Thursday, August 28, 2014

நூல் விமர்சனங்கள் 7 கொலம்பசின் வரைபடங்கள்


யோ.கர்ணனின்
‘கொலம்பசின் வரைபடங்கள்’
(குறுநாவல்)

ஆயிரம் நாட்களின் ஈழ வரலாறு சென்றிருந்த சுவடுகள் பதிவாகியுள்ள இந்தப் பிரதி புனைவிலக்கிய வகைமையுள் எது சார்ந்தது என்ற வினா, இதன் கலாநேர்த்தியின் அளவைக் கணிக்க மிகமுக்கியமானது.


‘இப்போதுயுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் அதன் வலியும் வேதனையும் முடியவில்லை. அது ஏற்படுத்திய துயரம் தீரவில்லை. கர்ணனுடைய மனதில் இவற்றின் தீயும் நிழலும் ஆடிக்கொண்டேயிருக்கின்றன.

'முடிவற்றஆவேசத்துடன், சகிக்கமுடியாதவெம்மையோடு இந்தத் தீநடனம் அவருடைய  மனதில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த  நடனத்தைக் கர்ணன் விரும்பவில்லை. ஆனாலும் அது  அவரிடமிருந்து  விலகுவதாகவும் இல்லை’ என  யோ.கர்ணனின் ‘தேவதைகளின் தீட்டுத் துணி’சிறுகதைத் தொகுப்புக்குமுன்னுரை எழுதிய  கருணாகரனின் வார்த்தைகள் மெய்யாக இருக்கக்கூடும்.

அடங்காத் தீயின் கருக்கும் வெம்மை ‘கொலம்பசின் வரைபடங்கள்’ முழுக்கக் காணக்கிடைக்கும். வரலாற்றினால் நிகழ்வுகளைப் பதிவுதான் செய்யமுடியும். இலக்கியம் மட்டுமே நிகழ்வுகள் சிந்திய உணர்வுகளை சிதறாமல் சேகரமாக்குகிறது. உலகமகாயுத்தங்களின் கொடுமைகளை
வரலாற்றினால் அறிந்துள்ளவேளையில்,
அதன் கொடூரங்களையும் இழப்பின், உயிர்ப் பயத்தின் வலியையும் இலக்கியம், கலைசார்ந்த வடிவங்கள் மூலமே நம்மால் உணரமுடிந்தது. இழந்துபோன ஒரு கனவுதேசத்தையும், அக் கனவுதேசத்துக்காக இழந்துபோன உயிர்கள், உடைமைகள், இன்னும் அடைந்த உடல்சார் அதீத வலிகளையும் வரலாறு கண்டுவிட்டது. செம்பாகத்துக்கு மேல் அவை பதிவுமாகிவிட்டன. அவற்றினால் சொல்லமுடியாத வேதனைகளைப் பதிவாக்குகிறது ‘கொலம்பசின் வரைபடம்’.

யுத்தத்தின் கொடுமுனைகளை, மக்களின் அவலங்களை செவிவழிச் செய்திகளாகவும், காணூடக வழியாகவுமன்றி அறிந்திராத எவரையும், அந்தமண்ணின் வழியெங்கும், நீர் நின்ற வழியெங்கும் இழுத்துச் சென்று வலிகளையும், அவதிகளையும், அந்தரங்களையும்  உணரவைத்திருக்கிறது இந்தப் பிரதி.  தரப்பாள், குடிசை, இடிந்த கல்வீடுகளில் கொப்பளிக்கும் சோகத்துக்குச் சாட்சியாக்கியிருக்கிறது.

மட்டுமில்லை, நிகழ்வுகளுக்குச் சாட்சியமாவதில் பெரிய காரியமெதுவுமில்லை. அதன் வலிகளுக்குச் சாட்சியமாகும் கொடூர வேதனை எதனிலும் இல்லை. அந்தக் கொடூர வேதனையில் துவண்டுவிடாமல் அவற்றினைப் பதிவாக்க முயலும் யோ.கர்ணனுக்கு  முதலில் என் நன்றிகள்.

இலக்கிய உலகத்தில் தலையிட்ட அரசியலின் விளைவாக எழுந்த ஒரு சர்ச்சையில்தான் யோ.கர்ணனின் பெயர் எனக்குக் கவனமாகியது. அதனால்தான் ‘தேவதைகளின் தீட்டுத் துணி’யை நான் வாசிக்க நேர்ந்ததும். அப்போது சர்ச்சையை உண்டாக்கும் திடமுள்ளவராகமட்டுமே அவரை என்னால் இனங்காண முடிந்திருந்தது. அவரது துணிவு பாராட்டப்படக் கூடியதாகவும் இருந்தது. கருணாகரன் கூறியபடியான தீநடனம் சகிக்கமுடியாத வெம்மையோடு நிகழ்ந்துகொண்டிருப்பதை, ‘கொலம்பசின் வரைபடங்க’ளில்தான் அர்த்தங்களின் ஊடாகவன்றி, அதை உருவாக்கும் சொல்களின் பிரயோகத்திலிருந்தும், பிரயோகங்களினால் உண்டாக்கக்கூடிய ஊடுகளினூடான அவரவர்க்குமான அர்த்தவெளிப்பாடுகளிலிருந்தும் என்னால் காணமுடிந்திருந்தது.

ஒரு  போராட்டத்தில் இழப்புகளும்,  வலிகளும் ஏற்படாமல் விட்டுவிடுவதில்லை. ஆனால் அதன் தார்மீக நியாயங்களோடு அதன் வழிமுறை இணைகோடாகச் சென்றிருக்கவேண்டும். தோல்வியின் வடுக்கள் மட்டுமே எஞ்சிய போராட்டத்தில்,  அதன் வழிமுறைமீதான சந்தேகத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது ‘கொலம்பசின் வரைபடம்’. இத்தனைக்கும் இதன் குரல் அநியாயங்களுக்கான எதிர்மையாக ஓங்கி ஒலிக்கவில்லையென்பது இப்பிரதியின் விசேடம். விடயங்களைச் சொல்ல கட்டியமைக்கப்பட்ட வடிவம், உத்திகள் இதனினும் விசேடம்.

சொல்லமுடியாத சேதிகளென்று எதுவுமில்லை. சொல்லாத சேதிகளே வரலாற்றில் பரக்கக்கிடக்கின்றன. அரசியல், பொருளாதாரம், சமயம் என்ற எந்தப் பகுப்பினது உரைப்பிலும், கலாபூர்வமான நேர்த்தி அமைந்துவிட்டால் அதுமேலே இலக்கியமாகமட்டுமே எஞ்சுகிறது. அது அனுபவிப்பதற்குரியது. தம்தம் அரசியல்களை மீறியும். ‘கொலம்பசின் வரைபடங்கள்’  நியாயமான அந்த வாய்ப்பினைப் பெருமளவு பெற்றிருக்கவில்லையென்றே தோன்றுகிறது. தமிழ்ப் பிரக்ஞையுலகத்தில் இது துர்ப்பாக்கியம்.

‘தேவதைகளின் தீட்டுத்துணி’ச் சிறுகதைகள் கொண்டிருக்காத வடிவமுள்ளது ‘கொலம்பசின் வரைபடங்கள்’. பெருவாரியான கருத்துக்களும், சம்பவங்களும் இதில் இடம்பெற்றிருப்பினும் இது கட்டுரை அல்லது அனுபவப் பகிர்வு அல்லது காட்சிச் சித்திரம் என்ற அனைத்து வகைமையையும் தன் சொல்களினூடாகவே மறுதலித்து நிற்கிறது.

‘தேவதைகளின் தீட்டுத்துணி’ தொகுப்பிலுள்ள றூட் என்ற சிறுகதைகூட இப்பிரதியின் வேறுவடிவமென்று சொல்லுந் தரத்ததாகவே இருக்கிறது. ஆனாலும் இப்பிரதிபாய்ந்திருக்கிற வெளி, மூன்று பகுதிகளாகியிருப்பினும்கூட அதன் கலாபூர்வத்துக்கான  அத்தாட்சியையும் வரைந்து விடுகிறது.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டுத் தாலமியின் தவறான வரைபடத்துடன் பதினைந்தாம் நூற்றாண்டு கொலம்பசின் செல்வமும் புதிய நாடுகளும் தேடிப் புறப்பட்ட  கடற்பயணம், ஆரம்பத்திலேயே அதன் தோல்விகளின் படிகளை உள்ளடக்கியிருந்தது. நூற்று நான்கு பேர்களைமட்டுமே கொண்ட பினோ, நினா, சந்தாமரியா ஆகிய அவனது பழைய கப்பல்கள் பெருங்கடலின் சீற்றங்களை எதிர்கொள்ள  முடியாதவைகளாக கிரீச்…கிரீச்…எனக் கடலில் கிரீச்சிட்டு தோல்விப் படிகளின் இறங்குவிசைகளாகவே இருந்தன. அவன் அப்பயணத்தில் அடைந்தது இரண்டாம் கடற்பயணத்துக்கான நம்பிக்கை மட்டுமானதாகவே  இருந்தது.

பிரதியின் ‘நான்’ யோ.கர்ணனாக இருக்கவேண்டியதில்லை. இருந்தாலும் அக்கறையில்லை. தாலமி தன் வரைபடங்களுக்கு கடல் வியாபாரிகளின் அனுபவங்களினூடாகக் கொண்ட முடிவுகள்  எவ்வாறு தவறினை ஏற்படுத்தக் காரணமாயின எனக் கூறப்படுகிறதோ, அதுபோல ‘நா’னின்  பயணங்களும் முகவர்கள் கண்ட தவறான வழிகளினூடாக தன் தோல்வியின் முடிவுகளைக் கொண்டிருந்துவிடுகிறது. ‘நா’னிடமிருந்தது கொலம்பசிடம் இருந்த மூர்க்கம் போன்றதல்ல. அது தன்னுயிரைக் காத்துக்கொள்ளக் கொண்ட ஒரு யுத்தம். தன்னுயிரையே பணயம்வைத்துச் செய்யப்பட்டது அது. கத்தியும், ரத்தமும் கண்டு அது நடந்தது. வழிகளின் கண்டடைவும் ,  தப்புகைக்கான முறைகளும் புதிது புதிதாக எழுந்தன ,  உயிரவலங்கள்  தொடர்ந்ததின் காரணமாக.

அவஸ்தையென்பதுதான் என்ன? அதை விளக்குவதற்கான உவமானங்களில் எது மிகப் பொருத்தமானதாக இருக்கமுடியும்? இருதலைக் கொள்ளியெறும்பு என்பது  சரியானதா? வாணலியிலிருந்து தப்பி நெருப்புக்குள் விழுந்தமையென்பது பொருத்தமானதா? இவையெல்லாமே பொருந்துகின்றன சமயங்களில். ‘நான்’  காணும் சமயங்களும் இவையெல்லாவற்றையுமே உட்கொள்ளக்கூடியனவாக அமைந்துவிடுகின்றன. ஆயினும் இந்த ‘நான்’ கொள்ளும் ஆயாசமும், களைப்பும்,  இயலாமையும், ஒருவகை ஞானமும் ‘நா’னின் இரண்டாம் பயண முயற்சியைத் தடுக்கின்றன. வாழ்க்கையின் முறைமைகள் இப்படித்தான் அமையமுடியுமென்று எல்லாமே கதியழிந்துகிடக்கிற தேசத்தில் யார்தான் சொல்லிவிடமுடியும்? அதுஅதன் வழியே  நடந்திருக்கிறது.

எழுபத்திரண்டு பக்கங்களைமட்டுமே கொண்டுள்ள இந்தக் குறுநாவல், தனக்காக எடுத்துக்கொண்டுள்ள பக்கங்கள் அறுபத்தாறுதான். அவையும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலாவது பயண முயற்சி முதலாம் பகுதியிலும், இரண்டாம் பயண முயற்சி மூன்றாம் பகுதியிலும் விவரணமாகின்றன. இரண்டாம் பகுதி இறுதி ஈழ யுத்தத்தின் சிலநாள்கள் முன்னரையும், சிலநாள்கள் பின்னரையும் கொண்டிருக்கிறது. ஓர் உரைக்கட்டாகமட்டும் அமைந்து மற்ற இரண்டுபகுதிகளோடும் ஒட்டாமலிருந்திருக்கவேண்டிய பகுதிகூட. இதை ஓர் உரைக்கட்டாக இல்லாமல் ஆக்கிய முக்கியமான அம்சம், அது  புனைவின் வீறுக்கான மொழியின் வலிமையைக் கொண்டிருப்பது. மற்றது, அது விரிக்கும் களம், அக்காலகட்டத்திய வாழ்க்கைக் களமாக இருந்தமை. இந்த இரண்டாம் பகுதியின் தன்மை எட்டுணையளவு மாறியிருந்தாலும், இரண்டு பயண முயற்சிகளைமட்டுமே கொண்டிருந்து ஒரு குறுநாவல் வடிவத்துள் அமையமுடியாத தன்மை கொண்டிருந்துவிடும்.

‘மனிதர்களினால் பிறந்தவர்கள், மனிதர்களினாலேயே வீழ்த்தப்பட்டார்கள். நடக்கக் காலுடனும் ,பற்றிக்கொள்ளவும் பகிரவும் கைகளுடனும் பிறந்தவர்களையெல்லாம் யுத்தம் முறித்து வீழ்த்தியிருந்தது. விசித்திரப் பிராணிகளைப்போல வீதியோரமாக ஊர்ந்து ஊர்ந்து திரிந்தார்கள்’என்பது ஒரு விபரிப்புமட்டுமில்லை, இறந்தவர்களுக்குப்  பின்னால் ஞாபகமாக்கப்படும் எஞ்சியுள்ள துயரங்கள்.

‘நந்திக்கடலில் கலந்த இன்னோராறாக இரத்தஆறுமிருந்தது. ஆகாயம் உதிர்ந்து விழுந்துகொண்டிருந்தது. நிலம் பிளந்து சிதறிக் கொண்டிருந்தது. திசையறியாத பறவைகளாக சனங்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஓடிய பறவையில் ஒரு பறவையாக நானுமோடிக்கொண்டிருந்தேன்’ என ‘நான்’ விரிக்கும்  களநிலைமையின் விவரிப்பு நான் மேலே குறிப்பிட்ட விவரணத்தின் கலாபூர்வத்தைக் காட்டும்.

‘நீரேரி மையமாயிருந்தது. அப்பால் இராணுவம். இந்தக் கரையிலும் இராணுவம் புகுந்துவிட்டதுதான். ஆனால் , சில மணிநேரங்கள் முன்னர்வரை நமது இராச்சியமாயிருந்தது. ஒரு  புள்ளியளவிலேனும் இப்பொழுது கருகிச் சிதறிவிட்டது. அதனை நம்பமுடியாதிருந்தது. இந்தத் தோல்வி சில மணிநேரங்களிலேயோ, சிலமாதங்களிலேயோ கிடைத்த ஒன்றல்ல. மிகப் பல மாதங்களின் முன்பே எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் வார்த்தைகளும், தருணங்களும்  ஒரேமாதிரியானவையல்ல. மனதை ஆசுவாசப்படுத்திக்கொண்டேனும்  வார்த்தைகளை உச்சரிக்க முடிகிறது. தருணங்கள் அவகாசம் தருவதேயில்லை. மறைந்திருந்து தாக்கும் எதிரியைப்போல முகத்தில் தாக்கிவிடுகிறது. அப்பொழுது நம்புவதற்குச் சிரமமானதாக இருந்துவிடுகிறது. இப்பொழுதும் அப்படித்தான். இராச்சியமிழந்தவர்கள் ஆனோமென நம்பவே முடியவில்லை’ என பக்கம் ஐம்பத்தொன்பதில் வரும் வரிகள் நிகழ்வுக்கும் புனைவுக்குமான உச்சம்.

இராச்சியம், மன்னர், செங்கோல், மதில், கோட்டை எல்லாம் அழிந்தாயிற்று. அவை பெருமையாக நினைக்கப்பட்ட (ஒருசிலராலேனும்) காலம் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. இப்போது இக் குறியீடுகள் ஏளனத்தின் அடையாளங்கள். இது இவ்வாறு வர்ணனையாகிறது யோ.கர்ணனிடத்தில் பக்கம் நாற்பதில்:

‘மன்னாரில் தொடங்கி கிளிநொச்சிவரையிருந்த
நகரங்களும், பட்டணங்களும், சிற்றாறுகளும், பெருங்காடுகளும் எதிரிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. வெகுதொலைவிலிருந்து எங்களிற்கு எதிராக வரத் தொடங்கியவர்கள், கழுகைப்போல மிகவேகமாக வந்தார்கள். அந்த இனத்தின் மொழி எங்களுக்குப் புரியாதது. அவர்கள் கடுமையான முகத்தைக் கொண்டிருந்தார்கள். முதியவர்களை மதிக்கவில்லை. இளைஞர்களிற்கு  இரக்கம்  காட்டவில்லை. நாங்கள் அழிந்துபோகும்வரை அந்த இனம் எங்கள்  கால்நடைகளின் ஈற்றுக்களையும், எங்கள்  நிலத்தின் பயனையும்  உண்டார்கள். எங்களை அழிக்கும் வரை எங்கள் தானியத்தையும், இரசத்தையும், எண்ணையையும், எங்களின் மாடுகளின் கன்றுகளையும், எங்களின் ஆடுகளின் குட்டிகளையும் அந்த இனம் விட்டுவைக்கவில்லை. எங்கள் நாடெங்கும் நாங்கள் நம்பியிருக்கும் உயர்ந்தவையும், அரண்சூழ் கொத்தளங்கள் கொண்டவையுமான மதிற்சுவர்கள்  விழும்வரையும் அந்த இனம் எங்கள் நகர் வாயில்களையெல்லாம் முற்றுகையிட்டது.’

சிறுகதை, குறுநாவல், நாவலென பதிப்பகப் பக்கத்தில் எதுவித பிரஸ்தாபமும் இல்லை இதன் வடிவம்பற்றி. வடிவ தர்க்கம் குறிசுடலை இயலாததாக்கியதோ? அதனாலென்ன? இரண்டு சிறுககைகளும் ஓர் அனுபவப் பகிர்வுமென்றிருந்தாலோ, நாவலென்றிருந்தாலோ ஏற்றுக்கொண்டு பேசாமலிருந்துவிடமுடியுமா? இது ஒரு குறுநாவலெனச் சொல்லித்தானேயாகவேண்டும்!

00000

தாய்வீடு, 2014

No comments:

நேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)

விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வச...