Thursday, September 04, 2014

நூல் விமர்சனம் 8 நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை


நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை


‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்னும் 2005இல் வெளிவந்த நாஞ்சில் நாடனின் கட்டுரைத் தொகுப்பினை மீளவாசிக்கும் சந்தர்ப்பம் அண்மையில் எனக்கு வாய்த்தது. முதல் தடவையில் அத் தலைப்புச் செய்த இடையூறுபோல் இரண்டாவது தடவையில் நான் பட்டுக்கொள்ளவில்லை.

இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டிலேயே என்னிடம் வந்துவிட்ட இந்தப் புத்தகம், தொடர்ந்த ஓரிரண்டு ஆண்டுகளாக  என் நூல்நிலையத்தில் இருந்திருந்தும், அதை வாசிக்கத் தடையாக இருந்தது அதன் தலைப்புத்தான். இது சூழலியல் சார்ந்த கட்டுரைத் தொகுப்புப்போன்ற ஒரு மயக்கமாகும் அர்த்தத்தைக் கொண்டிருந்தது. நதிகளில் நீரற்றுப் போயிருக்கும் வரட்சி வனவழிப்பு, காற்றின் மாசு இவற்றினாலான இயற்கைவளங்கள் அழிவதினால் ஏற்பட்டிருக்கிறதென்றும், அதற்கான காரணங்களை மனிதர்களே பொறுப்பேற்கவேண்டுமென்றும் குற்றம் சாட்டுகிற தொனி அந்தத் தலைப்பில் இருந்ததாக எனக்கு முதன்முதலில் தோன்றியிருந்தது. ஓரளவு இந்த அர்த்தம் செறிந்த இதே தலைப்பிலான கட்டுரையொன்று இதில் இருக்கிறது. எனினும் சுற்றுச் சூழல்பற்றி இலேசாகக் குறிப்பிட்டுச் செல்லும் இக்கட்டுரை, அதிகமாகவும் புகைந்துகொள்வது செல்போன்களின் மீதுதான்.

 ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்ற இந்த அடியிலிருந்து கம்பராமாயணத்தின் அந்த முழுச் செய்யுளையும் ஞாபகம் கொள்கிறபோது, விதியை வலியுறுத்தும் ஒற்றையடியாகக்கூட இதற்குப் பொருள்கொண்டிருக்கமுடியும். அதனால்தான் நான் குழம்பியது.

ஆனால் சங்க இலக்கியத்தைத் தெரிந்தும்,  பிற்கால இலக்கியங்களில் ஆழ்ந்தும், மரபான  வாழ்நிலைகளின் பிடிப்பை  அழுத்தமாக்கொண்டும் இருந்திருந்தாலும், தேவையற்ற  மரபுகளைமீறும் நாஞ்சிலின் எழுத்தின் பரிச்சயம் நினைவுவர, தாமதமாகவேதான் அந்த  முதல் தடவையில் நான் அவரது நூலை வாசிக்க  எடுத்தது.

இலக்கியம் சாராத  கட்டுரைகள்கூட இலக்கியமாக முடியுமென்பதற்கான நிச்சயம் எனக்கு அப்போதுதான் ஏற்பட்டது. அத்தனை செழுமையும், சுவையும்,ஆய்வுப் போக்கிலான நேர்த்தியும் கொண்டவை பெரும்பாலான அக் கட்டுரைகள்.

பல்லாண்டுகளுக்குப் பிறகான இப்போதைய வாசிப்பு முந்திய அபிப்பிராயங்களை  மேலும் உயர்த்திவிடவே செய்திருக்கின்றது.
கடந்தசில ஆண்டுகளாக பல்வேறு தருணங்களிலும் கட்டுரையென்கிற பதத்துக்குப் பதிலாக, உரைக்கட்டு என்ற சொல்லையே நான் பாவித்து வந்திருக்கிறேன். கட்டுரையென்கிற பதத்திலிருக்கும் ஒரு பழகிய, இறுகிய அர்த்தம், உரைக்கட்டு என்ற பதத்தில் இருக்கவில்லைப்போல எனக்குத் தோன்றியது. கட்டப்பட்ட உரை என்பதிலிருந்து, உரையால் கட்டப்பட்டது என்ற பதத்தில் ஒருகலாபூர்வமான செழுமையின் இருப்புக்கு இடமிருப்பதால் இயல்பாகவே அத் தோற்றம் எனக்குள் விளைந்தது.

இவ்வுரைக் கட்டுஎன்ற சொல்லுக்கு மிகப் பொருத்தமானவை இந்நூலிலுள்ள பலவும். ‘கட்டுரை வடிவமென்பது எழுத்தாளர்களுக்கு எளிதில் கைகூடும் வித்தையாக மாறிப்போய் நூற்றாண்டுகள் பலகடந்துவிட்டன’ என்ற ஓவியர் வே.ஜீவானந்தனின் முன்னுரையின் முதலடியை மறுப்பதினூடாகவே நாஞ்சில் நாடனின் உரைக்கட்டு வன்மையை என்னால் மதிக்கமுடியும். நாஞ்சில் நாடன் மட்டுமேயல்லதான், ஆனாலும் எல்லா எழுத்தாளருக்குமே கட்டுரை கைகூடும் வித்தையாக  மாறிப்போய்விடவில்லை என்பதே என் தாழ்மையான அபிப்பிராயம்.

ஆறு வகையான பகுதிகளில் ஐம்பத்தைந்து   தலைப்புகளைக் கொண்டிருக்கிறது இந்நூல். முதல் பகுதியே கட்டுரைகளைக் கொண்டிருப்பது.
அதிக உரைக்கட்டினைக் கொண்டிருக்கும் பகுதியும் இதுதான் .முன்னுரைகள் பிறர்க்கு,முன்னுரைகள் தனக்கு என்பவை பகுதிகள் இரண்டாவதும் மூன்றாவதுமாய் வருபவை.  நான்காம் பகுதி மதிப்புரைகளைக் கொண்டது. ஆ.மாதவன், செம்பூரான், பா.விசாலம், பாவைசந்திரன், திலீப்குமார், நீலபத்மநாபன் மற்றும் ஆ.இரா.வெங்கடாசலபதி ஆகியோரின் ‘அரேபியக் குதிரை’,‘இது எங்கள் பம்பாய்’, ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’, ‘நல்லநிலம்’, ‘கடவு’, ‘நீலபத்மநாபன் இலக்கியத்தடம்’, ‘முச்சந்தி இலக்கியம்’ஆகிய நூல்களுக்கான மதிப்புரைகள் இவை. பிறகுறிப்புகள், அஞ்சலி ஆகியனவை அடுத்தடுத்து  வருபவை.

இவற்றுள்;  முதலாவது பகுதியையே முதன்மையான விமர்சனத்துக்காக நான் எடுத்திருக்கிறேன்.

முதலாவது தலைப்பு, ‘தமிழில் சிறுபத்திரிகைகள்-காலச்சுவடு’ என்பது. சுந்தரராமசாமியின் ஆசிரியத்துவத்தில் 1988 ஜனவரியிலிருந்து 1989 அக்டோபர்வரை வெளிவந்த எட்டு இதழ்களையும், பின்னர் கண்ணன், லட்சுமிமணிவண்ணன், மனுஷ்யபுத்திரன் ஆகியோரை ஆசிரியர் குழுவாகக்கொண்டு 1994 அக்டோபர் முதல் 1997 ஜனவரிவரை வெளிவந்த எட்டு இதழ்களில் ஏழு இதழ்களையும் தன் விசாரிப்புக்கு எடுத்திருக்கிறார் நாஞ்சில் நாடன்.

பதினாறாம் இதழ் ஏன் விசாரிப்புக்கு  எடுக்கப்படவில்லையென்பதற்கு காரணம் எதுவும் கூறப்படவில்லை. நூலில் இந்த விசாரிப்பை அறிமுகமென்கிறார் நாஞ்சில். ஒரு சிற்றிதழ்க் கருத்தரங்கில் இந்த அறிமுகம் ஏன் என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.

மற்றும்படி எடுத்துக்கொண்ட பொறுப்பை அதில் அவர் மிகஆழமாகச் செய்திருக்கிறார்  என்றே எனக்குத் தோன்றுகிறது. கவிதைகள், சிறுகதைகள், மதிப்புரைகள், நேர்காணல்கள் என்ற பகுப்புகளில் அவர் வெளியிட்டிருக்கும் அபிப்பிராயம் ஆழமானது. அது ‘எம்.ஏ.நுஃமானின் நேர்காணல் மிக ஆழமான விஷயங்களை விவாதித்தது என்றுசொல்லமுடியாது’ என்கிற அளவுக்கு ஆழமானது.

பதினெட்டுப் பக்கங்களில் பதினைந்து இதழ்களை விசாரிப்புச் செய்ததென்பதில் கட்டுரை தன் பணியினைச் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறதென்று தயங்காமல் சொல்லமுடியும்.

இலக்கியச் சமூகத்தில் நடந்த சில விவாதங்களைப்பற்றி விவாதிக்கத் தகுந்த கருத்துக்களோடு முன்வைப்பது அடுத்ததான ‘தன்படைவெட்டிச் சாதல்’என்ற தலைப்பிலான உரைக்கட்டு.  நாஞ்சிலின் கருத்தை மறுக்கமுடியுமெனினும், நாஞ்சில் கருத்துக் கூறுவதையே மறுத்துவிடமுடியாது.  ‘தன் படைசார்ந்து பேசுதல்’ வெளிப்படையாகவே இதில் தெரிந்தபோதும் எடுத்துரைப்பு சிறப்பாக இருக்கிறது.

‘நாடு இவர்களுக்கு என்ன செய்யப்போகிறது’என்பது இலக்கியவாதிகளும் சில படைப்புகளும்பற்றிய விசாரம். இது தன் மனது திறந்துபேசும் படைப்பாளியின் வெளிப்படையினாலும், அதற்கான மொழியினாலும் சிறப்புடையது.

எனக்கு இத் தொகுப்பில் மிகப் பிடித்தமான விசாரிப்பு ‘மங்கலம், குழூஉக் குறி, இடக்கரடக்கல்’என்ற உரைக்கட்டில் உண்டு. 'வாசச் சமையலும் ஊசக் கறியும்’கூடப் பிடிக்கும்தான். மிகச் சிறப்பாக வந்திருப்பது‘கோணல் பக்கங்கள்3’ என்பது. சாருநிவேதிதாவையும், அவரது எழுத்துக்களை, குறிப்பாக ‘கோணல் பக்கங்க’ளையும் பற்றிய சரியான பார்வையை முன்வைக்கிற கட்டுரை.

நாஞ்சில் நாடனின் நடைமட்டுமில்லை,  அவரது தார்மீகக் கோபங்களும்கூட இத் தொகுப்பில் நியாயமான பல்வேறு இடங்களில் வெளிப்படுகின்றன. மட்டுமில்லை. ஆங்காங்கே செறிவாய் விழுந்திருக்கும் நகைச்சுவை இதன் இன்னொரு சிறப்பு. இந்த  நகைச் சுவையில் சிரிப்பு வராமல் சிந்திப்புவருவது மேலும் அதன் சிறப்பு.

இந்தத் தொகுப்பிற்கு இலக்கியத் தோட்டத்தின் அ-புனைவு நூலுக்கான பரிசுகிடைத்ததாக ஞாபகம். ஆயின்,  தகுதியான நூல்தான். கருத்து நீர் நிறைந்த இந்த நூல்நதியில் நிறையப் பேர் குதித்து நீராடியிருப்பர் என்பது சந்தேகமானது.


00000


தாய்வீடு, செப். 2014



No comments:

'ஒரு பொம்மையின் வீடு'

'ஒரு பொம்மையின் வீடு' நாடகத்தை முன்வைத்து நடிப்பு - நெறியாள்கை – மொழிபெயர்ப்புகள்   மீதான ஒரு விசாரணை  மனவெளி கலை...