நூல் விமர்சனம் :2 ‘கடவுளின் மரணம்’


‘கடவுளின் மரணம்’
(சிறுகதைத் தொகுப்பு)



இலக்கியம் சார்ந்த வடிவம் மற்றும் மொழியாடல்களும், அரசியல் சார்ந்த போரினது மூலம் மற்றும் இயங்குவிதங்களும் பற்றியவையான ஒரு விசாரணை

கருணை ரவியின் ‘கடவுளின் மரணம்’ சிறுகதைத் தொகுப்பு மிக்க கவனம்பெறவேண்டிய ஒரு படைப்பு என்று தோன்றுகிறது. அதன் வெளியீடும் கருத்தாடலும் 2013ஆம் ஆண்டின் நடுப்பகுதியளவில் கனடாவின் ரொறன்ரோ நகரில் நடைபெற்ற உடனடிப் பின்னால் ஒருமுறையும், அதன் நினைவுத் தாக்கத்தில் அண்மையில் மேலும் ஒருமுறையுமாக வாசித்த பின்னர் முதல் வாசிப்பில் அதன் மேலெழுந்திருந்த உணர்வுரீதியான மதிப்புகள் அடங்கி, ஏற்பட்டுள்ள விமர்சனரீதியான மனநிலையில் அதுபற்றி எழுதுவது அவசியமென்று பட்டது.

பதினாறு கதைகளை உள்ளடக்கியுள்ள இந்தத் தொகுப்பின் முதலாவது கதையினதே மொத்தத் தொகுப்புக்குமான தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது, இதுவே இத்தொகுப்பின் சிறந்த கதையென்று அறுதியிட முடியாதபோதும்.
எந்த ஒரு தொகுப்பும்போலவே இதுவும் மிகச் சிறந்த, சிறந்த, மற்றும் சாதாரண கதைகளைக் கொண்டிருப்பினும், இதன் மிகச் சிறந்த கதைகள் கட்டவிழ்க்கும் அர்த்தங்கள் அலாதியானவை. இவற்றின் கட்டுடைப்பிலும் பல்வேறு அர்த்தங்கள் வெளியாகின்றன.

முதலாவது கதையான ‘கடவுளின் மரணம்’, இரண்டாவதான ‘பிரிகை’, மூன்றாவதான ‘கப்பல் எப்ப வரும்?’, நான்காவதான ‘முள்ளிவாய்க்காலும் முறைப்பாட்டுக் கடிதமும்’, ஐந்தாவதான ‘புஸ்பனுக்கு இரண்டு பொடிக்காட்’, ஏழாவதான ‘நாய்வெளி’, எட்டாம் கதையான ‘சிங்களத்தி’, ஒன்பதாவதான ‘காணாமல் போனவர்கள்’, பன்னிரண்டாம் கதையான ‘பழி’ ஆகிய கதைகள் இத் தொகுப்பில் முக்கியமானவை.

இவற்றினுள்ளும் ‘கடவுளின் மரணம்’, ‘நாய்; வெளி’, ‘கப்பல் எப்ப வரும்?’, ‘முள்ளிவாய்க்காலும் முறைப்பாட்டுக் கடிதமும்’, ‘பழி’ ஆகியவை மிக முக்கியமானவை. இந்த ஐந்து கதைகளினதும் மீதான என் அபிப்பிராயங்களைப் பகிர்வதே இப்பகுதியில் எனது நோக்கம்.
ஆசிரியனின் மரணம் ரோலண்ட் பார்த்தினால்போல கடவுளின் மரணமும் இற்றைக்கு அறுபத்தைந்து எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் அமைப்பியலின் தொடக்க காலத்திலேயே நீட்சேயினால் அறிவிக்கப்பட்டாயிற்று. ஆயினும் படைப்பாளி ‘கடவுளின் மரண’த்தில் இதை அறிவிக்கும் விதம் எதனையும்விட வித்தியாசமும், சிறப்புமானதுதான்.

இது எதிர்மறையாகவும் நேர்மறையாகவுமான இரண்டு உச்சங்களிலிருந்தும் விமர்சனத்தை எதிர்கொள்ளும் கதை. இக்கதை வெளிவந்த ஆண்டு, பத்திரிகையோ அல்லது சஞ்சிகையோவினது பெயர் ஆகிய விவரணங்கள் அற்றிருக்கிறது. இதையே படைப்பாளியின் ஆரம்பகாலக் கதையாகக் கொள்ளக்கூடிய அபாயம், அதன் நேர்த்தியற்ற நடையினாலும், நிறைந்த எழுத்துப் பிழைகளினாலும் சம்பவிக்கும் வாய்ப்புண்டு.

பெரும்பாலும் மனவோட்டங்களைவிட நிகழ்வுகளினால் கட்டப்படும் கதை இது. ஏனைய இத்தொகுப்பின் கதைகளினைவிட இக்கதை ஏராளமான நிகழ்வுகளையும் கொண்டிருக்கிறது. தன்மை நிலையில் கதைகூறல் தொடங்கும் இதிலுள்ள மொழியாளுமை எனக்கு மிகுந்த அலுப்பூட்டியது. ஒருபோது பேச்சுமொழியாகவும், இன்னொருபோது எழுத்து நடையாகவும் தொடரும் இக்கதைகூறலில் கதையை வாசித்து முடித்துவிடவேண்டுமென்ற அவசரத்தைத் தவிர வேறெதையும் அடைந்துவிட முடியவில்லை.

பின்நவீனத்துவ அலையொன்று தமிழ் இலக்கியப் பரப்பில் வீசிய காலத்தில் புரிந்தும் புரியாமலும் மொழிநடையிலேயே நம் படைப்பாளிகள் தாக்குதலைத் தொடுத்திருந்தார்கள். அது ஒருவகையில் அதுவரை காலத்திய மரபார்ந்ததும், அலுப்பை ஏற்படுத்துவதுமான நடையிலிருந்து வாசகனுக்கு ஒரு விடுதலையை அளித்தது மெய்யே. ஆனாலும் மொழியை எவ்வாறேனும் பினைந்துபோட்டு கதையை உருவாக்கும் விஷயத்தில் பிரேம் மற்றும் ரமேஷ் போல வெற்றிகண்டவர்கள் மிகக் குறைவு. அவ்வகை மொழிநடையைக் கையாளுவதில் மிகுந்த அவதானம் தேவை. கருணை ரவியின் ஏனைய இத்தொகுப்பின் கதைகள் பலவும் நடைரீதியாக தேறியுள்ள வேளையில், ‘கடவுளின் மரணம்’ மட்டும் அவதான இழப்பின் அடையாளங்களை நிறையவே தன்னகத்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும் அக்கதையே மண்ணுள்ளிருந்து வெளியே வந்து நுணுந்திக்கொண்டு கிடக்கும் ஒரு மண்ணுண்ணிப் பாம்புபோல சிந்தனையை அலைக்கழிப்பதாயும் இருக்கிறது.

‘வேவு பார்ப்பது என்பது எவ்வளவு கடினமான விடயம். வேவுகள்பற்றிக் கதைப்பவர்களோடு நான் அந்நியமாகியிருந்ததை இப்பதான் பெருந்தவறென நினைக்கிறேன். வேவுகளின் சூட்சுமங்கள் தெரிந்தவர்களெல்லாம் தனியாகவும் குழுக்களாகவும் துப்பாக்கி ரவைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துத் தப்பிவிட, நான்மட்டும் என்னை நம்பிவந்த வத்சலாவோடு தனித்திருக்கிறேன்’ என்று ஆரம்பிக்கிறது கதை.

ஆரம்பத்திலேயே விரிக்கப்பட்ட இந்த வேவுக்களம், கதையின் நடுவில் விரிவாக்கம் பெறுகிறது. செல்களிலிருந்து அந்த நானும் வத்சலாவும் தப்பியோடுகையில், எதிர்ப்படும் ஒரு பதுங்கு குழிக்குள்ளிருந்து யாரோ வத்சலாவை அக்காவென அழைக்கிறார்கள். அவ்வாறு போகுமிடத்திலேதான் ஒரு கிழவியும், அவளுடனுள்ள ஒரு பெண்ணும் கதையில் அறிமுகமாகின்றனர்.

அவள் கிழவிக்குச் சொந்தமில்லை, இயக்கத்திலிருந்து ஓடிவந்த பெண் என்றும், அவளொரு புலனாய்வுக்காரியென்றும்  படைப்பாளியால் அறிமுகமாக்கப்படுகிறாள். இந்த வேவு பார்க்கவந்த பெண், ஒருபோது களம் திரும்பாத போராளிகளைப் பிடிக்க வந்த இயக்கம் கிழவியின் தறப்பாளைச் சோதனை செய்யாமலே திரும்புவதிலிருந்தும், அது புதிராகவே சனங்களுக்கிருப்பதிலிருந்தும், இன்னும் இயக்கத் தொடர்பை அறுக்காதிருக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கவே செய்கிறாள்.
அந்தப்  பெண்தான், அந்த ‘நா’னின் ஒழித்துவைத்த நகைப் பையோடு காணாமல்போன விசுவரும் மனைவியும் இறந்த பின்னால் ஆபரண பூசிதையாக நிற்கிறாள். ‘பெரிய தாலி. பத்துப் பவுண் வரும். அம்மன் தாலி. அம்மன் தாலி குற்றத்தைப் பொறுக்குமாம். காப்புகளும் அடுக்கியிருந்தாள். மூன்று சோடி நெளிநெளிக் காப்பு. வெள்ளை முத்து வைத்த குண்டுச் சங்கிலி’யென அவள் நிற்பது, அவளை இன்னும் ஒரு வேவுகாரியாக இருப்பதன் சாத்தியத்தை வாசகனையும் கொள்ளவே வைக்கிறது. அவ்வளவு ஆபரணங்களை அணிந்திருக்கும் அவள் இராணுவத்திடம் போனதும் வெடிப்பதற்காக வேசம் புனைந்தவளாகக்கூட இருக்கலாம்தான் என வத்சலாபோலவே வாசகனும் நினைக்கிறான்.

முடிவுவரை இந்த வேவு என்பதை ஒரு பூடகத்துள் வைத்து நடத்த முடிந்த இந்தக் கதை, ‘அந்தப் பெண் நடந்து பத்து கவடு ஆகவில்லை. ரவையொன்று அவளின் கன்னத்தைத் துளைத்துச் சென்றது. அப்படியே முட்டுக்கால் குற்றி விழுந்தாள்’ என அவளது கதையையும் முடிக்கிறது.

எடுத்த கருவை போர் நடைபெறும் களத்தில் வைத்து அற்புதமாக நடத்த இந்தப் படைப்பாளியால் முடிந்திருப்பதைப் பாராட்ட வேண்டும்.
அப்படியான இந்தக் கதையில் கடவுளின் மரணம் எங்கே, எவ்வண்ணம் நிகழ்கிறது என்பதுதான் மர்மம். கடவுள் மரணித்த உலகில் யுத்தமொன்று நடைபெறுகிறது, அந்த யுத்தத்தில் மக்களதும், போராளிகள் இராணுவம் எதனதும் அறவிழுமியங்கள் தொலைந்திருக்கின்றன, அதனால்தான் கூடவிருந்த விசுவரே மறைத்துவைத்த நகைகளை எடுத்துக்கொண்டு காணாமல் போகிறார், அவரது இறப்பும் நகைகளின் மறைவும் இன்னொரு கடவுளற்ற உலகத்தில் நடைபெறும் நிகழ்வாகவே கொள்ளப்படவேண்டி உள்ளது.

ஜனங்கள் பசியில். எதையாவது விற்றால் தவிர சாப்பாட்டுப் பிரச்சினையைச் சமாளித்துவிட முடியாத நிலை. ‘நகைக் கடைகளில் வேலைசெய்த சின்னப் பொடியள், கிழடுகள் எல்லாம் சின்னத் தராசை சந்திக்குச் சந்தி வைத்திருந்து ஒரு பவுண் நகை பன்னிரண்டாயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்தார்கள். ஒண்டரைப் பவுணை ஒரு பவுண் என்றும் ஏமாற்றினார்கள்.’ இவையெல்லாம்கூட கடவுள் அற்ற ஓர் உலகத்திலேயே சம்பவிக்க முடியும்.

இவ்வாறு கடவுளின் மரணம் உள்ளடங்க விரிந்த கதை இது. அற்புதமான வார்ப்பு. இதன் மொழிநடை மற்றும் வசனம் மற்றும் எழுத்துப் பிழைகள் கவனிக்கப்பட்டிருந்தால் இன்னும் கூடுதலான வாசகப் பாதிப்பினைச் செய்திருக்கும் என்பதை நிச்சயமாக என்னால் சொல்ல முடியும்.
மனிதரைக் கொல்லும் போரினிடையே, அறங்களைக் கொல்லும் மனிதர்கள்போல அறங்களைக் கைவிடும் மனித மனநிலையும் கட்டமைக்கப்படுகிறது. ‘பிரிகை’ சொல்வது அவ்வாறான கதையைத்தான். ‘கப்பல் எப்ப வரும்’ என்ற கதையிலும் எப்படியாவது தப்பிவிடுதல் என்ற மனநிலையில் பணம் கொடுத்து முன்னுரிமை பெறப்படுதலில்கூட இந்தக் கருத்து ஆதாரம் கொண்டிருக்கிறது.

மிக முக்கியமான கதைகளென நான் குறிப்பிட்டனவற்றுள் ‘நாய் வெளி’ மிக நேர்த்தியாக வார்க்கப்பட்டுள்ள கதை. உருவ நேர்த்தியில் இத்தொகுப்பிலுள்ள சிறந்த சிறுகதையென இதைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை. தமிழ்ப் புலத்தில் வார்க்கப்பட்ட கதைகளுள் மிக வித்தியாசமான களத்தைக்கொண்ட கதை இது. ஒரு கிராமத்து நாய்கள் முழுவதுமே விசர் பிடித்து அடைந்திருக்கும் இந்த வெளியில்தான், ஒருபோது வலிய வந்த குட்டி நாயாய் அக்காளியிடம் தஞ்சம்பெறும் சுருட்டைகூட நிற்கிறது. அக்காளி சுருட்டையைத் தேடிப் போகிறாள், ஏற்கனவே அந்தப் பகுதிக்குச் சென்றவர்கள் மறுபடி உயிரோடு திரும்பியிராத நிலையில். அக்காளிக்கு என்ன ஆகும்? மனத்தைப் பதைக்க வைக்கிற கதை.

ஓர் உண்மைக்கு எதிர்புறத்திலும் ஓர் உண்மைதான் இருக்கிறது. இவற்றுக்கெதிராக ஒரு பொய் இருக்கலாம். அதுபோல ஒரு நியாயத்தின் எதிரிலும் ஒரு நியாயம் இருக்கிறது. இவற்றினெதிரே ஓர் அநியாயம் இருக்கச் செய்யலாம். இதை ஓர் ஆபிரிக்கக் கதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறது.
கிராமத்துள் புகுந்த ஒரு நரி , திண்ணையில் கிடத்தப்பெற்றிருந்த ஒரு குழந்தையைக் கடித்திழுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடிவிடுகிறது. கிராமத்தவர் நரி  கிராமத்துள் வந்து குழந்தையைக் கவ்விச் சென்றதையிட்டு கொதித்தெழுந்து நரியை  வேட்டையாடப் புறப்படுகிறார்கள். கிராமத்தவரைப் பொறுத்தவரை நரி  செய்தது பெருங்கொடுமை. ஆனால் இதிலே நரியின் நியாயமென்று ஒன்றிருக்கிறது. கிராமத்தவர்கள் வந்து காட்டினுள் வேட்டையாடி தமக்குப் பட்டினியை ஏற்படுத்துகிறார்கள், தாம் என்ன செய்யமுடியும்? எதையாவது அடித்துத் தின்றுதானே ஆகவேண்டும்? இது நரியின் வாதம். இரண்டு பக்கங்களிலும் இருக்கும் நியாயம் ஏறக்குறைய ஒன்றுதான்.

காலகாலமாக நடைபெற்று வரும் யுத்தங்களிலெல்லாம் ஆயுதங்கள்தான் மாறியிருக்கின்றன. நியாயங்களதும் அநியாயங்களதும் வரைவிலக்கணங்கள் மாறவில்லை.

மகனையிழந்த ஒரு தாய்.  தான் தனது மகனிறந்த முள்ளிவாய்க்காலுக்குச் செல்ல அனுமதி பெறும்பொருட்டு முறைப்பாடுசெய்யச் செல்கிறாள். படாதபாடெல்லாம் பட்டு விண்ணப்பம் தயாராகிவிடுகிறது. அதைக் கையளிப்பதற்காக பொலிஸ்நிலையம் செல்கிறாள். அங்கு மீசை வழித்த ஒரு சின்னப் பொலிஸ் அவளை பக்கத்திலிருக்கும் கதிரையில் அமர்த்துகிறான்.
‘முறைப்பாட்டை வாங்கும்போது மூன்று தடவைகள் இமைகள் மூடும்வரை அவளையே பார்த்தான். அவள் கீழே பார்த்தாள். அவனின் முகத்தை அதிகநேரம் பார்க்க அவளுக்கு அந்தரமாக இருந்தது. அவன் முறைப்பாட்டை பிரித்துப் படிக்கவில்லை. பேனையை கைகளில் வைத்து சுற்றிக்கொண்டிருந்தான். அறுபத்தினான்காவது தடவை சுற்றியதும் மீண்டும் அவளைப் பார்த்தான்.’ இதுமாதிரியான ஒரு பொலிஸின் நடவடிக்கையை விகற்பமாகத்தான் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அடுத்த கணமே அவன் சொல்கிறான், ‘எனக்கு உங்களைப்போல ஒரு அக்கா இருந்தவ…’ என. பிறகு தொடர்ந்து சொல்கிறான், ‘அக்கா கிளைமோரில செத்திட்டா’ என்று.
அவள் - அந்தச் சாதாரண சனம் - கேட்கிறது: ‘அக்கா வன்னிக்கு வந்தவாவோ?’
அந்தச் சாதாரண சனம் அறிந்திராத, அறிந்திருந்தாலும் உணர்ந்திராத மனநிலையிலிருந்து பிறந்ததுதான் அந்தக் கேள்வி. ஏனெனில் தனக்கெதிராகத் தவிர போர் எங்கும் நிகழ்த்தப் பெறவில்லையென்பதும், அது வன்னியில் தவிர வேறெங்கும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதும்தான் சாதாரண சனத்தின் அறிதலாக இருக்கிறது. இது இன்னொரு பகுதியின் விரிவையும் கொண்டிருக்கிறது. போர் தனக்கெதிராக மட்டுமே செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது அது.

அந்தக் கேள்விக்கு எதிர்ப்புற உண்மையைக் கொண்டிருந்தவன் பதில் சொல்கிறான்: ‘அநுராதபுரம் பஸ்சில கிளைமோர் வெடிச்சது.’
இதுதான் இந்த யுத்தத்தில் வெளிப்பட்டிருப்பது. அநியாயங்கள் கூடவோ குறையவோ இரண்டு பகுதிகளிலும் நடைபெற்றிருக்கின்றன. உண்மை கூடவோ குறையவோ இரண்டு பகுதிகளிலும் இருக்கின்றன.
இந்த அற்புதமான உள்ளடக்கத்தினை படைப்பாளியே விரும்பி அமைக்காதிருந்தாலும், அதைக் கொண்டிருக்கும் இச்சிறுகதை போரின் மூலத்தையும், அதன் இயங்குவிதங்களையும் நுட்பமாகத் தெரிவித்திருக்கிறது.

தனது மகன் அடக்கம்செய்யப்பட்ட இடத்திலிருந்து ஒரு பிடி மண்ணெடுத்தும், இறுதிக் கடனாற்றுவதற்கும் செல்ல அனுமதி கேட்கும் ஒரு தாயின் வேண்டுகை நியாயமானது.

ஆனால், ‘போர் தின்ற என் கொள்ளிப் பிள்ளையின் குருதி சிந்திய முள்ளிவாய்க்காலில் சிலை வைக்கவேணும். ஒவரு ஆண்டு திதிக்கும் விரதம் இருந்து மாலையுடன் முள்ளிவாய்க்கால் செல்லவேணும்’ என்ற இரண்டாவது வேண்டுகை போர் நடந்த நிலத்தில் அதீதமானது. அநியாயம் இரண்டு பகுதிகளிலும் நடைபெற்றிருக்கின்றன. எதிரே நிற்பவன்கூட பாதிக்கப்பட்டவன் .

இது நியாயம் இரண்டு பக்கங்களிலும் இருக்கின்றன என்பதன் இன்னொரு வடிவம்தான்.

அந்த மண்ணிலிருந்துகொண்டே இந்த உண்மையைச் சொல்ல அசாதாரண துணிச்சல் வேண்டும். படைப்பாளியிடமிருந்து நினையாப்பிரகாரம் வெளிப்பட்டிருப்பினும், இந்த உள்ளுறை அடங்கும்படியாக எடுத்த சொல்லாக்க முயற்சிகள் முக்கியமானவை. ஒரு சிதைவாக்க முறையினாலன்றி இத்தகைய உள்ளுறைகளை சுலபமாக வெளிக்கொணர்ந்துவிட முடியாது.

‘சிங்களத்தி’ கதையில் ஒரு சிங்கள இளம் தாயின்மேல் இரக்கம்காட்டும் அங்கஹீனியான ஒரு முன்னாள் போராளியின் செயற்பாடு செயற்கையானது. ஆனால் முள்ளிவாய்க்கால் செல்ல அனுமதி கேட்டுவந்த தாயிடம் சிங்கள பொலிஸ் காட்டிய கோபம், அலட்சியம் இயல்பானது.

இந்த வகையில் அண்மையில் இலங்கைப் படைப்பாளியொருவரால் வெளிக்கொணரப்பட்ட இத் தொகுப்பு தமிழிலக்கிய உலகில் கூடிய கவனம் பெறவேண்டியதாகின்றது.

00000


தாய்வீடு, ஜன 2014

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்