நூல் விமர்சனம் 6 ‘மரகதத் தீவு’


காஞ்சனாதாமோதரனின்

‘மரகதத் தீவு’
தம் வேரடி வரலாறும், வாழ்வியலும் காணமுனையும் புகலிடத்தின் மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த வேறுவேறு கலாச்சார  மனிதர்களின் கதைகள் மூலம்,  புகலிட இலக்கியத்தின் தன்மையை துல்லியப்படுத்தும் தொகுப்பு


காஞ்சனாதாமோதரனின் ‘மரகதத் தீவு’என்ற இத் தொகுப்பு 2009இல் வெளிவந்திருக்கிறது. இத் தொகுப்பிலுள்ள ஐந்து கதைகளில் கடைசியான ‘மரகதத் தீவு’ என்ற கதையின் தலைப்பே மொத்தத் தொகுப்பினதும் தலைப்பாக இடப்பட்டிருக்கிறது. அதனால் இந்தக் கதையிலிருந்தே கவனம் குவிக்க எண்ணம்.

அயர்லாந்து தேசமே மரகதத் தீவு எனக் குறிப்பிடப்படுகிறது. புனைவும், வரலாறுமாகத்  தொடரும் இந்தக் கதை, பதினெட்டு வயதே நிரம்பிய கெல்லி என்கிற மூன்றாம் தலைமுறை சார்ந்த பெண்ணை மய்யப்படுத்தி நிற்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தில் ஏற்பட்ட உருளைக் கிழங்குப் பஞ்சத்துடன் நிகழ்கிறது, பன்னூற்றுக் கணக்கான ஐரிஸ் மக்களின் அமெரிக்காவுக்கான புலப்பெயர்வு. அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் அதிகமாகவும் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களாகவே வாழ்ந்து மறைகிறார்கள். அவ்வாறான குடும்பமொன்றிலிருந்து படித்து பல்கலைக் கழகத்துக்கு தேர்வாகும் கெல்லிக்கு, அவளது தந்தையினால் அளிக்கப்படும் பரிசாக  இருக்கிறது அவள் அயர்லாந்து சென்று வருவதற்கான விமானப் பயணச் சீட்டு.

கெல்லி அயர்லாந்து செல்வதும், அயர்லாந்தின் இயற்கை, பொருளாதார, கலாச்சார அழகுகளும் மிகுந்த கவனத்துடன் விபரிக்கப்படுகின்றன. அப்பாவின் கனவை கெல்லி அறிந்தே இருக்கிறாள். ஒருஅயர்லாந்து வந்தேறிக் குடும்பமான கென்னடி குடும்பம் தேச வரலாறு படைக்கையில், இன்னொரு வந்தேறிக் குடும்பமான கெல்லியின் அப்பா குடும்பம், சுரங்கக் கரியழுக்குள்ள தோலும், நகக் கண்களும், நுரையீரலுமாக வாழ்வதற்கான காரணம் கென்னடி குடும்பத்திலிருந்த கல்வியென்ற சாதனமேயென, குறிப்பாக ஹார்வர்ட் பல்கலையின் பட்டமேயென, சரியாகவே அவர் புரிந்துகொண்டிருக்கிறார். கெல்லியினதும் இந்தப் புரிதல்தான் அவளை, ஸ்கஹீனின் காதலிலிருந்தும் தள்ளிவைக்கிறது.

அதை படைப்பாளி சொல்லுமிடம் மிக அருமையாக இருக்கும்: ‘அவன் நிகழும் முன்னாலேயே அவளுக்கென்று ஒரு வாழ்வு இருக்கிறது. இப்போது சற்று வெறுமையாய்த் தெரிந்தாலும் அது அர்த்தமற்ற வாழ்வு அல்ல’.

இதுதான் கதையின் ஆத்மா. கல்வியின் மூலம் காலகாலமாக இருந்துவரும் சமூக அந்தஸ்தின்மையை அழித்துவிடுகிறதாய் கதை முழுக்க ஓடும் மூர்க்கம்.

கெல்லி படித்து பட்டதாரி ஆகிறாள். அடுத்து சட்டப்  படிப்புக்காக அவள் ஹார்வர்ட் பல்கலை செல்கிற  இடத்தில், மறுபடி ஸ்கஹீனைச் சந்திக்கிறதாய் தென்னிந்திய திரைப்படப் பாணியில் கதையை படைப்பாளி முடிக்கையில் அந்த ஆத்மா செத்தேபோகிறது. ‘தெய்வங்கள் பூமிக்கு வராத இந்நாளிலும்கூட,  இதிகாசங்கள் தம்மைத் தாமாகவே எழுதிக்கொண்டுதான் இருக்கின்றன’என, அயர்லாந்துக்கு ஒரு திருமணத்துக்காகச் செல்லும் கெல்லியும் அப்பாவும் மூதாதையர் கதைகளைச் சேகரமாக்கும் செயலினை கடைசிப் பக்கத்தில் விவரிக்கும் சொல்லாளுமையின் உச்சம் சப்பென்று கெல்லியினதும், ஸ்கஹீனதும் சந்திப்பில் ஆகிவிடுகிறது.

இதற்கு முந்திய கதை ‘கூபாவுக்குப் போன க்யுப அமெரிக்கர்கள்’. 1960 இல் கியூபாவில்  நடக்கும் புரட்சிக் காலகட்டத்துடன் அமெரிக்கா வரும் கியூப மக்களின் இக் கதையிலும் மூன்றாம் தலைமுறையினரே மய்யப்படுத்தப் படுகிறார்கள்.

‘ஒன்றை மறுதலிப்பதற்காய் இங்கே வந்து, இறுதியில் எல்லாவற்றையுமே இழந்துவிட்டோமோ, கடவுளே!’என்று மனம் மறுகுவோராய் முதலாம் தலைமுறையினரை விவரிக்கும் கதை, ‘தாத்தாவும் பெரியதாத்தாவும் சொன்னாங்களே- செம்மண்ணும் கடலும் புகையிலைத் தோட்டமும் கருப்புத் தோட்டமும் இசையும் நடனமும் உறவுகளும்னு…அதெல்லாம் பார்க்கணும்’ என்று கியூபா சென்ற குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ரமோன் சொல்வதாக உணர்வுபூர்வமாக அது விரிந்து சென்றிருக்கும். மொத்தத்தில் வேரடி மண்பற்றிய உணர்வுகளே வரலாற்றின் பின்னணியில் புனைவின் துணையுடன் இக் கதையில் விரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லலாம்.

 இவ்வளவு வரலாற்றுத் தகவல்கள் நிறைந்திருப்பினும், தாம் ஒரு கதையையே நடத்திச் செல்கிறோம் என்ற பிரக்ஞையை பாத்திரங்கள் மறந்துவிடாதிருக்க வைத்து அலுப்பாக இருந்திருக்கவேண்டிய வாசிப்பை சுவாரஸ்யமாக முடியவைத்திருக்கும் படைப்பாளியைப்  பாராட்ட வேண்டும்.

ஓர் அமெரிக்க நெடுஞ்சாலைப் பயணம்’, ‘உறவுச் சங்கிலிகள்’, ‘ஸியர்ரா நெவாடா’ ஆகிய கதைகள் இதற்கு மேலே வருவன. ‘உறவுச் சங்கிலிகள்’ கதை பூர்வீகங்களின் கதையை பாட்டி மூலம் பேரர்கள் அறியும் பாணியில் வெறும் உரையாடலாய் விரிவது. இதையும் புகலிடத்திலிருந்து தாய்மண்ணில் கொள்ளும் ஈர்ப்பின் வலியைச் சொல்வதாய்க் கொள்ளமுடியும். ‘ஓர் அமெரிக்க நெடுஞ்சாலைப் பயண’மும், ‘ஸியர்ராநெவாடா’வும் இத் தொகுப்பிலுள்ள முக்கியமான கதைகள்.
‘ஓர் அமெரிக்கநெடுஞ்சாலைப் பயணம்’ஒரு நெடுங்கதை. அது குறுநாவலளவு விரிவும் கொண்டிருக்கும். வேரடி மண்ணின் ஈர்ப்பும் காலகாலத்துக்கும் தொடர்ந்திருந்துவிடும் என்பதற்கும் உத்தரவாதமில்லை. புதிய தாய்நாடே ஒரு சமயத்தில் எல்லாமுமாக மாறிவிடப் பெருவாய்ப்பிருக்கிறது. அது இயல்பானதுமாகும். அந்த புதிய தாய்நாட்டின் இயற்கை வளங்களை கண்டு சுகிக்கும் விழைவு என்பது எல்லாரிடத்திலும் ஏற்பட்டுவிடுவதில்லை. அது முக்கியமானது. தன் பழைய மண்ணோ, புதிய மண்ணோ தாங்கிய மற்றும் தாங்கும் நிலங்கள் என்ற வகையில் ஈர்ப்புக்குரியன. அதை தன் மானசீகத்தில் இயற்கை வளங்களே பதிந்து வைக்கின்றன. ‘ஓர் அமெரிக்க நெடுஞ்சாலைப் பயணம்’ செய்வது இதைத்தான்.

இக் குறுநாவல், ஏறக்குறைய இரண்டு பகுதிகள்போலத் தோற்றம் தருவது. ‘அவன் கடைசி வார்த்தைகளை நான் கேட்டபோது அவன் ஏற்கெனவே இறந்திருந்தான்’ என்று 9...11 பாதிப்பின் நினைவுடன் தொடங்கி, மொஹாவி பாலைநிலத்தில் ஜாவா பாலைவன மரங்கள் நிறைந்த மெக்ஸிக்கோ எல்லையின் மணல் வெளிவரை ஓராண்டாய்த் தொடரும் சாந்தி என்கிற ஓவியக்காரப் பெண்ணின் பயணம் ஒருபகுதியாகவும், அதற்கப்பால் வேர்ஜீனியா மாநிலத்தில் வால்டர் என்கிற ஒரு பண்ணைவீட்டுக்காரரைச் சந்தித்து அவள் மறுபடி நியூயார்க் திரும்பும்வரையானது ஒரு பகுதியாகவும் தோற்றம் தருகிறது.

அது அவளது பயணத்தின் இறுதிக் கட்டம். அங்கேதான் அமெரிக்க ஆபிரிக்கர்களின் கதை விசாரணையாகிறது. அடிமைமுறைக் காலத்திலிருந்து பல நினைவு மீட்புகள் வால்டர்  குடும்பத்தினருக்கு. அனைத்தையும்  சாந்தி விசாரித்து அறிகிறாள். வரலாற்றெழுத்தியலின் தன்மை அதிகமாகவும், புனைவின் தன்மை குறைவாகவும் உள்ள பகுதியும் இதுதான்.

முதல் பகுதியாகத் தோற்றம் தருவது அத்தனை புனைவின் வீரியத்தையும் கொண்டிருக்கையில்,தோற்றத்தில் இரண்டாம் பகுதியான இது புனைவுத் தன்மை குறைவாகத் தென்படுவதை யோசிக்கவேண்டும். இதன் எழுதப்பட்ட காலமாய் கதையின் இறுதியில் 2004-2007 என இருப்பதிலிருந்து  இது  இரண்டு இடைவிட்ட காலப் பகுதிகளில் எழுதப்பட்டதெனக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. அப்படியாயின் அந்த இடையிடும் காலமே இதன் தன்மை மாற்றத்துக்கான காரணமாய்க் கொள்ளமுடியும்.

முதல் பகுதியானது புனைவின் வீறுகொண்டது. அதிலும் நாவஹோ இனக்குழு வாழும் மிஸிஸிப்பி மாநிலத்திலுள்ள ஒரு இருண்ட மூலையின் குக்கிராமத்தை சாந்தி அடைவதும், அவர்களின் உபசாரமும், அங்கு நிகழும் மாந்திரீக விடயங்களும் அற்புதமான மொழியில் விபரணை ஆகியிருக்கும்.

முதலிலுள்ள ‘ஸியர்ரா நெவாடா’ மிகச் சிறந்த கதை.
இதன் மாந்திரீகத் தன்மையைச் சுட்டும்விதமாக ‘மிகமிகப் பழைய காலத்தில் பூமியில் ஒரு பெருவெள்ளம் ஏற்பட்டு நிலம் முழுதும் நீரில் முங்கிக் கிடந்தது’ என்று பூமி தோன்றிய ஒரு அமெரிக்க பூர்வகுடியின் கதையுடன் தொடங்குகிறது கதை. சித்ரா என்கிற மலையேறும் பெண்ணின் பார்வையில் விவரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இயற்கையை வர்ணித்துவிடுகிற சுலபம், ஒருமலையேறும் செயலை விபரிப்பதில் இருந்துவிடாது. அதற்கு மிகக் குறைந்தபட்ச மலையேறும் அனுபவமே தேவையாயிருக்கும். அவ்வனுபவ அறிவுக் குறைவு தெரியவேயில்லை, லாரி என்ற நண்பனுடன் சித்ரா தொடங்கும் ஸியர்ரா நெவாடாவிலுள்ள ஒரு செங்குத்து மலையின் ஏற்றம்.

அங்கே திடீரென பனிப் பாறைகள் உடைந்து கவிழ்ந்து, லாரி அவற்றோடு சேர்ந்து அடித்துச் செல்லப்பட்டுவிடுகிறான். பின்னர் சித்ராவே பனிப் பாளங்களால் ஒரு குகைக்குள் அடைபட்டு மரணிக்கிறாள். அந்த இடம் சித்ராவின் வார்த்தைகளில் சொல்லப்படும் விதம் அற்புதமானது: ‘குகையின் அமைதியினூடே  இருதயத் துடிப்புடன் சேர்ந்து உடலின் ரத்தநாளங்கள் அனைத்தும் சீராய்த் துடிப்பது தாலாட்டுப்போல் கேட்டது. இறுதியில் ஒன்றுமே கேட்கவில்லை.’

சித்ராவின் மரணத்தின் பின் நூற்றாண்டுகள் கடக்கின்றன. ஆய்வாளர்கள் வருகிறார்கள். அவர்கள்தான் சித்ராவின் விறைத்துக் கிடந்த உடலைக் கண்டெடுக்கிறார்கள். தலைமை ஆய்வாளன்  பின்வருமாறு தன் குறிப்பேட்டில் எழுதுகிறான்: ‘பனிக் கட்டி யுகத்துக்கு முற்பட்ட பெண். இந்தக் குறிப்பிட்ட மலையில் நீர்வீழ்ச்சி இருந்திராத காலத்தைச் சேர்ந்த பெண்.  நிலங் கண்டங்களாய்ப் பிரிந்துகிடந்த காலத்தைச் சேர்ந்த பெண்’.

கதை துவங்குகையில் தெரியும் அமெரிக்க பூர்வகுடியின் கதையில் தென்படும் மாயத்தன்மையின் தொடர்ச்சி கடைசிவரை விரிந்து கதை முடிவது புனைவின் அற்புதம்.

யதார்த்தவாத மாந்திரீகக் கதைகளுக்காய் இது பேசப்பட்டிருக்கவேண்டும் தமிழிலக்கிய உலகில்.  ‘கண்ணில் தெரியுது வானம்’ (20020) என்ற சர்வதேச தமிழிலக்கியத் தொகுப்பில் இது  வெளிவந்திருந்தும் மவுனத்துள் அடைக்கப்பட்டு இருந்திருக்கிறது. மேலும், புகலிட எழுத்து என வருகையில் அதன் திசையை துல்லியப்படுத்தும் விதமாகவே இத் தொகுப்பிலுள்ள ஐந்து கதைகளும் தென்படுகின்றன.  இந்தவகையில் இது புகலிட இலக்கியத்திலும் முக்கியத்துவம் பெறவேண்டிய தொகுப்பாகிறது. மேலும் காஞ்சனா தாமோதரனின் நவீன தமிழின் ஆற்றல் வாய்ந்த மொழிப் பிரயோகம் இத் தொகுப்பின் இன்னொரு சிறப்பு.  இத்தனை காரணங்களுக்காகவும் தமிழிலக்கிய உலகின் பிரக்ஞையைத் தட்டுவதே இத் திறனாய்வின் நோக்கம்.

0

நூல்: மரகதத் தீவு
படைப்பாளி: காஞ்சனா தாமோதரன்


000  




Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்