Tuesday, July 07, 2015

கலாபன் கதை (2-7)கழற்ற முடிந்தால் வளையம்! 
இறுகி இருந்தால் விலங்கு!
-தேவகாந்தன்

கடலினும் பெரிதாக இருந்தது நீலவெளி. வானினும்கூட பெரிதாய். நீரையும் வானையும் இணைத்து எல்லையற்றதாய் நீலமே விரிந்திருந்தது. நீலாம்பரியென முனகியது அவனது வாய். கண்களில் ஒரு பரவசம். பிறக்கவிருந்த அவனது குழந்தைக்கு அது ஒரு அழகிய பெயராய் இருக்கமுடியும். பிறக்கப்போவது பெண் குழந்தையென சாஸ்திரி சொல்லியதாக மனைவி போன கடிதத்தில்கூட எழுதியிருந்தாள்.
கலாபன் பின்தளத்தில் நின்றுகொண்டிருந்தான். பாரமேற்றிய கப்பலானதால் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சிக் காற்று தொடங்கவிருந்த அந்த ஆனி மாத பிற்பகுதியிலும், அலைகளின் அலைத்தலின்றி மணிக்கு பதினெட்டு கடல்மைல் வேகத்தில் விரைந்துகொண்டிருந்தது கப்பல். ஆறு மணி ஆகிக்கொண்டிருந்தும், நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வேலைக்கு வந்து நாலு மணி அதிகாலையில் முடித்தவனுக்கு, இன்னும் தூக்கத்தின் அணுக்கம்கூட இருக்கவில்லை.

பல்வேறு விஷயங்களையும் சுற்றி நினைவு படர்ந்துகொண்டிருந்தது.
பம்பாயிலிருந்து கப்பல் புறப்பட்டு அன்றோடு மூன்றாவது நாள். மறுநாள் மாலையில் கப்பல் துபாயை அடைந்துவிடும். கடந்த ஆறு மாதங்களாக அதே ஓட்டம்தான். ஐக்கிய அரபு ராஜ்யத்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதுவரை பன்னிரண்டு ஓட்டங்களை முடித்திருந்தது கப்பல். துபாய், சார்ஜா, அபுதாபி என்ற ஐக்கிய அரபு நாட்டுத் துறைமுகங்களுக்குப்போல இந்தியாவில் பம்பாய், ஜாம்நகர், கண்டிலா, மங்களூர் போன்றவற்றுக்குப் போய்க்கொண்டிருந்ததில் மற்றைய கப்பல்களில் ஏற்பட்ட செலவீனம்போல் கலாபனுக்கு ஏற்படவில்லையெனினும், பம்பாய் வருகிறபோதுமட்டும் தான் அதிகமாகச் செலவுசெய்வதாக அவன் அப்போதெல்லாம் யோசிக்கத் தொடங்கியிருந்தான். அது ஜெஸ்மினோடும் சம்பந்தப்பட்டிருந்தது.
ஜெஸ்மின் கழற்ற முடியாத ஒரு இரும்பு வளையமாக அவன் காலில் இறுகிக்கொண்டிருந்தாள். பம்பாய் துறைமுகத்தில் முதலில் எதிர்பார்க்கும் மனைவியின் கடிதம் கிடைத்து பிள்ளைகளின் நலனை அறிந்துகொண்டானென்றால், மேலே பெரியன்ரி வீடுதான். கப்பல் துறைமுகத்துக்கு வந்தபின்னரும் அவனுக்கு வேலையிருந்தது. அதை முறைமாற்றிச் செய்துகொள்வது பழக்கமாகியிருந்தது.

துறைமுக தகவல் பலகையில் அவனது கப்பல் பம்பாய் வரும் திகதியை அச்சொட்டாக அறிந்து ஜெஸ்மினிடம் கூறிவிடுவான் நடராஜா. அன்றைக்கு வருவானென்றிருக்கும் நிலையில் அவன் வராதுபோகிற சமயங்கள் ஜெஸ்மினுக்கு வெகு கொடூரமானவை. தலையை விரித்தபடி கையில் ஒரு சீப்புடன்  கூடத்துள் அங்குமிங்குமாய் நடந்துகொண்டிருப்பாள். அங்கே குடிப்பதற்கு எத்தனை பேர் வந்திருந்தாலும் நின்றுகூட பேசிவிடமாட்டாள். அவள் குளிக்காமல் அவ்வாறே அலைந்துகொண்டிருப்பது எதனாலென்று பெரியன்ரிக்குத் தெரியும். அவ்வாறான கனவுகள் அர்த்தமற்றவையென்பதை அவளே புரிந்துகொள்ளக்கூடிய வயதென்பதால் பெரியன்ரி எதுவும் சொல்லிக்கொள்வதில்லை. அவளுக்காக வருத்தம்மட்டும் பட்டுக்கொள்வாள்.
அவன் தாமதமாகும் சமயங்கள் ஜெஸ்மினை அதிகமாய் வாட்டுவதன் காரணம் அவளுக்கு ஒன்றே ஒன்றாகவே இருந்தது. அந்தத் துறைமுகப் பகுதியோரம் பெண் தரகர்கள் மலிந்துபோயிருந்தனர். கஸிஸ் அடித்துவிட்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கும் ஒரு தரகன், நடைபாதையில் வந்துகொண்டிருப்பவனின் தோற்றத்திலேயே அவனது தேடல் என்னவாக இருக்கிறதென்பதை சுலபமாகக் கண்டுகொள்கிறான். வீடுகளில், லாட்ஜ்களில், ஹோட்டல்களில் அழகழகான சிறியதாக, பெரியதாக, வேண்டும் ரசனைக்கேற்ற பெண்களிடம் அவர்களைச் சேர்ப்பிப்பதில் அவர்கள் வல்லவர்களும். அப்படி யாராவது ஒருவனிடம் கலாபன் அகப்பட்டுக்கொள்வானோ என்பதுவே ஜெஸ்மினின் துடிப்பின் காரணமாக இருக்கும். அன்று கப்பல் துறைமுகத்துக்கு வரவில்லையென அறிகிறவரை அவள் ஓய்ந்துவிடுவதில்லை. பம்பாயில் அவனுக்கும் ஜெஸ்மினைத் தவிர யாரும் வேண்டியிருக்காததில் அவர்களது காம வழித்தடத்தில் எந்தக் குறுக்கீடும் அதுவரை விளைந்ததில்லை.

‘நீ என்றொ ஒருநாள் போய்விடுவாயென்று எனக்குத் தெரியும். நீ போகவேண்டியவனும்தான். ஆனால் நீ இங்கே வரும் நாளெல்லாமாவது நான்தான் உனக்கு மனைவியாக இருக்கவேண்டும்’ என ஒரு நாள் அவள் கலாபனுக்குச் சொல்லி அழுதிருக்கிறாள். ‘கலாபா, நீ உண்மையானவன். உன் மனைவிக்கும்தான். அவள் வந்து சேரமுடியாத உலகத்தில்தான் நீ வேறுபெண்ணை நாடுகிறாய். அதனால் அவளுக்கும் நீ உண்மையானவன். அவளை மறுதலிக்காமல் உன் குடும்ப நிலைமையை எனக்குக் கூறியவகையில் நீ எனக்குமே உண்மையாக இருந்தாய். நீ வருகிற நாளிலாவது அதனால் நான் உனக்காக வாழவேண்டும்.’

அதுவே மெய். உண்மையாக இருப்பதென்பது ஒரு கடலோடிக்கு அவ்வளவாகவே இருக்கமுடியும். இருக்க முடிந்த உண்மையே பூரணம்.
அந்தமுறை பம்பாய் சேர்ந்த நாளிலேயே நடராஜா கப்பலுக்கு வந்துவிட்டான். போனமுறை கப்பல் குஜராத் மாநில ஜாம்நகர் துறைமுகம் சென்றிருந்ததில் இடைக்காலம் ஒரு மாதமளவாகியிருந்தது அவன் ஜெஸ்மினைக் காண. குஜராத் மதுவிலக்குள்ள மாநிலமாகயிருந்தது. ஆனாலும் பணமிருப்பவனுக்கு அது கிடைத்தது. அதுபோல்தான் விலைமாதர் விஷயமும். ஒரு சைக்கிள் ரிக்க்ஷாவாலா அவனை ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தான். மூன்று மணிநேரம் காத்திருந்து மறுபடி துறைமுகத்துக்கு கொண்டுவந்து சேர்க்க ரிக்க்ஷாவாலாவுக்கு முந்நூறு ரூபா கொடுக்கவேண்டியிருந்தது. பணமிருந்தால் எதுவும் எங்கேயும் கிடைத்துவிடுகிறதுதான்.

மகாராஷ்டிரத்தின் ஒருபகுதியாகவே நீண்டகாலமாக குஜராத் இருந்ததென்பதும், பின்னாலேதான் பல்வேறு கலகங்களுக்கும் போராட்டங்களுக்கும் பின்னர் அது தனி மாநிலமாகிற்றென்றும் கலாபன் அறிந்திருந்தான். அதனால் பம்பாயின் சுவடுகள் முற்றாக அழிந்த மாநிலமாக அது காந்திஜியே அங்கே பிறந்திருந்தாலும் ஆகிவிடாதென்று அவனுக்கு நம்பிக்கை இருந்தது. அது பொய்த்துப்போகவில்லை.

நடராஜா குடிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் மட்டுமல்ல, நிறைய தகவல்களும் சொல்வான். இந்தியாவில் பயிற்சி எடுத்துவிட்டு முகாங்களிலிருந்து சில இயக்க இளைஞர்கள் தப்பியோடிவந்து பம்பாயில் நிற்பதோ, அல்லது குறிப்பிட்ட சில இயக்கங்களின் வாலிபர்கள் சண்டையிட்டுக்கொண்டதோ, சாத்தியென்கிற ஒரு மட்டக்கிளப்பு பெண் பல வாழவழியற்ற இளைஞர்களை வைத்து ஹெராயின் கடத்தல் செய்வதோ, வக்கீல் எனப்படும் ஒரு வெளிநாட்டுக்கு ஆள் கடத்தும் ஏஜன்ரின் பிரதாபங்களோ கலாபனுக்குத் தெரியவருவது அவனால்தான். அந்தவகையில் அந்த நஷ்டத்தை கலாபன் பொறுத்துக்கொண்டான்.

இதுபற்றி கலாபனே ஒருநாள் ரவியிடத்தில் கேட்டிருக்கிறான்: ‘நானுனக்கு சாராயமோ சாப்பாடோ வாங்கித் தராமல் விட்டாலும் நீ இந்தமாதிரி என்னிட்ட வந்து கதை சொல்லிக்கொண்டிருப்பியோ, நடா?’

‘வருவனெண்டுதான் நினைக்கிறன், கலாபனண்ணை. ஒண்டு, இஞ்ச எனக்கு கனபேர் சிநேகிதமாயில்லை. மற்றது, ஏனோ உங்களோட பேசினா இருக்கிற கவலையெல்லாம் மறைஞ்சு கொஞ்சம் மனம் அமைதியாகுது. அதுக்காண்டியாச்சும் நான் வருவன்தான்.’

இவ்விதமே ஜெஸ்மினிடமும் ஒருநாள் கேட்டிருக்கிறான். ‘நான் பார்த்துப் பார்க்காமல் காசைச் செலவளிக்கிற ஆளாய் இல்லாவிட்டாலும் நீ எனக்காக இப்படிக் காத்திருப்பாயா, ஜெஸ்மி?’

ஜெஸ்மின் கேட்டு கடகடவென ஒரு முழு நிமிட நேரம் சிரித்தாள். பிறகு சொன்னாள்: ‘மாட்டன், கலாபா. இங்கே எப்போதும் ஒரு கண் என் நடவடிக்கையெல்லாவற்றையும் கவனித்திருந்து என்னுடைய முதலாளிக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது என்;பதை முதலில் தெரிந்துகொள். ஆசை வயப்பட்டு, இல்லையேல் காதல் வயப்பட்டு காசில்லாமலே நான் யார்கூடவும் போய்விட முடியாது. காசு எனக்கு வேண்டும். ஆனாலும் நான் காசுக்காக உன்னோடு வருகிற நேரத்திலும், ஆசையோடும்தான் வருகிறேன். உனக்கு ஒன்று தெரியுமா, கலாபா? அதீத காம உணர்வில்லாத ஒருபெண் வியபிசாரியாக முடியாது. அல்லது ஒரு நிர்ப்பந்தத்தில் வியபிசாரியாகிறவள் பின்னால் அதீத காம உணர்வை அடைந்துகொள்கிறாள். என் காமத்தை உன்னோடு தணிக்கவே இந்த நிமிஷம்வரை என் தேகம் துடித்துக்கொண்டிருக்கிறது. இந்தத் துடிப்பில்லாவிட்டால் நான் உனக்காகக் காத்துக்கிடக்க மாட்டேன். இன்னுமொன்று. நீ தருகிற காசைவிட அதிகமாகவே என்னால் சம்பாதிக்க முடியும். அது எனக்கு முக்கியமில்லை. ஒரு பாந்தமாய் இந்தப் பந்தம்தான் மாதத்தில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் என்னை ஒரு பெண்ணாய் வாழவைக்கிறது. இந்தப் பந்தம் நித்தியமில்லை. உனக்குப்போலவே எனக்கும். ஆனாலும் நீ இருக்கிறவரை அதன் அநித்தியம்பற்றி நான் நினைப்பதில்லை.’

அவளுடைய கண்கள் கலங்கியிருந்தன. கரு ஒளி சுடர்விடும் அந்தக் கண்களையே வெகுநேரம் பார்த்துக்கொண்டிருந்தான் கலாபன். அலைகள் எழுந்து அவளது கண்களுக்குள் சீறியடித்தன. சீற்றமாய் அற்ற சீறுதல். உண்மை வெளிப்படும் தருணம் அதுபோல் சீற்றமாய்த்தான் இருக்குமோ? பின் அந்த அலை அடங்கியது மெதுமெதுவாய். காரிருட் கண்களில் அப்போது ஒரு நிறைவு தென்பட்டது. மெய்யுணர்தல் எவரிடமிருந்தெல்லாம் அடைதல் சாத்தியமாகிறது! கலாபன் ஆச்சரியப்பட்டான்.

மறுநாள் காலையில் அங்கிருந்து புறப்படு முன்னர் காசு கொடுத்தான். அதை வாங்காமலே அவள் சொன்னாள்: ‘உனக்குத் தேவையானால் வைத்திரு. அடுத்தமுறை வரும்போது தரலாம்.’

தனக்குத் தேவை வராதென்று சொல்லி கொடுத்துவிட்டு வந்தான் கலாபன்.
கப்பலின் பின் அணியத்தில் நின்றிருந்த கலாபனுக்கு கடலினதும் வானினதும் விரிநீலம் மறைந்து, ஜெஸ்மினது கண்களின் அடரிருள் தரிசனமாயிற்று. அவளது கண்களே தன் தூக்கத்தை இழக்கச் செய்துகொண்டிருக்கின்றன என்பதை உணர அவனுக்கு அதிகநேரம் ஆகவில்லை.

இரண்டு நாட்கள் முந்திய அந்த இரவில் காம தேவதையாகவே மாறியிருந்தாள் ஜெஸ்மின். அவன் ஈடுகொடுத்தான். அதுதான் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. அவன் அவளது பிரியத்துக்குள் அமிழ்ந்துகொண்டு போகிறானா? அல்லது ஒரு ஆழ்ச்சியிலிருந்து மேலெழுந்து கொண்டிருக்கிறானா? அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அவன் மேலெழவேண்டும். அவள் வாழ்க்கைக்காக அவன் இரங்கலாம். ஆனால் கைகொடுத்துவிட முடியாது. அவன் கைகொடுப்பானென்று அவளும் நினைத்திருக்கவில்லைத்தான். ஆனாலும் அந்த நிலை அவனளவில் ஏற்படவே கூடாது. காலில் கொழுவிய வளையம் இறுகிவந்து விலங்காகிவிட்டால் மீட்சியில்லை.

அவனிடமுள்ள பிரச்னையே அவனால் நினைப்பதுபோலெல்லாம் நடந்துவிட முடிவதில்லை என்பதுதானே! இப்பொழுது ஒன்றை யோசித்துக்கொண்டிருக்கிறான். குடிக்க ஆரம்பித்துவிட்டால் நினைத்திருந்ததெல்லாம் மறந்து எல்லாம் தன்னதாகவேண்டும், எதுவும் தன்னால் ஆகவேண்டும் என நினைத்துவிடுகிறான். தமிழ்நாட்டுப் பெண்ணொருத்தியை ஒருபோது எவ்வளவு க~;ரங்கள் ஆபத்துகளுக்கிடையில் அவன் கோழிவாடா விபசார முகாமிலிருந்து வெளியே கொண்டுவந்து ஊருக்கு அனுப்பிவைத்தானென்பதை அவன் மறந்திருக்க நியாயமில்லை. அதுபோல ஒரு சம்பவம் ஜெஸ்மின் வி~யத்தில் ஏற்படாதென்பதற்கு என்ன நிச்சயம்?

நன்கு விடிந்துவருவது தெரிந்து கலாபன் உள்ளே சென்றான்.
மாலை நான்கு மணிக்கு மறுபடி அவன் வேலைக்கு இயந்திர அறை இறங்கியபோது, அங்கே எழுந்துகொண்டிருந்த சத்தம் இயல்பில்லாததாய்த் தோன்றியது. அங்கே எழுந்துகொண்டிருந்த வெப்பமும் இயல்பில்லாததென்பது தெரிந்தது. பிரதான இயந்திரம் மூசிமூசி இரைந்துகொண்டிருந்தது. கடல் சிறிது கொந்தளித்துக்கொண்டிருந்ததை அப்போதுதான் கலாபன் உணர்ந்தான். கப்பல் போய்க்கொண்டிருந்ததும் வழமையான அதன் வேகத்துக்கு சற்று கூடுதலாகவே இருந்தது. மூன்றாவது பொறியியலாளனான பர்வீன்குமார் அவன் வரவை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். அவன் இயந்திரங்களை நன்கு பரிசீலித்துக்கொண்டு கீழே வந்தபோது நேரம் பன்னிரண்டு மணி ஐந்து நிமிஷங்கள். கலாபன் ஐந்து நிமிஷ தாமதம் என்பதுபோல் ஒரு கறார்ப் பார்வையில் நின்றிருந்தான்.

அவன் கப்பலேறிய முதல்நாளிலிருந்தே தொடங்கிய பனிப்போர் அது. அன்றே முதன்மைப் பொறியியலாளரிடம் கலாபன் சொல்லியிருந்தான், தான் மூன்றாவது பொறியியலாளனாக ஒப்பந்தம் செய்து வந்திருப்பதாக. ‘அதைப் பெரிதுபடுத்தாதே, இவனுக்கு வேலையே தெரியவில்லை, ஆனாலும் கம்பெனியின் துறைமுகப் பொறியியலாளனின் உறவினனாதலால் வைத்துச் சமாளிக்கவேண்டி இருக்கிறது. நீ உதவி-மூன்றாவது பொறியியலாளனாகத்தான் வேலைசெய்யவேண்டி இருக்கும்’ என்றிருந்தார்.
சம்பளம் மூன்றாவது பொறியியலாளனுக்கான அதே தொகையாயிருந்ததில் கலாபனுக்கு மேலே மறுத்துச்சொல்ல எதுவும் இருக்கவில்லை. அவன் தனது வீட்டு வேலைகளைப் பூர்த்திசெய்ய ஓராண்டு வேலைசெய்தால் போதும். ஆனாலும் கர்ப்பிணியாயிருக்கும் மனைவி பிரசவித்து புதுவீட்டுக்கு குழந்தையோடு வரவேண்டும் என்பது அவனது உள்ளோடிய விருப்பமாயிருந்தது. அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன.
இரண்டு மணியளவில் பிரதான எந்திரத்தின் அருகே நின்றிருந்தபோது நாலாவது சிலிண்டருக்குள் சில கடகட நொருங்குதல்களைக் கேட்டான் கலாபன். ஒயில் றிங் ஒன்றும், கொம்பிற~ன் றிங்குகள் நான்குமிருக்கும் பிஸ்டனில் ஒன்றோ சிலவோ உடைந்துவிட்டமை கலாபனுக்குத் தெரிந்தது. அவ்வாறான நிலைமைகள் உடனடியாக பிரதம பொறியியலாளருக்கு அறிவிக்கப்படவேண்டும். பர்வீன்குமாரே பொறுப்பான பொறியியலாளனாய் இருக்கிறவகையில் அவனே சென்று அதைக் கூறிவிட முடியாது. எனவே பர்வீனை அழைத்து நிலைமையைச் சொன்னான். அவன் சிலிண்டருக்கு கிட்ட வந்தபோது அந்தச் சத்தம் மெதுவாகக் கேட்டுக்கொண்டிருந்தாலும், அதை கலாபன் சொல்லி தான் அறிந்ததாக இருக்க விருப்பமில்லாத பர்வீன், அப்படி பெரிதான சத்தம் எதுவும் இல்லை, கூடுதலாகக் கேட்கும்போது பார்க்கலாமென்று சொல்லிவிட்டான். கலாபனுக்கு அதற்கு மேலே அக்கறையில்லை.

ஆனால் அது உடனடியாகக் கவனத்தைக் கோருவதும், பாரிய பாதிப்புகளை எந்திரத்துக்கும், நெருப்பபாயங்களை கப்பலுக்கும் ஏற்படுத்தக்கூடியதாகும். கலாபன் நான்கு மணிவரை மிகக் கவனமாகவே இருந்தான்.

எட்டு மணிக்கு முதலாவது பொறியியலாளரின் வேலைநேரம். அவர் பெரும்பாலும் கீழே வருவதில்லை. மேலே நின்று தனது உதவியாளனான பயில்நிலைப் பொறியியலாளனைப் பார்த்து பெருவிரலை நிமிர்த்தி எல்லாம் சரியாக இருக்கிறதா என்கிற சமிக்ஞையில் கேட்பார். பயில்நிலைப் பொறியியலாளனும் அதேபோல் பெருவிரலை உயர்த்திக் காட்டிவிட்டால் அப்படியே தனது அல்லது கப்ரினின் கபினுக்குப்; போய்விடுவார். மற்ற எல்லா வேலைகளையும்  பயில்வுநிலைப் பொறியாளன் கவனித்துக்கொள்வான்.
எட்டு மணி வேலை தொடங்குவதற்கு சிறிதுநேரத்துக்கு முன்பாக அவன் வருகிறவேளையில் நான்காவது சிலிண்டரோடு நின்று ஒரு கருவியின் மூலம் சத்தத்தைக் கவனித்துக்கொண்டிருந்தான் கலாபன். அப்போது அவனது செயற்பாட்டைக் கண்ட பயில்வுநிலைப் பொறியியலாளன்  காரணம் கேட்க, கலாபன் விஷயத்தைச் சொன்னான்.

அதை பர்வீன் நிச்சயமாக விரும்பவில்லையென்பதை அவன் மேலே செல்லும்போது பார்த்த பார்வையில் தெரிந்தான் கலாபன். அவன் பொருட்படுத்த எதுவும் இல்லை. அவனுக்கு கப்பலின் பாதுகாப்பு, அத்தோடு கூடிய தனதும் மற்றுள எல்லா கடலோடிகளதும் பாதுகாப்பு, முக்கியமானது.
வேலை முடிந்து போய் சாப்பிட்டு படுத்துத் தூங்கியபின் இரவு பன்னிரண்டு மணியளவில் அவன் மீண்டும் வேலைக்கு இறங்கியபோது வேலைமுடித்துச் சென்ற பயில்வுநிலைப் பொறியியலாளன் கலாபனை அழைத்து புகைபோக்கியின் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சுட்டிக்காட்டி அதில் தீ மூளக்கூடிய சாத்தியமிருப்பதையும், இன்னும் சில மணிநேரங்களில் கப்பல் துபாயை அடைந்துவிடுமாதலால் திருத்த வேலைகளுக்கு அப்போதைக்கு அவசியமில்லையென பிரதம பொறியியலாளர் கருதுவதாகவும் சொல்லிச் சென்றான்.

ஓடிவந்து என்ன சொன்னானெனக் கேட்ட பர்வீனுக்கு புகைபோக்கியின் ஒரு பொருத்தில் தீப்பிடிக்காத கவர்  பிரிந்திருந்த இடத்தில் நெருப்பு கனன்றுகொண்டிருப்பதைக் காட்டினான் கலாபன். பார்த்த பர்வீன், “ஓ…ராம்…ராம்” என்றான். பின்னால் அவனது போக்கே மாறிப்போனது. எப்போதும் நிமிர்ந்து அந்த இடத்தையே பார்துக்கொண்டிருந்தான்.

மூன்று மணி ஆகியிருந்த வேளையில் திடீரென நெருப்புத் தோன்றியது அந்த புகைபோக்கியில். அதைக் கண்ட பர்வீன் கலாபனை அங்கே நிற்கும்படியும், தான் மேலே போய் பிரதம பொறியாயிலாளரிடம் வி~யத்தைக்கூறி அழைத்துவருவதாகவும் சொல்லிவிட்டு கலாபனின் பதிலுக்குக்கூட தாமதிக்காமல் மேலே ஓடினான்.

ஒயில் றிங் உடைந்த நிலையில் மேலே செல்லக்கூடிய எண்ணெய்க் கசிவினால் அவ்வாறான தீப்பிடிக்கும் நிலை தோன்றக்கூடும்தான். அதுவே ஆபத்தான நிலைமையில்லை. ஆனால் அது தொடர்ந்து சென்று பரவ ஆரம்பித்தால் நிச்சயமாக அபாயமுண்டு. தீயணைப்புக் கருவியை எடுத்து அதை அநாயாசமாக அணைத்துவிட்டு கலாபன் திரும்ப, படிகளில் இறங்கி ஓடிவந்துகொண்டிருந்தார் பிரதம பொறியியலாளர். பின்னால் பருத்த தன் சரீரத்தை தூக்கிக்கொண்டு ஓடமுடியாத பர்வீன் தாண்டித் தாண்டி வந்துகொண்டிருந்தான்.

கலாபன் நடந்ததை விபரித்தான்.

செய்யவேண்டிய சரியான காரியம் அதுதானென கலாபனைப் பாராட்டிய பிரதம பொறியியலாளர், திரும்பி பர்வீனை ஒரு பார்வை பார்த்தார். அந்தளவில் கப்ரினும் இயந்திர அறைக்கு வந்துவிட்டான். பின்னர்தான் கலாபனுக்குத் தெரிந்தது, பர்வீன் மேலே ஓடுவதற்கு முன் கப்ரன் கபினுக்கும், பிரதம பொறியியலாளர் கபினுக்கும்மட்டும் அபாய அறிவிப்புக் கொடுக்கக்கூடிய மணியின் சுவிட்சை அவன் அழுத்திவிட்டு ஓடியிருந்தது.
பிரதம பொறியியலாளர் கேட்டார், “அபாய மணியை அழுத்திய நீ பின் எதற்காக மேலே ஓடிவந்தாய்?” என. அவன் சொல்வதறியாது விழித்தான். பயந்துபோய் தான் மேலே ஓடிவிட்டதை எப்படி அவனால் சொல்ல முடியும்? கப்ரினுக்கும் நிலைமை புரிந்தது.

இருவரும் மேலே சென்றனர்.

கலாபனும் வேலை மாறி மேலே சென்றபோது பர்வீனைப் பார்த்தான். அவனது முகம் அப்போதும் பேயைக் கண்டவன்போல் விறைத்துக்கிடந்தது.
கப்பல் மறுநாள் மதியத்தில் துபாய் துறைமுகத்தை அடைந்தது.
அது சரக்கை இறக்கிவிட்டுத் திரும்பியபோது பர்வீன் பிரதம பொறியியலாளரின் சிப்டுக்கு மாற்றப்பட்டிருந்தான். பயில்நிலைப் பொறியியலாளன் மூன்றாவது பொறியியலாளனாக வேலை பொறுப்பெடுத்திருந்த கலாபனுக்கு உதவியாக வந்தான்.

கப்பல் பம்பாய்த் துறைமுகத்தை அடைந்தபோது, அங்கே காரில் அமர்ந்துகொண்டிருந்தான் கம்பெனியின் துறைமுகப் பொறியியலாளன். துபாயில் கப்பல் நின்றிருந்தபோதே தொலைபேசியில் அல்லது ரெலெக்ஸில் விஷயத்தை பர்வீன் தெரிவித்திருப்பானென கலாபன் ஊகித்தான்.
தொங்குபடி இறங்க மேலே வந்த துறைமுகப் பொறியியலாளன் நேரே கப்ரின் கபினுக்குச் சென்றான். அவன் எவ்வளவு கூறியும் கப்ரின் ஏற்றுக்கொள்ளவில்லை. தான் கப்பலின் குறிப்புப் புத்தகத்தில் தீ விபத்து ஏற்படவிருந்த நிலைமையை பதிந்துவிட்டதாலும், அது குறித்து கம்பெனி நிர்வாகிகளுக்கு அறிவித்துவிட்டதாலும் தன்னால் செய்யக்கூடியது ஏதுமில்லையென்று கூறி, முடிந்தால் கப்பல் உரிமையாளனிடம் கதைக்கும்படி சொன்னான் அவன். அந்த விஷயத்தில் தன்னால் செய்யமுடிந்தது, தீவிபத்து ஏற்பட்ட வேளையில் பர்வீன்குமார் நடந்துகொண்ட விதத்தை எழுதாமல்விட்டது மட்டுமேயென்றும் தெரிவித்தான். அவ்வாறு ஒரு பதிவு ஏற்பட்டால் இனி எந்தக் காலத்திலும், எந்தக் கப்பலிலும் அவனால் வேலைபார்க்க முடியாது போயிருக்குமென்பது தெரிந்திருந்த துறைமுகப் பொறியியலாளன் மேலே கப்ரினை வற்புறுத்தவில்லை.

பர்வீன்குமார் கப்பலைவிட்டு சுவடேயின்றி வெளியேறினான்.
கலாபனுக்கு வருத்தமேதுமில்லை. தன்னால் பர்வீனுக்கு வேலைபோனது என நினைக்க என்ன முகாந்திரம் இருந்தது? பர்வீன்குமாரைவிட கப்பலும் அத்தனை கடலோடிகளும் முக்கியமல்லவா?

தன் நண்பன் சிவபாலனுக்கு அது குறித்து எழுதவேண்டுமென எண்ணிக்கொண்டான் கலாபன்.
000

தாய்வீடு, ஜூலை  2015

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...