நூல் விமர்சனம்: 1




‘தாழப் பறக்காதபரத்தையர் கொடி’


காலமும்,கருத்தும்,அதனுள் செறிந்தகலகக் குரலுமாய் படைப்பாளியின் மனோநிலை,மற்றும் உரைவீச்சினைக்காட்டும் உன்னதமானபடைப்பு


சென்னையில் 37வது புத்தகக் கண்காட்சி
தை 10-22,  2014 வரை நடந்து முடிவடைந்திருக்கிறது. தமிழகத்தில் நான் தங்கியிருந்த நீண்டகாலத்தில் ஓராண்டேனும் அதைத் தவறவிட்டதில்லை. 

கடந்தப த்தாண்டுகளாக அது
தவறிப்போயிருக்கிறது என்ற துக்கத்தோடேயே தை மாத‘ காலச் சுவடு’ இதழில் வெளிவந்திருந்த விளம்பரத்தைப் பார்வையிட்டபோதுதான் தமிழக எழுத்தாளர் பிரபஞ்சனது ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ ஆகிய நாவல்கள் இரண்டும் நற்றிணை பதிப்பக வெளியீடாக மறுபதிப்புப் பெற்றிருப்பதாக அறியநேர்ந்தது.

பிரபஞ்சனின் நூல்களில் எனக்கு மிகவும் பிடித்ததமான நாவல்கள் அவை. அவற்றை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் வாசித்திருக்கிறேன். மொழி, சரித்திரப் புலம், பார்வையின் கூர்மை, உள்ளொளி ஆகியவற்றால் அந்நாவல்கள் தமிழிலக்கியத்துக்கு முக்கியமான வரவென்றுஅ ன்றே நான் கருதியிருந்தேன்.

ஏறக்குறைய சற்று முன்பின்னாக தொடராக வெளிவந்த இந்நாவல்கள் நூல்வடிவம் பெற்றபோது வானம் வசப்படும்’ நாவலுக்காக பிரபஞ்சனுக்கு இந்திய சாகித்திய அகாடமி விருது கிடைத்ததை இப்போது நினைத்துக் கொள்கிறேன்.  அவற்றை உடனடியாகப் பெற்று மீண்டுமொருமுறை வாசித்துவிட முடியாத ஆதங்கத்தில் இருந்தபோது ‘தாழப் பறக்காத பரத்தையர்  கொடி’ என்ற அவரது அண்மைக்கால கட்டுரைத் தொகுப்பொன்று என் கைகளில் அகப்பட்டது.

பதினாறு கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்நூல் 2009இல் உயிர்மை பதிப்பாக வெளிவந்திருக்கிறது. அதை நான் அடுத்த  ஆண்டிலேயே பெற்றிருக்கவும் முடியும்.  இப்போதுதான் வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதை அப்போதே வாசித்திராத மனவருத்தத்தோடுதான் என் வாசிப்பை முடித்தேன். 

அத்தனைக்கு ஒரு நாவல் கொண்டிருக்கக்கூடிய குணவிஸ்தாரங்களையும், பல்வேறு கருத்துக்களையும்,விடுபட்ட ஆய்வின் கூறுகளையும் இந்நூல் கொண்டிருந்தது. கட்டுரைவகைகளில் என்னைப் பிரமிப்போடு வாசிக்க வைத்த நவீன எழுத்துடனும் சிந்தனையுடனும் கூடிய மலையாள எழுத்தாளர்கள் ரவீந்திரனது புத்தபதம்’,மற்றும் பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவின் ‘சிதம்பர நினைவுகள்’ நூல்களுக்கு நிகரானதாய் தமிழில் வெளிவந்த நூல் இதுவென்பதில் எனக்கு மாறுபாடில்லை.
இந்நூலின் கடைசியாக வருவதே ‘தாழப் பறக்காத பரத்தையர் கொடி’ என்கிற கட்டுரை. 

பிரதிகளின் இத்தகு பகுதிகள் என் அக்கறைக்கு உரியவையாக என்றும் இருந்து வந்திருக்கின்றன. 

பிரான்சிய மொழியிலிருந்தோ,ஆங்கிலத்திலிருந்தோ தமிழில் மொழியாக்கம் பெற்ற சிறுகதையொன்று என் பதின்ம வயதுக் காலத்தில் என் வாசிப்புக்குக் கிடைத்ததிலிருந்து இந்த நிலை. நகரத்தில் குற்றங்களுக்கும், மற்றும் சட்டவிரோதச் செயல்களுக்கும்,ஒழுக்கவியல் சீர்கேடுகளுக்கும் காரணமாக பரத்தையர் பகுதி நகரில் இருக்கிறது என நம்பும் நகராட்சியால் வெளியேற்றப்படும் பரத்தையர், குடியேறி வாழும் புதிய இடத்தைச் சுற்றிகடைகளும், மனைகளும் பெருகி நாளடைவில் அதுவே ஒருநகரமாக ஆகுவதுபற்றிய கதை அது. அக் கதையின் தலைப்புக்கூட இன்று எனக்கு மறந்துபோய்விட்டது. அக் கதைக்கான ஒருமுடிவுறாத் தேடலில் தொடர்ந்துகொண்டிருக்கிறது என் வாசிப்புப் பயணம்.

பரத்தையர் வாழ்வு மனத்தைப் பிசைவது, ஒரு சமூகார்த்தமான பார்வை உள்ளவனுக்கு. ஆயினும் தம் தொழிலின் சமூக அந்தஸ்து தெரிந்திருந்தும் தேவைகளின் நிமித்தம் ஒருவிடாப்பிடியான உறுதியோடு சட்டம், சமூகம் ஆகியனவற்றுக்கு ஈடுகொடுத்து வாழும் அவர்களது வாழ்க்கை ஒரு படைப்பாளியிடத்தில் அற்புதமாகக் கவனமாகிறது. அண்மையில் பால்நிலைத் தொழிலாளருக்கெதிரான வழக்கின் மேன்முறையீடு ஒன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணையாகி வெளியிடப்பெற்ற தீர்ப்பு அவர்களுக்குச் சாதகமாகவே கனடாவில் இருந்திருக்கிறது என்பது பாலியல் தொழிலாளரின் போராட்டத்தினது வெற்றியாகவே கணிக்கப்பெற்றது பல சமூக விமர்சகர்களாலும். 

பிரபஞ்சனது கட்டுரையை வாசித்தபோது அந்நிகழ்வு ஞாபகமாகிய வேளையில், பரத்தையர் கொடி தாழப் பறப்பதில்லையென்று நானுமே நம்புபவனாக இருந்தும்கூட, இதுவே இத்தொகுப்பின் தலைப்பாகுமளவிற்குசிறந்தகட்டுரை இல்லைஎன்பதும் கவனமாகியது.
ஆனால் வரலாற்றுப்புலத்தில் இலக்கிய ஆதாரங்களை வைத்து இவர்கள் பரத்தையர் சமூகமாயிருந்து, பின் தேவரடியாராய், காலப்போக்கில் தனித்தனியான பால்நிலைத் தொழிலாளராய் உருவாகும் நிலைமைவரையான பின்புலத்தை கட்டுரை தெளிவாக வழங்குகிறது. 

முதன்முதலாக பிரபஞ்சன் குமுதம் வார இதழின் ஆசிரியர் குழுவில் நியமனம் பெற்றபோதும், பின்னர் சிறிதுகாலத்திலேயே அவர் அக் குழுமத்திலிருந்து விலகியபோதும் தமிழிலக்கிய உலகில் இவ்விடயங்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டவையாய் இருந்தன. எனினும் காரணமான உள்நிலைமைகளை யாரும் அறிந்திருக்கவில்லை. இத் தொகுப்பின் முதலிரு கட்டுரைகளிலும் அதில் சேர்ந்த விதமும்,விலகிய காரணமும் குறித்து பிரபஞ்சன்  மனம் திறந்திருக்கிறார்.  ஒருபிரபலமான பத்திரிகை நிறுவனத்தின் செயல்பாடுபற்றியஒ ருபடைப்பாளியின் இந்தஒப்புமூலத்தை ஒருமெய்நிலை காணும் தீரத்தினது வெளிப்பாடாகவேக ருதமுடிகிறது.

‘இன்னும் வராததொலைபேசி’ மூன்றாவதுகட்டுரை. இத் தொகுப்பின் பதினாறு கட்டுரைகளிலும் நகைச்சுவை ததும்பத் ததும்ப வாசிப்புச் சுகத்தைச் செய்வது இது. சென்னையின் மேன்சன் வாழ்க்கைபற்றி அவ்வளவு அச்சொட்டான சில பகுதிகளை இங்கே தருகிறேன்.

‘மேன்சன் அறைகள் சவப்பெட்டிபோன்றவை. ஒருமனிதன் நீட்டிப்படுக்கும் அளவேகொண்ட சவப்பெட்டிகள். சவப்பெட்டி நபர்கள் திரும்பிப் படுப்பதில்லை. கால் கைகளை அகலப்படுத்திக்கொண்டு ஓய்வை அனுபவிக்கும் வாய்ப்பு சவங்களுக்கு இல்லை. மேன்சன் அறைகளும் கட்டில் அளவே இருப்பவை’எனவும்,
‘கழிப்பறைகள் இணைந்தஒற்றைஅறைகள் எழுபதுகளில் அறிமுகம் ஆயின. இந்தக் கழிப்பறைகள் சரியாக ஒரு ஆளைமட்டுமே உள்ளேநுழைய அனுமதிப்பவை. கொஞ்சம் வேகமாகத் திரும்புதலோ,புகுதலோ உடம்பைச் சிராய்ப்புக்குட்படுத்தும். அதோடு,திரும்புதலுக்கான அவசியம்தான் என்ன என்று கேட்பவை அவை’ எனவும்,
‘சென்னையில் வானம் பார்க்கிறஅறைகள் எனக்கு லபிக்கவே இல்லை. கட்டில்,குட்டிமேசை,சிகரட் துண்டுகள்,மண்பானை,குளிக்க உபயோகிக்கும் பிளாஸ்டிக் வாளி இவைகளே கண்ணுக்குள் விழும் காட்சிகள். கண்கள் அறையைப்போலவே சதுரமாகிவிடுமோ என்று பயம் தோன்றும்’எனவும் விரிந்து நமக்குள் நகைப்பும்,மேன்சன்வாசிகள் மேல் பரிதாபமும் தோற்றுவிக்கின்றன இவை.

‘பானு உன் புத்தகப் பைஅண்ணனிடம் இருக்கிறது’என்ற பிரபஞ்சனின் சொந்த வாழ்வில் தன் தங்கையை இழந்த விபரத்தைக் கூறும் நான்காவது கட்டுரை ஒருசிறுகதையாகவே விரிந்து மனத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
அய்ந்தாம், ஏழாம், எட்டாம், பத்தாம் கட்டுரைகளான ‘தாய்ப்பாலும் தென்னம்பாலும்’,‘மது நமக்கு மது நமக்கு மது நமக்குஉலகெலாம்’,‘தெருப்பாடல்கள்’,‘மனதில் புகுந்தது மாமதயானை’ஆதியநான்கும் புதுச்சேரியில் படைப்பாளியினது குடும்பம், ஊர் சார்ந்த ஞாபக மீட்டல்கள். இவற்றினுள் தொனிக்கும் கலகக் குரலாலும்,வெளிப்படையாலும் முக்கியமாகும் கட்டுரைகள் இவை. இவைபோன்ற கட்டுரைகளுக்கு தமிழில் முன்மாதிரியாகுபவை. 
ஏனோ,கி.ராஜநாராயணனின் ‘கோபல்லகிராமம்’நாவல் அப்போது எனக்கு ஞாபகம்  வந்தது.

‘இரண்டுபிரஞ்சுப் பெண்கள்’என்றஆறாம் கட்டுரையும்,‘அதிகாரத்துக்கான சில குரல்கள்’என்ற பன்னிரண்டாம் கட்டுரையும் பிரான்சுமொழி பேசும்,தமிழ் மொழிபேசும் சமூகங்களிடையே எழுந்த கலகக்குரல்களை இனங்காணுகின்றன. இவை நவீன கால பிரெஞ்சு அரசியல், மற்றும் பண்டையதமிழ்ப் படைப்புக் களங்களின் மத்தியில் விளைந்த கருத்துக் கலகங்களினைக் காட்டுபவை.

ஒன்பதாம்,மற்றும் பதின்னான்காம் கட்டுரைகள் நூல் மதிப்புரைகள். ‘ஒருஅரவாணியின் முதல் தமிழ் நாவல்’என்றமுந்திய கட்டுரை பிரியாபாபுவின் ‘மூன்றாம் பாலின் முகம்’என்ற நாவல்பற்றியது. அடுத்தது,‘காடுகளை மணக்கும் முகைப் பூக்கள்’. கனிமொழியின் ‘இந்தச் சிகரங்களில் உறைகிறதுகாலம்’என்ற சமீபத்திய கவிதைத் தொகுப்புப் பற்றியது. இது  மதிப்புரையாகவிரியவில்லை என்பதுதான் இந்தக் கட்டுரையின் விசேடம். ஒருகவிதைத் தொகுப்பை ரசனையும்,கருதுகோள்கள் முன்னிற்காத திறந்த மனமுமாய் அணுகியிருக்கிறார் பிரபஞ்சன். அதனால்தான் அக் கவிதைகளினூடு பாய்ந்துகொண்டிருந்த ஓர் இருண்மையை அவரால் காணமுடிந்திருக்கிறது. 
பல்வேறு உணர்வுகளையும் கவிதையாக வடிக்கக்கூடிய கவிஞர்களிடத்தில்கூட அதிகமாயும்,பாரமாயும் அவர்கள் மனத்தை அழுத்தும் ஓர் உணர்வு தூக்கலாக இருப்பது தவிர்க்கப்படமுடியாததாகும். அந்தஉணர்வை இனங்காண்பது,ஓரளவுஅந்தக் கவிஞரின் வாழ்க்கையையே அலசுவதுபோலக்கூட ஆகிவிடும் அபாயமுள்ளது. இந்தக் கத்திமுனை நடப்பின் அவதானம் பிரபஞ்சனது விமர்சனத்தில் இருந்தமை பாராட்டப்பட வேண்டியது.
இந்த விமர்சனத்தின் தாக்கத்தில் அப்போது தமிழ்நதியை நினைத்துக்கொண்டேன். அவரது கவிதைகளிலும், நினைவுகூரல்களிலும், நாவலிலும், சிறுகதைகளிலும்கூட உள்ளார்ந்து ஓடும் இதயபாரத்தின் ஒருசுமை தெரிவதை நான் அவதானித்திருக்கிறேன்.அவரது நூல்களாக‘ராஜகுமாரனுக்கு மாதங்கிஎழுதுவது’என்றசிறுகதைத் தொகுப்பு,‘சூரியன் தனித்தலையும் பகல்’என்றகவிதைத் தொகுப்பு,‘கானல் வரி’என்கிறநாவல் மூன்றும் என் கைவசமிருக்கின்றன. யார் கண்டார்,உள்ளதைஉணர்ந்தபடிபகுதியில் ஏதோஒருபொழுதில் நான் தமிழ்நதியின் படைப்பாளுமையின் மைய உணர்வை அலசவும்கூடும்.

‘4 பேராசிரியர்களும் ஒருபதிப்பகமும்: இலட்சியக் கூட்டணி’என்ற பதினோராம் கட்டுரையும்,‘உலகத் தமிழ் மாநாடு செய்யவேண்டியது என்ன?’என்ற பதினைந்தாம் கட்டுரையும் ஏனைய பதின்னான்கு கட்டுரைகளது உணர்வு நிலைகளுக்கும் மறுதலையானது. இத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கவேண்டியதில்லை என்பதே என் கருத்து.
000

நூல்: தாழப் பறக்காதபரத்தையர் கொடி
படைப்பாளி: பிரபஞ்சன்
வெளியீடு: உயிர்மை, 2009

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்