அறிஞர் \ பேரறிஞர் \ சி.என்
அறிஞர் \ பேரறிஞர் \ சி.என் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் திரு.சி.என்.அண்ணாத்துரையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழகத்தில் பரவலாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தி.மு.க.வின் அல்லது அதிலிருந்து பிரிந்த எந்தக் கட்சியினது முதல்வரையும்விட எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து மறைந்தவர் அவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனாலும் இந்த நேரத்திலாவது அவர்பற்றிய சரியான ஓர் அலசலைச் செய்யவேண்டியது ஒரு வரலாற்றுக் கடமையாக எஞ்சிநிற்கவே செய்கிறது. ஆயினும் அதை இங்கே இப்போது நான் செய்யப்போவதில்லை. அவரை நினைவுகூரும் வண்ணம் சில விஷயங்களைக் குறிப்பிடுவதோடு, நம் நிகழ்கால நிலைமையில் அவரது வாழ்வனுபவம், குறிப்பாக அவர்; அரசியல்சார்ந்து எடுத்த சில முடிவுகள் எவ்வாறான எச்சரிக்ககைகளை எமக்கு விட்டுச்சென்றிருக்கின்றன என்பதைத் தொட்டுச்செல்வதையே செய்யவிருக்கின்றேன். அறிஞர் அண்ணா என்று ஊடகத் துறையினராலும், பேரறிஞர் அண்ணா என்று கழகத்தவராலும் அன்பாக அழைக்கப்பட்ட திரு. சி.என்.அண்ணாத்துரை, அவர் வாழ்ந்த காலகட்டத்தை வைத்துப் பார்க்கின்ற வேளையில் அவ் அடைமொழியினுக்குப் பொருத்தமானவராகத்தான் இயங்க...