மதிப்புரை: பின் - காலனித்துவ இலக்கியம்
அரசியல், சமூக எதிர்ப்பு நிலைகளின் இன்னொரு முகாம், பின் - காலனித்துவ இலக்கியம் காலச்சுவடு பதிப்பகத்தினரின் வெளியீடாய் அண்மையில் வெளிவந்திருக்கும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் ‘பண்பாட்டுப் பொற்கனிகள்’ என்ற நூலை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. ஏற்கனவே இதில் வெளியாகியுள்ள சில கட்டுரைகளை அவை சஞ்சிகைகளில் வெளியாகிய தருணங்களிலேயே நான் வாசித்திருந்தாலும், ஒட்டுமொத்தமான நூல் கொடுத்த பாதிப்பு அதிகம். முழுமையான மதிப்புரையாகவோ விமர்சனமாகவோ அன்றி, நூலின் ஒட்டுமொத்தமான செல்திசை நோக்கிய கருத்தினை அலசும் ஒரு கட்டுரையாகவும் இது அமைய நேர்வது நூல் விளைத்த பல்தளங்களிலான மனப்பாதிப்பின் தீவிரத்தினால்தான். இரண்டு விஷயங்களை முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. சமகாலத்தில் தமிழில் வெளிவந்துள்ள ஒரு முக்கியமான நூல், ந.முருகேசபாண்டியனின் மொழியில் சொல்வதானால், தமிழ் அறிவுலகத்தின் அ-பிரக்ஞை குளத்தில் வீசப்பட்ட கல்லாக தடமழிந்து போவதற்குத் தோதான தலைப்போடு வெளியிடப்பட்டிருப்பதை முதலாவதாகச் சொல்லவேண்டும். ‘பண்பாட்டுப் பொற்கனிகள்’ என்பது, ஏதோ மரபார்ந்த தமிழறிஞர்களது தமிழினத்தின் பண்பாடு சார்ந்த கட்டுரைகளின் தொகுப்...