Friday, September 05, 2014

சமகாலதமிழ்க் கவிதை

சமகாலதமிழ்க் கவிதைகளின் செல்நெறிகுறித்து…இரா.காமராசுவின் ‘கணவனானபோதும்’ தொடங்கி அண்மையில் வெளியீட்டுவிழா நடத்தப்பெற்ற ‘சந்திப்பின் கடைசிநொடியில்’ வரை சிறிதும் பெரிதுமாக சுமார் முப்பது கவிதை நூல்கள் வெளிவந்துள்ளதை மேலோட்டமான ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

 வெகுவான நூல்கள் கவிதைத் தினவோடு மட்டுமன்றி,
தரம் குறித்த பிரக்ஞையோடும் வெளிவந்திருக்கின்றன. வடிவ நேர்த்தி மிகுவல்லபம் பெற்றிருக்கிறது. இவை ஆரோக்கியத்தின் அடையாளங்கள். எனினும் செல்நெறி குறித்த தெளிவு இல்லாதவரை கடந்தகாலங்களைப்போல் மீண்டும் மீண்டும் குறுக்கிடும் கவிதைத் தேக்கநிலைமைகளை நாம் தவிர்க்கவியலாது போதல் கூடும்.

இப் புதிய கவிதைச் சூழலை ஈழக் கவிதைகளை மையப்படுத்தியும், பா.செயப்பிரகாசம், முத்துக்குமார் ,மா.காளிதாஸ் ,யுகபாரதி, கிருஷாங்கிணி, கல்லயாணராமன் போன்றோரின் கவிதைகளைப் பொதுமையாகவும் ஒரு வாசிப்புக்குட்படுத்தியபோது சில கருத்துக்கள் தவிர்க்க முடியாதபடி மனத்தே மீண்டும் மீண்டும் முந்திக்கொண்டு வந்துநின்றன. அவை குறித்து என் பகிர்வே இக் கட்டுரை
.
இன்றைய தமிழ்க் கவிதையின் தளம் மிகவிஸ்தீரணமானது. அது மனுக்குலம் எதிர்நோக்கும் புதிய புதிய பிரச்னைகளைப் பேசுகின்றது. மனித அவலங்களை , மனித மதிப்பீடுகளின் புனர் நிர்மாணத்துக்கா அவசியங்களை, நம்பிக்கைகளை, பெண்ணியஎழுச்சிகளை, ஜனநாயக அறைகூவல்களைப் பேசுகின்றது. சிலகவிதைகள் யுத்தங்களின் நியாயத்தை, சிலகவிதைகள் ஆயுதங்களின் நாசத்தை மொழிகின்றன. சில பொருளாரத் தளத்தில் மூன்றாம் உலகநாடுகளின் பொதுக் கொடுமைகளான பசி, பிணி, அறியாமைபற்றியும், சில உலகப் பொதுப் பிரச்னைகளான விபசாரம்,எயிட்ஸ் போன்றன குறித்தும் பிரஸ்தாபிக்கின்றன. பேசப்படும் பொருள் அது குறித்துஒருபொது அடையாளத்தைப் பொறித்திருப்பினும் அவற்றுக்கு விசேட அடையாளங்களும் உண்டு. இத் தனிப் பண்புகள் கவிதைத் தரத்தை நிர்ணயிக்க,பொதுப் பண்புகள் கவிதைச் செல்நெறியை வரைகின்றன.

மூன்றாம் உலகநாடுகளின் கவிதைப் போக்கினைஉற்றுநோக்கினால் அது வாய்மொழிமரபு (Oral Tradition) சார்ந்தது என்பது தெரியவரும். அதனால் அக் கவிதைகள் வாய்மொழி இலக்கியத்துக்குப் பொதுவான செவிப்புலன் சார்ந்து உணர்ச்சிவசப்பட்டு, சுட்டிப்பு கூடப்பெற்று, நெகிழ்ச்சிமிகுந்து,  இன்னும் உயர்வுநவிற்சிப் பண்புகளைக்கொண்டு விளங்குகின்றன. இவை தேவை கருதிய வளர்நிலைப் படிகளென்றும், இவையே கவிதை உன்னதத்துக்கு வாய்ப்பானவையென்றும் நுகூகிபோன்றவர்கள் சிலாகித்துப் பேசுகிறவேளையில்,அசெபேபோன்ற கவிதை விமர்சகர்கள் பரந்துபடுதலையும், சர்வதேசத் தன்மை பெறுதலையும் சுட்டி இக் கவிதை மரபினை மறுப்பர்.

சங்க இலக்கியங்கள் பெருமளவுக்குவாய்மொழிப் பண்புசார்ந்தவைஎன்பார் கலாநிதிகைலாசபதி. ஆனால் பிற்காலத்தே பலநிலைத் திரிபுகளை அடைந்தும்,மாற்றங்களைச் செரித்தும் தமிழகக் கவிதைஎழுத்தறிவுமரபு (Literate Tradition) சார்ந்ததாயிற்று. அதுஎழுத்தறிவுமரபின் கட்புலம் சார்ந்த, கட்டிறுக்கமான, உயர்நவிற்சியற்ற பண்புகளைப்பெற்றுக்கொண்டது. இது நவீனத்துவத்தின் பண்புகளை உள்வாங்கிக் கொள்ளலும் ஆயிற்று. பின்நவீனத்துவத்தின் மேற்குலகத் தோற்றத்தின் பாதிப்பில் கவிதைமீது புகுத்தப்பெற்ற சிலபண்புகள் செரிமானமாகாதுபோகவே, நாம் கண் முன்னால் கண்டதேக்கநிலைக் காலம் அப்போதுதான் உருவானது.

அத் தேக்கநிலைஉடைவின் துல்லியமானஅடையாளங்களேநான் முன்னர் குறிப்பிட்டமுப்பதுவரையானகவிதை நூல்களின் தோற்றங்கள். இவைதம்முள் முரண்பாடுடையவை.

தமிழகத்தைப்போலன்றிஈழத்தில் நிலைமைவேறாகவிருந்தது. பாரதிபரம்பரையாய்அவர் கவிதாநெறியின் விழுமியங்களைப் பற்றிவந்தவர் மகாகவிஎனலாம். இதைபின்னால் நுஃமான்,சி.சிவசேகரம், இ.முருகையன்,புரட்சிக் கமால் போன்றவர்கள் முன்னெடுத்தனர். இவர்கள் தம்முள் முரண்படக்கூடுமாயினும் செல்திசைஒன்றாகவே இருந்ததது. வாய்மொழி இலக்கியமரபு சார்ந்திருந்தமையே ஒத்திசைவின் காரணமாக இருந்தது.

இதன் எதிர்முனைத் தளத்தில் அ.யேசுராசா இயங்கியபொழுது, வாய்மொழிமரபுக்கும் எழுத்தறிவமரபுக்கும் இடையேயான ஒரு செல்நெறியை எடுத்தவராக சேரனைச் சொல்லமுடியும். அவரது கவிதைகளைவிடவும் அவரின் ‘மரணத்துள் வாழ்வோம்’கவிதை நூற் தொகுப்பு இதை உரத்துச் சொல்லும். அடுத்த தலைமுறைக் கவிஞர்களான நட்சத்திரன் செவ்விந்தியன், சோலைக்கிளி, சு.வில்வரத்தினம் போன்றோர் இச் செல்நெறிபற்றிநிற்பவர்களெனவே கருதமுடிகிறது. ஈழத்தின் யுத்தநிலைக் காலதேவை ஒருபிரச்சார்தனத்தை மையநிலைப்பாடாகக் கொண்டிருத்தலை தவிர்க்கமுடியாது. இருந்தும் அதையும் மீறிய தளங்கள் அங்கே அடையப்பட்டிருக்கின்றன.  இவற்றின் மூலவராக மு.பொன்னம்பலத்தை அடையாளங்காணல் சிரமமானதில்லை.

வாய்மொழிமரபுசார்ந்ததாகவே மு.பொ.வின் கவிதைகளைக் கூறமுடியினும், அவைஎழுத்தறிவுப் பண்பும் பெற்றவை. இதைஅவர் கவிதையிலுள்ள இருகிளைப்பாட்டுத் தன்மையென்பார் பேராசிரியர் கா.சிவத்தம்பி.

மு.பொ. சொற்களை Metaphors  ஆகவும்,அதற்கும் மேலேஒருபடிபோய் Mystic Power உடையதாகவும் பயன்படுத்துகிறார் என்பது அவரது வாதம். எப்படியாயினும் இவரது கவிதைகளில் காணப்படும் கவிதைக் கருத்தும் கவித்துவமும் இணைந்துசெல்லும் முறைமையின் மூலமே இவரது பெரும்பாலான வெளிப்படுத்தல்கள் நிகழ்கின்றன. இது இவ்வகையான கவிதைகளின் வளர்ச்சிநிலையே ஆகும். இந்த இருகிளைப்பாட்டு நிலையே சேரனிடமும் விளங்குவதாக நான் சொன்னது. ஆனால் இது சந்தேகத்தைக் கிளப்புவதில்லை. மு.பொ.வின் கவிதைத் தளம் சமூக அக்கறையுள்ளவர்க்கு பலபடைச் சந்தேகங்களைக் கிளப்பும்.

ஈழத்து சமகாலக் கவிதைப் பரப்பில் பெயர் குறிப்பிடப்படவேண்டியவர்கள் நிறையப் பேர் உளர். எனினும் மாதிரிக்கு அஸ்வகோஷின் ‘வனத்தின் அழைப்பு’ நூலை இங்குஎடுத்துக்கொள்ளலாம்.

 வரலாற்று முள்ளில்
செருகப்பட்ட சிறுமொட்டே
நீயெண்ணாக் காலத்திற்கும்
உன்ஆன்மா துடிக்கப் போகிறது

என்றுகவிதை ஆக்ரோசமானயுத்த எதிர்ப்புக் கோசம் கொடுக்கிறது. இதுகோசம்தான். ஆனாலும் கவிதையின் மூலமான
கோசம்.சமூக அக்கறைபெற்ற கவிஞர்களின் கோசம் வேறுமாதிரியும் இருக்கமுடியாதுதான்.

தன்னுள் ஆழ்தல் என்பதைவிடவும் சமூகஅக்கறை உன்னதமானது. இரண்டிலுமே கவிதைவேண்டும். எனினும் சமூக அக்கறை வாய்மொழிமரபை மீறாது. நாம் நம் மரபுகளில் தங்கியிருக்கிறோம்.

அண்மையில் குறிஞ்சிக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு நூலான‘நிழலாட்டம்’வாசித்தேன். அதில் ‘எங்கள் மழை’என்றுஒருகவிதை. மிக இயல்பாகத் தொடங்கிய இக் கவிதை கடைசியில் இப்படிமுடிகிறது:

எங்களுக்குவீடு இருக்கிறது
ஆடைகள் இருக்கின்றன
பசிதீர்ந்தவயிறும் இருக்கிறது
நாங்கள் மழையைரசிக்கின்றோம்.

இதுசொல்கிற சேதியைப் புரிய பெரியவித்தகம் தேவையினக் ல்லை. இச் சமூக அக்கறையுள்ள கவிதைகளை நாம் வரவேற்கலாம். எழுச்சியின்
காரணமும், செல்நெறியும் இப்போது தெரிகின்றன. கவிதை யாவும் தனக்கெனக் கேட்கிறது சமூக அக்கறை.

0000
(இது கணையாழிஅக்டோபர் 1998 இதழில் வெளிவந்தது)

No comments:

எம்மா- சிறுகதை

எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவை...