை அதன் ஆரம்பத்தில் அரசு வெளியீடாக வந்தபோது கொண்டிருந்த பிரதிக்கும், அது க்ரியா பதிப்பாக வந்தபோதிருந்த பிரதிக்கும் வித்தியாசமிருப்பது தெரிகிறது. அவ்விரண்டினையும் ஒப்பிட்டுப் பார்க்க எனக்குள்ள வசதியீனம் கவலைதான். ஆனாலும் இந்த ஞாபகத்தை ஒரு பதிவுக்காகச் சொல்லிவைக்கிறேன்.

'இரத்தம்' சிறுகதை மிகச் சாதாரணமானதாகத்தான் இருந்தது சமீபத்திய காலம் வரைக்கும். ஆனால் திடீரென விஸ்வரூபம் எடுத்ததுபோல் அது உயர்ந்து நிற்கிறது. கார்க்கி ஒருமுறை சொன்னாராம், ‘சுவரில் ஒரு துப்பாக்கி இருப்பதாகச் சிறுகதை தொடங்கினால் கதை முடிவதன் முன்னர் அது வெடித்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால் துப்பாக்கியைப் பற்றிப் பேசிவிடாதே’ என்று. அது ஒருவகையில் சரியாகத்தான் இருக்கிறது. இரத்தம் சிறுகதையிலும் கமலத்தின் வசையாக சிலவார்த்தைகள் வரும். அந்த வசைவை முன்வைத்தே முழுக் கதையும் நகர்ந்திருக்கும். இது ஒரு சிறந்த சிறுகதையாக ஆகியிருந்த வேளையில் அதன் அரசியல் கட்டுடைக்கப்படாமலே இருந்திருக்கிறது இதுநாள் வரையில்.

இனக்கலவர காலத்தில் நிகழ்ந்த வன்கொடுமைகளின் சாட்சியம் கமலம். இரத்தினபுரியில், சோமு வேலைபார்க்கும் அதே இடத்தில்தான் கமலத்தின் கணவன் கொடூரமாகக் கொல்லப்பட்டதும், அவளே வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதும். ஆனால் இன்னும் ஒரு போலித் தனத்தில் அதையே உழைப்பதற்கான இடமாகக்கொண்டு சோமு திரும்புவது பற்றிய வசையே சிறுகதையின் ஆரம்பத்தில் கமலத்தின் வாயிலிருந்து வருவது. ‘இன்னும் இந்தப் பு…. அவங்கட… ஊ… போறாங்கள்’ என்ற வசைவின் வார்த்தைகள், கதை முடிவில் சோமுவின் எண்ணமாக, கருத்தியலாக மாறுகிறது.

‘தேசியம், தேசிய ஒற்றுமை என்றெல்லாம் அவன் பேசியிருக்கிறான். அதுவும் பிரச்சினையைக் கடத்தித் தள்ளிப்போட்டுத் தப்பப் பார்க்கும் அதே மனப்பான்மைதானா?’ என அவனது சிந்தனைத் தொடர் துவங்கி, ‘கச்சேரியடியில் உட்கார்ந்துவிட்டு, இரண்டு கிழமை தாடிவளர்த்து வழித்துவிட்டு அவன் திருப்திப்பட்டிருக்கிறான். அதே தப்பும் மனப்பான்மைதானா?’ என்று அச் சிந்தனைத் தொடர் முடிவடைகிறது. ஆக இலங்கைத் தேசியம் கேள்வியாகிய அதேபோதில், தமிழ்த் தேசியத்தின் சாத்வீகமும் மு.த.வுக்கு உடன்பாடற்றதாகத் தோன்றியிருக்கிறது என நாம் சுலபமாக ஒரு முடிவுக்கு வரலாம்.

சர்வோதயம் சார்ந்து அவர் எவ்வளவுதான் பின்னாளில் எழுதியிருந்தாலும், இச் சிறுகதை உருவான காலத்தில் ஒரு தமிழ்த் தேசியவாதியாக தன்னை உணர்ந்துள்ளார் மு.த. அதுவும் இறுக்கமான நடவடிக்கைகள் அவசியமென்ற கருத்துக் கொண்டு.

அப்படியில்லையென்று வாதாடுவதெல்லாம் வீண்.

ஆச்சியின் அறிவுரையின்படி ஒரு சாதுவாக வளர்ந்திருக்கும் சோமு, இந்த நடுத்தர வர்க்த்து அடங்குதலை பின்னால் மிகக் காட்டமாக விமர்சிப்பான். ‘சோமுவை ஏதோ குத்திற்று. திடீரென்று ஆச்சி காட்டிய வாழ்க்கையில், கலாச்சாரத்தில், ஏதோ குறையொன்று இருப்பதுபோல் முதன் முதலாக அவனுக்கு ஏதோ ஒன்று உணர்த்திற்று.’ இது அச் சமூகத்தின் அடங்கு, பணிவாயிரு, அதுதான் வாழ்க்கைக்கு நல்லது என்ற மந்திர வாசகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வரிகள். இதுவே என்றோ ஒரு தலைமுறையின் சிந்தனையில் நெருப்பு விழுந்துவிட்டதைத் தெரிவிக்கிற வரிகளுமாகும்.

மு.த.வின் ஒட்டுமொத்தப் படைப்பும் இக்கருத்தை உறுதிப்படுத்தாதுதான். ஆனால் அதுவா முக்கியம்? அக் கருத்து ஒரு காலகட்டத்ததாய் இருந்தது கண்டடையப்பட்டாலும்தான் போதுமானது. நான் முன்னே சொன்னதுபோல மு.த.வின் இலக்கியத் தகைமை நாற்பது ஆண்டுகளின் முன்னமேயே ஸ்தாபிதமாகிவிட்டது. இன்று கட்டவிழ்ப்பின் மூலம் காணக்கூடிய அம்சங்கள்தான் கவனம்பெற வேண்டியவை.

00000

தாய்வீடு, 2008

Comments

மு.த படைப்புகள் பற்றிய உங்கள் கருத்துக்களை ஆர்வமுடன் வாசித்தேன். இன்றுதான் உங்கள் வலைப்பதிவை முதலில் பார்க்கவும் முடிந்தது. தொடர்புகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி.

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்