வெ.சா. நினைவாஞ்சலி:
கலை, இலக்கியத்தின் உக்கிரமான விமர்சனக் குரல் ஓய்ந்தது சென்ற அக்டோபர் 3ஆம் திகதி, நான் லண்டனில் நின்றிருந்தபோது, என்னை இன்னும் கனடாவிலிருப்பதாக நினைத்த வெங்கட் சாமிநாதனிடமிருந்து, அப்போது திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த திருமாவளவனின் உடல் நிலையை விசாரித்து ஒரு முகநூல் செய்தி வந்தது. திருமாவளவன் தனது சுகவீனம் காரணமாக அடிக்கடி வைத்தியசாலை சென்று வந்துகொண்டிருந்த நிலையில் வி~யம் எனக்கு சாதாரணமானதாக இருக்க, வெங்கட் சாமிநாதனின் எழுத்தில் ஒருவித பதற்றமிருந்ததை நான் கண்டேன். அதனால் நண்பர்களிடம் விசாரித்து தகவல் தெரிவிப்பதாக அறிவித்துவிட்டு நான் அந்த முயற்சியில் இருந்தபோது, 5ஆம் திகதி வெ.சா.வே எழுதினார், ‘இனி விசாரிக்கத் தேவையில்லை, தேவகாந்தன். திருமாவளவன் போய்விட்டார்’ என்று. அவரது பதற்றத்தின் உறைப்பு இன்னும் கனதியாக என்னுள் இருந்துகொண்டிருந்த பொழுதில் அக்டோபர் 21ஆம் திகதி ஓர் அதிகாலையில் வெ.சா. காலமாகிவிட்டதான முகநூல் பதிவு என்னை அதிரவே வைத்தது. 1931இல் கும்பகோணத்தில் பிறந்து, 21.10.2015 இல் பெங்களூருவில் காலமான வெ.சா.வுக்கும் எனக்குமிடையே ஒரு கால் நூற்றாண்டுத் தொட...