Thursday, August 20, 2015

பேராசிரியர் கா.சிவத்தம்பி: அஞ்சலிபேராசிரியர் கா.சிவத்தம்பி: 
அஞ்சலியாய் ஓர் நினைவுப் பகிர்வுஐயா,

‘பேராசிரியர் கா.சிவத்தம்பி மாரடைப்பால் காலமானார்’ என என் நண்பரொருவர் கூறியபோது அதிர்ந்துதான் போனேன். அந்த அதிர்வு அடங்கி ஒரு மாய இருட் போர்வையாக செய்தி மட்டும் மனத்தின்  ஒரு மூலையிலிருந்து மெல்ல மெல்ல வியாபகமாகி வந்தது. எந்த மதுவுக்கும்கூட கட்டுப்படாத ஆக்ரோஷம் கொண்டிருந்தது அந்தச் சோகம்.

ஈழத்துக் கல்விப் புலத்தின் பெருமைசால் ஆல விருட்சம் அடியோடு சாய்ந்ததான அறிஞர் கூட்டத்தின் பிரலாபிப்புகள் இணைய இதழ்களில், வார இதழ்களில் வந்தபடி இருந்தன. மனம் சலசலத்தது. உங்கள் மறைவு உண்மையில் ஈடுசெய்ய முடியாததுதான். ஆனால் இந்த அறிஞர் குழாம் எழுப்பும் கூறுகளினூடாக அல்ல, மாறாக அவரைப் புரிந்துகொண்ட கோணங்களினூடாக அந்த இழப்பினை நான் உள்வாங்குகிறேன்.

பேராசிரியர் சிவத்தம்பி இளகிய மனமும், சகஜமான குணபாவமும், சமூக அக்கறையம், சீரிய அறிவுத் திறனும் மிக்கவர் என கனடா எழுத்தாளர் இணையம் நடாத்திய அஞ்சலிக் கூட்டத்தில்கூட பலர் எடுத்துரைத்திருந்தார்கள்.  இத்தகைய உங்கள் குணநலன்களில் யாருக்குத்தான், என்ன மாறுபாடு இருந்துவிட முடியும்? நான் இலக்கியகாரன். அதனால் அது குறித்த விஷயங்களிலேயே என் அக்கறை பற்றுக் கம்பியெறிந்து படரமுடியும். உங்கள் அறிவுப் புலம் விரிந்த மற்றைய துறைகள், குறிப்பாக நாடக, இசை, அரசியல் துறைகள்பற்றி நான் இங்கே சொல்;லப்போவதில்லை.

இலக்கிய விமர்சனத்தின் ஊடாக நீங்கள் கண்டடைந்த எழுத்துக்களில் நவீன இலக்கியத்தின்  ஒரு தீவிர வாசகனோ படைப்பாளியோ வேறு கண்டடைதல்களைச் செய்து முரண்நிலையடைய நிறைய வாய்ப்பிருக்கிறது. அவை குறித்தும் பேசும் தருணமில்லை இது.

நான் உங்களிடம் நேரடியாய்ப் பயின்றவனில்லை. உங்களது ஊரைச் சேர்ந்தவனுமில்லை. ஆனாலும் உங்களது எழுத்துக்களையே பாடங்களாகக்கொண்டு நீண்டகாலம் பயின்ற மதிப்பு மட்டுமே கொண்டவன்.
பயணத் திசை ஒன்றாய் இருப்பவர்கள் வேறுவேறு வழிகளில் பயணிப்பது நடக்கக்கூடியதுதான். இந்த ஒருதிசை வழிப் பயணங்களில் இலக்குகளும் வேறாக இருக்கக்கூடும். ஆனாலும் அதை விளக்குவதற்கான சந்தர்ப்பமல்ல இது. பின்னாளில் ஒரு விளக்கத்துக்கான தேவை கருதி இந்த விஷயங்களை மேலோட்டமாகச் சொல்லிக்கொண்டு மேலே செல்கிறேன்.

ஐயா, உங்களை உங்கள் எழுத்துக்களினூடாகவும், செய்திகளினூடாகவும் மட்டுமே அறிந்திருந்த நான், எப்போது எப்படி நேர் முகமாக அறிய நேர்ந்தேன் என்பதை என்னால் நினைவுகொள்ள முடியவில்லை. ஆனாலும் அது அநேகமாக தமிழ்நாட்டில் நான் வாழநேர்ந்த காலத்தில், நீங்கள் வருகைதரு பேராசிரியராக சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோது நிகழ்ந்திருக்கலாம் என ஒரு ஞாபக முடிச்சு அவிழ்ந்து சுடர்விரிக்கிறது.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தரமணி வளாகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும்  தமிழாய்வு விழாவில்தான் அந்த முதல் சந்திப்பு நடந்ததாக இருக்கவேண்டும். காலை முதல் மாலைவரை இரண்டு மூன்று நாட்களுக்கு அவ்விழா நடைபெறும். என்னை நானே எப்போதும் எவருக்கும் அறிமுகப்படுத்தியதில்லையென்பது என்னளவில் இன்றுமிருக்கும் என் கர்வம். என் அடங்கிய சுபாவத்துக்கு இது ஒத்துப்போகும் குணாம்சமாக நிச்சயமாக இருக்கமுடியும். ஒரு விழா நாளில் மதியபோசனத்துக்கான இடைவேளையில் ஈரோடு தமிழன்பனோ, தமிழவனோ யாரோ என்னை உங்களுக்கு ஒருசமயம் அறிமுகமாக்கிய பொழுதில், என் பெயரைக் கேள்விப்பட்டிருப்பதாகவும், எழுத்துக்கள் எதையும் வாசித்ததில்லையென்றும் நீங்கள் கூறினீர்கள். அதற்கு என்னை அறிமுகம் செய்துவைத்தவர், ‘என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? உங்கள் நாட்டைச் சேர்ந்தவர், இங்கே நீண்ட காலமாய்த் தங்கியிருக்கிறார், இரண்டு மூன்று நூல்கள் வெளிவந்திருக்கின்றன, இங்கிருந்தே ‘இலக்கு’ என்கிற சிறுபத்திரிகையைக் கொண்டுவருகிறார்’ என்று சொன்னார். அப்போதுதான் என்னை அருகே அமர வைத்து என்னைப்பற்றி விசாரித்தீர்கள். மதியபோசன இடைவேளை முடியும் நேரமாதலால், சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கியிருப்பதாகவும், வசதியானவேளையில் வந்தால் நிறையப் பேசலாம் என்றும் கூறி என்னை அனுப்பினீர்கள்.

அதன் பின்னர் மெரினா கடற்கரைப் பக்கம் வரநேர்ந்த ஓரிரு சமயங்களில் நான் உங்களை வந்து சந்தித்திருக்கிறேன். நாளாக ஆக, நீங்கள் விடுமுறையில் இலங்கை சென்றுவிட்டு, திரும்பிவந்த பின்னர் கி.பார்த்திபராஜா போன்ற அப்போதைய எம்.ஏ. வகுப்பு பயிலும் மாணவர்களிடம் உங்களை வந்து பார்க்கும்படி செய்தி அனுப்புவீர்கள். என் வீடு தெரிந்திராவிட்டாலும், நடைபெறும் ஏதாவது ஓர் இலக்கியக் கூட்டத்தில் என்னைச் சந்திக்கும்போது அவர்கள் தகவலைத் தெரிவிப்பார்கள். நானும் முடிந்த விரைவில் ஒரு மாலைப்பொழுதாக வந்து உங்களைச் சந்திப்பேன்.
மெரினா கடலோரத்திலுள்ள அந்த விருந்தினர் விடுதியில் உங்கள் அறையிலிருந்து கடலலைபோல் ஓய்ந்துவிடாமல் எத்தனை நாவல்களை, எத்தனை சிறுகதைத் தொகுப்புகளைப்பற்றி நாம் பேசியிருக்கிறோம். இலக்கியப் போக்குகள் குறித்து எவ்வளவு தீவிரமாய் கலந்துரையாடியிருக்கிறோம்.

அவ்வாறு பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் வந்து நான் உங்களைச் சந்தித்த ஒருநாளில்தான் என் வாசிப்பின் தீவிரத்தைப்பற்றி நீங்கள் மெச்சிக் கூறினீர்கள். ‘தேவகாந்தன், படைப்பு, படிப்பிப்பு எந்த ஒரு துறையிலென்றாலும் உழைப்பு முக்கியம். இல்லாவிட்டால் இருக்குமிடத்தைத் தக்கவைக்கவே முடியாது’ என்று அன்று நீங்கள் கூறிய வார்த்தைகளை என்னால் இன்றும்கூட மறக்க முடியாமல்தான் இருக்கிறது, ஐயா.

எறும்பும் தன் கையால் எண் சாண் என்பார்கள். எனக்கும் உங்களோடான சங்காத்தம் அதுபோல்தான் இருந்திருக்கிறது. பேராசிரியர்கள், கல்விமான்கள்போல நானும் உங்களை அவ்வப்போது சந்தித்தும், பேசியும், பல விஷயங்களை அலசி ஆராய்ந்தும் உள்ளேன் என்பது எனக்குப் பெருமையாகவே இருக்கிறது. ஆனால் உங்கள் பதவி, புகழ்பற்றி நன்கறிந்த பலபேர் அறிந்திருக்க முடியாத சிலகூறுகளை நான்  தொட்டுக்காட்டுவது அவசியமாகவே படுகிறது.

ஐயா, உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா, தொண்ணூற்றேழு அல்லது தொண்ணூற்றெட்டு என நினைக்கிறேன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரிமுனையில் ஒரு கூட்டத்தை ஒழுங்குசெய்திருக்கிறது ஒருநாள் மாலையில். நீங்கள் வரவிருப்பதான தகவலில் நானும் கூட்டத்துக்கு வந்திருக்கிறேன். ஆறு மணிக்கு ஆரம்பமாகவேண்டிய கூட்டம் ஆறரை மணியாகியும் ஆரம்பிக்கவில்லை. பேராசிரியர் சிவத்தம்பி வந்ததும் ஆரம்பித்துவிடலாம் என்கிறார்கள் கூட்ட அமைப்பாள நண்பர்கள். நான் வெளியே வந்து வீதியில் பிராக்குப் பார்த்தபடி நேரத்தைப் போக்காட்டிக்கொண்டு நிற்கிறேன். அப்போது நீங்கள் ஒரு ஓட்டோவில் தனியே வந்து இறங்குகிறீர்கள். காலில் நீங்கள் சற்று சுகவீனமுற்றிருந்த காலம் அது. கூட்டம் நடைபெறவிருந்த முதலாம் மாடிக்கு நான் பின்தொடர நீங்கள் மேலே ஏறிச்செல்லுகிறீர்கள். அப்போதுதான் நீங்கள் வந்துவிட்டமை கூட்ட அமைப்பாளர்களுக்குத் தெரியவருகிறது. நீங்களோ உங்கள் பெரிய சரீரத்தை உடல்நலம் குறைந்திருந்த வேளையிலும் முதலாம் மாடிக்கு நகர்த்திய பிரயாசையில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறீர்கள். உங்கள் மேனியெங்கும் வியர்வை ஆறாக ஓடுகிறது. யாராவது சென்று அழைத்துவந்திருக்கலாம் அல்லது கார் வசதியேனும் செய்து கொடுத்திருக்கலாம் என நான் கூட்ட அமைப்பாளர்களைக் காய்ந்து வெடிக்கிறேன். அப்போது நீங்கள் மெல்ல என்னை அருகே அழைத்து, ‘தேவகாந்தன், நான்தான் ஓட்டோவில் வருவதாகச் சொன்னேன். காரைவிட ஓட்டோவில் இந்தக் காலோடு எனக்கு ஏறி இறங்குவது சுலபமாக இருக்கிறது’ எனக் கூறி சமாதானப் படுத்துகிறீர்கள்.

சிறிதுநேரத்தில் கூட்டம் ஆரம்பமாகிறது. முதன்மைப் பேச்சாளர் நீங்கள்தான். நீங்கள் அன்று பின்நவீனத்துவத்தைப்பற்றி  பேசுகிறீர்கள். ஐயா, பல்வேறு நூல்களினூடாகவும் புரியச் சிரமப்பட்டுக்கொண்டிருந்த பின்நவீனத்துவம்பற்றி நான் தெளிவான ஆரம்பத்தை அடைந்தது அன்றுதான். பின்னர்கூட பல்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் பின்நவீனத்துவத்தைப்பற்றி எழுதவும், பேசவும் செய்திருக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க ஆதரவில் நடைபெற்ற அன்றைய கூட்டத்தில் நீங்கள் நிகழ்த்திய பேச்சுக்கு உறைபோடக் காணாது அவையெல்லாம்.
நீங்கள் எழுதிய நூல்களையெல்லாம் இன்று பட்டியலாகப் போட்டபடி இருக்கின்றன பத்;திரிகைகள். இவையெல்லாம் ஆண்டு மலர்களுக்கும், பல்கலைக் கழக சஞ்சிகைளுக்கும், பத்திரிகைகளின் தேவைகளுக்காகவும் நீங்கள் எழுதிய கட்டுரைகள்தானே என்று ஒருகாலத்தில் சிலர் ஏளனம் செய்தது எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது, ஐயா. இவைகூட கனதியானவைதான். ஆனாலும் என்றும் என் ஞாபகத்தில் இருந்துவரும் நூல் ‘பாரதி: காலமும் கருத்தும்’ என்று நீங்கள் அ.மார்க்ஸ{டன் இணைந்து எழுதிய நூல்தான். பாரதியின் வரலாற்றை எழுதியதில் தொ.மு.சி.ரகுநாதனுக்கு இருக்கும் சாதனைச் சிறப்பு, ஆய்வுரீதியில் மார்க்ஸீய நோக்கில் நீங்கள் எழுதிய அந்த நூலுக்கு உள்ளது. பல தடவைகள்  அந்த நூலை நான் வாசித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவையிலும் அர்த்த வியாபகம் கூடி ஓர் படைப்பிலக்கியம்போல் என்னைக் கவர்ந்த ஆய்வுநூல் அது.
‘முகத்துக்கு அஞ்சி வேசையாடக் கூடாது’ என்று ஒரு சொலவடை எங்களூரில் இருக்கிறது. பல்வேறு நூல்களுக்கு நீங்கள் முன்னுரை எழுதியிருக்கிறீர்கள். எழுதியவரின் மனத்தைப் புண்படுத்திவிடாது, அவர்களைத் தட்டிக்கொடுக்கும் விதமாக அந்த முன்னுரைகள் அமைந்திருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். அப்படிச் செய்துவிடக்கூடாது என்பதுதான் மேலேயுள்ள அந்தச் சொலவடையை நான் இங்கே குறிப்பிட்டதன் அர்த்தம்.

சில ஆண்டுகளின் முன்னால் நான் ‘ஆழியவளை’ என்ற ஒரு நூலை வாசிக்க நேர்ந்தது. தமிழில் பண்பாட்டு நிலவியல் சார்ந்த முன்னோடி நூல்களில் ஒன்று அது. அதற்கு நீங்கள் முன்னுரை எழுதியிருக்கிறீர்கள். ஒருமுறை வாசித்தேன். மீண்டும் வாசித்தேன். அப்படியே எண்ணம் வரும்போதெல்லாம் அந்த நூலின் முன்னுரையை பல தடவைகள் வாசித்தேன். அத்தனைக்கு தன் சொல்லாட்சியாலும், கட்டுரை வன்மையாலும் தனக்கு நிகரில்லாத ஒரு முன்னுரையாக எனக்கு அது தென்பட்டது, ஐயா.

அப்படியொரு நூலின் வன்மை கூடிய பேச்சை, அப்படியொரு சிகரம்தொடக்கூடிய ஆய்வு நூலை, அப்படியொரு வளமான முன்னுரையை எழுதக்கூடிய ஒருவரை இனி நாம் எங்கே தேட முடியும்? வெறுமையென்பதற்கு இப்போதைக்குள்ள விளக்கம், நீங்கள் இல்லாத இலக்கிய உலகம் என்பதுதானோ?

பயணத் திசை ஒன்றெனினும் நாம் வெவ்வேறு பாதைகளில்
பயணித்தவர்களே. இந்தப் பாதையில்கூட நீங்கள் இல்லாத சூன்யத்தை நான் உணர்கிறேனே, ஐயா.

உங்கள் நினைவுகளுக்கு என் மனதார்ந்த அஞ்சலிகள்!


000


தாய்வீடு, பெப். 2012

No comments:

எம்மா- சிறுகதை

எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவை...