Wednesday, September 03, 2014

மகாகவியின் 3 நாடகங்கள்

மகாகவியின் 3 நாடகங்கள்
தொகுப்பாசிரியர்: எம்.ஏ.நுஃமான்


இன்றையகாலத் திருக்கும் மனிதர்கள்
இன்றையகாலத் தியங்கும் நோக்குகள்
இன்றையகாலத் திருப்புகள் எதிர்;ப்புகள்
இன்றையகாலத் திக்கட்டுகள் …….’ (மகாகவி)
இவையே அறுபதுகளிலிருந்து எண்பதுகள்வரை ஈழத்தில் கவிதை, நாடக ஆளுமையாகவிருந்த மகாகவி என்ற உருத்திரமூர்த்தியின் இலக்கியக் கருதுகோள்களாக இருந்திருக்கின்றன என்பதை அவரின் படைப்புகளின் மூலமும் நம்மால் தெளிவாகக் காணமுடிகிறது. ‘புதிய களங்கள் புதிய போர்கள் ,புதிய வெற்றிகள் இவைகளைப் புனையும் ,நாடகம் வேண்டி நம் மொழி கிடந்தது’ என்று அவரே கூறுவது போன்றிருந்த நிலைமையிலேதான் ‘கோடை’ நாடகத்தினூடாக மகாகவியின் நாடகப் பிரவேசம் நிகழ்கிறது.

இவையெல்லாம் வெறும் பிரகடனங்கள் மட்டுமில்லை,
செயற்பாட்டு வெற்றியையும் அடைந்திருக்கின்றன. அதை இப் பாநாடக நூல் தொகுப்பு பிசகில்லாமல் காட்டுகிறது.

‘எல்லாவிதமான கலை இலக்கிய வடிவங்களையும்விட ஈழத்தில் இன்றைக்கு உன்னதமான வளர்ச்சிபெற்றிருப்பது நாடகத் துறையே’ என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி ஒருமுறை என்னிடம் கூறினார். ஈழத்தில் மட்டுமில்லை, தமிழகத்திலும் மேடைநாடகவாக்கமும், பிரதியாக்கமும் மிகவும் வீச்சாகவே வளர்ந்துகொண்டிருக்கின்றன. ‘குறத்தி முடுக்கு’, ‘ராமானுஜர்’, ‘ஒளவை’, ‘உபகதை’ போன்றவை இதை ஊர்ஜிதம் செய்கின்றன.
இத்தகைய  காலகட்டத்தில்  பாநாடகவகையைச் சார்ந்த மூன்று
நாடகங்கள் அடங்கிய இந்நூலின் வரவு ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
மகாகவிக்குச் சமகாலத்தில் எழுதியவர் கவிஞர் முருகையன். நீலாவணன்,சொக்கன், ஜீவா ஜீவரத்தினம் போன்றோரும் இக் காலகட்டத்தில் வானொலி நாடகத்திலிருந்து பாநாடகம்வரையான பல் துறைகளிலும் எழுதியுள்ளனர்.

ஆயினும், மகாகவியளவு சமூக எதார்த்தத்தை, யாழ்ப்பாணமண்ணின் மணத்தை பதிவுசெய்தவர் வேறுபேர் இல்லை. வெவ்வேறு தளங்களெனினும் நாவலில் டானியல் போல்,கவிதையிலும் நாடகத்திலும் மகாகவிதான்.

பாநாடகவகை ஈழத்திலே பிரபலம். அதுபோலஅதன் வளர்ச்சி வியாப்திகள் ஈழத்திலேதான் ஆழ நிலைகொண்டிருக்கின்றன. ஈழத்தில் முதல் பதிப்புப்பெற்ற நூல் சோமசுந்தரப் புலவரின் ‘உயிரிளங் குமரன்’. மீனாட்சிசுந்தரனாரின்  ‘மனோன்மணீயம்’ தமிழகத்தில் உருவான குறிப்பிடத் தகுந்த நூல் எனினும், அது நாடகப் பிரதிமட்டுமே. வாசிப்பு மட்டும் அதில் சாத்தியமாகியிருந்தது. காவியமளவு அது விரிந்ததால் நாடகக் கூறுகள் அதில் அடிபட்டுப் போயிருந்தன. அதற்கான அரங்காட்டப் பிரதி எப்போதும் எழுதப்பட்டதில்லையென்றே தெரிகிறது.

பாநாடகமென்பது செய்யுள் நாடகமல்ல. பாநாடகத்தைத் தீர்மானிக்கும் விதிமுறைகள் நிறைய இருக்கின்றன. செய்யுளுக்கும் கவிதைக்குமிடையே இருக்கிற வித்தியாசம் மிகநுட்பமானது. இந்தப் பிரச்னைக்குள் சென்றுவிடாதஅவதானத்தினாலேயே பாநாடக வகையென இதற்குப் பெயர் வைக்கப்பட்டதாம். கவிதையென்பது செய்யுளிலும் வசனத்திலும் அமையும் என்பார் எம்.ஏ.நுஃமான். செய்யுள் நடையிலமைந்த பாரதியின் ‘காணிநிலம் வேண்டும்’ ஒருகவிதையாகுமென்றும், அதுபோல் வசனநடையிலமைந்த ந.பிச்சமூர்த்தியின் ‘காட்டுவாத்து’ம் கவிதையேயாகுமென்றும் அவர் மேலும் விரித்துரைப்பார். இதைப்பற்றியெல்லாம் ‘புதிசு’விலும், ‘மல்லிகை’யிலும் வந்த இரண்டு கட்டுரைகள் நூலின் பின்னிணைப்பாக உள்ளன . இங்கேநாம் கவனிக்கவேண்டிய  அம்சம், பாநாடகவகையானது செய்யுள், வசனம் என்பவற்றைவிட உணர்வு வெளிப்பாட்டுக்கு நன்கமையப்பெற்று விளங்கியது என்பதே. ‘உச்சநிலையில் மனித ஆன்மா தன்னைச் செய்யுளிலேயே வெளிப்படுத்துகிறது’ என்றார் எலியட். அதனால்தான் பாநாடகவகையானது இங்கே நாடகவாசிரியர்களால் கையாளப்பட்டது. இதிலீடுபட்டவர்களும் கவிஞர்களாகவே இருந்தார்கள் என்பது முக்கியம்.

ஏறக்குறைய இரண்டுஆண்டுகளுக்கு முன்பு  மேடையாக்கம் பெற்று பல வெற்றிகளைச் சந்தித்த ‘ஒளவை’ நாடகத்தையும் இ;ந்தப் பின்னணியிலேயே வைத்துப் பார்க்கவேண்டும். ‘ஒளவை’யின் வெற்றிக்கு நவீன நாடக உத்திகளோடிணைந்த அ.மங்கையின் நெறியாள்கை ஒரு காரணமெனில், கவிஞர் இன்குலாப்பின் கவிதைச் செறிவுள்ள வசனங்களையும், உன்னதமான புனைவையும் இன்னொரு காரணமாகச் சொல்லவேண்டும்.
ஏறக்குறைய இவ்வகை வெற்றிகளைச் சிறிய அளவில் மகாகவியின் பாநாடகங்கள் ஏற்கனவே அடைந்திருக்கின்றன என்று சொல்லத் தோன்றுகிறது.

இனி நாடகங்களைப் பார்க்கலாம்.

1.கோடை
1969ல் முதன் முதலாய் மேடையேறிய ‘கோடை’, 1970லேயே பதிப்புப் பெற்றுவிடுகிறது. பின்னால் இது தமிழகத்தில் எம்.ஏ. வகுப்புக்கு தமிழ் பாட நூலாகவும் வைக்கப்பட்டது.

‘கோடை’ ஒரு வகையில் குறியீட்டுப் பெயர்தான். ஆங்கிலேயர் ஆட்சிக் காலமே கோடைகாலமாய்க் குறிக்கப்பட்டிருக்கிறதென்பது முதல் வாசிப்பிலேயே வாசகனுக்குப் புரிந்துவிடுகிறது. இந் நாடகத்தின் சிறப்பு, மேளகாரக் குடும்பமொன்றின் நாளாந்த இயங்குதளத்திலிருந்து சமூக நிலைமையைக் காட்டியமையேயாகும். ஒரு சமூகத்தின் வாழ்க்கைநிலை, அந்தஸ்துபற்றிய விபரங்கள் யாவும் அதில் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றன. அதேவேளை அது காட்டும் கலைப் புறம் அற்புதமானது. நாடக முடிவின் முன்பாக ஒருகாட்சியில் சில சிறு நிகழ்வுகளினிடையே பின்னணியாய் ஒரு குரல் இவ்வாறு ஒலிக்கும்:  

 ‘நின்றிந்தக் கோயில் நிமிர்ந்துநெடுந்தூரம்,
பார்த்துப் பயன்கள் விளைக்கின்றகோபுரமும்,
வேர்த்துக் கலைஞர் விளைத்தமணிமண்டபமும்,
வீதிகளும் நூறு விளக்கும் பரதத்தின்,
சேதிகளைக் கூறும் சிலம்புச் சிறுபாதம்,
ஆடும் அரங்கும் அறிந்துகலைஞர்கள்,
நாடிப் புகுந்துநயந்திடநீசோமனுடன்,
ஊதும் குழலில் உயிர் பெற்றுடல் புளகித்து,
ஆதிஅறையில் அமரும் கடவுளுமாய்,
என்றோஒருநாள் எழும்.’

இதுபோல் கவிதையின் வீறுடனானஅடிகள் பல்வேறிடங்களிலும் படிமங்களாய் விழுந்திருக்கின்றன. கோடை  பாநாடகத்தின் வெற்றிக்கு இதையும் ஒருகாரணமாகச் சொல்லவேண்டும்.

2. புதியதொரு வீடு

1971ல் முதல் மேடையேற்றம் கண்டு, 1981இல் முதல் பதிப்புப்பெற்ற நாடகம் இது. ஏனைய இரண்டு நாடகங்களையும்விட கவிதை வளம் மிக்க நாடகமாக இதைக் கூறமுடியும். சந்தங்கள் பல்வேறுவகையானவையும் சேர்ந்து ஓர் இசையரங்கையே ஏற்படுத்திவிடக் கூடியதாய் இது அமைவுபெற்றிருக்கிறது.
நாடகவாரம்பத்தில் ஒருபாடல் ஒலிக்கும். அந்தஅடிகள் இவை:

‘சிறுவண்டுமணல்மீதுபடம்ஒன்றுகீறும்
சிலவேளை இதைவந்துகடல்கொண்டுபோகும்.’

ஈழத் தமிழரின் வாழ்நிலைமைகள் அக்கால இனவாத அரசியல் பெருநெருப்பில் வெந்துபோனவிதத்தை இவை பூடகமாய்ச் சொல்வதாகக் கூறுவார் பல்வேறு நாடக நூல்களின் ஆசிரியரான இளையபத்மநாதன்.

நாடகத்தின் கருப்பொருளும் முற்போக்கானதுதான்.
பெருந்தூண்டில் போட  கடல்மேல் சென்ற  மாயன், ஊர் துடைத்துக் கடலடித்த அந்த இரவிலே காணாதுபோய்விடுகிறான். அவன் இறந்துவிட்டதாக எல்லோரும் கொண்டுவிடுகிறார்கள். தனியனாய்த் தவித்துப்போனஅவனது மனைவியையும் குழந்தையையும் வாஞ்சையோடு காப்பாற்ற முன்வருகிறான் மாயனின் தம்பியான  மாசிலன்.

வருடங்கள் கடக்கின்றன. ஊர் அவர்களது உறவை ஐயுறுகிறது. இந்தநேரத்தில் மறைக்காடர், மையுண்டநெடுங்கண்ணாத்தைபோன்ற சில நல்லவர்கள் அவர்களைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள். பலகாரணங்கள் சொல்லி மறுத்தும் பயனற்றுப்போக, கடைசியில் மயிலி இரண்டாம் திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள்.

மயிலியும்,மாசிலனும் சேர்ந்துவாழ்கிறார்கள்.

மாசிலன் தொழில் நிமித்தமாய்க் கடலில் செல்லும்போதெல்லாம் மயிலி  கொள்ளும் அச்சம் அற்புதமான மொழியிலே நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. ‘கறியோடு பொதிசோறு தருகின்றபோதும், கடல்மீதில் இவள்கொண்ட பயமொன்று காணும்’ என்று அந்த அடிகள்  வரும்.

அவர்களுக்குக் குழந்தையொன்றும் பிறந்துவிட்டிருக்கிற
நிலையில் ஒருநாள் மாயன் திரும்பிவருகிறான். மனைவிக்குக்  குழந்தை
பிறந்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிடுகிறான். பின் விபரமெல்லாம் தெரிந்து விதியை நொந்து மனம் சோருகிறான்.

மனவுளைச்சலோடு என்றாலும், அவர்களின் உறவை  அங்கீகரித்து மாயன் விலகுவதுதான் நாடகத்தின் உயிரோட்டமான பகுதி.

3. முற்றிற்று

இதுவரை அச்சேறாதிருந்து இந் நூலில் முதல் பதிப்புக் காணும் நாடகம் இது. மனித மரணத்தை இப் பாநாடகம் பேசுவதாகச் சொல்லலாம். பிறப்பிலிருந்து பல்வேறு நிலைகளிலும் பருவங்களிலும் சுழலாய்த் தொடரும் இயற்கையின் விந்தையொன்று தத்துவத் தளத்தில் இதில் விசாரணையாகிறது.  ‘உயிர் ஓய்வதற்று உயர்வொன்றினை நாடலே உண்மை’ என இச் சுழல் தத்துவம் காலனின் வாயால் வெளிவருகிறது.

காலனுக்கும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புற்றுநோயாளி நல்லையாவுக்குமிடையே நிகழும் சம்வாதம் அத்தனை நெளிவு சுழிவுகளுடன் நாடகத்தில் இடம்பெற்றிருக்கிறது. காலனுக்கும் கிழவிக்கும் நடக்கும் புதுமைப்பித்தன் காட்டிய சம்வாதம், நிச்சயமாக எவருக்கும் இச் சந்தர்ப்பத்திலே நினைவு வராமல் போகாது. ‘இன்று இச்சிறிய உடலை வதைத்துவிட்டு, வெற்றி என ஓர் விசர்ப் பேச்சு பேசுவாய், கொன்றுதிரிவாய் புறஉடலைஆதலினால், அன்றோ தொழிலும் அவதியின்று நீள்கிறது, சென்றுவாஅப்பா சிறிது’ என்று யமனையே திருப்பிஅனுப்புகிறார் நல்லையா ஒரு சந்தர்ப்பத்திலே. கடைசியில் வெல்வதென்னவோ யமன்தான். ஆயினும், ஒருவரையொருவர் சொல் சாதுர்யம் காட்டி வெல்லத் துடிப்பதை நாடகவாசிரியர் காட்டும் விதம் ரஸமாயிருக்கும்.

தின் என்றுசொல்லும் திகட்டாச் சிவலை நிறம், அல்ல உன்னைப்போல் எனினும் அதுநடக்கக், கொல்லும்படிஓர் அழகு கொழிக்கிறதே, இந்த வயதில் எவளும் அழகுதான்’ என்று அழகின் ஆராதனையோடு தொடங்குகிறது இப் பாநாடகம்.  ‘தின் என்று சொல்லும் திகட்டாச் சிவலை நிறம்’என்ற அடி, பாரதியை நினைவுபடுத்துகிறது. ‘தின்பதற்குமட்டுமல்ல, தின்னப்படுவதற்கும் உரிய பற்கள்’ என்று வசனகவிதையிலே ஓரிடத்தில் அவன் கூறுவான்.

இவ்வாறு ஒருகலகலப்போடு தொடங்கும் நாடகம் நல்லையாவின் மரணத்தின் சோகத்தோடு முடிவடைகிறது. இடைப்பட ஒரு  ஜனனமும் காட்டப்படும். ஜனன மரணமாக அன்றி, மரணத்தின் தொடர்ச்சியான ஜனனமாய் அதுகாட்சியாக்கப்படுகிறது. சிறிய நாடகமாதலால் ஏனைய இரு நாடகங்களையும்விட வேறான தளத்தில் கதைக் கருவை அமைத்து ஆசிரியர் ஒரு பயில்வினை மேற்கொண்டு பார்த்திருக்கிறாரோ என்றுதான் இந் நாடகத்தை  வாசிக்கும்போது நினைக்கத் தோன்றுகிறது. ஒரு புதுக் களத்தின் பயில்வுக்கான மொழிப் பாவனை இருந்தும், நாடகம் உணர்வுரீதியாக வெறுமை  தட்டுகிறது.  நல்லையா மரணம் அதிர்ச்சிதான். ஆயினும் நாடகத்தின் காட்சிப் பரிமாணமெங்கும் அது விகசிப்பாய்த் தோன்றுவதில்லை. இயக்க வழியில் வெளிப்படவேண்டிய பாத்திர நலன்கள் அவ்வப் பாத்திரங்களின் உரையாடலாலும்,தன்னிலை விளக்கம் செய்யும் அம்சங்களினாலும் வெளிப்பட்டு நாடகச் சுவையைப் பெருமளவு குன்றச்செய்து விடுகின்றன.

மகாகவியின் ஆக்கங்களைத் தொகுப்புகளாகக் கொண்டுவரும் முயற்சியில் முதல் தொகுதியாக இந்நூல் வெளிவருவதை
பதிப்பாசிரியரின் முன்னுரை தெரிவிக்கின்றது. ஏனைய தொகுப்புகளை ஆவலோடு எதிர்பார்க்கவைக்கிற தொகுப்பாகவே இது அமைந்திருக்கிறது என்பதை தயங்காது சொல்லலாம்.


00000


கண்ணகி.காம், 2001

No comments:

நேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)

விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வச...