Thursday, August 20, 2015

மதிப்புரை: பின் - காலனித்துவ இலக்கியம்

அரசியல், சமூக எதிர்ப்பு நிலைகளின் 
இன்னொரு முகாம்,
பின் - காலனித்துவ இலக்கியம்


காலச்சுவடு பதிப்பகத்தினரின் வெளியீடாய் அண்மையில் வெளிவந்திருக்கும் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் ‘பண்பாட்டுப் பொற்கனிகள்’ என்ற நூலை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. ஏற்கனவே இதில் வெளியாகியுள்ள சில கட்டுரைகளை அவை சஞ்சிகைகளில் வெளியாகிய தருணங்களிலேயே நான் வாசித்திருந்தாலும், ஒட்டுமொத்தமான நூல் கொடுத்த பாதிப்பு அதிகம். முழுமையான மதிப்புரையாகவோ விமர்சனமாகவோ அன்றி, நூலின் ஒட்டுமொத்தமான செல்திசை நோக்கிய கருத்தினை அலசும் ஒரு கட்டுரையாகவும் இது அமைய நேர்வது நூல் விளைத்த பல்தளங்களிலான மனப்பாதிப்பின் தீவிரத்தினால்தான்.

இரண்டு விஷயங்களை முதலிலேயே சொல்லிவிடுவது நல்லது. சமகாலத்தில் தமிழில் வெளிவந்துள்ள ஒரு முக்கியமான நூல், ந.முருகேசபாண்டியனின் மொழியில் சொல்வதானால், தமிழ் அறிவுலகத்தின் அ-பிரக்ஞை குளத்தில் வீசப்பட்ட கல்லாக தடமழிந்து போவதற்குத் தோதான தலைப்போடு வெளியிடப்பட்டிருப்பதை முதலாவதாகச் சொல்லவேண்டும். ‘பண்பாட்டுப் பொற்கனிகள்’ என்பது, ஏதோ மரபார்ந்த தமிழறிஞர்களது தமிழினத்தின் பண்பாடு சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பான மயக்கத்தை ஆரம்பத்திலேயே ஏற்படுத்திவிடுகிறது. அவ்வளவு முக்கியமான செய்தியொன்றை தமிழ்ப் புலத்தில் விதந்துரைக்க வந்த ஒரு நூலின் தலைப்பாக்கத்துக்கு நூலாசிரியர், பதிப்பாளர் யாராக இருந்தாலும் அவர்கள் அந்த அலட்சிய மனப்போக்கின் பொறுப்பை ஏற்றேயாகவேண்டும்.

இரண்டாவதாக, இதில் வெளிவந்துள்ள எழுத்துப் பிழைகள் கருத்து மயக்கங்களையும், பெயர் மாறுபாட்டினையும் ஏற்படுத்துகிற அளவுக்குச் சென்றிருக்கின்றன.  பட்டியலின் விரிவஞ்சி அதை விடுத்து, இடறு கட்டைகள்போல் இடையிடும் இச் சொற்பிழைகளைத் தாண்டிய என் வாசிப்புப் பயணத்தின் அவதானிப்புக்களை இனிச் சொல்வேன்.

ஆய்வுகள் அபிப்பிராயங்கள், பதிவுகள் பார்வைகள், பேசும் படங்கள் புத்தகங்கள், அனுபவங்கள் அவதானிப்புகள் என்ற நான்கு பகுப்புகளில் முப்பத்து நான்கு கட்டுரைகளைக் கொண்டிருக்கும் இந்நூல் குறிவைத்திருக்கும் ஒரே இலக்கு ‘பின் காலனியம்’.
பின் அமைப்பியல், பின் நவீனத்துவம், பின் மார்க்சியம் வரிசையில் அண்மைக் காலமாக பிரஸ்தாபமாகியிருக்கும் இந்த நவீன கருதுகோள்பற்றி இதன் முதற் பகுப்பிலுள்ள முதற் கட்டுரை விளக்கமளிக்கிறது.
சிலபல காலமாக (சுமார் கால் நூற்றாண்டாக)  தமிழறிவுலகத்து தீவிர வாசகப்
 பரப்பிலும், மேலைத் தேய பல்கலைக் கழக மட்டங்களிலும் அவதானமாகியிருக்கும் இக் கருதுகோள், பொது வாசகப் புலத்தில் கவனம் பெறாமலேயிருக்கிறது என்பதைச் சொல்லவேண்டும். தீவிர வாசகர்களிடையேயும் மிகுந்த தெளிவினை இது கொண்டிருப்பதாகச் சொல்லமுடியாது. அதன் காரணமாக அதற்கான மூலநூல்களினதும், ஆதார நூல்களினதும் தமிழ்மொழியிலான தோற்றம் வெகுவாயிருக்கவில்லை என்பதைச் சொல்வது ஏற்பு. சில கட்டுரைகளோடு அந்த முயற்சிகள் நின்றுபோயிருக்கின்றன. ஆனால் ‘பண்பாட்டுப் பொற்கனிகள்’ ஒரு நூலாக, பின் காலனியம்பற்றிய விளக்கம், அக் கருதுகோள் அடிப்படையில் அரசியல் நிகழ்வுகள், நூல் தோற்றங்கள், சினிமாக்கள் குறித்த ஆய்வாக, விமர்சனமாக வெளிவந்திருக்கிறது.

கட்டுரை குறித்து பல்வேறு கேள்விகளும், மாறுபாடுகளும்  தோன்ற முடியுமாயினும், இத் துறையில் ஒட்டுமொத்தமாக வெளிவந்த ஒரு நூலாக இதுவே இதுவரை என் கவனத்தில் பட்டிருப்பதால், கட்டுரையின் தாக்கம் குறித்து முதன்மைக் கவனம் செலுத்துவது பொருத்தமானது.
மார்க்சிய இலக்கியக் கோட்பாடுகள் குறித்தும், அவ் எடுகோள்கள் மேலான சில முக்கிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் குறித்தும் திறனாய்வுரீதியிலான ஒரு நூல் வெளிவந்திருப்பின் எப்படி இருந்திருக்குமோ, அந்தளவுக்கு பின் காலனித்துவம் சார்ந்தளவில் பயனுள்ள ஒரு நூலாக இது அமைந்திருக்கிறது என்பது முக்கியமான விஷயம்.

பின் நவீனத்துவ காலம் முற்றாய் ஒழிந்துவிட்டது, அது பல குறைபாடுகளைக் கொண்டிருந்தது என்று முடிவுகொள்கிறது நூல். அந்த அடிப்படையிலேயே Slumdog Millionair   சினிமாவுக்கான கருத்தினையும் அது முன்வைக்கிறது. பல்வேறு மாற்று, தலித்திய சார்பாளர்களதும் ஆதரவை சினிமா பெற்றிருந்த வேளையில், இந்து அடிப்படைவாதிகளான பாரதீய ஜனதா கட்சி சார்பானவர்களதும் மற்றும் இந்திய கலாச்சார வாதிகளதும் எதிர்ப்பினைப்போல தானும் ஒரு கோணத்தில் இந்திய வறுமையை, வறுமையின் அழகின்மையை, அழகின்மையின் ஒழுங்கின்மையைச் சுட்டிக்காட்டி நூல் தன் கருத்தைத் தெரிவிக்கிறது, ‘சேரிநாய் லட்சாதிபதி: ஏழ்மையின் பாலின்பம்’ என்ற கட்டுரையில்.

கீழ்த் திசையை, குறிப்பாக ஆசியா, மற்றும் மூன்றாம் உலக நாடுகளை மையப்படுத்தும் பின் காலனியக் கருதுகோள், தன் புலத்தின் அழுக்குகள் ஐரோப்பிய அறிவுதளத்தில் பகிரங்கப்படுத்தப்படுவதை ஒருவகையில் விரும்பாதேயிருக்கிறது எனக் கூறலாம். ஒரு நெரிப்பின், ஒடுக்குதலின் அடையாளமாக நகரக் குடிசை வாழ்க்கையை உள்வாங்கும் மனநிலையின்றி, தன்னை மாற்றாருக்கு அதை அதுவாகக் காட்டிக்கொள்ள விரும்பாத கருதுகோளின்மேல் வாசக சந்தேகம் தோன்றுவது இங்கே தவிர்க்கமுடியாததாகிறது.

சில காலத்துக்கு முன்னர் சல்மான் ருஷ்டியின் Immaginary Home lands  என்ற நூலை வாசிக்கக் கிடைத்திருந்தது. கென்ய இடதுசாரி எழுத்தாளர் நிகுஜி வா தியாங்கோ போன்றவர்களின் கருத்துநிலையில் நின்று, காமன்வெல்த் ஆங்கில இலக்கியமென ஒன்று இல்லையென அதில் வாதித்திருந்தார் ருஷ்டி. அவருடைய வாதம் விக்ரம் சேத், அனிதா தேசாய், அமிதாவ் கோஷ், சசி தாரூர் போன்ற இந்திய எழுத்தாளர்கள்போலவும், வி.எஸ்.நைபால், டொர்க் வொல்காட், பிரெட்த் வைற் ஆகிய மேற்கிந்தியத் தீவு எழுத்தாளர்கள் போலவும், மற்றும் நிகுஜி வா தியாங்கோ, வொல்லே சோயிங்கா, சினுவா ஆச்செபி போன்ற ஆபிரிக்க எழுத்தாளர்கள் போலவும் தோற்றமாகிக்கொண்டிருக்கும் ஆசிய ஆபிரிக்க இன எழுத்தாளர்களால் ஆங்கிலம் மேலைத் தேயத்தாருக்கு மட்டுமான மொழியாக தொடர்ந்தும் இல்லை, மட்டுமின்றி, அது மேலைத் தேயத்தாரினது கலாசார மொழியியற் தன்மைகளைக் கொண்டதாகவுமின்றி தேச வர்த்தமானங்களின் கூறுகளைக் வரித்ததாக ஆகியிருக்கிறது என்பதாகும். காமன்வெல்த் ஆங்கில இலக்கியமென ஒன்றே இல்லையென்றாகிறபோது, காலனியத் தன்மைகள் யாவற்றையும் அறுத்துக்கொண்டு ஏகாதிபத்திய அழுத்தங்கள் அதிகமாகிக்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் பின்காலனிய கருதுகோளின் சாத்தியம் யோசிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே அமைகிறது. ஆனாலும் அது முன்மொழியும் ‘எதிர்ப்பிலக்கியம்’ என்ற கருதுகோள் அவதானிப்புக்குரியது.

பின் காலனியத்தின் முக்கிய தன்மை என்ன? நூல் விபரிக்கிறது, ‘பின் காலனித்துவம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்புக் குணம்கொண்ட ஒரு அரசியல் பார்வை. ஒரு எதிர்த்த நிலையுணர்வு’ என்பதாக. மேலும் அதுபற்றிக் கூறுகையில், ‘ஐரோப்பிய கருத்துநிலையிலிருந்து அதன் செல்வாக்குப் பிடியிலிருந்து விடுவிக்கவே பின் காலனித்துவம் ஒரு சிந்தனைக் கருவியாகப் பயன்படுகிறது’ என்கிறது. பின் காலனித்துவத்தை மார்க்சிய நோக்குநிலையான ஒரு சிந்தனை முறையாகவும் இந் நூல் அடையாளம் காட்டும்.

அதுபோல் பல்லினக் கலாசாரத்தையும் கேள்விக்குரியதாக ஆக்குகிறது பின் காலனியம். பல்லினக் கலாசாரம் என்பது சில மத அனுட்டானங்களின் அனுமதிப்பாகச் சுருங்கியிருப்பதை நூல் சுட்டிக்காட்டத் தவறவில்லை. பல்லின கலாசாரத்தை மேற்குலகின் மேலாண்மை இருத்தலை நிலைநிறுத்துவதற்கான ராஜதந்திரத்தின் சுலோக வெளிப்பாடாக சரியாகவே இனங்காட்டுகிறது நூல்.

பின் காலனித்துவம் ஏதோவகையில் சிற்சில முரண்களைக் கொண்டிருக்கிறதோ என எண்ணக்கூடிய வகையில் நூலில் சில இடங்கள் தோற்றம் கொடுக்கின்றன. ‘இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய திறனாய்வுகளில் - நவீனம், பெண்ணியம், அமைப்பியல் எல்லாமே மேற்கத்தைய சமூக அரசியல் கலாச்சாரக் கேள்விகளுக்கும் முரண்பாடுகளுக்கும் விடைதேடும் முயற்சியாக உருவாகின. இதற்கு மாறாக பின் காலனித்துவம் மூன்றாம் மண்டல பிரச்சினைகளுக்கு விமோசனம் தேட 60களில் அமெரிக்காவில் குடியேறிய முன்னை நாள் காலனியப் பிரஜைகளால் அறிமுகப்படுத்தப் பட்டது’ என்கிறது கட்டுரை.

மூன்றாம் மண்டல நாடுகளுக்கும் அமெரிக்காவில் குடியேறிய முன்னை நாள் காலனியப் பிரஜைகளுக்கும் இடையிலான தொடர்பு என்ன என்ற கேள்வியில் நிறைந்த நியாயம் இருக்க முடியும். இந்த முன்னை நாள் காலனியப் பிரஜைகள் இன்றைக்கு அமெரிக்காவில் இருந்துகொண்டு தத்தம் நாடுகளுக்கான சிந்தனைப் போக்கினை ஓர் அறிவுஜீவித் தளத்தில் அமர்ந்து நிர்ணயம் செய்யமுடியுமென்பது, ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் செல்நெறியை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்கள் நிர்ணயிப்பதற்குச் சமானமானது. பின் நவீனத்துவம் தன் தொடக்க காலத்தில் கொண்டிருந்த வீரியத்தினை இழப்பதற்கு, அது அறிவுத்தளம் சார்ந்த செயற்பாடாக மட்டும் இருந்ததான காரணம் ஒப்புக்கொள்ளப்படக் கூடுமாயின், பின் காலனித்துவம் அதே பாதையிலேயே தன் பயணத்தைத் தொடக்கியிருக்கிறது என்ற முடிபு, அதன் எதிர்காலம்பற்றிய அவநம்பிக்கையைக் கிளப்ப முடியும். இவ்வாறு வலுவிழந்த சித்தாந்தமாகத் தன்னைக் கட்டமைத்திருக்கின்ற பின் காலனித்துவம், பின் அமைப்பியலுக்கோ, பின் நவீனத்துவத்துக்கோ மாற்றாக நடைபோட முடியுமா என்பது தெளிவான வாசகக் கேள்வி.

இது நூலாசிரியரை நோக்கியதல்ல, பின் காலனித்துவம் என்ற சிந்தனைப் போக்கு அல்லது திறனாய்வுக் கோட்பாடு சார்ந்த கேள்விதான். அதுவும் விவாதத்துக்கானதாய் அன்றி, விளக்கம் கோரி எழுந்த கேள்வியாகத்தான் எழுந்திருக்கிறது. இவ்வாறான கேள்விகள் தோன்றக்கூடிய விதமாக விளக்க சாத்தியமற்ற கூறுகள் பின் காலனியத்தில் இருப்பதும் மெய்யே. நூலின் 17ம் பக்கத்திலுள்ள பின்வரும் வரிகளே இதற்குச் சான்று: ‘சென்ற நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தாக்கக் கோட்பாடுகளில் இரண்டு மிக ஆவேசமாக அலசப்படாதவை. இரண்டுமே பரபரப்பையும் பலரை எரிச்சலடையவும் செய்தவை. இரண்டுமே காத்திரமான விமர்சிப்புக்குள்ளானவை. இரண்டுமே இலகுவில் புரிந்துகொள்வதில் சிக்கலானவை. ஒன்று பின் நவீனத்துவம். மற்றது பின் காலனித்துவம்.’

‘அண்மைக் காலத்தில் பின் காலனித்துவ இலக்கியத்தில், பின் காலனித்துவ திறனாய்வில், இந்தத் துறை சார்ந்த அணுகுமுறைகளில் ஏற்பட்ட சில சிக்கல்களில், சில கேள்விகளில் உருவான கட்டுரை இது’ என ‘பின் காலனித்துவ இலக்கியப் போக்குகள்’ என்ற கட்டுரையில் அக் கட்டுரையின் தோற்றத்துக்கான காரணமாக பேராசிரியர் செல்வா கனகநாயகம் கூறுவதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எட்வேட் சேத்’தே பின் காலனிய கோட்பாட்டுருவாக்கத்தின் மூலவராகக் கருதப்படுகிறார். அவரது Orientalism  என்ற நூல் அதைச் செய்தது. எட்வேட் சேத் உயிரோடிருந்த காலத்திலேயே அதன் கருத்தமைவு மாதிரியில் உள்ள குறைகள் பலரால் சுட்டிக்காட்டப்பட்டன. பின் காலனித்துவம் ஓரளவு பலம் குறைந்த நிலையை அடைந்தபோது, பின் காலனித்துவ மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் ஹிமி பாவா, காயத்ரி ஸ்பிவக், அஜாஸ் அஹமத் போன்றவர்கள் பல புதிய கோணங்களில் பின் காலனியத்தின் பிரச்சினைகளை ஆராய்ந்து விளக்கமளித்தார்கள்.

ஆயினும் இன்னும் விளக்கம் அளிக்கப்படவேண்டிய முனைகள் பின் காலனியத்தில் இருந்துகொண்டே இருக்கின்றன. பின் காலனியம் தோன்றி இற்றைக்கு சுமார் ஐம்பது ஆண்டுகள் எனக் கொண்டால், அது கவனிப்புப் பெறத் தொடங்கி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றதாகக் கொள்ளமுடியும். இவ் இருபத்தைந்து வருட காலகட்டம் ஒரு சிந்தனைப் போக்கின் செயற்பாட்டினை முழுமையாக எடைபோடப் போதுமானதல்லவெனினும், அது செயற்களத்தில்  சாதித்தவை பிரமாதமாய்ச் சொல்லக்கூடிய அளவில் இல்லையென்றே தெரிகிறது.

இனி வரும் காலங்கள் அதை வீறார்ந்த சிந்தனைப் போக்காக மாற்ற முடியலாம். ‘பின் காலனித்துவத்தின் வீச்சும் பரப்பும் அது ஏற்படுத்தும் செய்கையிலும், பயனீட்டிலும்தான் எடைபோடப்படும்.  அறிவு மட்டத்திலிருந்து செயல்முறைக்கு இடம்பெயரத் தவறினால், தயங்கினால், மற்றைய திறனாய்வுகள்போல் பின் காலனித்துவமும் அதன் சக்தி வன்மையையும், விசையையும் இழந்துவிடும்’ என்று சச்சிதானந்தன் சுகிர்தராஜா சொல்லும் கருத்தோடு, பின் காலனித்துவ கருதுகோளின் விளக்கம்பற்றிய அலசலை முடித்துக்கொண்டு, விமர்சனம் சார்ந்து அது வியாபகமாகியிருக்கும் கோணத்தைச் சிறிது பார்க்கலாம்.

மொழிகளில் இதுவரை காலத்திலும் தோன்றிய புத்தாக்கக் கோட்பாடுகள் எதுவுமே சமூக மாற்றத்தின் விளைவுதான் என்கின்றன விஞ்ஞானபூர்வமான முடிபுகள். ஏகாதிபத்திய காலகட்டத்தின் புத்தாக்கக் கோட்பாடாக பின் காலனியத்தை எடுத்துக்கொள்வதில் பெரிய சிக்கல் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் சமூக தளங்களில் இதன் தாக்கம் எவ்வாறாயினும், இலக்கியத் தளத்தில் இது முன்வைக்கும் அழகியல் மிக்க கவர்ச்சியானது. எதிர்ப்பினையே ஒரு இலக்கிய அழகியலாக முன்வைக்கும் பின் காலனித்துவத்தின் இத் துறை சார்ந்த ஆக்கங்கள் கணிசமாய், தமிழ் மொழி உட்பட, ஆங்கில மொழியில் ஏற்பட்டிருப்பதை நூல் சுட்டிக் காட்டுகிறது.
நூலின் எழுத்து, மொழிபற்றியும் சொல்லியே ஆகவேண்டும். தன் விமர்சன, ஆய்வு வெளிப்பாட்டினுக்கு சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஒரு தனித்துவமான நடையையே கையாள்வதாகத் தெரிகிறது. வாக்கிய அமைப்புகள் இலக்கண மரபுமீறி உருவாக்கப்பட்டுள்ளன. அது எடுத்துக்கொண்ட எதிர்க் குரல்களின் அடையாளப்படுத்தலுக்கு ஏற்றதான ஒருநடைதான் நிச்சயமாக. பல கட்டுரைகள் ஒரு சம்மட்டி அடிபோன்ற அதிர்வோடு முடிவடைகின்றன. பல கவிதைகளில்கூட காணமுடியாத அழகு இது. வாசிப்பின் சுவாரஸ்யத்தை உறுதிசெய்பவை இக் கூறுகள்.

பல்வேறு ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொல் உபயோகிப்புகளும் குறிப்பிடப்பட்டாகவேண்டும். cliché க்கு தேய்வழக்கு, metaphysical  க்கு இயல்கடந்த மெய்விளக்கவியல், paedophilia வுக்கு பாலகநேசம், departmental store க்கு பகுதிவாரிக் கடையென பொருத்தமான சொற்கள் தேடியெடுக்கப்பட்டு உபயோகிக்கப்பட்டுள்ளன. மேலுமான விரிவு நூலுள் நுழைந்து செல்வதின்மூலமே வாசக சாத்தியமாகக் கூடியவை.

சில கட்டுரைகள் கட்டமைப்பாலும், கருத்துச் செறிவாலும் வன்மை செறிந்து நிற்கின்றன. உதாரணமாக ‘தற்கொலைப் போராளிகளும் சமயப் பின்னணிகளும்: சில எண்ணங்கள்’, ‘சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிரதான பிரதியான மஹாவம்சம் பற்றிய ஒரு மறுவிசாரணை’, ‘புத்தகங்கள் சாம்பலான கதை’, ‘ஹைத்தி: ஊடகங்கள் சொல்ல மறந்த தகவல்’ போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றுள் மஹாவம்சம் பற்றிய மறுவிசாரணை ஈழத் தமிழருக்கு உவப்பில்லாதபோதும் உள்ளுணர்வில் உறைக்கக்கூடியது. பின் காலனிய சித்தாந்தப்படியான தேடலில் இவ்வாறான முடிவுகள் கண்டடையப்பட முடியுமென்பது அதிரவைக்கிறது. மெய் தேடும் பயணத்தில் இந்தமாதிரியான சாத்தியம் நம்பிக்கையைத் துளிர்க்கவைக்கிறது.

விசாரணை, மறுவாசிப்பு, எதிர்ப்பு ஆகியன மூலங்களாகும் இந்த பின் காலனிய சிந்தனைப் போக்கின் வழியான மேற்குறிப்பிடப்பட்ட கட்டுரைகளே இதன் வீச்சுக்கு தக்க சான்றாகுவன.


000

 
தாய்வீடு, அக். 2011

No comments:

எம்மா- சிறுகதை

எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவை...