தேவகாந்தனின் நேர்காணல் 3
‘அவரவரும் ஒரு கனவுச் சிறைக்குள்!’
(மின்னம்பலத்தில் 12.12.1999 இல் வெளிவந்த தேவகாந்தனின் நேர்காணல்)
நேர்கண்டவர்: ராஜன்பாபு
(தேவகாந்தன் இலங்கை, சாவகச்சேரியில் 1947இல் பிறந்தவர். ‘ஈழநாடு’ பத்திரிகையின் ஆசிரியர்; குழுவில் பணியாற்றிய இவர் ‘இலக்கு’ என்ற சிறுபத்திரிகையையும் நடத்தியிருக்கிறார். கடந்த பதினைந்து ஆண்டுகளாக புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழருக்கான சகல பிரச்னைகளையும் சந்தித்தாலும் மேலை நாடுகளுக்குச் செல்லாமல் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.)
உங்கள் இளமைக் காலம்பற்றியும், எழுத்துத் துறைக்கு வந்ததன் பின்புலம்பற்றியும் கூறுங்களேன்.
எங்கள் குடும்பம் அடிஅடியாக தமிழ்ப் புலவர் பரம்பரையில் வந்தது என்று என் தாயார் சொல்லக் கேட்டிருக்கிறேன். சின்ன வயதிலேயே சங்க இலக்கியங்கள், கந்த புராணம், கந்தரலங்காரம், தேவார திருவாசகங்களில் எனக்கு இது காரணமாகவே தீவிர ஈடுபாடு ஏற்பட்டது என்று சொல்லலாம். பல்கலைக் கழகத்தில் தரப்படுத்தல் கொள்கை சட்டவாக்கம் ஆவதின் முன், எண்ணக் கருவாகிச் செயற்பட ஆரம்பித்த அந்த முதற் சுழல் பாதிப்பாளர்களில் நானும் ஒருவன். அதனால் பட்டப் படிப்பைத் தனியாக இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து ஆரம்பித்தேன். சூழ்நிலை காரணமாக பட்டப்படிப்பு முயற்சி பாதியிலே நின்றது. ஆனாலும் அப்போது மார்க்ஸீய பாடங்கள் நடந்த கிராமங்களின் இரகசிய வகுப்புக்கெல்லாம் போயிருக்கிறேன். பின்னர் ‘ஈழநாடு’ ஆசிரியர் குழுவில் சேர்ந்து கடமையாற்றினேன். எனது தொடக்கம் புதுமைப்பித்தன் எழுத்துக்களோடேயே ஆரம்பித்தது என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். கலித்தொகைக் காட்சிகள் போன்ற இலக்கியக் கட்டுரைகள் எழுதிவந்த என்னை இத்தகு நவீன இலக்கிய வாசிப்பும், பத்திரிகைத் துறைப் பிரவேசமுமே எழுத்தாளன் ஆக்கிற்று என்றால் தப்பில்லை.
உங்கள் முதல்கதை எப்போது பிரசுரமானது? அதன் கரு என்ன?
எனது முதல் சிறுகதை ‘குருடர்கள்’. ‘செய்தி’ வாரமலரில் 1968இல் பிரசுரமானது. என் தார்மீகக் கோபமொன்றில் வெடித்துப் பிறந்தது அக்கதை. செத்துக் கிடந்த ஒரு அந்தக இசைக் கலைஞனைக் கண்டும் காணாது போய் வந்துகொண்டிருந்த யாழ்ப்பாண நகர மக்கள்மீது எழுந்த என் கோபத்தை அவ்வாறு தீர்த்துக்கொண்டேன். அந்த வழியை, காலப்போக்கில் என் கோபம், துக்கம், ஏக்கங்களைப் பகிரும் ஊடகமாக்கிக்கொண்டேன்.
இதுவரை எத்தனை சிறுகதைகள் எழுதியிருப்பீர்கள்?
இதுவரை சுமார் நூறு சிறுகதைகள் எழுதியிருப்பேன். இவற்றில் ஏறக்குறைய பாதியளவு 1984இல் நான் புலம்பெயரும்வரை வெளிவந்திருக்கும். அவை‘ஈழநாடு’ பத்திரிகையிலும்,‘செய்தி’ வார இதழிலும்,‘தினபதி’ நாளிதழின் ஞாயிறு மலரான ‘சிந்தாமணி’யிலும் வெளிவந்தன. ‘தினகரன்’ வாரமஞ்சரியிலும் அப்போது நிறைய எழுதினேன். படைப்பிலக்கியம், விமர்சனம் ஆகியவற்றிற்குப் பிரதான இடம் தந்துகொண்டிருந்த ‘மல்லிகை’யிலும் சில கதைகள் வெளிவந்தன.
இத்தனை கதைகள் எழுதியிருந்தும் ஏன் விமர்சகர்கள் யாரும் உங்களைப்பற்றிக் குறிப்பிடவில்லை?
இதேபோலத்தான் லா.ச.ரா.வும் ஒருமுறை சந்திக்கச் சென்றிருந்தபோது கேட்டார்,‘இவ்வளவு நீண்டகாலம் எழுதியிருந்தும் ஏன் உங்கள் பெயர் ஸ்தாபிதமாகவில்லை’ என்று. அது என் கரிசனமல்ல. என் கதையை எப்படி நீ புறக்கணிக்கலாம் என்று மல்லுக்கு நின்ற பலரை எனக்குத் தெரியும். ஆனால் அவ்விதம் செய்ய என்னால் முடியவில்லை. ஆனால் அதன் காரணங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. முதன்மைக் காரணமாய் ஒன்றைக் கூறமுடியும். ஒரு இலக்கிய வட்டத்தை, ஒரு இலக்கியக் குழுவை, ஒரு கட்சியைச் சார்ந்து தப்பிப் பிழைக்கும் ஒழுகலாறு தெரியாத எழுத்தாளனின் படைப்புக்கள் பெரிதாகக் கவனிக்கப்படாது போக நிறைய இலங்கையில் வாய்ப்புண்டு. நான் கவனிக்கப்படாதது தெரிந்தேதான் பேசாதிருந்தேன். அதற்கெதிரான போராட்டம் எனக்கானதல்ல, காலத்துக்கானது.
மேலும், பதினைந்து ஆண்டுகளாக எழுதியிருந்தும் அதன் பிற்பகுதியை நான் ஒதுங்கியிருந்த காலமாகச் சொல்லலாம். என் கதைகள் தொகுப்பாக வராததையும் ஒரு காரணமாகச் சொல்;லவேண்டும். ஈழநாடு 81, 83-ம் வருடங்களில் எரிக்கப்பட்டது. அதில் வெளியான ஒரு கதைகூட இன்று கிடைக்கவில்லை. மல்லிகை முதலில் யாழ்ப்பாணத்தில் நடந்துகொண்டிருந்தது. இப்பொழுது கொழும்பிலிருந்து வெளிவருகிறது. பழைய பிரதிகளை எடுக்கும் வழிகள் அத்தனையும் மூடப்பட்டுள்ளன. அவ்விதழ்கள் கிடைத்து என் கதைகள் தொகுப்பானால், விமர்சகர்களின் பார்வை நிச்சயமாகத் திரும்புமென்றே நம்புகிறேன்.
இந்தியா வந்த பிறகு என் ஒவ்வொரு கதையும், நாவலும் போதிய கவனத்தைப் பெற்றுள்ளன என்பேன்.
தமிழ்நாட்டுக்கு எப்போது வந்தீர்கள்?
1984-ம் ஆண்டு கடைசியில்.சாவகச்சேரி போலீஸ் நிலையத்தின் மீது பாரிய தாக்குதல் நடந்தது. அதன் அயலிலுள்ள நானும் தாக்குதலொன்றின் பின்விளைவாய் ஏற்படக்கூடிய ராணுவ நடவடிக்கைகளுக்கு அஞ்சி குடும்பத்தை விட்டுவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தேன்.
புத்தகமாக வெளிவந்துள்ள உங்கள் படைப்புகளைப் பற்றிச் சொல்லுங்கள்.
1985-ல் எனது முதல் நாவல் ‘உயிர் பயணம்’ வெளிவந்தது. இரண்டாவது நாவலான ‘விதி’ 1993-ல் பிரசுரமாயிற்று. ‘நெருப்பு’ என்பது சிறுகதைத் தொகுப்பு. லில்லி தேவசிகாமணி பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு ஆகிய இரண்டு பரிசுகளையுமே பெற்ற தொகுப்பு அது. ஷஎழுதாத சரித்திரங்கள்’,‘திசைகள்’ ஆகிய குறுநாவல் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. கனவுச் சிறையின் முதல் பாகம் ‘திருப்படை ஆட்சி’ ஜுன் 98-லும், இரண்டாம் பாகமான ‘வினாக் காலம்’ டிசம்பர் 98-லும் வெளிவந்தன.
உங்கள் கனவுச் சிறை நாவலைப்பற்றி?
1981-2001 இடையேயுள்ள இருபத்தொரு ஆண்டுக் காலவெளிதான் நாவலின் பரப்பு. பாத்திரங்கள் வருகின்றன, போகின்றன, அவற்றுள் சில மீண்டும் வருகின்றன, ஆனாலும் இந்த நாவலின் பிரதம பாத்திரம் காலம்தான். எந்த இயக்கத்தின் நிலைப்பாடும் எனக்கில்லை. அகதி என்கிற தளத்திலிருந்தே என் பார்வையைப் படரவிட்டிருக்கிறேன். நிஜ சம்பவங்களின் பின்னால் நிஜ மனிதர்களும், கற்பனை மனிதர்களும் என இந்த நாவலை ரசித்து ரசித்து எழுதினேன். ஐந்து பாகங்கள் கொண்ட இந்த மகாநாவல் என் கனவு என்றுகூடச் சொல்லலாம். 1993-ல் தொடங்கப்பட்ட என் ‘இலக்கு’ சிறுபத்திரிகை சென்று தேய்ந்திற்றதுகூட இந்த நாவல் வெளியீடு காரணமாகவே நிகழ்ந்தது என்று சொல்லத் தோன்றுகிறது.
இவ்வளவு பெரிய நாவலை எழுதவேண்டுமென்ற எண்ணம் எப்படித் தோன்றியது?
1995-ல் நோய்வாய்ப்பட்டு ஒரு நிர்ப்பந்தப் படுக்கையில் அழுத்தப்பட்டு ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளாக இருந்தபோது, மண்ணைநோக்கி ஓடிய என் மனத்தில், யுத்தத்தின் மூலமும், அதன் அநர்த்தமும், முடிவு தெரியா இருளும் விரிந்தன. சுருக்குத்தான். ஆனாலும் உருவுதடத்தின் முனை கண்டு சரியானபடி இழுத்தால் அவிழும் என்று தெரிந்தது. என் அனுபவம் சில ஆரூடங்களைப் பிறப்பித்தது. அதை நாவலாக ஒழுங்;குபடுத்தினேன். நடக்க முடியவில்லைத்தான். ஆனால் சாய்ந்து கிடந்த நிலையில் எழுத முடிந்தது. எனக்காகவே எழுதினேன். எவர் கட்டுப்பாடும், எதன் கட்டுப்பாடும் எனக்கிருக்கவில்லை. சுமார் 2000 கையெழுத்துப் பக்கங்களில் விரிந்தது நாவல்.
கனவுச் சிறை நாவலின் கதாநாயகி ராஜி ஜெர்மனிக்குச் செல்வதை வெறுப்பதாகப் படைத்துள்ளீர்கள். இலங்கைத் தமிழர்கள் மேலைநாட்டுக்குச் செல்வது குறித்து உங்களின் கருத்து என்ன?
இந்தியாவுக்கு ஓடிவருவது தஞ்சம் புகுவதற்காக. ஆனால் கலாசார அந்நிய மண்களில் வேலைக்குச் செல்வதை என் மனம் எப்போதும் ஏற்காது. இலங்கையில் ஒருபோது சமாதானம் ஏற்பட்டு நான் ஜெர்மனியிலிருந்தோ, கனடாவிலிருந்தோ திரும்பி என் இலங்கை வீட்டுக்குச் செல்வதாக வைத்துக்கொள்ளுங்கள். என் பக்கத்து வீட்டுக்காரனெல்லாம் அப்போதும் அங்கேயே இருப்பதாக நினைத்துக்கொள்வோம். பல்வேறு அழிவுகளைச் சந்தித்துக்கொண்டும், கன்னிலுமே அந்த அழிவுகளைச் சுமந்துகொண்டுமிருக்கக் கூடிய நிலையில் அவனை எப்படி நான் முகங்கொள்ள முடியும், சொல்லுங்கள்? என் செல்வம், என் வசதி, என் வளர்ச்சிஅத்தனையும் என் அழிவின்மையில் அவன் விடும் பெருமூச்சில் எரிந்து சாம்பலாய்ப் பறந்துபோகும். இன்னும் அந்த மண்கூட என்னை நகும். அவன் அந்த மண்ணை அவலத்தில்விட்டு ஓடியவன்.
டொமினிக் ஜீவாவுடன் ஆழ்ந்த தொடர்பில்லையென்றாலும் நீண்ட தொடர்பு எனக்கு உண்டு. அண்மையில் தமிழகம் வந்திருந்தார். ‘இதுவரையில் அநேகமானவர்கள் இந்தியாவில் நூலைப் பதிப்பித்து இலங்கையில் வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். நான் இலங்கையில் பதிப்பித்து இந்தியாவில் வெளியிட வந்திருக்கிறேன்’ என்றார். அவரைச் சந்திக்க, அவரது தர்மத்தின் முன் நிற்க நான் வெட்கப்பட்டேன். அதை நேரிலேயே அவரிடமும்
சொன்னேன். எனக்கிருந்த பிரச்சினைகள் அவருக்கில்லை என்பது உண்மைதான். ஆனாலும் என் மன உறுத்தல் எளிதில் அடங்கக்கூடியதல்ல.
இதற்கே இவ்வளவு உணர்வுக் கொந்தளிப்படைகிறேன். நிச்சயமாக மேலைநாட்டுக்குச் செல்வதில் எனக்கு உடன்பாடில்லை. என் அகதித் தஞ்சம் இந்தியாவிலிருக்கும். இல்லையேல் நான் நாடு திரும்பிவிடுவேன்.
‘கனவுச் சிறை’யை ஒற்றை நாவலாக 1997லேயே எழுதி முடித்துவிட்டேன் என்கிறீர்கள். கடைசிப் பாகத்தை அதன் நான்கு ஆண்டுகளை எப்படி எழுதினீர்கள்? நீங்கள் எழுதியதற்கு மாறான நிலை இலங்கையில் ஏற்பட்டால்…?
மனித சரித்திரத்தில் நான்காண்டுகள் மிகக் குறுகிய காலக் குறுணியென்றாலும்,சுமார் இருபதாண்டுக் கால யுத்த சூழலில் அது கணிசமான கால அளவைதான். எனினும் அற்புதமான நிலைமைகளின் முன்னனுமானத்தில் கதையை நகர்த்தியிருக்கிறேன். சரியான அவதானிப்பின் அளவுகோல் இருந்தால் வருங்காலமுரைத்தலும் கைகூடும். இலங்கையில் முக்கியமான எந்த மாற்றமும் இப்போதைக்குச் சாத்தியமில்லை. அவரவர்களும் ஒரு கனவுச் சிறைக்குள் அல்லது தத்தம் கனவுகளின் சிறைக்குள். அது உடைய வேண்டும். மேலேதான் சமாதானம்.அதற்கு பல ஆண்டுகள் ஆகும். ஒருவேளை உடனடியாக யுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்டால்கூட மேலும் பல பத்தாண்டுகள் ஆகும் அதன் உட்கட்டமைப்பில் அமைதி வந்து சேர.
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் நம்பிக்கை தருகிறதா?
தமிழிலக்கியத்தை புலம்பெயர்ந்தோர் இலக்கியம் இருபத்தோராம் நூற்றாண்டில் வழி நடத்தும் என்கிறார்கள். அந்த மாயை எனக்கில்லை. போர்க் கால புதிய நிலைமைகள் கவிதை, சிறுகதைத் துறைகளில் புலத்தில் சாதித்த அளவில் பாதிகூட மேற்குலகில் வசிக்கும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களால் சாதிக்கப்படவில்லை. பெரிதாக எதிர்பார்க்கவும் வேண்டாம், பெரிதாகக் குறை சொல்லவும் வேண்டாம். அதற்கான வாய்ப்புக்களும், கால அவகாசங்களும் அங்கே அவர்களுக்குக் குறைவு என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். தினமும் பன்னிரண்டு மணிநேரத்திற்குக் கூடுதலாக வேலை செய்யவேண்டிய நிலையில் பலர் அங்கே சிரமப்படுவதை நான் அறிவேன். ஆனாலும் ஒரு அசுர சாதனையாக கவிதைத் துறையிலும், சிறுபத்திரிகைத் துறையிலும் அவர்கள் பிரகாசித்து வருகிறார்கள்.
புலம் பெயர்தலென்பது நாடு இகந்து போதல் என்பது மட்டுமில்லை. அது தன் தேசத்தில் தன் பிரதேசத்தில்கூட நிகழ முடியுமென்ற வரையறைப்படி பார்த்தால், ஆயிரக்கணக்கில் இன்று வன்னிக் காடுகளில் வாழும் தமிழ் மக்களையும்தான் புலம் பெயர்ந்தவர்களாகக் கொள்ளவேண்டும். அதை இடப்பெயர்ச்சியென்று மட்டும் சொல்லிவிட்டு சும்மா நழுவிவிட முடியாது. அனுபவத்தால் எழுதப்படவேண்டிய சிறந்த இலக்கியம், ஒருவேளை வன்னிக் காடுகளில் இன்னும் எழுதப்படாமல் கனிந்து கிடக்கலாம்.
சிறந்த புனைகதைப் படைப்பாளிகள் உருவாகாததற்கு படைப்பாற்றல் சார்ந்த காரணம் இல்லையென்கிறார் சேரன். ஆயுத அச்சம் காரணமென்ற தொனி அதில் இருக்கிறது. இவ்வாறு பலருமே சொல்லி வருவதையும் நாம் அறிவோம். சும்மா சாட்டுக்கள் சொல்லக்கூடாது. நம் ஆண்மை இங்கேயும் வெளிப்படவேண்டும். போரிஸ் பாஸ்டர்நாக் ‘டாக்டர் சிவாகோ’வை எழுதிய சூழ்நிலை, எதைவிடவும் மோசமானதென்பதை மறுக்க முடியாது. அந்த நாவல் நோபல் பரிசு பெற்றது. அத்தகையனவே அவ்வாறான உன்னதங்களை அடைய முடியும்.
எவ்வாறாயினும் புலம் பெயர்ந்தோர் இலக்கியமென்பது ஈழ இலக்கியத்தின் ஒரு அங்கம்தான். அதுபோல் ஈழ இலக்கியம் தமிழ் இலக்கியத்தின் ஒரு அங்கமே என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். தமிழை எங்கிருந்து எழுதினாலும் அதன் மையக் கலப்பு தமிழ்நாடாகவே இருக்கிறது. ஆகவே, இனி நாம் தமிழிலக்கியம்பற்றியே பேசுவோம்.
பின்நவீனத்துவம் குறித்து உங்கள் கருத்தென்ன?
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நவீனத்துவம் இருந்திருக்கிறது. அது கூடி…. குறைந்து இருக்கலாம். ஐரோப்பியர் கால தமிழிலக்கியத்தில் அது இருந்தது. அதன் விளைவுதான் பாரதியும், புதுமைப்பித்தனும். விளைவுகள் விளைச்சலையும் தந்தன. அதுதான் கவனிக்கப்பட வேண்டும். ஆனால் பின்நவீனத்துவம் என்பது ஒரு சிந்தனை வகை. வாழ்முறை வேறான, மரபு வேறான, வேர் வேறான ஒரு திசைக் கலாசாரத்தை அல்லது அக்கலாசாரத்தின் கட்டமைப்பைக் கூறுவது அது. அங்கே அது பொருந்தும். ஆயினும் தமிழில் அதன் அம்சங்கள் தவிர்க்கவியலாதபடி புகும். ஆனால், அந்த இலக்கிய முறைமையே தமிழிலக்கியமாகிவிடக் கூடாது.
ஆகாதும்தான்.
என் கரிசனமெல்லாம், ஆறுமுகநாவலர் தொடங்கி மிகப் பெரும் எத்தனங்களில் சாதாரண மக்களும் படித்தறியும் வண்ணம் ஒரு இலகுவுக்கு வந்த தமிழ் உரைநடை மீண்டும் பல்லுடைக்கும் நவீன பண்டிதத் தமிழ் ஆகிவிடக்கூடாது என்பதுதான். எளிய பதம், எளிய நடை பாரதியின் கனவாக இருந்தது. அதேவேளை மலின நடையும் ஆகிவிடக் கூடாதென்பதில் எனக்கு அக்கறை உண்டு. இலக்கிய மொழி வேறு என்பதிலும் எனக்கு உடன்பாடுதான். நம் தேவையை மீறிய ஒரு உரைநடையை நாம் எக்காலத்திலும் செயற்கையாக உருவாக்கிவிட முடியாது என நம்புபவன் நான்.
இலக்கியத்துக்கான மொழிநடை சுந்தர ராமசாமியிடத்தில் தொடங்கியிருப்பதை நான் காண்கிறேன். மேலே வளர்ச்சி மந்தமாகவே இருக்கிறது. ஆனாலும் நம்பிக்கை தெரிகிறது.
நல்ல நாவலாசிரியர்கள் பலரும் சிறந்த நாவல்களை விரும்பிப் படிப்பவர்களாத்தான் இருந்திருக்கிறார்கள். நீங்கள்…?
நிறைய வாசிப்பேன். தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’, ஜெயமோகனின் ‘ரப்பர்’, பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’, ராஜம் கிரு~;ணனின் ‘பாதையில் பதிந்த சுவடுகள்’, இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘தந்திர பூமி’, அசோகமித்திரனின் ‘பதினெட்டாம் அட்சக்கோடு’ போன்றவை என்னைக் கவர்ந்தவை. ஆனால் பாதித்தது மொழிபெயர்ப்பிலென்றாலும் தகழியின் நாவல்கள்தான்.
தமிழ் நாவலின் களம் குறுகியிருப்பதுபோல படைப்பாளியின் அனுபவமும் குறுகியது. தமிழ் எழுத்தாளர்கள், ஒரு சிலர் தவிர, தம் படைப்பில் மிக்க கௌரவம் கொண்டிருப்பதாகக் கூறமுடியாது. தம் படைப்பின் பூரணத்துவத்துக்காக தம் உழைப்பை காணிக்கையாக்குகிற, தவமாய் சிரமம் மேற்கொள்பவர்கள் நிறையப் பேர் இல்லை. அதனால் கட்டுறுதியற்று நாவல்கள் தொளதொளவென்றிருக்கின்றன. தி.ஜா.வின் ‘மோகமுள்’ளைவிட ‘மரப்பசு’ சிறந்த கட்டுறுதி கொண்டது. ‘பொன்னியின் செல்வ’னைவிட ‘சிவகாமியின் சபதம்’ அடர்த்தியானது. நா.பார்த்தசாரதி எழுதிய ‘பாண்டிமாதேவி’ சிறந்த படைப்பு. அது பலராலும் பேசப்படாதது இன்னும் எனக்கு ஆச்சரியம். விரிந்த தளத்தில் அற்புதமான நடையில் அது எழுதப்பட்டுள்ளது. ஆனால் அதிலும் பதிப்பாசிரிய வேலை நிறைய உள்ளதுதான்.
கனவுச் சிறை நாவலின் அடுத்த பாகம் எப்போது வெளிவரும்? என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்?
நாவலின் மூன்றாம் பாகத்தை மீள் வாசிப்புச் செய்து திரும்ப எழுதிக்கொண்டிருக்கிறேன். முதலில் சூட்டிய ‘அக்னி திரவம்’ என்ற தலைப்பு இப்போது வலுவாகத் தோன்றவில்லை. ஒருவேளை அதில் இடம்பெறும் ஒரு கவிதை அடியான ‘கறுத்த மேகம்’ என்பதையே தலைப்பாகக்கொண்டு அது வெளிவரவும் கூடும். நூல் 99 டிசம்பருக்குள் வெளிவரலாம்.
கனவுச் சிறையின் முதற்பாகம் வெளிவந்து ஆறுமாதங்களின் பின் ‘வினாக்காலம்’ வெளியானது. சோலக்கவின் ‘கன்னி நிலம்’ நாவலின் முதற் பாகம் வெளிவந்து இருபத்தேழாண்டுகள் கழித்து 1959-ல்தான் அதன் இரண்டாம் பாகம் வெளிவந்ததென்பது நாம் அறிந்ததுதான். எனது நாவலின் அடுத்தடுத்த பாகங்களும் நண்பர்களின் உதவியால் விரைவில் வெளிவருமென நம்புகிறேன்.
000

Comments