Monday, August 03, 2015

கலாபன் கதை: 2-8


 அலையும் கடல்
-தேவகாந்தன்-

தரையோடும் வாகனத்துக்குப்போல், கடலோடும் நாவாய்க்கும் காப்புறுதி அவசியம். அந்தக் காப்புறுதி அதன் கடலோடும் தகுதியின்மேலும், கப்பலிலிருப்போரின் பாதுபாப்புக்கான சகல உபகரணங்களினதும் கப்பல் பராமரிப்பினதும் பூரணப்படுகையின்மேலும் வழங்கப்படுகிறது.

அவ்வாறான ஒரு காப்புறுதி இல்லாத அல்லது காலாவதியாகும் கப்பல் கடலோடும் தகுதியை இழந்துவிடும். அக் கப்பலில் ஏற்றப்பட்ட சரக்குகளுக்கு ஏற்படும் சேதத்துக்கோ, கப்பலுக்கே சேதம் ஏற்படுமாயினும்கூட, காப்புறுதி ஸ்தாபனம் பொறுப்பேற்றுக் கொள்ளாது. அந்தவகையில் கப்பலின் காப்புறுதி மிகமுக்கியமான அம்சம். அவ்வாறான தகுதியான காப்புறுதி இல்லாதவகையில் தனது கடலெல்லைக்குள் அணுகிய கப்பலை தடுத்துவைக்கவும், துறைமுகத்தில் நிற்கும்போது காப்புறுதியின் காலம் முடிந்தது தெரியவந்தால் அல்லது பாதுகாப்பு உபகரணங்களின் குறைபாடு கண்டுகொள்ளப்பட்டால் அதை அங்கேயே நிறுத்திவைக்கவும் துறைமுக நிர்வாகத்துக்கு அதிகாரமுண்டு.  இவ்வாறான கப்பல்கள் சவப்பெட்டிக் கப்பல்கள் (Coffin Ships) என்று வழக்கில் குறிக்கப்படுகின்றன. இத்தகைய ஏற்பாடுகள் நாட்டுக்கு நாடு சற்று வித்தியாசப்படினும், அவை பொதுவில் சர்வதேச கப்பல் சட்டத்துக்கு இயைய இருப்பவையே.

ஆண்டுக்கொரு முறை கப்பலின் அடிப்பாக துப்புரவாக்கத்துக்கும், இரும்பத் தகடுகள் பழுதுறாமல் இருக்கின்றனவா என பரிசோதிக்கவுமாக கப்பல் செப்பனிடும் துறைக்கேற்றுவது வழமையாக இருக்கும் ஒரு காரியம். அந்தாண்டு ஆடி மாதத்தில் கலாபனின் கப்பல் பம்பாயில் செப்பனிடும் துறையேறவிருந்தது.

துபாயிலிருந்து கப்பல் புறப்பட்டபோதே ஆடி தொடங்கிவிட்டதை அராபியக் கடலிலும் தெரியக்கூடியதாயிருந்தது. கோடை காலத்தில் அராபியக் கடலின் பயணம், வேறு எந்த பெருஞ் சமுத்திரங்களது பயணத்தைவிடவும் பயங்கரமானதாகவிருக்கும். அது பெரும்பெரும் அலைகளாலல்ல, பாலைவனத் திசையிலிருந்து கிளம்பிவரும் மாபெரும் புழுதிப்படலங்களால் விளைவது.

ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு சுகமான வாசனையுண்டு. அந்தந்த மண்ணோடு வாழ்வை இரண்டறக் கலந்தவர்களுக்கு பெரும்பாலும் அந்த வாசதிறன் சாத்தியமாகிவரும். பாலைநில மண்ணுக்குள்ளதும் அதுபோன்ற ஒரு வாசமேயெனினும், அது கோடைகாலத்தில் வெப்பமேறி சுழன்று வரும்போது உயிர்கொல்லும் ராட்சததனம் கொண்டுவிடும். அப்புழுதிப் படலத்தில் மூச்சுத் திணறி நவீன கால கப்பல் பயணத்தில்கூட மரித்தவர்கள்பற்றிய செய்திகள் நிறைய உண்டு. கலாபன் அவற்றைக் கேட்டிருக்கிறான்.

பம்பாய் வழியில் ஒரு இரவு அலையடித்த கடலில் நாசிக்கொவ்வா வாசனை வீசிக்கொண்டிருந்ததை கலாபன் வேலைமுடிந்து மேலே வந்தபொழுதில் முகர்ந்திருந்தான். மூடிய பக்க கண்ணாடிக் கதவுகளில் குறுணிக் கற்களை அசுர கரம்கொண்டு யாரோ இடையறாது வீசிக்கொண்டிருப்பதுபோன்ற ஓசை நள்ளிரவில் எழ ஆரம்பித்திருந்ததையும் அவன் கேட்டான். வெளியே படுத்து தூங்காதவரை அந்தப் புழுதிப் புயலுக்கு அஞ்சவேண்டியதில்லை அவன். ஆனால் அது கப்பல் எந்திரத்துக்கு ஆபத்தை விளைக்கக்கூடியது. இயந்திரம் வேலைசெய்கையில் பிஸ்டனின் காற்றழுத்தத்தில் பீச்சப்படும் கொதி மசகெண்ணை வெடித்து உந்துசக்தியைப் பிறப்பிக்கும்போது கிளரும் புகை, வெளியேறுவது எவ்வளவு அவசியமோ, அதேயளவான காற்று எந்திரத்தில் நுழைவதும் அவசியமானதாகும். அப்போது புழுதிப் படலத்துடன் வரும் மணற்குறுணிகள் உள்ளே சென்றுவிட்டால் பிஸ்டன் வளையங்களின் உடைவு, சிலிண்டரின் உட்பக்கச் சேதமென பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்கமுடியாதபடி நிகழும். அது சேதத்தை மட்டுமல்ல, கப்பலுக்கு ஆபத்தையும் விளைவிக்கலாம்.

சரக்கற்ற கப்பலானதால் அலைகளில் தாவித் தாவித்தான் பம்பாய்த் துறைமுகத்தை அது அடைந்தது. அது ஒரு ஆடி மாதத்து இருபத்துமூன்றாம் தேதியாகவிருந்தது. ஒரு மதியத்தில் துறைமுகத்தை அடைந்த கப்பல், அன்று மாலையே செப்பனிடும் துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கலாபன் எதிர்பார்த்திருந்ததுபோல் நடராஜா அவனுக்காக அங்கே காத்திருக்கவில்லை அன்று. ‘என்ன நடந்தது, நடாவுக்கு? ஒருவேளை கப்பலேதேனும் அகப்பட்டு ஏறிக்கொண்டானோ?’ பலவாறும் நினைத்தபடி துறைமுகத்தின் வாசல்வழி வெளியேறி வி.ரி.ஸ்ரே~னைநோக்கி நடந்துகொண்டிருந்தான்.

வெய்யில் தாழ்ந்த அம்மாதிரி நேரத்தில் குறுக்கே கிடந்த அந்த நெடுவீதி நடைபாதையில் ஏகாந்தமாய் நடந்துவர கலாபனுக்குப் பிடிக்கும். நடப்பது அந்த நடைபாதையில் சிரமம். நடைபாதைக் குடிசைகளும், குடிசை மனிதர்களின் வாழ்வியக்கமும் அந்த இடைஞ்சலை எப்போதும் செய்துகொண்டேயிருக்கும். ஆனால் அவர்கள் தமிழர்களாயிருந்த வகையில் அவன் அதிகம் சிரமப்பட்டதில்லை அந்த இடத்தில் நடக்க.
அந்த இடத்திலிருந்து வி.ரி.சந்திப்புக்கு ஏறக்குறைய ஒன்றரை கிலோ மீற்றர். தூரம் முழுவதும் தமிழ்நாட்டுக்காரரின் வாசஸ்தலம்தான். தார்போலின் அல்லது வெட்டி நிமிர்த்திய தார் பீப்பாய்க் கூடுகளுள் ஒரு குடும்பமே வாழுமிசை கிளர்ந்துகொண்டிருக்கும். அது நள்ளிரவுவரை அந்த இடத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும். சனி, ஞாயிறெனில் அந்நெடுஞ்சாலையில் சரக்கேற்ற வந்தும், சரக்கேற்றிப் போயும் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான லொறிகளும், நூற்றுக்கணக்கான ராக்ஸிகளும், சைக்கிள்களும், குறுக்கே வெட்டிப் பாயும் பாதசாரிகளும் அடைந்துகொண்டு திணறும் வீதியில் அந்த தெருவோரக் குடிசைகளுக்குள்ளிருந்து கிளரும் வெஞ்சொற்பெருக்கு அலாதியான ரசனை தருவது. அவர்கள் அப்போது கோபப்பட ஆரம்பித்திருந்தார்கள் என்பதன் அர்த்தமது. அழும் குழந்தைகளின் கூச்சல் பெரும்பாலும் பசிக்காய் இருப்பதில்லை அந்த நேரத்தில். இனிப்புப் பண்டத்துக்காயோ, ஐஸ்பழத்துக்காகவோதான் பெரும்பாலும் இருக்கும். அது இன்னும் கூடுதலான ரசனை தரும் அம்சம் அங்கே.

கோபம், எரிச்சலாதிய உணர்வுகளெல்லாம் மெல்லமெல்ல ஆண்-பெண் போதையேற்றத்துடன் முதிர் இரவில் சரஸமாக மாறிவிடுகிறது.  நள்ளிரவுக்குமேல் போகாலாபனை ஒலிகளும், நெடுமூச்சுக்களும் அந்த இடத்தை ஆக்ரமித்திருக்கும். அதுவே அவர்களும் மனிதரென்பதினதும், அங்கே வாழ்க்கை இயங்குகிறதென்பதினதும் அடையாளம்.
ஒரு காலத்திய சிவப்புச் சிந்தனைகளின் ஈர்ப்புக் காரணமாய் அவர்கள் வாழ்நிலையை அனுதாபத்தோடு பார்க்க அவனால் முடிந்திருந்தது. அதுவும் தமிழர்களென்பதால் இன்னும் சற்றே கூடுதலாக அது இருந்தது அவனிடத்தில்.

இந்த வழக்கமான ஒரு மாலைநேரத்து நிலைமை அப்போது அந்த இருபக்க நடைபாதைகளிலும் தென்படவில்லையென்பது கலாபனுக்கு ஆச்சரியமாகவிருந்தது. கலகலப்பு அடங்கிமட்டுமல்ல, ஒரு சோகமும் கோபமும் கலந்த உணர்வுக் கலவையிலும் அந்தச் சூழல் விளங்கியது.
நடா வந்திராத ஆச்சரியமொன்றும், சூழ்நிலையின் மாற்றத்திலானது ஒன்றுமாக அவன் வி.ரி.சந்திப்பை வந்தடைந்தான். ஆங்காங்கே நின்றிருந்த இலங்கைத் தமிழிளைஞர் குழுக்களிடையே கலவரம்… கொழும்பு… சிங்களவன்… தமிழ்ச் சனம்… என்ற வார்த்தைகள் கிளர்ந்து அவனைப் பரபரபாக்கின. கலாபனால் யாரையேனும் விசாரித்திருக்கமுடியும். அவன் அத்தனை காலத்தில் அவர்களோடு நின்று கதையாடிதில்லை என்றுமே. அது தகராற்றின் வழியாக, பிரச்னைகளுக்கான கொலுவிடமாய் தோன்றியது அவனுக்கு. சிலவேளை பரிதாபங்களை எதிர்கொள்வதிலிருந்து விலகுவதற்கான உபாயமாகவும் அவனுக்கு அது இருந்தது. அந்த ஒதுங்குதல்களும், விலகுதல்களும் அவனுக்குத் தேவையாயிருந்தன.
கலாபன் விரைந்து பெரியன்ரியின் வீட்டை அடைந்தான்.
வழமைபோல் வாசலில் ஜெஸ்மின் குழந்தையோடு ஆவல் ததும்பும் முகத்தோடு அவனது எதிர்பார்ப்பில் நின்றிருக்கவில்லை.

அவன் உள்ளே சென்றான்.

அங்கே அசைவு கண்டு பதுங்கத் தயாரான நிலையில் ஜெஸ்மினின் அறை வாசலோரம் நின்றிருந்தான் நடா. அவளுடைய அறை வாசலில் அவன் பதுங்கிநிற்கக் காரணம் விளங்காத கலாபன் உள்ளே சென்று தனியாக ஒரு மூலையிலிருந்த சோபாவில் அமர்ந்தான். அதன் கிரீச் சத்தத்தில்தான் ஜெஸ்மின் எட்டிப் பார்த்து அவன் வந்திருந்தது கண்டது. சமையலில் கவனமாகியிருந்த பெரியன்ரியும் அப்போதுதான் கண்டாள்போல. சிரித்து, “உன்னை இரண்டு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்றாள்.
ஜெஸ்மின் எதிர்பார்த்திருந்தாள் என்பதன் வேறுவடிவச் சொற்கள் அவை.

ஜெஸ்மின் வரும்போதே நடாவும் கூடவந்தான். எதிரேயிருந்த நாற்காலியில் அமர்ந்தான். பழைய மின்விசிறி கிளர்த்திய அற்பக் காற்றில் வியர்த்து வழிந்தான். அது கூடத்துள் குமைந்திருந்த வெம்மையினால் மட்டுமில்லையென்பதை ஏதோவொன்று கலாபனுக்குக் கூறியது. அதே உணர்வையே ஜெஸ்மினும் கொண்டிருந்ததையும் அவன் கண்டான்.
“கேள்விப்பட்டியளே, அண்ணை?” என்று தொடங்கியவன் கொழும்பு இனக்கலவர நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதை விரிவாகக் கூறிமுடித்தான்.
திகைப்பு, வேதனை, கோபம் என்ற உணர்ச்சிக் கலவையில் உறைந்திருந்தான் கலாபன்.

“செய்தி போய்க்கொண்டிருக்கு… இந்தியச் செய்திதான். இலங்கைச் செய்தியில ஒண்டும் தெளிவாய்ச் சொல்லுறானில்லை. இந்த நிமி~ம்வரைக்கும் ஊரங்குச் சட்டம்கூடப் போடேல்லையாம். ஆயிரம் பேருக்கு மேல செத்திட்டதாய்த் தெரியுது.”

“இந்தியா ஒண்டும் சொல்லேல்லையோ?”

“இந்தியா அங்க நடக்கிறதுக்களைத்தான் சொல்லிக்கொண்டிருக்கு இந்தநேரம் வரைக்கும்.”

நேரம் நகர்ந்துகொண்டிருந்தது.

“பியர் கொண்டுவரவா, கலாபா?” என்று கேட்டாள் ஜெஸ்மின்.
சிறிதுநேரம் மௌனமாயிருந்த கலாபன், “இந்த நிலைமைக்கு பியர் தாங்காது. இந்தா நடா, ஒரு அரை எடுத்துக்கொண்டு வா” என்று பணமெடுத்துக் கொடுத்தான். “நான் இப்ப வெளியில போகேலாது. நேற்றையிலயிருந்து இஞ்சதான் கிடக்கிறன். வெளியில கொஞ்சம் பிரச்சினை…” என்றபடி கலாபனிடம் பணத்தை வாங்கி ஜெஸ்மினிடம் கொடுத்தான் நடா. அவள் வேறு யார்மூலமாகவாவது வாங்கிக்கொள்வாள். போகுமுன் ஜெஸ்மின் கலாபனைக் கேட்டாள்: “உன்னுடைய குடும்பமோ, நெருங்கிய சொந்தக்காரரோ யாரும் கொழும்பில் இல்லைத்தானே, கலாபா?”

“இல்லை. எண்டாலும் சாகிறதுகள் என்ர சனங்களெல்லே?”

“அதுமெய்தான்” என்றுவிட்டு அப்பால் நகர்ந்தாள் அவள்.

சமீபத்திலேயே மதுபானக் கடை இருந்ததில் விரைவில் டொக்ரேஸ் பிறண்டியோடு திரும்பிவந்துவிட்டாள் ஜெஸ்மின்.

குடித்துக்கொண்டிருக்கும்போது கலாபன் சொன்னான்: “கப்பலுக்கு நீ வரேல்லையெண்டோடனயே நினைச்சன், எதோ பிரச்சினையெண்டு. ஆனா அது இந்தமாதிரியான பிரச்சினையாயிருக்குமெண்டு நான் நினைச்சிருக்கேல்லை. துபாயில நிக்கேக்க சந்திச்ச வேற கப்பல் பெடியள் சொன்னாங்கள், ரைகரின்ர குண்டுவெடிப்பில பதின்மூண்டு ஆமிக்காறங்கள் செத்திட்டாங்களெண்டு… அப்பவே நான் யோசிச்சன், உது ஒரு விசர் வேலையெண்டு. நான் பயந்தமாதிரியே இப்ப நடந்திட்டுது.”

நடா பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் முகபாவம் திடீரென்று மாறத் தொடங்கியிருந்ததை ஜெஸ்மின் கண்டாள். ஏனென்று விளங்கியிருக்கவில்லை அவளுக்கு. அது ஏதோவொருவகையில் இனக்கலவரம் சம்பந்தமானதென்று மட்டும் அவளுக்குத் தெரிந்தது. ஆனால் கலாபன் நடாவின் முகமாற்றத்தைக் கண்டுகொள்ளாமலே தொடர்ந்துகொண்டிருந்தான்.

ஒருபோது நடா பேசாமலிருப்பதைக் கவனமாகியபோது, “நீயேன் கிளாஸை இன்னும் தொடாமல் வைச்சுப் பாத்துக்கொண்டிருக்கிறாய்? நான் சொல்லுறதொண்டும் உனக்குப் பிடிக்கேல்லையோ?” என்றான் கலாபன்.
“நாங்கள் வெளியில இருந்துகொண்டு எல்லாம் கதைக்கலாமண்ணை. அங்கத்த நிலைமை சரியாய் எங்களுக்கு என்ன தெரியும்? போராட்டமெண்டு தொடங்கினாப் பிறகு ஆமிக்காறன் சாகாமல் அடிச்சுக்கொண்டிருக்கிறதெண்டா எல்லாம் சரியாய் வருமே?”

அதற்கு கலாபன் ஒன்று சொன்னான்.

அவர்களது உரையாடலை விளங்கிக்கொள்ளாவிட்டாலும், அது எதுபற்றியதென்பதை உணரமுடிந்த ஜெஸ்மின் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினாள். “இதுக்காக நீங்கள் இரண்டுபேரும் உங்களுக்குள்ளேயே பிரச்னைப்படத் தேவையில்லை, கலாபா. கொழும்பில் நடக்கிற வி~யங்களைக் கேள்விப்பட்டு சம்பந்தப்படாத எனக்கே க~;டமாயிருக்கிறது. நேரடியாகச் சம்பந்தப்பட்ட உங்களுக்கு நிச்சயமாக இது பெரிய பாதிப்பாய்த்தான் இருக்கும். இங்கேயிருந்து நீங்கள் செய்யக்கூடியதும் ஏதுமில்லை. நடப்பதைக் காண்பதைத் தவிர வேறுவழியில்லை. இப்போதைக்கு மட்டுமாவது. எல்லாப் பிரச்னையும் விரைவில் முடிந்து மக்கள் பாதுகாப்பாய் இருக்கவேண்டுமென்று பிரார்த்தியுங்கள். நானும் உங்களோட சேர்ந்து பிரார்த்திக்கிறேன்.”

அப்போது சென்னை மாநிலச் செய்தியில், இலங்கையில் நடைபெறும் இனக்கலவரம் குறித்து உடனடியாக பூரண அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கையின் இந்தியத் தூதுவரை பிரதமர் இந்திரா காந்தி அவசரமாக அழைத்துச் சொன்னதான தகவல் தெரிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
தாங்கள் செய்வதற்கு ஏதுமில்லையென்பதும், அதுபோன்ற நல்லெண்ணத் தலையீடுகளே அப்போது இலங்கைத் தமிழ் மக்களுக்கான நிவாரணமென்பதும் இருவருக்கும் புரிந்தன.

சிறிதுநேரத்தில் கலாபன், “வா, நடா. எனக்கு எங்கனயெண்டான்ன தனிமையில போய் கொஞ்சநேரம் இருக்கவேணும்போலயிருக்கு” என்று எழுந்தான்.

“நீங்கள் போட்டுவாருங்கோ, அண்ணை. வெளியில நேற்று சிங்களப் பெடியளோட கொஞ்சம் பிரச்சினை எனக்கு. அதுதான் இஞ்ச நிக்கிறன் வெளிக்கிடாமல்.” நடா சொன்னான்.

கலாபன் ஒன்றும் சொல்லவில்லை. ஏற இறங்க நடாவை ஒருமுறை பார்த்துவிட்டு வெளியே நடந்தான். “ஜெஸ்மின், நான் நரிமன்பொயின்ற்வரை போய்விட்டு வருகிறேன்.”

பம்பாயின் நுழைவாயில் கட்டிடத்தினோரம் நடந்து சென்று ஓரிடத்தில் அமர்ந்தான் கலாபன்.

இருண்டுகொண்டிருந்த பூகோளத்தில் மின்குமிழ்கள் தம் அடையாளம் காட்டின. மனிதர்கள் உருவங்களாய் அமர்ந்தும், நின்றும், நகர்ந்துமாய். சூழ தனிமையற்ற வெளியில் தனியனாய் அமர்ந்தும், தனியனாய் உணர்ந்தும்கொண்டு கடலையே வெறித்தபடியிருந்தான் கலாபன். அதே அலைதான் அவன் நாட்டையும் சென்று தழுவிக்கொண்டிருப்பது. அவ்வாறான ஆனந்த வீச்சாகவா அக்கரையிலும் அதன் அலைகள் இருந்திருக்கும்? அவலத்தின் ஓலமாகத்தானே அது தரையறையும்? எத்தனை மனிதர்கள் காவு கொள்ளப்பட்டிருப்பர் அதுவரையில்? காற்றும், கடலும் நாடுகள் சகலமானவற்றையுமே தடவியும், அளைந்தும் செல்கின்றன. எங்கே சென்றாலும் ஒரே காற்றுத்தானே வீசுகிறது? எந்தக் மண்ணிலும் ஒரே கடல் அலைதானே அடிக்கிறது? அவனால் தன் நாட்டை எந்தக் கணத்தில்தான் நினைக்காமலிருத்தல்கூடும்?

அவனுக்குக் கண்கலங்கியது.

வெகுநேரத்தின் பின் ஜெஸ்மின் வீடு திரும்பியவன் அங்கேயும் அதிகநேரம் தாமதிக்காமல் கப்பலுக்குத் திரும்பிவிட்டான்.

நான்காம் நாள் கப்பல் செப்பனிடும் துறையிலிருந்து துறைமுகம் வந்தது. அடுத்த இரண்டாம் நாள் காலையில் கப்பல் சார்ஜாநோக்கிப் புறப்பட்டது. அதுவரை  கலாபனின் நடைமுறை முதல்நாள்போலவே இருந்தது.
ஜெஸ்மின் அவனது மனநிலையைத் தெரிந்திருந்தபடியால் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. தனக்கு உடல்நிலை சரியில்லையென்று கூறிவிட்டு அவ்வப்போது படுத்தெழும்பியபடியும், டொக்டரிடம் போய்வந்துகொண்டும் காலத்தைக் கழித்தாள். அவளது காத்திருப்பு அல்லது இல்லிருத்தல் அவ்வாறாகவே கடந்தது.

கலாபன் பம்பாய் வந்த இரண்டாம் நாள் தனது அறைக்குச் சென்ற நடா திரும்பவரவில்லை.

யாரின் மனங்களும் சிதறுண்டு கிடந்தன.

கப்பல் போனதடவை துபாயிலிருந்து புறப்பட்டபோது இன்னோரு பயணத்தோடு ஒரு மாத விடுப்பெடுத்துக்கொண்டு ஊர் போய்வருகிற எண்ணமிருந்தது கலாபனுக்கு. இலங்கை நிலைமை தெரியாமல் விடுப்புக்கான அறிவிப்பை கப்ரினிடம் அவன் சொல்ல அப்போது தயாராகவில்லை. ஊரில் குடும்பம் பிரச்னையேதுமின்றி இருப்பார்கள். கட்டி முடிந்திருக்கும் வீட்டை ஆறுதலாகக்கூட பார்த்துக்கொள்ளலாம். கிருகப்பிரவேசத்துக்கு அவசரமில்லை. அப்படியே இருந்தாலும் அவனில்லாத நிலையில்கூட அதைச் செய்துகொள்ளலாம்.

ஆனாலும் மனம் அடங்கிநிற்க மறுத்தது. எங்கேயும் நீலம் தெரிந்தது. நீலம் கடலாக இருந்தது. அலையெறியும் கடலும் அவனுக்கு நெருப்புச் சுமந்ததாய், பிணம் மிதந்ததாய், இரத்தம் கலந்ததாய் எப்போதும் தோன்றிக்கொண்டிருந்தது.

கடல் ஒரேயிடத்தில் தங்கியிருப்பதில்லையென்று மனத்திலொரு எண்ணம் ஓடியது கலாபனுக்கு. ஐம்பெரும் சமுத்திரங்களல்ல, ஒற்றைச் சமுத்திரமே புவியில் இருப்பது. அந்த ஒற்றைக் கடல்தான் வௌ;வேறு பெயர்களில் அலைந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு கண்டமாக, ஒவ்வொரு நாடாக. இலங்கையைப்போலவே இரத்தம் சொட்டும் எந்த நாட்டுக் கதையையும் அது அறிந்திருக்கிறது. கடல் படாத மண்களாக உலகில் ஐம்பதுக்குமேல் நாடுகளில்லை. அவனதோ நாற்புறமும் கடல் சூழ்ந்த தீவு. அந்தவகையில் நான்குபுறக் கதையும் தெரிந்த கடலது. கடலில் எங்கேயிருந்தாலும் அவனுக்கு அவன் நாடு ஞாபகமாகும். நாடு ஞாபகமாகும்போதெல்லாம் தன் இனத்தின் வல்விதி ஞாபகமாகும்.

கப்பல் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சிக் காற்றின் விசையில் குலுங்கத் தொடங்கியது. அலைகள் வேகவேகமாக எழுந்தடித்தன. அவன் வேலைசெய்த கப்பல்களிலியே அதுதான் சிறிய கப்பல். ஆனாலும் அலைகளைத் தாங்கி முன்னேறவும், பனிப் பாளங்களைக் கிழித்து பயணம் தொடரவும் அது வலு பெற்றிருந்தது. மேலும் அத்தனை காலத்தில் ஒரு கடல் கொந்தளிப்பை பெரும்பாலும் பிரக்ஞையாகாமலே பயணிக்கும் அனுபவம் அவனுக்கும் கைகூடியிருந்தது.

அவன் இனி தன் வீட்டையில்லை, தன் குடும்பத்தையில்லை, கடல் சொல்லக்கூடிய கதைகளைக் கேட்கலாம். இனத்துக்கு இனம் செய்த மோசங்களின் சோகங்களும், கொடூரங்களும் நிறைந்த கதைகளை.
காலம் பெருவெளியில் ஊழையிட்டு நகர்ந்துகொண்டிருந்தது.

00000

தாய்வீடு, ஆக. 2015

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...