Thursday, July 09, 2015

யதார்த்தப் போக்கும் வட்டார வழக்கும்- வ.க.நாவல்களை முன்வைத்து…

யதார்த்தப் போக்கும் வட்டார வழக்கும்:
வ.க.நாவல்களை முன்வைத்து…


கடந்த நூற்றாண்டின் கடைசி இரு தசாப்தங்களிலும் வீச்சான நாவல்கள் பலவற்றை நாம் சாதனையாக அடைந்திருக்கிறோம். ஆனாலும் அவற்றின் சிருஷ்டிபர முயற்சிகளுக்கு உரமாகக்கூடிய பலவகை எழுத்துக்களை தமிழ்ப் படைப்புலகம் ஏற்கனவே தரித்திருந்திருக்கிறது. அவற்றுள் வல்லிக்கண்ணனின் நாவல்கள் அடங்காமல் போய்விடா. அவரது நாவல்கள் மீதான ஒரு பொதுப்பார்வையையும், அவற்றுள் சிறந்தவெனக் கருதத் தக்க இரண்டு நாவல்கள்மேல் விமர்சனபூர்வமான அணுகுமுறையையும் செலுத்துவதே இக் கட்டுரையின் நோக்கம்.

ஒரு நாவலிலக்கிய ஆசிரியராகப் பேசப்படாதிருந்தபோதும் ஆழ்ந்த ஒரு வாசிப்பில் தமிழ் நாவல் இலக்கியத்தில் யதார்த்த வகைப்  போக்கினாலும், வட்டார வழக்குகளின் வீச்சினாலும் தெளிவான சில அடையாளங்களை வல்லிக்கண்ணன் பதியவைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். 1951 தொடங்கி 1980 முடிய சுமார் முப்பதாண்டுக் காலத்தில் பத்து நாவல்களை அவர் படைத்திருக்கிறார். 1)செவ்வானம் 2)சகுந்தலா 3)விடிவெள்ளி 4)அன்னக்கிளி 5)வசந்தம் 6)வீடும் வெளியும் 7)ஒரு வீட்டின் கதை 8)இருட்டு ராஜா 9)நினைவுச் சரம் 10)அலை மோதும் கடல் ஓரம் ஆகியன அவை. பின்னுள்ள இரு நாவல்கள் குறித்ததே நம் சிறப்புக் கண்ணோட்டமாயினும், ஏனைய நாவல்கள்பற்றிய ஒரு பொதுப் பார்வை அவை இரண்டின் மேலுமான புரிதலை இன்னும் அதிகரிக்கச்செய்யும்.

வல்லிக்கண்ணனின் முதலாவது நாவல் ‘செவ்வானம்’. இது 1951இல் வெளிவந்தது. நாவல் பார்வைக்கும் கிடைக்கவில்லை. அதன் கதைபற்றியோ, பாத்திரங்கள்பற்றியோகூட ஆசிரியராலும் ஏதும் கூறமுடியாதிருந்தது. இரண்டாவது நாவல் 1957இல் வெளிவந்த ‘சகுந்தலா’. தாம்பத்ய வாழ்வில் ஏற்படக்கூடிய உறவுச் சிக்கல்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல் இது. இதற்கு ஐந்து ஆண்டுகள் பின்னால் இமயம் பதிப்பக வெளியீடாக வந்தது ‘விடிவெள்ளி’. சரித்திரக் கதை வகை. இலக்கிய வரலாற்றாசிரியர்களால் இருண்ட காலம் எனக் கூறப்படும் களப்பிரர் ஆட்சிக் காலத்தைக் களமாகக் கொண்டது இது. பாண்டியன் கடுங்கோன் அக் களப்பிரர் ஆட்சியை ஒழித்து தமிழகத்தில் நல்லரசு காண முனைவதே நூலின் கரு. ‘தமிழில் எழுதுகிறவர்கள் யாரும் டால்ஸ்டாயைப் பின்பற்றுவதில்லை. வரலாற்றின் பகைப்புலத்தில் கற்பனையைத் தாராளமாக உலவவிடும் அலெக்ஸாண்டர் டூமாஸ், விக்டர் ஹியூகோ, வால்டர் ஸ்காட் போன்றவர்களின் வழியைத்தான் பின்பற்றுகிறார்கள். கதைச் சுவைதான் முக்கியம் என்ற நோக்குடனேயே சரித்திர நாவல்களும் தொடர்கதைகளும் இங்கு படைக்கப்படுகின்றன’ என ஆசிரியரே நூலின் முன்னுரையில் கூறிவிடுகிறார். இந் நூல்பற்றிய எனது அபிப்பிராயமும் அதுதான்.

அதே ஆண்டில் வெளிவந்த இன்னுமொரு நாவல் ‘அன்னக்கிளி’. அதற்கும் பின்னால் 1966இல் ‘வசந்தம்’ வந்தது. இது ‘மூடுபனி’யென்ற பெயரில் சிவாஜி பத்திரிகையில் தொடராக வெளிவந்திருந்தது. விடுதலைப் போராட்ட காலமும், விடுதலைக் காலமும் இணைந்த வெளியைக் களமாகக்கொண்டது ‘வீடும் வெளியும்’. இது 1967இல் வெளிவந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் நாட்டுக்காக வீட்டைத் துறந்து, கல்வியைத் துறந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நாடு சுதந்திரம் பெற்றபின் படும் அல்லல்களை அழகாக எடுத்துரைக்கும் நாவல். ‘ஒரு வீட்டின் கதை’ ஜெயகாந்தனை ஆசிரியராகக்கொண்டு பிரசுரமாகிக்கொண்டிருந்த கல்பனா இதழில் வெளியான கதை. அதுபோல் 1980இல் ‘இருட்டு ராஜா’வை தினமணி கதிர் மாத வெளியீடு பிரசுரித்தது. ‘நினைவுச் சர’மும் ‘அலைமோதும் கடல் ஓரத்தி’லும் இருட்டு ராஜாவுக்கு முந்தியவை. இவை 1979இல் வெளிவந்தன.

இந்த இரண்டு நாவல்களையும் ஒருவகையினவாகவும் ஒரு காலகட்டத்தனவாகவும், ஏனைய எட்டு நூல்களையும் வேறொரு வகையினவாகவும் வோறொரு காலகட்டத்தினதாகவும் கொள்ளமுடியும். இவை இரண்டுக்குமிடையே பெரிய காலவெளி இல்லாதிருந்தபோதும் இவற்றுக்கிடையேயான வித்தியாசங்கள் தெளிவானவை. ஆசிரியரின் இலக்கிய சமுதாய நோக்கினை இந்த இரண்டாம் காலகட்டத்து இரண்டு நாவல்களும் துல்லியமாகத் தெரிவிக்கின்றன.

‘நினைவுச் சர’மும்
‘அலை மோதும் கடல் ஓரத்தி’லும்

மாதவய்யாவின் ‘கமலாம்பாள் சரித்திரம்’, ‘முற்பாதி நாவல், பிற்பாதி கனவு’ என்பார் புதுமைப்பித்தன். நனவும் கனவும் கலந்த நாவலென்று அதனைச் சொல்லலாம். கல்கியின் ‘கள்வனின் காதலி’ ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர் தன் நினைவிலிருந்து கதையைக் கூறுவதுபோல அமைந்தது. ஆனால் வ.க.வின் ‘நினைவுச் சரம்’ நினைவுகளையே நாவலாக நகர்த்திய அற்புதமென்று கூறலாம்.

எது காரணத்தாலோ ஊரைவிட்டு ஓடும் மயிலேறும்பெருமாள், நாற்பது ஆண்டுகளின் பின் மயிலேறும்பெருமாள்பிள்ளையாக தன் பூர்வீக கிராமமான சிவபுரத்துக்குத் திரும்புகிறார். அங்கே தென்பட்ட மாற்றங்கள் அவரை வியாகூலப்பட வைக்கின்றன. சொல்லப்போனால் தூல மாற்றங்கள் குறைவாகவே இருந்தன அங்கே. மாற்றங்களெல்லாம் பொருளாதார, மனோநிலை ரீதியானதாகவே இருந்தன. அவரது அனுபவங்கள்மூலமாக வாழ்நிலைத் தரிசனங்கள் வெளிப்பாடடைகின்றன. தன் நண்பர்களான பால்வண்ணம்பிள்ளை, பிறவியாபிள்ளை போன்றோருடனான மனா.பெனாவின் சம்பாஷணைகள் ஒரு வட்டாரத்தின் வாழ்வியலையே படம்பிடித்துக் காட்டிவிடுகின்றன. நினைவுச் சரங்களாகவே நாவல் நகர்ந்து நிறைவுறுகிறது. 20 அல்லது 25 பக்கங்களில் முடியக்கூடிய கதைதான் இது. ஆனாலும் 237 பக்கங்களுக்கு விரிவுபெற்றிருக்கிறது. இங்கு வாசக அலுப்புத் தோன்றாமல் நாவலை நகர்த்திய சாமர்த்தியத்தை பெரிய கலைப் பண்பாக பார்க்கமுடியும்.

பிரைமோ லெவியின் நூல்களில் பலரது கவனங்களையும் ஈர்த்த நாவல் The  Periodic Table(1975) என்பது. லெவியின் சுயசரிதையையே இது மூலமாகக் கொண்டிருந்தது. இருந்தும் அதன் கவித்துவமான அமைப்பு அதையொரு சிறந்த நூலாகப் பேசச் செய்தது. ‘நினைவுச் சரம்’ அகவய மனவுணர்வுகளைக் கவித்துவமான முறையில் கூறிய நல்ல படைப்பு எனலாம். ஒருவகையில் ஆசிரியரின் நனவிடை தோய்தல் அது.

இதன் நடை மிக எளிமையானது. நாவல் முழுக்க திருநெல்வேலிப் பேச்சுத் தமிழே கையாளப்பட்டிருக்கிறது. மட்டுமில்லை. நினைவோட்டங்களும் பேச்சுத் தமிழிலேயே இடம்பெற்றிருக்கின்றன. நெல்லை மாவட்ட பொருளாதார சமூக நிலைமைகளையும், பிள்ளைமார் சமூக மரபு வாழ்முறைகளையும் இந்நாவல் முழுக்க பரக்கக் காணமுடியும். இவற்றின் இலக்கியரீதியான பதிவுகளுக்கு சிறுகதைகளில் புதுமைப்பித்தனெனில், நாவலில் வல்லிக்கண்ணன்தான்.

நாவல்களில் வட்டார வழக்கின் செல்வாக்கு குறித்து இலக்கிய விமர்சகர்களிடையே வித்தியாசமான அபிப்பிராயங்களுண்டு. ஒரு நாவல் தான் தோன்றும் வட்டாரத்தின் பேச்சு, வாழ்முறை அம்சங்களைத் தவறாது உள்ளடக்கியிருக்கும். அதை இலக்கியத்தின் சமூக அக்கறைப்பட்ட, மரபுகளிலும் தொன்மங்களிலும் ஈர்ப்புக்கொண்ட கூறாக கணிக்கமுடியும். கொங்கு நாட்டு வட்டார வழக்காற்றுக்கு ஜி.நாகராஜனின் படைப்புக்கள்போல், நெல்லை மாவட்ட வழக்காற்றுப் பதிவுகளுக்கு புதுமைப்பித்தனும், வல்லிக்கண்ணனும்.

 இது கவனத்துடன் பதிவாகியதாகச் சொல்லமுடியாது.  வல்லிக்கண்ணனின் முற்கூற்று நாவல்களிலுள்ள சஞ்சிகை இலக்கியத்தனம் இக் கவனமான முடிவெடுப்புக்கு இடைஞ்சலாக நின்றதாகக் கொள்ளமுடியும். தொ.மு.சி.யின் ‘பஞ்சும் பசியும்’ வட்டார வழக்கினை அமுக்கி ஒரு பொதுப்பேச்சு முறையில்தான் உரையாடல் அமையப்பெற்றது. ‘நினைவுச் சரம்’ வட்டார வழக்கின் மொழி ஆளுமை மிக்கது. ‘அது… ஒரு ஊரின் சமுதாயச் சித்திரம். அத்துடன் ஒரு வட்டாரத்தின் வரலாற்றுச் சித்திரமும்கூட’ என்று ஆசிரியர் முன்னுரையில் சொல்வது நிரம்பவும் சரியானது.

ஆசிரியர் இதில் கையாண்ட நடை எளிமையானது எனக் கூறியிருந்தாலும் சொல்லப்படும் கருத்துக்கும், உணர்வுக்குமேற்ப கனதியான நடைகளையும் இது கொண்டிருப்பதாகக் கூறவேண்டும். ‘இந்த வீட்டிலே எந்த நாளிலுமே பசுமையான, குத்துவிளக்குப்போன்ற மனைக்கொடிகள் நடமாடியதே இல்லை. எப்பவுமே சத்திரம்மாதிரி, கோவில்மாதிரி அதன் தனிமையிலே அது பெரிதாய் மவுனித்து, அந்தத் தனிமையும் மவுனமுமே ஒருவிதமான அச்சம் உண்டாக்கக்கூடிய சூழலாய்… எப்படியோ இருக்கு’ (பக்: 86) என்று மயிலேறும்பெருமாள்பிள்ளையின் சிந்தனையைக் காட்டுகிற இடத்தில் வரும். 1970களில் உதித்த நவீன உரைநடை வீறுகொள்கிற இடமாய் இதைக் கொள்ளமுடியும்.  இத்தகைய இடத்துக்கு இன்னோர் உதாரணம்: ‘எந்தக் காலத்திலோ நடந்த ஒரு நிகழ்ச்சிக்கான அழைப்பை இப்படி நடுச்சாமத்திலே முழிச்சபடி உட்கார்ந்து ஒருவன் வேலை மெனக்கெட்டு, தூக்கத்தையும் கெடுத்துக்கிட்டு, கர்ம சிரத்தையாய் படித்துக்கொண்டிருப்பான் என்று சம்பந்தப்பட்டவங்களிலே எவனுமே எவளுமே நினைக்கக்கூட முடியாது. நான்கூட நினைத்ததில்லை. ஆனால் உலகத்திலே இப்படிப்பட்ட காரியங்களும் - அர்த்தம் உள்ளனவும் அர்த்தமில்லாதனவும், பயன் உள்ளனவும் பயனில்லாதனவும் ஆன காரியங்கள்  - நடந்துகொண்டுதான் இருக்கின்றன!’ (பக்: 92).

வாழ்க்கையின் தரிசனம் நூல் நெடுக உண்டு. சில இடங்களிலே அது வெடித்துப் பீரிடும். அவ்வாறான ஓரிடம் 90ஆம் பக்கத்தில் வருகிறது. மயிலேறும்பெருமாள்பிள்ளையின் மனவோட்டத்தின் இடையிலே ‘வாழ்க்கை நடக்கணும்ல வேய்!’ என்று இரண்டு வார்த்தைகள் வரும். அது தாமிரபரணியின் வாசனை. இப்படியான வாழ்க்கை பற்றிய உத்தேசம்தான் புதுமைப்பித்தனிடமும் இருந்தது. இத்தகைய சிறப்புகள் இருந்ததனால்தான்போலும் ‘நூற்றாண்டுத் தமிழ் நாவல்க’ளில் சிட்டியும், சிவபாதசுந்தரமும் இந்நாவலை வல்லிக்கண்ணனின் சிறப்பான நாவலாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

உயர்ந்தபட்ச சாத்தியங்களை அடைந்த யதார்த்த வகையான நாவல்களுக்கு முன்னோடியாக அமைந்ததாய் வல்லிக்கண்ணனின் ‘அலை மோதும் கரை ஓரத்தில்’ நாவலைச் சொல்லமுடியும். ‘அலை மோதும் கரை ஓரத்தில் ஒரு அப்பாவி மனிதன்’ என்பதுதான் இதன் முழுப்பெயர். ஆங்கில நாவலிலக்கியத்தில் பயின்று வந்த இந்த நீண்ட தலைப்பு முறையை வில்லியம் சரோயன்போன்றோர் வழி பயன்படுத்தப்படுவதாக  நூல் முன்னுரை குறிப்பிடும். மேலும் அது, ‘தமிழ் நாவல் துறையிலும் அவ்வப்போது சோதனைரீதியான புதுமைப் படைப்புகள் தோன்றியுள்ளன. க.நா.சுப்பிரமணியம் எழுதிய ‘பசி’, ‘ஒருநாள்’, ‘அசுரகணம்’,  நகுலனின் ‘நினைவுப் பாதை’, சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’, சி.சு. செல்லப்பாவின் ‘ஜீவனாம்சம்’, லா.ச.ரா.வின் ‘அபிதா’, அசோகமித்திரனின்; ‘தண்ணீர்’, ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ …இப்படி அனேக படைப்புக்களை நினைவு கூரலாம். இந்தவகையில் சேர்வது எனது ‘அலை மோதும் கரை ஓரத்தில்’ எனும் இந்நாவல்’ என்று கூறும்.

ஒருநாள் மாலையிலிருந்து மறுநாள் காலைவரையிலான ஒரு குறுகிய காலக்களத்தை கொண்டிருக்கிறது இந்நாவல்.  இதுபோலவே மூன்று நாட்களைக் காலவெல்லையாகக் கொண்டது பூமணியின் ‘வெக்கை’.  நீலபத்மநாபனின் ‘பள்ளிகொண்டபுரம்’ இரண்டு நாள் நடக்கும் கதைதான்.  இவற்றின் புதுமை, சிறப்பு எல்லாம் இவை குறைந்த காலக்களத்தைக் கொண்டவை என்பதினாலல்ல. அவற்றுக்கு வேறு காரணங்களுண்டு. ‘அலை மோதும் கரை ஓரத்தில்’ நாவலும்; அப்படித்தான்.

ஒரு குறைந்த காலவெளியில் தமிழ் நாவலிலக்கியம் வெகுவாக வளர்ச்சி பெற்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான தமிழ் நாவலிலக்கியத்தின் வரன்முறையான இந்த வளர்ச்சியை ஒரு பாய்ச்சலில்போல் அடைய இதற்கு உந்துவிசையாக இருந்தது எது? தனியே சமூக விழிப்புணர்வும், ஊடக மாற்றங்களுமென்று கூறிவிட முடியாது. செக்கு மாட்டுச் சுழற்சிபோல் ஒரே தடத்தில் வந்துகொண்டிருந்த தமிழ் நாவலுக்கு பரிசோதனைகள், மீறல்கள் மூலம் புதிய ஒரு தளத்தின் சாத்தியப்பாட்டை புலப்படுத்திய பல படைப்புகளில் இந்த நாவலும் ஒன்று என துணிந்து சொல்லமுடியும்.

நாவல் பிரக்ஞைபூர்வமாகவேதான் பரிசோதனைக் களத்தில் இறங்குகிறது. தமிழ் வாசகனின் வாசக திறனில் ஐயமிருந்தபோதும் ஓர் இலக்கிய கர்த்தாவுக்கு தன் தேவைகளின் திசைவழி நடக்கிற அவசியம் இருக்கிறது. சமூகப் பிரக்ஞையும் இலக்கியப் பிரக்ஞையும் இருக்கிற ஒரு படைப்பாளி இந்த மாற்றத்துக்கான அவசியத்தின் ஞானத்தை வெகு துரிதமாக அடைகிறான். வல்லிக்கண்ணனின் சமூகப்பிரக்ஞை சந்தேகத்திற்கு இடமற்றது.

இந்த நாவல் எதைப் பேசுகிறது என்று கேட்டால் ஒரு மனிதனின் பசியை, அதன் விளைவுகளை, குரூரங்களை, ஏக்கங்களைப் பேசுகிறது என்று சுருக்கமாகச் சொல்லாம். அகோரமான பசியோடு இருக்கும் இந்த நாவலின் கதாநாயகனான கைலாசத்துக்கு கையிலே ஓரணா நாணயம் தட்டுப்படுகிறது. ஏகிறிப் பாய்ந்து கனவு ஒன்று காண்கிறது அவனது மனது. ஆசிரியர் எழுதுகிறார்: ‘ஓரணா! ஆகா, ஒரு சிங்கிள் டீ. அல்லது எவ்வளவோ வேர்க்கடலை! அல்லது அரையணா வேர்க் கடலை, அரையணா பொரிகடலை. அல்லது காலணா வேர்க்கடலை, காலணா பொரிகடலை, காலணா பட்டாணி, காலணா மிச்சம்! அல்லது ஒரு இட்லி- பிளேட் நிறைய சாம்பார். அல்லது ஒரு மசால் வடை- சட்னி. அல்லது மெதுவடையும் சாம்பாரும். தமிழாள் கடையிலே வாங்கினால் ரெண்டு வடைகள். அல்லது ஓரணாவுக்கு பக்கடா… ஆகா, ஓரணாவுக்கு என்னென்னவெல்லாம் வாங்கலாம்! எவ்வளவோ வாங்கலாம். எது வேண்டுமானாலும் வாங்கலாம்’ (அலை மோதும் கடல் ஓரத்தில், பக்: 28). பசித்திருந்த ஒரு வயிற்றின் ஆனந்தக் கூத்து இது.

மாமனிடம் கொடுமைப் படுகிறாள் சீதா. அதை அவளது தாயே தடுக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவள் அவனுக்கு அக்கா மட்டுமில்லை, இப்போது ஆசைநாயகியும்கூட. அந்தத் தகாத உறவுகொண்டிருப்பதையும் மறந்து ஓரிடத்திலே அவளுக்காகப் பேசவருகிறார் ஆசிரியர். ‘திண்ணையில் காவலுக்கு வைத்த பொம்மைமாதிரி தலையைத் தொங்கப்போட்டபடி உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு ‘மகள்’ எனும் பாசம்கூட இருக்காதா? பெற்ற வயிறு பதைத்திருக்;காதா? தாயுள்;ளம் செத்தா கிடந்திருக்கும்? தெரியாது. ஆனால் பதினேழு பதினெட்டு  வருஷங்களுக்கு முன்பு மகளைப் பெற்றெடுத்த வயிறு கூர்ந்துபோய்விடவில்லையே. நித்திய வேதைனையாகப் பசி அங்கே குடியிருந்து பிறாண்டிக்கொண்டிருந்ததே! அது அவளை அணுஅணுவாக அரித்துக்கொண்டிருந்ததே!’ (பக்: 50-51).

தாய்மையைக் கவுரவிப்பதே மரபாக இருந்துவருகிறது நாளதுவரையில். தகாத உறவுகொள்ளும் தாயை சமூகம் என்றைக்கும் மதித்ததில்லை. இந்தப் புள்ளியிலிருந்து விலகி தாயென்பவளும் ஒரு மனுஷிதான், பசி வந்திட எவருக்குமேதான் பத்தும் பறந்துவிடும் என்பதை உரத்துச் சொன்னது வ.க.வின் நாவல். இவ்வகை மீறல்கள் பரீட்சித்துப் பார்க்கப்பட்ட களமாக இந்நாவலைக் கொள்வதில் தவறில்லை.

நாவலின் கலாபூர்வமான கதை நகர்ச்சியை இன்னொரு விசே~ அம்சமாகக் கொள்ளவேண்டும். அடுத்ததாக கையாளப்பட்ட மொழி வீச்சினைச் சொல்லலாம். ‘நான் சாப்பிடவில்லை. என்றுமே வயிறு நிறையச் சாப்பிடவில்லை. ஆகவே நான் வாழவில்லை’ (பக்: 20) போன்ற தத்துவ தளத்துக்கு விரியும் சொல்லாடல்கள் பல இந்நாவலிலே உண்டு. அவையெல்லாம் இந்நாவலைச் சிறப்புச் செய்வன.

திராவிட இயக்க எழுச்சி இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கிய வளர்ச்சியில் முக்கியமானது. அது சனாதனக் கூட்டுக்குள்ளிருந்த தமிழ்மொழியை கட்டுடைத்து வெளிவர விட்டது. இலக்கியத் திசைவெளி அதிலிருந்து பரந்துபட்டது. மக்களைநோக்கிய திசையில் இலக்கியத்தின் நகர்ச்சியை அது துரிதப்படுத்தியது. ஆனாலும் அது சினிமா, நாடகம், இலக்கியம் மூன்றையும் ஒன்றாகப் பார்த்து இலக்கியத்தில் கட்டப்பட்ட பாறாங்கல்லாயும் ஆனது பிற்காலத்தில். கனதியான இலக்கியத்துக்கான மொழியை உருவாக்கும் வாய்ப்பே அதனால் தமிழுக்கு இல்லாமல்போனது. திராவிட இயக்கத்தால் கவரப்படாதவர்களும்கூட திராவிட பாணி இலக்கியத் தாக்கம் பெற்றார்கள். பல பேர்களை உதாரணமாகச் சொல்லலாம். வ.க.வும் இப்பாதிப்பிலிருந்து தப்பவில்லை. நாவலில் பல இடங்கள் அதற்கு ஆதாரமாய் இருக்கின்றன. இவ்விரு நாவல்களில் தென்படக்கூடிய இச்சிறு குறைபாட்டினை மேவியும் இவை நல்ல நாவல்களாகக் கருதத்தக்கன. வட்டார வழக்கின் உன்னத பாவனையாலும், யதார்த்த வகை இலக்கியத்தை மேலெடுக்க உதவிய மீறல்களாலும் இவற்றுக்கு தமிழ் நாவலிலக்கிய வரலாற்றில் முக்கியமான இடமுண்டு. எமக்கு எப்போதும் ஒருவகைத் தாமதமான புரிதல்கள்தான் சித்தித்திருக்கின்றன. அதை இந்த விஷயத்திலும்தான் உறுதிசெய்யப் போகிறோம். ஆம், இந்நாவல்கள் வெளிவந்து இரண்டு தசாப்த காலங்கள் ஆகிவிட்டனவென்பது அதைத்தான் தெரிவிக்கின்றது.

(வ.க. பவளவிழாக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட உரை. 2000ஆம் ஆண்டில் அது நடந்திருக்கலாம். விழா மலர் வெளியிடப்பட்டது 23.01.2001இல்.)

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...