தமிழ் நாவல் இலக்கியம்
தமிழ் நாவல் இலக்கியம் தமிழ் நாவலிலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலைமை ஆகியனவற்றின் சுமார் நூற்றுமுப்பத்தைந்து ஆண்டுக் கால வரலாற்றின் மிகவிரிந்த பரப்பை, ஒரு உரைக்கட்டில் அமைக்கும் மிகவும் அசாதாரணமான ஒரு முயற்சியை மேற்கொண்டிருப்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். இவ்வுரைக்கட்டைப் பூரணமானதாக்க நான் முயன்றிருக்கிற பொழுதிலேயே, சில அம்சங்களின் விரிவை அல்லது விளக்கத்தை நான் தவிர்த்த செயலும் நடந்திருக்கிறது. தகவல்களையன்றி, போக்குகளுக்கு நான் அழுத்தம் கொடுத்ததின் விளைவு இது. இவ்வுரைக்கட்டு அல்லது உரை உங்கள் மனத்தில் தமிழ் நாவல் குறித்த எதாவது சிந்தனையை அல்லது விவாதத் தளத்துக்கான கேள்விகளை எழுப்புமானால் அதையே இந்த உரைக்கட்டின் வெற்றியாக நான் பாவித்துக்கொள்வேன். அந்த நோக்கத்தோடேயே இதுவும் பின்னப்பட்டிருக்கிறது என்பதையும் நான் சொல்லியாகவேண்டும். அதனால்தான் பல்கலை நிறுவனங்கள் சார்ந்த ஆய்வுமுறைப் போக்கிலன்றி ஒரு தீவிர வாசகனின் பார்வையில் ஆய்வுமுறைகளை மறுத்தும், சில ஆய்வு முடிவுகளை மறுதலித்தும் இவ்வுரைக்கட்டு அமைய நேர்ந்திருக்கிறது. பல்கலைக் கழகங்கள்மீது எனக்குக் கோபமொன்றுமில்லை...