Saturday, July 11, 2015

மதிப்புரை: ஈழத்துக் கவிதைக் கனிகள்


ஈழத்துக் கவிதைக் கனிகள்
-சிலோன் விஜயேந்திரன்


தற்கால தமிழிலக்கிய வளர்ச்சியில் சிங்கப்பூர், மலேஷியா போன்று ஈழத்தின் பங்கும் கணிசமானதாகும். தமிழிலக்கியத்தின் வேறெந்தத் துறையையும்விட கவிதைத் துறையில் அதன் பங்கு பெரியது. இதை எளிதில் இனங்காணப் பேருதவி செய்யும்வகையில், சுமார் அரை நூற்றாண்டுக் கவிதைகளில் எண்பத்திரண்டு கவிஞர்களின் நூற்று இருபத்தேழு கவிதைகளை இந்நூலில் தொகுத்துத் தந்திருக்கிறார் டாக்டர் சிலோன் விஜயேந்திரன்.

இதுமாதிரி அரசியல் நெருக்கடி மிகுந்த காலகட்டத்தில் அரை நூற்றாண்டு ஈழத்துக் கவிதைகளைத் தொகுப்பதென்பது சாதாரண விஷயமல்ல. அதையும் தனியொரு மனிதனாகவே முன்னின்று தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது.
ஈழத்துக் கவிதைகளில் சிறிதேனும் பரிச்சயம் இருப்பவர்களுக்கு, இத் தொகுப்பு நூல் மிகவும் அவதானத்துடன், பக்கம் சாரா மனநிலையுடன் தொகுத்திருப்பது தெளிவாகும். தொகுப்பாசிரியர் தன் முழு முனைப்பையும், இதய சுத்தியான முழு ஆர்வத்தையும் இந்நூலில் காட்டியிருப்பதை யாரும் மறுக்க முடியாது.

ரசிகமணி கனக-செந்திநாதனின் ‘ஈழத்துக் கவிமலர்கள்’ போன்று, வேறு சில தொகுப்பு நூல்கள் அவ்வப்போது வெளிவந்திருக்கின்றன. எனினும், ஓர் அரை நூற்றாண்டுக் கால ஈழத்துக் கவிதைகளில் சிறந்தனவென தான் கருதும் கவிதைகளைத் தொகுத்து ஒருவர் வெளியிட்டிருப்பது இதுவே முதன்முறை எனலாம். அந்த வகையிலும் இந்நூலுக்கு ஒரு தனித்துவமுண்டு. ஒரு தசாப்த காலக் கவிதைகளைத் தொகுப்பதே ஒரு தொகுப்பாசிரியனுக்கு மிக்க பிரயாசையானதாகும். ஒரு தனிமனிதன் சுமார்  அரை நூற்றாண்டுக் கவிதைகளைத் தொகுப்தோ, அசாதாரணம். அவன் ஒரு நிறுவனமாகவே தொழிற்படவேண்டிய அத்தியாவசியம் இங்குண்டு. சிலோன் விஜயேந்திரன் போற்றக்கூடிய வகையில் முயற்சி செய்திருக்கிறார்.

கையகல தேசமாயினும் தமிழுக்கு அதன் இரண்டாவது நாவலை (அசன்பேயுடைய கதை - சித்திலெவ்வை) அளித்துப் பெருமைகொண்டது ஈழம். இதன் இலக்கிய வரலாறு ஈழத்து பூதந்தேவனார் தொட்ட பழைமையானதெனினும், அரசகேசரிவரை இருண்டே கிடக்கிறது. பாரதி, பாரதிதாசன் கவிமரபு ஈழத்துக்கும் பரந்தது. அவர்களது கருத்தியலையொட்டி கவிதைகள் புனையப்பட்டன. ஆயினும், ஈழத்துக் கவிப்போக்கு ஒரு தனிப்போக்காகவே கணிக்கப்படக் கூடியது. இ.முருகையன், மஹாகவி, சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றோர் அத்தனித் தன்மையை இனங்காட்டும் நவீனகாலத் தமிழ்க் கவிஞர்களாய்த் திகழ்கிறார்கள்.

ஈழத்துக் கவிதைகளின் தனிப் பண்பு தன்னுணர்ச்சிக் கவிதைகள் எனப்படும் சிறு கவிதைகளாலன்றி நெடுங்கவிதைகளாலேயே அதிகமாக உணரப்படக்கூடியது என்பர் விமர்சகர் (உம்: முருகையனின் நெடும்பகல்- மஹாகவியின் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்). அவை ஒரு தொகுப்பு நூலில் இடம்பெறுவது சாத்தியமில்லை. எனவே தொகுப்பாசிரியர் தனது சுவைப்படி சில தனிக் கவிதைகளைத் தெரிந்துள்ளார். இதில் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் ‘இலங்கை வளம்’ கவிதை விடுபட்டுப் போனமை துர்ப்பாக்கியமே.

ஈழத்தின் தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் தமது கவிதை நோக்கினாலும், ஆக்கத்தினாலும் தாக்கத்தை ஏற்படுத்திய சமகாலக் கவிஞர்களில் நவாலியூர் நடராஜன், புதுவை இரத்தினதுரை, பசுபதி, காசி-ஆனந்தன் ஆகியோரைக் குறிப்பிடல்வேண்டும் என்பார் பேராசிரியர் கா.சிவத்தம்பி. இக் கவிஞர் வரிசையிலுள்ள பசுபதியின் கவிதைகள் இத் தொகுப்பில் இடம்பெறாதது இன்னொரு துர்ப்பாக்கியம்.

இத் தொகுப்பு நூலைப் பார்க்கும் ஒருவருக்கு ஈழம் புதுக் கவிதைகளையின்றி மரபுக் கவிதைகளையும், மரபு மீறிய தற்காலக் கவிதைகளையுமே அதிகமாகப் படைத்திருப்பதாகத் தெரியவரும். அது ஓரளவு உண்மையே. அதற்கும் சமூக விஞ்ஞான ரீதியான விளக்கமுண்டு. யாப்புக்கும் வாழ்க்கைக் கதிக்கும் தொடர்புண்டு என்கிறார் கா.சிவத்தம்பி, தமது ‘ஈழத்தில் தமிழிலக்கியம்’ என்ற நூலில். இது ஈழத்தில் மரபுக் கவிதைகளும், மரபை மீறிய கவிதைகளும் ஏன் அதிகமாகத் தோன்றின என்பதை விளக்கும். வாழ்க்கைக் கதியில், சமூக ஏற்பாட்டில் மாற்றம் ஏற்படாததே மரபு சார்ந்த கவிதைகள் ஈழத்தில் அதிகம் பேணப்பட்டமைக்குக் காரணம்.

தொகுப்பின் குறைபாடாகச் சொல்ல ஒன்று உண்டு. இவ் ஐம்பதாண்டுக் கால கவிதைகளும் மொழி உணர்ச்சிக் கவிதைகள், இன எழுச்சிக் கவிதைகள், சமூக முன்னேற்றக் கவிதைகள், பல்சுவைக் கவிதைகள் என்ற உபதலைப்புகளின் கீழ்த் தொகுபக்கப்பட்டுள்ளன. இம்மாதிரியான ஒரு பகுப்பு, இலக்கிய வரலாற்றோடு ஒத்து வருமாவென்பதை முதலில் கவனிக்கவேண்டும். கவிதைகள் பல்வேறு  வழிகளில் தொகுக்கப்பெறலாம். காலவாரியாக வகுக்கலாம். இல்லையேல் கவிதையின் உத்தி அடிப்படையில் குறியீட்டுக் கவிதை, படிமக் கவிதை, விவரணக் கவிதையென வகுக்கலாம். அல்லது 1942ல் தோன்றிய மறுமலர்ச்சிக் காலத்தோடு மறுமலர்ச்சிக் காலம், 1956லிருந்து தேசிய விழிப்புணர்வுக் காலம் என வகுத்துச் செல்லலாம். இதுவும் காலவாரியான ஒரு பகுப்பே. அப்படியின்றி மொழியுணர்ச்சிக் கவிதைகள், இன எழுச்சிக் கவிதைகள் என்பதுமாதிரியான பகுப்பு, இவை மட்டுமேதான் ஈழத்துக் கவிதைகளின் பொருளாயிருந்தனவோ என ஒருவரைச் சந்தேகப்பட வைக்கக்கூடிய ஒரு தவறைச் செய்யக்கூடும்.

மேலும் ஈழத்துக் கவிதை மரபினுக்கு கனம் சேர்க்கவே போன்றும் சில கவிதைகள் (செய்யுள்கள்) இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ‘உரைநடை கைவந்த வல்லாளர்’ ஆறுமுக நாவலர் என்பதும், தொல்காப்பியத்தையும், ஏனைய சில சங்ககால, சங்கமருவிய கால இலக்கியங்களையும் ‘செல் துளைத்த துளையின்றி மெய்ப்புள்ளி விரவாத’ ஏடுகளிலிருந்து பதிப்பித்துத் தந்த சிறந்த பதிப்பாசிரியர்களுள் சி.வை.தாமோதரம்பிள்ளை ஒருவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. அவர்களின் பாடல்கள் காலவாரிப்படி (1940 – 1990) பார்த்தாலும் இத் தொகுப்பில் வர நியாயமில்லை. சி.வை.தா.வினதும், நாவலரதும் பாடல்கள் கவிதைகள் அல்லவென ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும். ஒரு கவிதைப் பாரம்பரியத்தைக் கோடிட்டுக் காட்டவே தொகுப்பாசிரியர் இதைச் செய்யாது விட்டாரெனில் இது பொருள்செய்யப்படாது தயக்கத்தோடெனினும் விட்டுவிடப்பட வேண்டியதுதான்.

இத் தொகுப்பில் இன்னுமொன்றைச் சுட்டிக்காட்டவேண்டும். ‘ஈழத்து இலக்கியப் பாரம்பரியமும் இன்றமிழ்க் கவிஞர்களும்’ என்ற தலைப்பில் தொகுப்பாசிரியரது விளக்கம்  சிலபோது பண்டிதத் தமிழில் தொடர்வது ரஸபேதமாகப் படுகிறது. ‘யாம்’, ‘போழ்து’ என்பன போன்ற வார்த்தைககள், தொகுக்கப்பட்டவை செய்யுள்களா, கவிதைகளா என்ற மயக்கத்தை ஏற்படுத்துகின்றன.

‘கம்பதாசன் கவிதைகள்’, ‘கல்லடி வேலுப்பிள்ளை பாடல்கள்’ போலன்றி, ஈழத்துக் கவிதைக் கனிகள்  ஆசிரியருக்குப் பற்பல சவால்களை விட்டிருக்கின்றது.  சில பல குறைகள் காணப்படினும் தொகுப்பாசிரியரின் முயற்சியும், திறமையும் இந்நூலில் வெளிப்படவே செய்கின்றன.
இதிலுள்ள கவிதைகள் மரபுக் கவிதைகளாக, மரபு மீறிய தற்காலக் கவிதைகளாக, புதுக் கவிதைகளாக, பிள்ளைப் பாடல்களாக புலமையோடும், கவித்துவத்தோடும், இனிமையோடும் படைக்கப்பட்டவை. க.சச்சிதானந்தனின் கவிதைகளில் வரும் உணர்ச்சி, காசி-ஆனந்தனின் கவிதைகளது எழுச்சி, நவாலியூர் சோமசுந்தரப் புலவரினதும், விபுலானந்த அடிகளதும் கவிதை இனிமை நம்மைப் பரவசப்படுத்துகின்றன. ஈழத்துக் கவிதை நயத்தைப் புலப்படுத்த இத் தொகுப்பு தவறவேயில்லை.

00000

-தினமணி சுடர், மே 02, 1992.

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...