Thursday, August 21, 2014

நூல் விமர்சனம் 3‘ஒலிக்காத இளவேனில்’

முரண்படுதலும்,கலகமுமாய் பெண் கவிதையின் செல்நெறிக்குஓரளவேனும் வலுசேர்க்கும் தொகுப்பு


கவிதையில் பேசுவதென்பது சுயவனுபவங்களினதை
மட்டுமே சாத்தியமானது. இவை சுயமானவையென்றும் மெல்லிய சுயானுபவங்களின் சார்புபெற்ற பிறரது அனுபவங்களென்றும் ஆக முடியும். சுயானுபவங்கள்கூட காலகாலத்துக்கும் அனல் குறைந்துவிடாதபடி ஊதிஊதிப் பாதுகாக்கப்பட்டவையாய் இருக்கவேண்டும். கவிதையானது உணர்வின் வெளிப்பாட்டு ஊடகமெனப்பட்டது இதிலிருந்துதான். 
ஒரு முள் குத்திய அனுபவம் காடளவு அனுபவத்துக்குச் சமமானதுவென ஓர் அறிஞன் சொல்லியிருப்பதைக்கொண்டு எனக்கு முள் குத்தியிருக்கிறதுதானேயென காடளந்த கதைவிட  கவிதையில் இடமில்லை. அதனால்தான் கவிதையெனப்பட்ட சொல்லடுக்குகள்  காலத்தில் இருப்பின்றியே அழிந்துபட்டன. இத் தொகுப்பிலுள்ள பலதும் கவிதையாகாமல் சரிந்ததன் காரணம் இங்கே இருக்கிறது.

பல்வேறு பெண் கவிஞைகளின் கவிதைத் தொகுப்புகளை அண்மையில் பார்க்க முடிந்திருக்கிறது. பெண் கவிஞைகளினதாய், புகலிடப் பெண் கவிஞைகளதாய், ஈழத்துப் பெண் கவிஞைகளதாய் என பல்வேறு தொகுப்புகள். உதாரணமாக ஊடறு வெளியீட்டின் ‘மை’ கவிதைத் தொகுப்பு, கிருஷாங்கினியின் ‘பறத்தல் அதன் சுதந்திரம்’, அம்பையின் ‘பெயல் மணக்கும் பொழுது’,  ஊடறு மற்றும் விடியல் இணைந்து வெளியிட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ என சிலவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் தான்யா. பிரதீபா கனகா-தில்லைநாதன் தொகுத்துள்ள ‘ஒலிக்காத இளவேனில்’ கவிதைத் தொகுப்பு குறிப்பிடத் தகுந்தது.

இது தொகுப்பாளர்களிடையே எதுவிதமான கவிதைகளைத் தொகுப்பாக்குவதென்ற திட்டத்துடன் செயற்பட்டிருப்பதாக நம்பும்வகையில் அநேக கவிஞைகளின் குரலும் முக்கலும் முனகலுமாகவன்றி சில  அடியாதாரமான கேள்விகளுடன் முரண்டும் கலகமும் கொண்டதாய் அமைந்திருக்கிறது.

விமர்சகர் ந.முருகேசபாண்டியனின் காலச்சுவடு ஈழப் பெண் கவிஞைகளின் கவிதைப் போக்கு குறித்த கட்டுரையொன்றை இப்போது நினைவுகொள்ள முடிகிறது. அக் கட்டுரையில் ஈழப் பெண் கவிதையிலுள்ள சிறப்புகளைப்போலவே அதன் குறைபாடுகளையும் அவர் சுட்டியிருப்பார். அக் குறைகளில் சிலவற்றையேனும் இக் கவிதைத் தொகுப்பு நீக்கியிருக்கிறதென  நிச்சயமாக நான் நம்புகின்றேன். 

அதில் முன்னிலைகொண்டிருப்பது மொனிக்காவின்இயந்திரமயமாக்கல்’. அதுகாட்சிப்படுத்தலின் தன்மையோடு சுமாராகத்தான் சென்றுகொண்டிருக்கும். பெண் துயரத்தின் வெளிப்பாட்டை மிக நிதானமாகக் காட்டிவந்த வரிகள்திடீரென ஓர் எம்பு எம்பி ஓர் அடங்கலில் உச்சம்பெறுகிறது.


‘பெடியன் பிறந்தால் 
பெட்டைவேணும்
பெட்டைபிறந்தால்
கட்டாயம் பெடியனும் வேணும்…

இரண்டும் பிறந்தாலும்
சமைக்கவும் வேண்டும்..’
என வருமிடத்தில் உள்ள அடங்கலும் அலுப்பும் துயரத்தின் உச்சம். ‘இயந்திரமயமாக்கல்’ தன்னைக் கவிதையாக நிறுத்துகிற இடமும் இதுதான்.

புகலிடவெளியில் வாழ்வின் அர்த்தங்கள் அழிந்துபோயிருப்பதை ரேவதியின் ‘சிதிலமடைந்துள்ள வாழ்க்கை’ சிறப்பாகச் சொல்லுகிறது. இது ‘சிதிலம்’ என்று  மட்டுமேயான தலைப்பாயிருந்தால் கனதி பெற்றிருக்கமுடியும்.

‘நிச்சயமற்ற வாழ்விற்குப் பழக்கப்பட்டவர்கள்
எதற்காகவும் காத்திருப்பதை விரும்புவதில்லை
இன்றைய நிமிடத்தினை வாழ்வதுடன்
நாளைய நிமிடத்தை எதிர்கொள்ளவும் தயாராகிறார்கள்

‘குறிகளும் யோனிகளும் இன்று இப்படித்தான்
எதற்காகவும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை
அவை  தமது  நிமிடத்தினை
வாழ்ந்துவிடவே விரும்புகின்றன’ 
என்று ஓங்கிஒலிக்கிறது வாழ்வுச் சிதைவின் புள்ளியை மிகவும் கூர்மையாகக் கண்டுகொண்ட ரேவதியின் அவதானிப்பு. ஆயினும் அர்த்தம் பொதிந்துள்ள அளவுக்கு இதில் கவித்துவம் சிறப்பாக அமையப்பெறவில்லை என்ற உண்மையையும் சொல்லியாகவேண்டும்.

பதினெட்டு கவிஞைகளின் அறுபத்தேழு கவிதைகளைக் கொண்டிருக்கும் இத் தொகுப்பு, பல்வேறு விடயங்களைப் பேசுகின்றது. காதலை காமத்தை விடுதலையை அகதியானஅவலத்தை மண்மீளும் அவாவையென பல்வேறு விடயங்களை இதில் காணமுடியும். இவற்றில் இருக்கும் தீட்சண்யமும் மூர்க்கமும் முக்கியமானவை. யோனியும் கருப்பையும் முலைகளும் அவற்றின் மேலான ஆணுலகத்தின் அர்த்தமும் அழகியலும் அநாயாசமாக இக் கவிதைகள் பலவற்றால் சிதறடிக்கப்படுகின்றன.

‘தொட்டபோதெல்லாம் சுட்டுக்கொண்டது உணர்ந்து பார்க்குமுன் அதுகுளிர்! குளிர்!என்றது’ என வஞ்சிப்பின் ரணத்தை விளக்கும் கௌசலாவின் ‘வஞ்சகம்’கவிதை, ‘ஆயிரத்திநூறு யுகங்களுக்கு அப்பாலிருந்து எனக்காக ஒருகடிகாரம்  இயங்கிக்கொண்டிருக்கிறது’ எனத் துவங்கும் தலைப்பற்றதும் மற்றும் ‘ஐந்துதலைப் பாம்பும் ஆயிரத்தெட்டு விரல்களும்’ என்ற மைதிலியின் கவிதைகள், ‘பலஸ்தீனம் ஒருகிழவனின் முகம்’ என்ற பிரதீபாவின் கவிதை, இந்திராவின் ‘மலைஉச்சியையோ  அல்லது ஆழக் கடலையோ  நோக்கிச் செல்கின்றன  என் கால்கள்’ எனத் தொடங்கும் தலைப்பற்ற கவிதை வசந்தியின் ‘ரகஸ்யம்1’,  ‘ரகஸ்யம்2’, ‘பூட்டுக்களும் சாவிகளும்’ மற்றும் ‘பாம்பு’ போன்றகவிதைகள் இத் தொகுப்புக்கு வலுச் சேர்ப்பன. ‘தெரியா விம்பங்க’ளில் றெஜியினதும், ‘வரலாற்று மறதி’யில் கற்பகம் யசோதரவினதும் மனஉக்கிரங்கள் கவனிக்கப்படவேண்டியவை.

இளவேனில் காலம் அற்புதமானது. கண்ணும் மனதும் மட்டுமில்லை உயிரே நிறைந்து போகிறது அக்காலத்தில். அது எழுச்சிகளுக்கான காலம். அதைக் காமன் காலமென்பர். இந்திரவிழாக் காலமாகக் கண்டது பண்டைத் தமிழ் நாடு. அக் காலத்தின் அத்தனை விகசிப்புகளும் ‘ஒலித்தல்’என்ற சொல்லில் அடங்கிவிடுகின்றன. அப் பருவகாலத்தின் ஒலிப்பு பெண் சமுதாயத்தில் நிகழவில்லையென்ற துயரத்தை ஒருவகையில் பெண்ணியப் பார்வையோடும் பல கவிதைகள் பதிவாக்கியிருக்கின்றன.
கவிதையுலகு தமக்கென்றேயான ஆணுலகின் உறுதிக்கு சவால் விடுக்கும் கவிதைகள் பல இத் தொகுப்பிலுண்டு. உதாரணத்துக்காக வசந்தியின் ‘பூட்டுகளும் சாவிகளும்’:

‘திறந்திருக்கும் தருணங்களிற் கூட
சாவிபற்றியபிரக்ஞையுடன்தான்
வலம் வரமுடிகிறது

பூட்டுக்களும் சாவிகளும்
கண்டுபிடிக்கப்பட்டிராதபட்சத்தில்
எல்லாமே
இலகுவாய்ப் போயிருக்கும்

தொலை தூரம் போனாலும்
கனவிலும்
தொடர்ந்து வந்து
தொல்லைதரும் சாவியாய்
இயல்பாயிருத்தல்
இயலாமற் போகிறது

பூட்டப்படவில்லைஎன்று
சொல்லப் பட்டாலும்
பழக்கப் பட்டுப் போனதில்
சாவி இல்லாதிருத்தல் கூட
இம்சைதருவதாய்…’

இதில் எழுதிதியுள்ள நல்ல கவிஞைகள் பலர் தொடர்ந்து எழுதுவதில்லையென்ற தொகுப்பாளரின் துயரம் நியாயமானது.
முக்கியமானபெண் கவிதைத் தொகுப்பு.

0

நூல்: ஒலிக்காத இளவேனில்
தொகுப்பு: தான்யா-பிரதீபாகனகா தில்;;லைநாதன்
வெளியீடு: வடலி
பதிப்பு: 2009

00000

தாய்வீடு, 2014

No comments:

எம்மா- சிறுகதை

எம்மா -தேவகாந்தன்- அதுவொரு மென்மையும் நுட்பமும் சார்ந்த விஷயமாக அவளுக்குப் பட்டது . இருந்தும் அதை வகைப்படுத்தி இதுதானெ புள்ளிவை...