Tuesday, September 02, 2014

தீனிப் போர் (நாடகப்பிரதி)

 தீனிப் போர் (நாடகப்பிரதி)
 இளையபத்மநாதன்


ஈழத் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இப்பொழுது அக்கறையாகப் பேசப்படும் துறைகள் இரண்டு. ஒன்று ,நவீன நாடகங்கள். இரண்டு, புலம்பெயர் சினிமா. சமகால கலைச் சினிமா வரலாற்றில் பாரிய தாக்கங்களை புலம்பெயர் சினிமா ஏற்படுத்துமென்று பலமாக நம்பக்கூடியவகையில் புதிதுபுதிதாக ஆக்கங்கள் வெளிவந்துகொண்டிருப்பதை நாம் கேள்விப்படுகிறோம். காட்சி, மொழி, இசையென்று இரண்டுக்குமே பொதுமையான அம்சங்கள் உள்ளபோதும், இவை வேறுவேறான கலைக் கட்டுமானமுடையவை. அரங்கில் நாடகத்தை முழுக் காட்சிப் படிமமாகத்தான் பார்வையாளனுக்குத் தரமுடியும். சினிமாவிலோ குளோஸ்-அப் முறையில் கவனத்தைக் குவிப்பிக்க வழி இருக்கிறது. ஆனாலும் வேறு உத்திகளில் கவனம் குவிக்கப்படவேண்டிய பகுதிகளில் கவனத்தைக் குவிக்கச் செய்ய நாடகத்தினாலும் முடியும். பொதுஅம்சங்களோடு இவை நவீனத்தை நோக்கி நகர்கின்றன. அது மகிழ்சியாகவிருக்கிறது.

இவ்வாறான தமிழ்க் கலைகளின் வளர்நிலைக் காலகட்டத்தில் நம் மரபு சார்ந்த கலைக்கூறுகள் மகாகவனிப்புப் பெற்றுவருகின்றன. அவை வீர்யமுடன் காப்பாற்றப்படவேண்டியவை ஆகும். இதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டியே ஒரு புத்தக மதிப்புரையில் இது குறித்து சற்று எல்லை விரிந்து பேசநேர்ந்திருக்கிறது.

‘ஏகலைவன்’ நாடகப் பிரதி மதிப்புரையில் நாடகப் பாடமொழி, நாடக அரங்கமொழி என்ற இரண்டுவகைகளைப்பற்றிச் சொல்லியிருந்தேன். இந்த இரண்டு வகைகளையும் தன்னகத்துக்கொண்டு வெளிவந்திருக்கிறது ‘தீனிப் போர்’ என்கிற இப்பிரதி. 37 பக்க நாடக பாடத்துக்கு ஆட்டப் பிரகாரம் எழுத 94 பக்கங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அரங்கமொழிப் பிரதியானது முற்றுமுழுதாகவும் மேடைக்கு உரியதுதான். இதிலுள்ள ஒரு விசேடம் என்னவெனில், அரங்கமொழியை ஒரு நாடக பாடத்துக்கு எத்தனை ஆசிரியர்களும் எழுதலாம் என்பதுதான். அது அத்தனைபேரின் பார்வைகளின் வேறுபாட்டோடும் தனித்தனியாய் நிற்கக்கூடியது.

‘தீனிப் போர்’ ஒரு குறியீட்டு நாடகம். மிருகங்களின் உரையாடலுக்கும் பிரலாபத்துக்கும்  நடப்புக்குமூடாக நாடகத்தின் அர்த்தங்கள் விரிந்து செல்கின்றன. 1991இல் அரங்காக்கம் பெற்ற  இந்நாடகம், நவம்பர் 2000இல் நூலாக்கம் பெற்றிருக்கிறது. பிரதியின் செழுமைக்கு இந்த நீண்ட இடைவெளி ஒரு காரணமென்று நம்புகிறேன்.

காட்டிலிருந்து வந்து நாட்டின் எல்லையில் இரைதேடிப் போன நரியை, அதே தீனி தேடிவந்த நாய் தடுக்கிறது. அதனால் சிங்கத்தின் தலைமையிலான காட்டுமிருகங்களுக்கும், மாட்டின் தலைமையிலான நாட்டுமிருகங்களுக்குமிடையே பிர ச்னை தோன்றுகிறது. அடங்கிப் போகலாமென்கிறது பூனை. ஏன் அடங்கிப் போகவேண்டும், நமக்கு கொம்புகள் எதற்கிருக்கின்றன என வீரம் பேசுகிறது ஆடு. யுத்தம் தீர்மானமாகிறது. யுத்தகளத்தில் தன் பிரிய பெண்குதிரையைக் கண்டு மனம் தளர்ந்து அர்ச்சுனவாதம் பேசுகிறது ஆண் குதிரை. அதற்கு சிங்கம், ‘பெண்டு பிள்ளையென்று ஏன் பார்க்கிறாய்? எமக்கு எதிரே நிற்பவர் எவரும் எதிரியே. யுத்தாய க்ருத சிஸ்சய உத்திஷ்ட’என்று உபதேசம் செய்து மனம் திருப்புகிறது.

யுத்தம் நடந்து இரண்டுபக்கமுமே களைத்துப் போன நிலையில் உணவுக்காக இடைவேளை விடப்படுகிறது. யுத்த நிறுத்தம்.
!
தீனி காரணமாக காட்டுமிருகம் - நாட்டுமிருகம் என இரண்டு பக்கங்களாய்ப் பிரிந்து போர் செய்த மிருகங்களுக்குள் பிரச்னை தோன்றுகிறது. சாப்பிடுகிறவேளையில் சைவ-அசைவமாகப் பிரிந்தும், போர் தொடங்கியதும் காட்டுமிருகம் - நாட்டுமிருகம் என்ற பிரிவுக்குள் அடங்கியும் போர்செய்வதென்று அப்பிரச்னை தீர்க்கப்படுகிறது.
மொத்தத்தில் தீனிப் போர் என்றும் ஓய்வதில்லை என்பதை உள்ளீடாகக்கொண்ட அர்த்தத்தோடு நாடகம் முடிகிறது.

காட்டிலே வேட்டை யாடக்
கரடி புலி சிங்கம்  யாவும்
போட்டிக்கு வருகுதை யோ
பொருத முடிய வில்லை.

‘தெய்வமே என்ன செய்வேனோ?

‘எத்தனை நாட்களாய்த் தான்
அவை தின்ற எச்சம் மிச்சம்
செத்த மிருகத் தோலில்
சீவியம் நான் தள்ளுவது’ 
என்ற நியாயத்தோடேயே நரி காட்டிலிருந்து நாட்டுக்கு வருகிறது. நரி நாட்டுக்கு வருவது வன்முறையாய், அத்துமீறலாய்த் தெரியலாம். ஆனாலும் அதற்கான ஜீவிய நியாயமுண்டு.

நாக்கு மரத்துப் போய்விட்டதென்றும், ஆக்கினது அலுத்துப் போச்சு என்றும் சொல்லிக்கொண்டு நாய் வருகிறது நாட்டிலிருந்து. நாய்க்கு தீனி வேட்கை இருக்கிறதே தவிர பசியில்லை. காட்டின் எல்லையில் காணும் முயற் கூட்டத்துக்காக நாயும் நரியும் ஒன்றையொன்று எதிர்க்கின்றன. இவையிரண்டும் செய்யும் வாதம் மிக்க ரசமாக இருக்கும் பிரதியில்.

நாயும் நரியும் வேட்டை செய்யவிருப்பதைக் கண்டுகொண்டாலும் அதை முயல்களுக்கு உணர்த்திக் காப்பாற்றமுடியாத தன் பாத்திர நியாயத்தோடு கட்டியங்காரன் தவிப்பது நல்ல கற்பனை. ஜனநாயக தர்மம் என்ற பெயரில் சில அக்கிரமங்களைத் தடுக்கவியலாது பார்த்துக்கொண்டிருக்க மட்டுமே சிலநாடுகளால் முடிந்துவிடுவதை பாத்திரம் குறிப்பதாகக் கொள்ளலாம். பல கருதுகோள்கள் கட்டியெழுப்பப்பட நிறைந்த இடைவெளிகள் உள்ளன பிரதியில். அது முக்கியம்.

மரபுகள் தெரிந்துகொண்டே முன்னேற்றமும் தேவையான மீறலும் என்ற சரியான கோட்பாடு, நாடகவாக்கத்தில் முன்னெடுக்கப்பட இவ்வாறான பிரதிகளின் வரவு முக்கியமானதென்பதையும், ‘தீனிப் போர்’ இவ்வாறான பிரதிகளில் முதன்மையானதாய்த் திகழ்கிறதென்பதையும் சுட்டிக் கூற விரும்புகிறேன்.

000


வெகுமதி, 2001

No comments:

எம்மா- சிறுகதை

எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவை...