Thursday, July 16, 2015

மதிப்புரை: ‘விலங்கில்லா அடிமைகள்’

செ.கணேசலிங்கனின்
‘விலங்கில்லா அடிமைகள்’
சமுதாய விமர்சன நாவல்

ஈழத்து தமிழ் நாவல் இலக்கியத்தை டாக்டர் நா.சுப்பிரமணியன் பகுத்த காலவாரிப்படி, அதன் சமுதாய விமர்சன காலத்தில்-1956ம் ஆண்டளவில்- பலரது கவனத்தையும் கவர்ந்த எழுத்தாளராக வளர்ந்த செ.கணேசலிங்கனனின் அண்மையில் வெளிவந்திருக்கும் சமூக நாவல் இது.

சமகால வரலாற்றுப் புதினம் என்ற முத்திரையுடன் இது வெளிவந்திருப்பினும், இது சமூக நாவல்தான். சமகால வரலாறு என்பது Contemporary  history  என்ற ஆங்கிலப் பதத்தின் நேரடி மொழியாக்கமே. ஆயினும், ‘சமூக நாவல் என்று நாம் மேலெழுந்தவாரியாகக் கூறும் நாவல் வகையானது உண்மையில் சமகால வரலாற்று நாவலாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில் வரலாறு என்பது சமூக ஆய்வை ஆதாரமாகக்கொண்டது. ஒரு
 குறிப்பிட்ட காலத்து சமூக நிலைமையின் பிரத்தியேகமான பண்புகளுக்கமைய பாத்திரங்களைக் கண்டறிந்து படைப்பவனே சமூகநாவல் ஆக்குகிறான். அதாவது சமகால வரலாற்றின் தன்மைகள் சிலவற்றிற்கு இலக்கிய வடிவம் கொடுக்கிறான்’ என்று க.கைலாசபதி கூறுவதிலிருந்து சமகால வரலாற்றுப் புதினம் என்றாலே சமூக நாவல்தான் என்பது பெறப்படுகிறது.

நாவல், பிரச்சினைகள் மலிந்த இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தைக் களமாகக்கொண்டது. தேசிய விடுதலைப் போராட்டம் வலுப்பெற்று புதிய ஒரு காலகட்டம் உதயமாவதுபற்றியும் தெளிவாகக் கூறுகிறது ‘விலங்கில்லா அடிமைகள்’.

ஆணாதிக்கச் சமுதாயத்தில் ஒரு குடும்பமானது புதிய சிந்தனைபெற்று எவ்வாறு புதிய ஒரு காலகட்டத்திற்கான முன்னறிவிப்பைச் செய்கின்றது என்ற கருத்து நாவலின் இழையாக ஓடுகிறது.

மனைவி, மூன்று பெண்பிள்ளைகள், மூன்று ஆண்பிள்ளைகள் என்று சகலமானவர்களும் சகலமும் தன்னைச் சூழ ஒரு குட்டிராஜாவாக வாழ்கிறார் தம்பையா . பெண்களில் இருவர் கல்யாணமாகியும், கடைசிப் பெண் சகுந்தலா படிப்பதற்கென்று இந்தியாவுக்கும் போய்விட, மகன்களோ அவரது தளைகளிலிருந்து பிய்த்துக்கொண்டு விலகிவிடுகிறார்கள். கடைசியில் அவருக்கு அஞ்சி அடங்கி ஒடுங்கி அடிமையாக அவஸ்தைப்பட்ட மனைவி சரஸ்வதிகூட கொழும்பிலுள்ள தன் மகளோடு தங்கிக்கொள்ளப் போய்விடுகிறாள். தம்பையா  தனிமரமாகிறார்.

நெளிவு சுழிவற்ற கதைப் பின்னல். நாவல் நெடுகிலுமே பெண்ணடிமைத்தனம், சாதி முறைமை, பொருளாதார உறவுகளின்  கொடுமைகளைச் சாடுகிறார் ஆசிரியர்.

மனைவிக்கு வீட்டில் உதவி செய்வதற்காக காமாட்சி என்ற தேயிலைத் தோட்டத்துச் சிறுபெண்ணை வீட்டுக்கு அழைத்து வருகிறார் தம்பையா . அவள் பெரியபெண் ஆனதும் தகப்பன் வந்து கூட்டிப் போய்விடுகிறான். தம்பையா  ஆத்திரப்படுகிறார். இந் நிகழ்ச்சியை முடிக்கும்போது, ‘சரஸ்வதி மறைமுகமாக நின்று காமாட்சியை அனுப்பிவிட முயன்றதைத் தம்பையர் அறியார்’ என்று எழுதுகிறார் ஆசிரியர். இந்த வரிகளிலேயே ஒரு நாறிய சமுதாயத்தினையும், தம்பையாவின் குணவியல்பையும் புலப்படுத்திவிடுகிறார்.

தம்பையா , சரஸ்வதி, சகுந்தலா, இந்திரன், கதறீன், ஆசிரியர் முருகேசு போன்ற பாத்திரங்கள் நிறைகிற அளவுக்கு மகேந்திரன் பாத்திரம் நிறைய மறுக்கிறது. தனது கருத்துக்களின் பிரதிநிதியாக-வாகனமாக- அப்பாத்திரத்தை வார்த்திருப்பதன்மூலம்  ஆசிரியர் மகேந்திரனை இந்தக் குறைபாட்டினுக்கு ஆளாக்கிவிட்டார் என்றே தோன்றுகிறது.

மொத்தத்தில் 124 பக்கங்களில் ஒரு சமுதாயத்தினைக் காட்டும் கண்ணாடியாக இந்நாவல் விளங்குகிறது எனில் மிகையில்லை.

00000

தினமணி சுடர், ஜன.04 , 1992

No comments:

எம்மா- சிறுகதை

எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவை...