Thursday, August 21, 2014

சிறுகதை: மின்னல் குறித்தஆவேசங்கள்


மின்னல் குறித்தஆவேசங்கள்


திடீரென வானம் கறுத்தது. இடியும் மின்னலுமாய் பிரளய அறிகுறிகள். சிறிதுநேரத்தில் மேகங்கள் திரண்டுருண்டு வந்து மழையாய்க் கொட்டின. மேகங்கள் கரைந்தொழுகி முடியமுடிய, புதிய புதிய மேகங்கள் மத்தகங்கள்போல் திசை கிழித்து வந்தன. மாறுதிசையில் வந்தவை மோதுண்டன. கிளர்ந்த சத்தங்கள் பூமியை அதிர்த்தின. வானின் கீழ் மூலையிலிருந்து மேல் மூலைவரை வானைப் பிளந்தாற்போல நெளிகோடுகள். தொடர் தொடராய் அவை வெட்டி அடித்தன.

முழக்கம்,வெறியின் ஒலிவடிவமாயிருந்தது. மின்னல், அழிவின் ஒளி வடிவமாயிருந்தது.

ஒருநாள் கழிந்தது. இரண்டாம், மூன்றாம் நாட்களுமாயின.

எங்கும் இடி…மின்னல்…மழை.

பூமியில் அச்சம் கவிந்தது.

000

செய்தி-1

லட்சக்கணக்கான
மக்கள் வீடுகளை இழந்திருக்கிறார்கள். பலகோடி ரூபா
மதிப்புள்ள சொத்துக்களுக்கு சேதம் நேர்ந்திருக்கிறது.
வெள்ள அபாயத்துக்குத் தப்பி மேட்டு நிலங்களைத் தஞ்சமடைந்துவிட்டாலும், பசிபட்டினியால் மக்களின்  தவிப்பு தொடர்கிறது.

இரு குழந்தைகளின் திடீர் மரணம் தொற்றுநோய்களின் அபாயத்தைச் சுட்டியிருப்பதாக அஞ்சப்படுகிறது.


செய்தி-2

தேசமளாவி இடிமின்னலுடன் கூடிய பயங்கரமான மழை பெய்தது. சாலைகளை மேவி வெள்ளம் பாய்கிறது. நெடுஞ்சாலைப் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் வெள்ளப் பெருக்குக் காரணமாய் பாதைகள் அடித்துச் செல்லப்பட்டும், பெருமரங்கள் பாறிவிழுந்தும் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது. தொலைபேசித் தொடர்புகள் பல இடங்களில் சேதம்.


செய்தி-3

மீன் பிடிக்கச் சென்றிருந்த ஆறு மீனவர்களை மின்னல் தாக்கியதில் நடுக்கடலில் அவர்கள் படகிலேயே கருகிச் செத்திருக்கிறார்கள். இத் துயரசம்பவம் கீழ்த் திசைக் கடலோரக் கிராமமான கரவையில் நடந்துள்ளது.
வானிலைமுன்னறிவிப்பின் முன்னர் மீன் பிடிக்கச் சென்றிருந்தவர்களே இவ்வாறான இயற்கைச் சீற்றத்துக்குப் பலியானார்களென்று மிக்கசோகத்தோடு அக் கிராமம் இந் நிகழ்வை ஞாபகம் கொண்டது.


செய்தி-4

மொட்டை மாடியில் வேலை செய்துகொண்டிருந்த இரண்டு கட்டிடத் தொழிலாளர் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மரணமானார்கள்.
இதுபற்றிக் கூறப்படுவதாவது: மழை இரைத்துவரக் கேட்ட அத் தொழிலாளர் இருவரும் அருகேயிருந்த தண்ணீர்த் தொட்டியின் கீழ் ஓடிப்போய் ஒதுங்கியிருக்கிறார்கள். சிறிதுநேரத்தில் இடியும் மின்னலுமாய் வானத்தில் ஒரே குமுறல். திடீரென்று கீழ்வானிலிருந்து வெட்டி எழும்பிய மின்னல் வானின் குறுக்கே ஓடி,தண்ணீர்த் தொட்டியின் அடியில் தஞ்சமடைந்திருந்தவர்களைக் குறிப்பாகத் தாக்கியிருக்கிறது. உடல்கள், கருகி அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து போயிருக்கின்றன. இரண்டுஉடல்களையும் கைப்பற்றிய பொலிஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

000

மின்னலானது கண்ணைப் பறிக்குமென்றுதான் இதுவரை கேள்வியாகியிருந்தது. அது அதிகஅளவில் உயிர்களையும் பலியெடுக்குமென்று இப்போது தெரியவந்ததிலிருந்து, பொதுமக்களை ஒருவகையான பீதி பிடிக்கத் தொடங்கியுள்ளது.
மேகம் திரள்வதும், வானம் இருள்வதும் பொதுமக்களையும் விவசாயிகளையும் ஆனந்தப்படுத்திவந்த நிலை முற்றாக மாறிவிட்டிருக்கிறது. மேக மூட்டம் கண்டதும் வீதிகள் வெறிச்சோடிவிடுகின்றன. நகரம் கிராமமென்ற பேதமின்றி மக்களின் இயல்பு வாழ்க்கையை மின்னல்மீதான அச்சம் முழு அளவில் பாதித்திருக்கிறதென பத்திரிகைகள் பக்கம் பக்கமாய் எழுதித் தீர்த்தன.

மின்னல் குறித்தானஅச்சங்கள் அதன்மீதானமுணுமுணுப்புக்களாய், பின் கோபங்களும் வெறுப்புகளுமாய் எங்கும் எங்கும் உணர்வுச் சீற்றங்கள்.
அதுகாரணமான நடவடிக்கைகள் எடுக்க அன்று நாடாளுமன்றம் அவசரமாகக் கூடியிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்  உற்சாகமற்ற மனநிலையில். பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்க-எதிர்கட்சிகளின் கூட்டணித் தலைவர்கள் யாவரும் ஒரு தீவிர சிந்தை குவிப்பில்.

நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. பிரதமர் எழுந்து நாட்டின் கொந்தளிப்புப் பிரச்னையான மின்னலின் அட்டூழியங்கள்பற்றி வீரவசனங்களில் எழுச்சிபொங்கப் பேசினார்.

ஆளுங்கட்சினர் கரவொலிஎழுப்பியும்,மேசைகளில் தட்டியும், கூச்சலிட்டும் பிரதமரின் பேச்சைஆமோதித்து மேலும் மேலும் அவரை ஆவேசம்பெறச் செய்துகொண்டிருந்தனர்.

அந்தப் பிரச்னையில் எதிர்க் கட்சியினருக்கு அபிப்பிராயம் இருந்தது. நிலைப்பாடுதான் இருக்கவில்லை. இருமுனை ஊசலாட்டம் நடத்திக்கொண்டிருந்தனர்.

பின்,மின்னலைக் கைதுசெய்து கொண்டுவந்து நீதிவிசாரணைக்கு உட்படுத்துவதென்ற மசோதா சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் மீதான விவாதம் அனல் கக்கநடந்தது.

‘மின்னல் இயற்கையின் சீற்றம். எனினும் அதுவே ஒரு தனிஅம்சமில்லை. மேகத்தில் திரளும் எதிரெதிர் மின்வலுக்களின் மகா ஈர்ப்பு விசையால் சம்பவிக்கும் மேகங்களின் மோதுகையிலேயே மின்னல் எழுகிறது. மின்னல் ஒருவடிகால் மட்டுமே. அதைத் தடைசெய்ய முடியாததைப் போலவே கைதுசெய்தலும் முடியாததாகும். மீறியெழும் கைது முயற்சியெதுவும் தற்கொலைக்கொப்பானது’ என்று சில எதிரணிக் கட்சிகள் துணிந்து வெளிநடப்புச் செய்தன. பிரதம எதிர்க்கட்சியோ மௌனம் காத்து அரசியல் செய்தது.

வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறியது.

000

பூமியின் ஒருபுள்ளியில் நடந்துகொண்டிருந்த இக் களேபரங்களில் கவனம் திரும்பினான் இந்திரன். ஜெய கோசத்தின் காரணம் புரிய, இடி இடியெனச் சிரித்தான் வயிறு குலுங்க.

கூட வஜ்ராயுதமும் சிரித்தது.

00000
(கல்வெட்டுப் பேசுகிறது, ஜனவரி 2003)

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...