Monday, July 13, 2015

கலாயோகி

கலாயோகி ஆனந்த குமாரசுவாமி
-தேவகாந்தன்

‘தொடர்ச்சியான பல அவதாரங்(யுஎயவயசள)களைக் கொண்டிருக்கிறது டாக்டர் குமாரசுவாமியின் வாழ்க்கை’ என்று கூறினார் ‘இந்தியாவின் கலை கட்டடங்கள்’ என்ற நூலின் ஆசிரியர் பெஞ்சமின் ரோலன்ட். அதுபோல் விஞ்ஞானியாய், சமூகவாதியாய், தத்துவஞானியாய், விமர்சகராய், சிறந்த கலை ஆராய்ச்சியாளராய் தனியான முத்திரை பதித்துப் பிரகாசித்தவர் ஆனந்த கென்ரின் குமாரசுவாமி.

1877 ஆகஸ்டு 22ம் தேதி சர் முத்துக்குமாரசுவாமி என்ற இலங்கையருக்கும், எலிஸபெத்  கிளேபீபி என்ற ஆங்கில மாதுக்கும் மகனாகப் பிறந்த ஆனந்த கே.குமாரசுவாமியின் வாழ்க்கை, ஒருவகையில் பூரணமாக அறியப்படாதது என்றே கருதக்கிடக்கின்றது. ‘எனது வாழ்க்கை வரலாறு சம்பந்தமான வி~யங்களில் எனக்கு ஈடுபாடு இல்லை’ என்றும், ‘சுயசரித்திரம் எழுதுவதுபற்றி நான் சிந்திக்கக்கூட மாட்டேன். எமக்கு முன்னாலுள்ள கடமை தனித்துவத்தை இழந்து, ஒரு பொதுமையுள் கலப்பதேயாகும்’ என்றும் கூறிய  ஆனந்த குமாரசுவாமியின் வாழ்க்கை வரலாறுபற்றி முற்று முழுதாய்த் தெரியப்பட முடியாதுபோவது அப்படியொன்றும் அதிசயமானதல்ல. மேலும் ஒருவரது வாழ்க்கையின் தொடர் சம்பவங்களைவிட நாம் முதன்மையாய்த் தெரிந்துகொள்ள வேண்டியது அவரது வரலாற்றுப் பங்களிப்பையேயாகும். இத் தரவுகளை இவரது எழுத்துக்கள் நமக்குப் பூரணமாகத் தருகின்றன.
1962ல் துரைராஜசிங்கம் என்ற மலேயா நாட்டினர் எழுதிய ‘குமாரசுவாமி அஞ்சலி’ என்ற நூலே இவரது வாழ்க்கைபற்றிய முன்னோடி நூலாக இருக்கிறது. இதிலும் போதுமான தகவல்கள் தரப்படவில்லை என்றே சொல்லலாம்.

ஆனந்த குமாரசுவாமி சிறுபிராயத்திலேயே தமது தந்தையை இழந்துவிட்டார். தாயின் ஆதரவில் விக்கிளிக் கல்லூரியில் இவரது ஆரம்பக் கல்வி தொடங்கியது. உயர்கல்வி லண்டன் பல்கலைக்கழகத்தில் நிறைவெய்தியது. 1900ம் ஆண்டில் பி.எஸ்ஸி பரீட்சையில் இவர் முதல் வகுப்பில் தேறினார்.
எதெல் என்னும் ஆங்கிலேயப் பெண்ணை மணமுடித்துக்கொண்டு 1903ல் இலங்கை திரும்பிய ஆனந்த குமாரசுவாமி, 1906வரை இலங்கை தாதுப்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத் தலைவராகப் பதவி வகித்தார். இக்காலப் பகுதியில்தான் தோரியநைற் என்னும் புதிய மூலகம் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் லண்டனில் இருந்தபோது கண்டுபிடித்த இன்னொரு புதிய மூலகம் செரண்டிபைற் என்பதாகும். போலந்தைச் சேர்ந்த மேடம் கியூரி, தான் புதிதாய்க் கண்டுபிடித்த மூலகத்திற்கு போலோனியம் என்று பெயரிட்டதுபோல், தான் முதன்முதலில் கண்டுபிடித்த மூலகத்திற்கு பழைய இலங்கையின் அராபிப் பெயரான செரண்டிப்பென்ற பெயரை அடியொற்றி செரண்டிபைற்  என்று பெயரிட்டார் குமாரசுவாமி. இது 1902ல் நிகழ்ந்தது. இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் காரணமாகவும், தொழில்ரீதியான அறிக்கைகள் காரணமாகவும் லண்டன் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் (D.Sc) பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

1895ல் ‘டேவரோ மலையின் மண்ணியல்’ என்ற கட்டுரையின் மூலம் எழுத்துலகில் புகுந்த இவர், 09 செப்ரெம்பர் 1947ல் அமெரிக்காவில் காலமானபோது 500 வெளிநாடுகளில் ஆசிரியராக இருந்திருந்தார்.
‘குமாரசுவாமி அதிகமாகவே எழுதியிருந்தாலும் எப்போதும் மிக நன்றாகவே எழுதினார். நீதிபோதனைபோன்ற ஒரு கம்பீரமான நடையில் எழுதுவதில் இவர் வல்லவர்’ என்று வளர்ச்சிப் பணிகளின் கல்வி நிறுவனம் 1971ல் வெயிட்ட நூலில் அதன் ஆசிரியர் ஏ.ரங்கநாதன் கூறுகிறார். ‘நீண்ட காலமாக குமாரசுவாமியின் வாசகனாக இருந்தேன்’ என டாக்டர் ராதாகிருஷ்ணனும், ‘நான் எப்போதும் குமாரசுவாமியின் எழுத்துகளது ரசிகன்’ என்று டி.எஸ். எலியட்டும் கூறியவை இவரது எழுத்தாற்றலுக்குச் சான்று பகருகின்றன.

1903-1906 வரை கடமையின் நிமித்தம் காலநடையாகவும், மாட்டுவண்டிமூலமும் இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற ஆனந்த குமாரசுவாமி, அவ்வப் பிரதேசங்களில் சிதிலமடைந்துவரும் கலைக் கருவூலங்களைக் கண்டு நெஞ்சு பொருமினார். பௌத்த சின்னங்களைப் பாதுகாப்பதில் அவரெடுத்த முயற்சியும், சிற்பங்கள் சித்திரங்கள் சம்பந்தமாய் அவர் ஆராய்ந்து வெளியிட்ட கருத்துகளும் சிங்களக் கலையைப் புனருத்தாரணம் பண்ணின. ‘எமது புராதனம் மிக்க கலாசாரத்தையும், ஆன்மிகச் சின்னங்களையும் மீட்டெடுப்பதற்கான உணர்ச்சியைத் தந்தவரில் ஆனந்த குமாரசுவாமிக்குப்போல நாம் வேறு யாருக்கும் கடமைப்பட்டிருக்கவில்லை’ என்கிறார் இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க.

இவரின் காலம்வரை யாழ் எனப்படும் இசைக்கருவியானது கோடிய (வளைந்த) உருவத்தை உடையதென்றும், மகர யாழ், செங்கோட்டி யாழ் எனப் பலவகைப்பட்டது என்பது மட்டுமே தெரியப்பட்டிருந்தது. அதன் இன்று தெரியப்பட்டுள்ள வடிவம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அமராவதியில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களை ஆராய்ந்து, யாழின் உண்மையான உருவத்தை வடித்துத்  தந்தவர் ஆனந்த குமாரசுவாமியே ஆவார்.

இவரின் இந்திய சிற்ப சித்திர ஆராய்ச்சி முடிவுகள் அதுவரை நிலவிய முடிவுகளில் மிகப் பெரிய விளைவுகளை எற்படுத்தின. உதாரணமாக காந்தார சிற்பங்களைப்பற்றிய இவரது ஆராய்ச்சி, காந்தார சிற்பங்கள் பண்டைக் கிரேக்க சிற்பக் கலையைப் பின்பற்றியவை என்ற பழைய கருத்தை மாற்றியமைத்தது. அதுபோல் ராஜபுத்திர ஓவியம்பற்றிய ஆராய்ச்சியானது இந்தியாவின் ஓவியக் கலையை உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கியது.

கவிஞர் தாகூர் தம் பிற்காலத்தில் ஓவியராகவும் திழ்ந்தவர். இவரது ஓவியக் கண்காட்சியொன்று நடைபெற்றபோது, அதில் சுமார் 1500 ஓவியங்கள் இடம்பெற்றன. இவ் ஓவியங்கள்பற்றி ஆனந்த குமாரசுவாமி எழுதிய விமர்சனமானது இன்றும் மிகச் சிறந்த ஓவிய விமர்சனங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவர் எழுதினார்: ‘ரவீந்திரரின் ஓவியங்கள் சிறுபிள்ளையினுடையது போன்றிருக்கின்றன. ஆனால் அவை சிறுபிள்ளைத்தனமானவையல்ல (child-like but not childish).’ இவ்வாறு ரவீர்ந்திரரின் ஓவியங்கள்பற்றி விமர்சித்த ஆனந்த குமாரசுவாமிக்கு ஓவியர் ரவிவர்மாவின் சித்திரங்கள் அவ்வளவாகப் பிடித்திருக்கவில்லை. அவற்றில் இந்தியத் தன்மை குறைவு என மதிப்பீடு செய்தார் இவர்.
இந்தியாவில் சுற்றுப் பயணம்செய்த காலத்தில் தான் முயன்று சேர்த்த அருங்கலைப் பொருள்களைக்கொண்டு, இங்கு கலாபவனம் ஒன்றை அமைக்க எடுத்த இவரது முயற்சிக்குப் போதுமான ஆதரவு கிடைக்காததால், ஆனந்த குமாரசுவாமி ஒருவகை மனமுறிவைக்கூட அடைந்தார். இதுவே 1919ல் இவரை அமெரிக்காவுக்குப் பயணமாக வைத்தது. அங்கு பாஸ்டன் நகர் அருங்காட்சியகத்தில் முப்பது வரு~ங்களாகக் கடமையாற்றினார். இந்திய தத்துவ ஞானத்தின் போக்கும், கலைச் சிறப்பும், பௌத்தத்தினதும் இந்து மதத்தினதும் மேன்மைகளும் தெரிந்திருந்த இவர், கிழக்குக்கும் மேற்குக்குமான ஒரு கலாசாரப் பாலமாகவே விளங்கினார்.

‘தாகூரைப்போல இருவேறு வகைப்படட்ட ஐரோப்பிய, ஆசிய கலாசாரங்களினதும் சங்கமம் ஆனந்த குமாரசுவாமி. இவர் இவ்விரு நாகரிகங்கள்பற்றியும் மிகப் பெருமைகொண்டிருந்தவர்’ எனக் கூறுகிறார் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை பிரெஞ்சு மொழியில் எழுதியவரான ரொமெய்ன் ரோலண்ட். ‘அகன்ற கல்வி ஞானமும், தீட்சண்யமான உள்ளுணர்வுகளும்கொண்ட அசாதாரணத் திறமைகளே, கிழக்குக்கும் மேற்குக்குக்குமிடையில் கலாசாரத் தூதுவராவதற்கான தனிச் சிறப்புகளை குமாரசுவாமிக்கு அளித்தன’ என்கிறார் அல்டஸ் ஹக்ஸ்லி. இவை இருவேறு திசைகளதும் கலாசாரப் பாலமாக ஆனந்த குமாரசுவாமி விளங்கிய தன்மையை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

இவ்வாறு கலாசாரப் பாலம் அமைத்தவர்,  மேற்கின் அரசியல்  ஆதிக்கத்தையும், அதன் கலாசாரப் பாதிப்புகளையும் பொறுத்தார் அல்லர். 1908ல் மகாத்மா காந்தி கைதானபோது அதை எதிர்த்துக் குரல் கொடுத்த மு;கியஸ்தர்களில் ஆனந்த குமாரசுவாமியும் ஒருவர். இதை மேற்கின் அரசியலாதிக்கத்துக்கு எதிரான போக்கினது வெளிப்பாடு எனக் கருதலாம். 1905ல் இலங்கை சமூக சீர்திருத்தக் கழகத்தின் தாபிதம்  அதன் கலாசாரக் கலப்பை எதிர்க்கும் போக்காகத் துணியலாம்.

பௌத்தமும் இந்து மதமும், இலங்கையின் வெண்கல உருவங்கள், சிவநடனம், யக்சர்கள், ராஜபுத்திர ஓவியங்கள், இந்திய-இந்தோனி~pய கலை வரலாறு, வேதங்களை நோக்கிய புதிய அணுகுமுறை, அபிநயக் கண்ணாடி போன்ற பல அரிய படைப்புகளைத் தந்திருந்தாலும், சிவநடனம், வேதங்களை நோக்கிய புதிய அணுகுமுறை ஆகிய இரண்டு நூல்களுமே மிகச் சிறந்தன என்பது நூல்வல்லோர் கருத்து. குமாரசுவாமி வேறு எதனை எழுதியிருக்காவிட்டாலும் வேதங்களைநோக்கிய புதிய அணுகுமுறை ஒன்றே அவரது எழுத்தாற்றலுக்குச் சான்று பகரும் என்பார் ஏ.ரங்கநாதன்.
இந்தியக் கலைகளின் உயிர்நாடியாக இவர் கருதுவது நடராஜ வடிவத்தைத்தான். நடராஜ வடிவம்பற்றியும், அதன் பல்வேறு ஸ்திதிகள்பற்றியும் தத்துவார்த்தமான விளக்கம் அளித்தார் இவர்.

சிவநடனம்பற்றிய இவரின் கருத்துகள் இந்துமதத்தை உலக அரங்கப்படுத்தின.
சிவநடனமானது படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிகளினதும் ஸ்தூல வடிவமென்கிறார் இவர். ‘ஊழி நெருங்குகையில் தீயின் உருவில் நடனமாடியபடியே பிரபஞ்சத்தை சங்காரம் செய்கிறார் சிவன். அதன்மூலம் சர்வ லோகங்களுக்கும் புதிய அமைதியைக் கொடுக்கிறார்.’ இவ்வாறு சிவனின் ஊர்த்துவ நடனத்துக்கு விளக்கமளித்தார் ஆனந்த குமாரசுவாமி.
சிவநடனம் இந்திய அழகியலின் அடிப்படையாயும், வாழ்க்கைபற்றிய இந்திய தரிசனமாயும் ஆகிறது இவருக்கு. இது விஞ்ஞானம், கலை, மதம் ஆகிய மூன்று துறைகளின் சேர்மதியென்று சிவநடனம் (Dance of Shiva) என்ற நூலில் கூறுகிறார்.

உலக மக்கள் நலனுக்கான இந்தியாவின் பங்கு என்ன?

இந்தக் கேள்வியைக் கேட்டு குமாரசுவாமியே பதிலளிக்கிறார்:  ‘இந்தியமே இந்தியாவின் பங்களிப்பாகும் (The essential contribution of india then is simply her indinness)’. அவ்வாறாயின் இந்தியமென்றால் என்ன என்ற கேள்வி அடுத்துப் பிறக்கிறது. அதற்கும் அவரே பதில் சொல்கிறார்: ‘இந்தியா உலகுக்குக் கொடுப்பதற்கான அனைத்தும் அதன் தத்துவங்களிலிருந்தே பிறக்கின்றன. அவையே அதன் மிக்க பெறுமதி வாய்ந்த சொத்துமாகும். மேலும், சமூகப் பிரச்னைகளுக்கு இத்தத்துவங்களைப் பிரயோகித்து தீர்வுகாண்பதிலுள்ள நம்பிக்கையையும் அது அளிக்கிறது.’

இந்தியத் தத்துவங்களும், அவற்றினைச் சமூகப் பிரச்னைகளுக்குப் பிரயோகித்து தீர்வு காண்பதிலுள்ள நம்பிக்கையுமே இந்தியமெனில், இதை எவரையும்விட உலகுக்குச் சிறப்பாக உணர்த்தியவர் வித்யாவிநோதனென்றும், கலாயோகியென்றும் பல சிறப்புப் பட்டங்களால் அழைக்கப்பட்ட ஆனந்த கே.குமாரசுவாமியே.


(தினமணி சுடர், 30.05.1992)

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...