என் நினைவில் சுஜாதா

என் நினைவில் சுஜாதா

ஆண்டுத் தொடக்கத்தில் அந்த மரிப்பு நிகழ்ந்தது. திரு. சுஜாதாவின் மறைவை முதன்முதல் கேள்விப்பட்டபோது அதிர்ச்சிதான் அடைந்தேன். ஆனாலும் மெல்ல அந்த நினைப்பு மனத்தைவிட்டு அகன்று அகன்று போய்க்கொண்டிருந்துவிட்டது. அவரது ஞாபகங்களைப் பதிவாக்கவேண்டுமென்ற எண்ணம் பெரிதாக என்னை அலைக்கழிக்கவில்லை.

சுஜாதா மறைந்து இன்றைக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. உயிர்மை, காலச்சுவடு இதழ்கள் அவருக்கான நினைவுப் பக்கங்களையும் வெளியிட்டுவிட்டன. இன்னும் ஆனந்தவிகடன் போன்ற வாராந்தரிகளில் அவர்பற்றிய ஞாபகங்கள் அவ்வப்போது பகிரப்படுவதோடு, அவரது எழுத்துக்களும் ஒரு தேர்வில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இப்போது பார்த்து எனக்கு இப்படியொரு தவிப்பு எழுந்திருக்கிறது.

சிலவேளைகளில் மனத்துக்குள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நினைவுகளை ஒன்றுதிரட்டிப் பார்க்கும்போது திடுக்கிடும்படியாய் ஆகிவிடுகிறதுதான். சிலரது ஞாபகங்களும் அப்படியே. நம்மோடு மிகநெருக்கமில்லையென்று எண்ணிக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒருவகையில் அவர்களுடனான பழக்கம் ஆழமாக இருந்திருப்பதை எண்ணி வியக்கின்ற தருணம் வாழ்க்கையில் எப்போதாவது ஒருவருக்கு ஏற்படவே செய்திருக்கும்.
என் கதையும் அதுதான்.

சுஜாதா தமிழ் எழுத்துலகில் மிகப்பெரிய ஆளுமை. திரைப்படத் துறையிலும் அவருக்கு அதேயளவான மதிப்பும் மரியாதையும் இருந்தது. தினமணி, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற நிறுவனங்களின் கதவுகள்போலவே, சுஜாதாவுக்கு ஏவிஎம்’மினதும், ஜெமினியினதும் கதவுகளும்கூட திறக்கும்.

மறக்கமுடியாத சில உன்னதமான சிறுகதைகளின் கர்த்தாவாய் இருந்ததோடு, சங்க இலக்கிய ஆர்வமும் அதுபற்றிய அறிவும் கொண்டவராய் அவர் விளங்கினார். நற்றிணை, சிலப்பதிகாரம், திருக்குறள் போன்றவற்றிற்கான அறிமுகமாய் அவர் இலகு தமிழில் செய்த இனிய எழுத்துக்கள் இன்றைக்கு தமிழிலக்கியப் பயிற்சி அற்றவர்களுக்கும் இளைய தலைமுறையினர்க்கும் நிறையவே உதவக்கூடியவை.

எழுத்துலகிலும் திரையுலகிலும் நிகரான செல்வாக்குப் பெற்றிருந்த திரு.சுஜாதாவின், எழுத்துக்களை, திரையாக்கங்களை மதிப்பிடாமல் ஒரு சக மனிதனாய், ஒரு இலக்கியவாதியை மதிக்கும் பண்புடையவராய் எப்படி அவர் இருந்தார் என்பதை என் அனுபவங்களினூடாகத் தொட்டுக்காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கம்.

தமிழ் நாட்டில் நான் தங்கியிருந்த காலத்தில் கணையாழி கவிதை அரங்குகளில்தான் சுஜாதாவை நான் முதன் முதலாகப் பார்த்தேன். ஆனாலும் ஓரிரு வார்த்தைகள் பேசியது தவிர, வேறு பெரிதான பழக்கமேதும் எமக்கிடையே ஏற்பட்டுவிடவில்லை.

அம்பலம் மிஞ்சிகை(அம்பலம்.கொம்) வெளியாகி இரண்டாவது ஆண்டிலென்று நினைக்கிறேன். இலக்கியக் கூட்டமொன்றில் சந்தித்த நண்பரொருவர், ‘சுஜாதா உங்களைச் சந்திக்கவேண்டுமென்று நீண்டகாலமாகத் தேடிக்கொண்டிருக்கிறார், அண்மையில் என்னைச் சந்தித்தபோதுகூட முகவரி அல்லது தொலைபேசி எண் கேட்டார், நான் இரண்டுமே அவருக்கில்லை, ஆனால் இம்மாத இலக்கியச் சிந்தனைக் கூட்டத்தில் அவரைப் பார்க்க முடியும், அப்போது உங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கிறேன் என்று கூறிவந்தேன்’ என்றார். சுஜாதா என்ன விஷயமாக என்னைச் சந்திக்க விரும்பினார் என்று நண்பருக்குத் தெரிந்திருக்கவில்லை.

வீட்டில் தொலைபேசி இல்லாததோடு, அடிக்கடி வீடு மாறும் அவஸ்தையிலும் இருந்த நான் இப்படித்தான் சிலபோது முகவரி இல்லாதவனாக ஆகியிருப்பேன். அப்படியான தருணங்களில் என்னைச் சந்திக்கக்கூடிய ஒரே இடம் இலக்கியக் கூட்டங்களாகவே இருக்கும். என்னை நண்பர் சந்தித்து விபரம் தெரிவித்தபோது மிகவும் காலதாமதமாகியிருந்தது. இருந்தாலும் மவுண்ட் ரோடு செல்ல நேர்ந்த ஒருநாள் அம்பலம் இணைய தள அலுவலகம் சென்று சுஜாதாவைச் சந்தித்தேன்.

கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படப் பிரதியாக்கத்தில் நான் இலங்கைத் தமிழ் சார்ந்த பகுதியில் சுஜாதாவோடு வேலை செய்யும் சந்தர்ப்பம் அவ்வாறுதான் நேர்ந்தது.

இது நிகழ்ந்து சில மாதங்களின் பின் மீண்டுமொரு முறை சுஜாதாவிடமிருந்து அழைப்பு. நேரில் பார்த்தபோது, ‘இப்போது அங்கு டயலக் கோச்சாக இருப்பவரை வைத்துக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் ரி-ரிக்கார்டிங்கை முடிக்கமுடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். உங்களால் அந்த வேலையைச் செய்துகொடுக்க முடியுமா?’ என்று கேட்டார்.

நான் கண்டிப்பாக முடியாது என்று மறுத்தேன். திரையுலகின் போக்கு எனக்குத் தெரியும், அங்கு பணத்துக்கும் பகட்டுக்கும் இருக்கும் மதிப்புப்போல் மனிதருக்கு இருப்பதில்லை, ஒரு இலக்கியவாதியாய் என் கவுரவம் எனக்கு முக்கியமென்பதுவே நான் மறுப்பிற்குச் சொன்ன காரணம்.

அப்படியெதுவும் நேராமல் தான் பார்த்துக்கொள்வதாய் எனக்கு உத்தரவாதம் தந்தார் சுஜாதா. நானும் ரி-ரிகார்டிங் நடைபெற்ற ஸ்ரூடியோவுக்கு மறுநாள் சென்றேன். சென்றேன் என்றால் போதுமானதில்லை. ஸ்ரூடியோவிலிருந்து கார் வந்து அழைத்துச் சென்றது. அன்று பத்து மணியளவிலேயே தயாரிப்பாளர்களில் ஒருவராகிய திருமதி. சுஹாசினி வந்து என்னைப் பார்த்ததோடு, என் கவுரவம் குறையாமல் நடத்தப்படுவதற்கான அறிவுறுத்தல்களையும் உதவி இயக்குநர்களிடம் கூறிச் சென்றார்.

சுஜாதா சொன்னதையெல்லாம் எங்கே நினைவில் வைத்திருக்கப்போகிறார், ஏதாவது கவுரவப் பிரச்சினையெழுந்தால் பேசாமல் நடையைக் கட்டவேண்டியதுதான் என்பதே என் எண்ணமாக அதுவரை இருந்தது. ஆனால் சொன்னதை மறக்காமல், ஒரு இலக்கியவாதி மனம் வெந்துவிடக்கூடாதென்பதை மிக ஞாபகமாக வைத்திருந்து அவர் செய்த ஏற்பாடு என்னை சிலிர்க்கவைத்துவிட்டது.

இன்னொரு சந்தர்ப்பம்.

இன்னும் சுஜாதாவின் அந்த முகமும், பார்வையும் நினைவழியாமல் என்னுள்.
மோப்பக் குழையும் அனிச்சம்போல் மிக மென்மையும் நளினமும் கொண்ட மனங்களும் இருக்கின்றன. அனிச்ச மலரை நான் பார்த்ததுமில்லை, உணர்ந்ததுமில்லை. ஆனால் சில அற்புதமான மனங்களைச் சந்தித்திருக்கிறேன். அவற்றுளொன்று சுஜாதாவினது.
ஒருமுறை சுஜாதாவை வீட்டிலே சந்தித்து அவரோடு கூடிக்கொண்டு இயக்குநர் மணிரத்தினத்தைச் சந்திக்கச் செல்வதாக இருந்தது. ஒரு காலை வேளை பத்து மணியளவில் சுஜாதா வீடு சென்றேன்.

சுஜாதா அவசரமாக அப்போதுதான் வெளிக்கிட்டுக்கொண்டிருந்தார். நான் சென்றதும் உள்ளே வந்தமரும்படி கூறிவிட்டு எடுத்துச் செல்லவேண்டிய சில கோப்புக்களைச் சரிபார்த்தும், சில தாள்களை தேடியும் கண்டுபிடித்து உள்ளே வைத்துக்கொண்டும் சுஜாதாவிருக்க, அவரது மனைவி அப்போது சோபாவிலேதான் உட்கார்ந்திருந்தவர், என்னைப் பார்த்து, ‘பாருங்கள், தேவகாந்தன்! எப்போதும் இப்படித்தான். ஓய்வென்பதே இல்லை. மூன்று நான்கு மணிநேரம்கூடத் தூங்குவது கிடையாது. சாப்பாடுகூட அப்படித்தான். இப்போது உங்களோடு வருவதற்கு நேரமாகிவிட்டதென்று காலையில் எதுவும் சாப்பிடாமல்தான் வரப்போகிறார். நீங்கள் சாப்பிட்டு வந்தீர்களா?’ என்று கேட்டார். நான் சாப்பிட்டு வந்ததாகத்தான் சொன்னேன். ‘பரவாயில்லை. கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிட்டால், அவரும் ஒரு இட்லியாவது சாப்பிட்டுவிட்டு வருவார்’ என்றார் அவர்.

எனக்கு ஒருமாதிரிப் போய்விட்டது. இதய சத்திர சிகிச்சை முடிந்து தேறிக்கொண்டிருப்பவர் சுஜாதா. அவருக்காகவேனும் சாப்பிடலாம்தான். ஆனால் ஒரு வீட்டில் அந்தமாதிரி ஏதுகாரணத்தால் செய்வதும் ஒரு கவுரவக் குறைவு. சாப்பிட்டுச் சென்றிருந்த வேளையிலும், சாப்பிடும்படியும், கொஞ்சமாகச் சாப்பிடுங்கள் என்றும் உபசாரம் பண்ணியிருந்தால், நான் சிலவேளை மனம்நோகாமல் சாப்பிட்டிருக்கக்கூடும். ஆனால் இன்னொருவர் சாப்பிடுவதற்காக தான் அங்கே சாப்பிட நேர்வதை தன்மானமுள்ள மனது பொறுக்காது. இருந்தாலும் சுஜாதாவின் உடல்நிலையைக் கருதி சாப்பிடவே முடிவுசெய்தேன். பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைகிறதை நயத்தக்க நாகரீகமாக நம்புகிறவன் நான்.

அப்போது என் முகத்தில் ஏதோ பட்டுப்பூச்சி மொய்ப்பதுபோல் உணர்விலாகி நிமிர, சுஜாதாவின் கண்கள் என்மீது படிந்தும் மிதந்தும் விலகியுமாய் சஞ்சரித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். அந்தக் கண்களில் இருந்த உணர்வு என்னவென்பதை இப்போதும் என்னால் அறுதியிட்டு உரைக்க முடியவில்லைத்தான். என் மீதிலான இரக்கம், சுயஇரக்கம் என்பதில் எது அது? வகையுரைக்க முடியாவிட்டாலும் அது அபூர்வமானவோர் உணர்வு.

நான் ஒன்றோ இரண்டோ இட்லி சாப்பிட்டேன். சுஜாதா ஒரு இட்லி சாப்பிட்டார் என்று ஞாபகம். அதுவும் நின்ற நிலையில் தாள்களைச் சரிபார்த்து வைத்துக்கொண்டே.

கோப்பி குடிக்கிறபோதுதான் சுஜாதாவின் மனைவி சொன்னார், ‘தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள், தேவகாந்தன். சுஜாதா சாப்பிடவேண்டுமென்பதற்காக அல்ல, நீங்கள் சாப்பிடவேண்டும் என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்’ என்றார்.

நான் அதிர்ந்துபோனேன்.

அப்போது சுஜாதாவின் முகத்தைப் பார்த்தேன். விகசித்துப்போய்க் கிடந்தது.
மனிதனாக வாழ்வது சுலபம். மனிதனாக ஒழுகுவது சிலபேரால்தான் முடிகிறது. அதுவும் சிலநேரங்களில்.

000

தாய்வீடு, கனடா 

Comments

அன்பிற்குரிய தேவகாந்தன்
எப்படியிருக்கிறீர்கள். நலமாக உள்ளீர்களா?. தற்செயலாக உங்கள் வலைப்பக்கத்தை பார்வையிட்டேன். மிக நன்றாக உள்ளது.
மிக்க அன்புடன்
எஸ். ராமகிருஷ்ணன். எழுத்தாளர். சென்னை.

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்