நூல் விமர்சனம் 4 ம.தி.சாந்தனின் ‘13905’ சிறுகதைத் தொகுப்பு



13905

‘தம் புகழ் நிறீஇ தாம் மாய்ந்தனரே’என்கிறதுசங்கப் பாடலொன்று. ம.தி.சாந்தனின் ‘13905’சிறுகதைத் தொகுப்புஅந்தத் தொடர்ச்சியின் தற்காலமுன்னெடுப்பு. அதுசுட்டிநிற்கும் அம்சங்கள் தமிழிலக்கியத்தில் முக்கியமானவை.


ம.தி.சாந்தன் என்றபெயரைப் பார்த்ததும் தெரிந்ததுபோலத் தோன்றாவிட்டால் சாந்தன் என்றுமட்டும் கொண்டுபாருங்கள். ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சம்பந்தமானவராகக் கருதப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவரில் ஒருவரை அப்போது சுலபமாக ஞாபகங்கொள்ள முடியும். 

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் ஜனாதிபதியிடத்தில் சமர்ப்பித்திருந்த கருணை மனுவுக்கான பதிலின் காலதாமதத்தைக் காரணங்காட்டி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு தீர்பாகியிருக்கிறது. அதைத் தொடர்ந்து மூன்றுநாட்களில் அவர்களுடன் அவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த நளினி உட்பட்ட மற்ற நால்வரையும் விடுவிக்கப் போவதாக தமிழகஅரசு செய்த அறிவிப்பும்,  அதற்கு மத்தியஅரசு உயர்நீதிமன்றத்தில் தடைவாங்கியிருப்பதும் பரபரப்பான அண்மைக்காலச் செய்திகள். 

இதோ விடுதலை செய்யப்படப் போகிறோம் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் மத்தியஅரசு பெற்றிருக்கும் தடையாணை விடுதலையை எதிர்பார்த்திருந்த சிறையாளிகள் மனத்தில் எத்தகைய பாறாங்கல்லாய் விழுந்திருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளமுடியும். ஆயினும் ம.தி.சாந்தன் ‘13905’ என்ற சிறுகதையில் ‘எங்கள் வழக்கில் கைதுசெய்யப்பட்ட இருபத்தாறு பேருக்கும் மரணதண்டனை என்று நீதிதேவன் தன் பேனாவை ஒருமுறைகூட உடைக்காமல் தீர்ப்புச் சொன்னம றுநாள்…’ என்று சொல்லியதிலுள்ள வலி கொஞ்சமேனும் குறையப்பெற்றிருப்பார்கள் என்று நிச்சயமாக நம்பலாம்.

இம் மூவருக்குமிருந்த இயக்க ஈடுபாடுகள், செயற் பங்களிப்புகள்பற்றி கவலையுறாமல் மரணதண்டனை நீக்கத்தை விரும்பும் சமூகநல ஆர்வலர்கள்போல் எனக்கும் இந்தத் தீர்ப்பில் மகிழ்ச்சியே. இதற்கும் மேலானதான ஒரு மகிழ்ச்சி இக் காலகட்டத்தில் ம.தி.சாந்தனின் சிறுகதைத் தொகுப்பான ‘13905’பற்றி நினைத்தவேளையில் எனக்கு ஏற்பட்டது
அதுபற்றி எவ்வளவு பேர் அறிந்திருப்பார்கள் என்றுகூடத் தெரியவில்லை. அந்த நூலும் தமிழ்ச் சமூகத்தின் பிரக்ஞைக் குளத்தில் வீசப்பட்டஒருகல்லாகத்தான் இன்றுவரை கவனமிழந்து கிடக்கிறது என்ற வருத்தமான எண்ணமொன்று என் மனத்தே ஓடியது.

ஏறக்குறைய ஒரு தசாப்த காலத்துக்கு முன்னால் அர்ச்சுனா பதிப்பக வெளியீடாக தினபூமிபோன்ற பத்திரிகைகள், ராணி, தேவி, தீம்தரிகிட மற்றும் திணமணிக்கதிர் ஆகிய சஞ்சிகைகளில் அதுவரை பதிப்பாகியதும் அத்துடன் பதிப்பாகாததுமான ம.தி.சாந்தனின் இருபது சிறுகதைகளின் தொகுப்பாக வெளிவந்திருப்பதுதான்  ‘13905’. 

‘13905 அல்லது 'ஒருகைதியும் சில  கடிதங்களும்’ என முதலில் வைத்த கடைசிக் கதையினது தலைப்பு,  தொகுப்பில் ‘13905’ என மாற்றப்பட்டிருப்பதாக படைப்பாளி தெரிவிக்கிறார் கதைபற்றிய குறிப்பில். அதுவே மொத்த நூலுக்குமான தலைப்பாகவும் வைக்கப்பட்டிருக்கிறது. வித்தியாசமானதாய் மட்டுமின்றி வார்த்தைகளில் விளங்கப்படுத்தமுடியாத ஒரு கனதியையும் ஒரு வாசகனால் அதில் உணரமுடியும்.

இத் தொகுப்பை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பார்க்கலாமெனத் தோன்றுகிறது. ஒரு முழுமையின் வசதி கருதியே இந்த ஏற்பாடும். பின்பகுதியில் வரும் இருபது கதைகளைப்பற்றி முதலாவதாகவும் அது தொடங்கும் முன்னர் வரும் எஸ்.பொ.வின்; முன்னீட்டைப்பற்றி இரண்டாவதாகவும் முதலில் தொடங்கும் ‘சில வார்த்தைகள்’ என்ற மகுடத்தில் வரும் படைப்பாளியின் கருத்துக்களைப்பற்றி இறுதியாகவும் அலசுவதுகூட அந்த வசதி கருதித்தான். 

போர்க்கால இலங்கையில் தமிழ்ச் சமுதாயத்தின்மேல் ஏவிவிடப்பட்ட வன்முறையின் உச்சபட்ச அழிவின் சாட்சியங்களான பல்வேறு நிகழ்வுகளின் கதைப்படுத்தலையே ம.தி.சாந்தன் செய்திருக்கிறார். ஒரு சாதாரணனின் இன்னல்களதும் அவலங்களினதும் சாட்சியங்கள் அவை. அவை வாசிப்பின் பெரும் சுகங்களைக் கொண்டிருக்காது விட்டாலும் நிகழ்வுகளின் வீரியம் கெட்டுவிடாதபடியான நடையையும் மொழியையும் கொண்டிருக்கின்றன. இந்த இருபதுகதைகளுள் ‘ஒரு அகதியின் டயரி’, ‘நோர்வே’, ‘வேண்டும் விடியல்’ மற்றும் ‘சமாதானம்’ ஆகிய கதைகள் அமைப்பாலும் பேசுபொருளாலும் நடையாலும் ம.தி.சாந்தனின் சிறந்த கதைகளாக இருக்கின்றன. ‘13905’ கதை ஒரு சிறுகதையின் அமைப்பினைக் கொண்டிருக்காதபோதும்  உத்தி  காரணமாக  அதைச் சிறந்த கதையாகக் கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை.

‘வேண்டும் விடியல்’சிறுகதை ஒரு சிறுமியின் எண்ணவோட்டமாய் அவளது இளம் மொழியில் கடிதமாய் பெரும்பகுதியும் விரிவுபெறுவது. ‘சமாதானம்’ கதையும் வடிவரீதியாக வெற்றிபெற்ற கதையே. 
பெரும்பாலான கதைகளில் வரும் பாத்திரங்கள் அனைத்துமே தனித்தமிழ்ப் பெயர்களைக் கொண்டவையாய் இருக்கின்றன. மு.வரதராசனின் நாவல்களில் இவ்வாறான எதார்த்தமற்ற கனவுகளின் வெளிப்பாடுகள் அதிகமாக இருக்கும். ஒரு நாற்பது ஆண்டுகளைப் பின்நோக்கி நகர்த்திவிடுகிறது இத்தகைய அடையாளம். வாசிப்பின்போது இத் தூய தமிழ்ப் பெயர்கள் இடறலையும் செய்கின்றன.

இலங்கைத் தமிழ் மக்களின் போரவலங்களைப் பேசவந்திருப்பினும் அவை போரை முன்னெடுத்த விடுதலைப் புலிகளின் பிரச்சார வாகனங்களாகச் செயல்படவில்லையென்று சொல்லமுடியும். இது ஒருவகையான ஈர்ப்பே அற்றிருந்ததாக முழுக்கமுழுக்க அர்த்தப்பட்டுவிடாது. இருந்தும்தான் சமூக உண்மையின் வெளிப்பாடுகளை அடக்க படைப்பாளி முயலவில்லையென்பதை அவரிடமுள்ள மிகப்பெரும் எழுத்து நேர்மையாக நான் காண்கிறேன்.

‘ஒரு அகதியின் டயரி’யில் சிங்களவர்களையும் மனிதர்களாக  இரக்கமுள்ளவர்களாக ஏற்றுக் கொண்டிருப்பதை அக் கதையில் வரும் பின்வரும் வரிகள் வெளிப்படுத்துகின்றன: ‘27.12.2002---முகாமில் பழக்கமான சுந்தரிஅக்காவுக்கு ஊரில் இருந்து சிலநாளுக்குப் பிறகு கடிதம் வந்திது. இப்ப யாழ்ப்பாணத்துக்குச் சிங்களஆக்கள் சர்வசாதாரணமா போய் வருகினமாம். தமிழர் கஷ்டப்படுறதைப் பார்த்துக் கவலைப் படுகினமாம்.’

புத்தவிகாரைக்குச் சென்று வழிபாடு நடத்தும் தமிழர்கள் பெரும்பாலும் இல்லை அல்லது விரல் எண்ணிக்கைக்குள் அடங்குபவர்களாக இருப்பார்கள். ஆனால் தமிழர்களுடனான ஊடாட்டத்தால் முருகன் பிள்ளையார்போன்ற தமிழ்க் கடவுளரை வணங்கும் பல சிங்களர் இருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. அதை மறைக்காமல் ‘என்ரை அம்மாவும் மகே அம்மேயும்’ கதையில் பதிவாக்குகிறார் ம.தி.சாந்தன்.

மரணதண்டனை பெற்ற ஒரு சிறைக் கைதியாக மரணத்தையும் பின் மேன்முறையீடுகளின் விசாரணை முடிவுகளைக் காத்தும் எதிர்மறையான முடிவுகளின் பின் மறுபடி மரணத்தையுமென தினம் தன் மரணத்தை மடியிலே கட்டிக்கொண்டு அதைச் சிறிதுநேரம் வெளியேவிட்டும் பின்னர் பிடித்து மடியுள் வைத்துக்கொண்டுமாய் ஒரு பயமும் அவலமுமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த ஒருவர் தான் வாழ்ந்ததின் அடையாளத்தை இவ்வுலகத்தில் நிலைநிறுத்துவதற்கு வேறு வெளி தெரியாத நிலையில் நிறைய வாசிக்கவும் பின் எழுதவுமான நிலைக்கு சென்றிருந்தாரென்றாலும் தன் படைப்புக் கணத்தை ஒரு மரணபயம் கடந்த இயல்பு நிலையில் நிகழ்த்தியிருக்கிறார் என்பது சாதனை.

பல்வேறு உலக நாடுகளிலும் இதுபோன்று ஆயள்தண்டனையோ மரணதண்டனையோ பெற்றிருந்தவர்கள் பலபேர் எழுத்தை ஓர் உபாயமாக்கி மரணத்தை மறக்கவும் தன்னை நிலைநிறுத்துவதன் மூலம் அதை வெல்லவும் செய்திருக்கிறார்கள். இதுபோல் தமிழில் வெகுபேர் இல்லை. தமிழ்த் தேச பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த தியாகு சிறையிலிருந்தபோதுதான் கார்ல் மார்க்ஸின் ‘மூலதன’த்தை தமிழில் மொழிபெயர்த்தார். வைகோ சிறையிலிருந்தபொழுதுதான் தனது ‘சிறையில் விரிந்த மடல்க’ளை எழுதினார். இவையெல்லாம் இலக்கியம் சாராதவை. ஆனால் இலக்கியம்; சார்ந்து முதன்முதலில் இதைச் சாதித்தது ம.தி.சாந்தன் மட்டும் என்றே தெரிகிறது.

இரண்டாவது பகுதியாக நான் கணித்துள்ளது எஸ்.பொ.வின் முன்னீடு.

முன்னீடு என்ற வார்த்தையே எஸ்.பொ.வின் அடையாளம்தான். ஒரு முன்னுரை அல்லது முன்னீடு என்பது விமர்சனமாக அமையக்கூடாதென்ற அதேவேளையில் அது வெறும் புகழாரமாகவும் ஆகிவிடக்கூடாதென்ற மரபிருக்கிறது. எஸ்.பொ.வின் முன்னீடு ம.தி.சாந்தனின் கதைகளது தரத்தை அதீத புகழ்ச்சியின் உச்சமாக ஆக்கிவிட்டிருக்கிறது என்பதை இக் கதைகளின் வாசகனால் சுலபமாக வந்தடையமுடியும்.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் கருணைரவி, யோ.கர்ணன் போன்றோரினதும் புகலிடத்தில் சோபாசக்தி மற்றும் மெலிஞ்சிமுத்தன் போன்றோரினதும் எழுத்துக்களில் நெஞ்சில் அறையும் அதிர்வூட்டும் பல்வேறு கதைகள் இலங்கைத் தமிழரின் உச்ச அவலங்களை மௌனமான மொழியில் பேசுகின்றன. எனினும் மரணதண்டனை பெற்ற ஒரு சிறைக் கைதியாக இருந்துகொண்டு ம.தி.சாந்தன் இந்தளவேனும் நிறைவேற்றினார் என்பது மறக்கப்படமுடியாதது.

ம.தி.சாந்தனின் ‘சில வார்த்தைகள்’ உண்மையிலேயே முதன் முதலாய் தன் படைப்புக்களை நூல் வடிவில் காணும் படைப்பாளியினதாய் இல்லாமல் அனுபவப்பட்ட ஓர் எழுத்தாற்றலாளனின் நடையாக இருப்பது நூலின் சிறப்பு.
‘எனது பேனா விமர்சனத்தை விரும்புவது’என எழுதுகையிலும், ‘சமாதானம்’ சிறுகதையில், ‘வன்னி இயற்கைச் சூழ்நிலைகொண்ட வளமான பூமிதான். இங்கு மக்கள் குறைவு. இது விவசாயத்திற்கான நிலம். இலட்சக் கணக்கான மக்கள் அகதிகளாக வந்ததால் வன்னி துன்பப்பட்டது’ என்று எழுதுகையிலும் அவரது மொழியின் கனதியைப் புரியமுடியும்.

தமிழிலக்கியத்தில் கவனமாகவேண்டிய படைப்பு.

0
நூல்: 13905 (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர்:ம.தி.சாந்தன்
வெளியீடு: அர்ச்சுனா பதிப்பகம் சென்னை
பதிப்பு: 2005

00000

தாய்வீடு, 2014

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்