என் நினைவில் சுஜாதா
என் நினைவில் சுஜாதா ஆண்டுத் தொடக்கத்தில் அந்த மரிப்பு நிகழ்ந்தது. திரு. சுஜாதாவின் மறைவை முதன்முதல் கேள்விப்பட்டபோது அதிர்ச்சிதான் அடைந்தேன். ஆனாலும் மெல்ல அந்த நினைப்பு மனத்தைவிட்டு அகன்று அகன்று போய்க்கொண்டிருந்துவிட்டது. அவரது ஞாபகங்களைப் பதிவாக்கவேண்டுமென்ற எண்ணம் பெரிதாக என்னை அலைக்கழிக்கவில்லை. சுஜாதா மறைந்து இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. உயிர்மை, காலச்சுவடு இதழ்கள் அவருக்கான நினைவுப் பக்கங்களையும் வெளியிட்டுவிட்டன. இன்னும் ஆனந்தவிகடன் போன்ற வாராந்தரிகளில் அவர்பற்றிய ஞாபகங்கள் அவ்வப்போது பகிரப்படுவதோடு, அவரது எழுத்துக்களும் ஒரு தேர்வில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இப்போது பார்த்து எனக்கு இப்படியொரு தவிப்பு எழுந்திருக்கிறது. சிலவேளைகளில் மனத்துக்குள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நினைவுகளை ஒன்றுதிரட்டிப் பார்க்கும்போது திடுக்கிடும்படியாய் ஆகிவிடுகிறதுதான். சிலரது ஞாபகங்களும் அப்படியே. நம்மோடு மிகநெருக்கமில்லையென்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒருவகையில் அவர்களுடனான பழக்கம் ஆழமாக இருந்திருப்பதை எண்ணி வியக்கின்ற தருணம் வாழ்க்கையில் எப்போதாவது ஒருவருக்கு ஏற்படவ...