மலேசியச் சிறுகதைகளின் வளர்ச்சிப்போக்கு
மலேசியச் சிறுகதைகளின் வளர்ச்சிப்போக்கு - தேக்கம் - நிவாரணம் ‘தமிழில் சிறுகதை வரலாற்றையும் வளர்;ச்சியையும்பற்றி ஆராயும்போது தமிழ்மொழி பயிலும் தமிழ்நாட்டையும் ஈழத்தையும் மாத்திரம் கவனத்தில் எடுத்துக்கொள்வது தவறு என்பதும், மொழி உணர்ச்சியும் இலக்கிய ரசனையும் தீவிரமாக வளர்ந்துள்ள மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளையும் சேர்த்து ஆராயவேண்டியது இப்போது அவசியமென்பதும் தெளிவாகத் தெரிகிறது.’ இது சிட்டியும், சிவபாதசுந்தரமும் எழுதிய ‘தமிழில் சிறுகதை: வரலாறும் வளர்ச்சியும்’ என்ற நூலில் உள்ள வரிகள். நூல் 1989ல் வெளிவந்தது. இது சுட்டும் குறிப்பின் விவரத்தை உன்னித்தால் ஏறக்குறைய அதுகாலம் வரைக்கும் மலேசியத் தமிழிலக்கியம் கவனிக்கப்படவில்லையென்பது தெரியவரும். இதன் முதற் காரணியாக இலக்கியப் பரிமாற்றம் போதியளவு இன்மையைச் சொல்லமுடியும். மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் சுமார் நூறினை அண்மையில் வாசிக்க நேர்ந்தபோது வெகு பிரமிப்பு ஏற்பட்டது. அதன் வித்தியாசமான களத்தில், வித்தியாசமான கரு விவரிப்புகள் சூழமைவுகளில் அற்புதமான சில சிறுகதைகளைக் கண்டேன். இவ்வளவு காலம் அவை மறைந்து கிடந்தமை ஆச்சரியமாகவும்கூட இருந்தது. ...