Saturday, August 23, 2014

செ.க.வும் நானும்

செ.க.வும் நானும்‘செவ்வானம்’, ‘சடங்கு’, ‘நீண்டபயணம்’ போன்ற நாவல்கள் வெளிவந்திருந்த காலப் பகுதியில்,ஓர்  இலக்கிய வாசகனான நான் திரு.செ.கணேசலிங்கனை நாவலாசிரியர் என்று தெரியமட்டுமே செய்திருந்தேன். வாசக உலகம் கொண்டிருந்த நூல் வரிசையில் இம் மூன்று நாவல்களுக்கும் மிகமுக்கியமான இடமிருந்தது அப்போது. எங்கள் நண்பர்களின் அண்ணன்மாரது வாசிப்பு முடிந்து நாவல்கள் எங்கள் கைகளை நைந்தே அடைந்தநிலையிலும், பெருவிருப்பார்வத்தோடு அவைகளை நாம் போற்றி வாசித்தோம். செ.கணேசலிங்கனின் படைப்புகள்பற்றிய மதிப்பீட்டிற்குள் இக் கட்டுலையில் நான் போகப்போவதில்லை.

அவரை எழுத்தாளராய் நான் அறிந்திருந்த இத் தருணம் முக்கியமானது. வாசகமனங்களில் நாவல் தலைப்புகள் விளைத்த பாதிப்பும் அதிகம். அது ஒருவகையில் எழுத்தாளரின் ஆளுமை பிம்பத்தை வடிவமைப்பதாயிருந்தது.
அதிகமும்  கொழும்பு பிரதேச வாழ்க்கையிலிருந்த செ.கணேசலிங்கனை யாழ்ப்பாணத்தில் வசித்த என்னால் பெரிதாகப் பரிச்சயப்படுத்திக்கொள்ள முடியவில்லை. கொழும்பு மாநகரின் அவசர வாழ்க்கையில் பஸ் பயணங்களிலோ, இலக்கியக் கூட்டங்களிலோ சந்தித்து ஆச்சரியம்படும் அளவுக்கிருந்த நிலைமைகளையே இலங்கைக் களத்தில் வைத்தான ஞாபகங்களாய் அவர்பற்றி என்னால் சொல்லமுடியும். அவை கட்டுரையின் முக்கியமான குறிக்கோள்கள் இல்லையாதலால் அவற்றை விட்டுவிடலாம்.

செ.க.வை நான் நேரடியாகச் சந்தித்து உரையாடுவதற்கும், தொடர்ந்து ஒரு பழக்கத்தை வைத்துக்கொள்வதற்குமான சாத்தியங்களின் நிகழ்வு 1985இல் சென்னையிலேயே நடந்தது. எழும்பூரில் மகப்பேற்று மருத்துவமனைக்கு எதிரிலுள்ள ஒரு மாடிப் குடியிருப்பில் அப்போது செ.க. தங்கியிருந்தார். அவரை நான் சந்திக்கச் சென்றபோது தளபாடங்களற்ற அந்த அறையில் இரு பக்க சுவரோரங்களிலும் நிறைய புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஆங்கில,தமிழ்ப் புத்தகங்களாய் அவை. மூலதனத்தினதும், லெனின் கட்டுரைத் தொகுப்புகளினதும்  ஆங்கிலப் பதிப்பு வால்யூம்கள் முழுசிகொண்டு நின்றிருந்தன. நிலத்தில் போட்ட மெத்தையில் சாய்ந்திருந்தபடி செ.க. வாசித்துக்கொண்டிருந்தார்.
நான் என்னை ‘ஈழநாடு’ பத்திரிகை ஆசிரியர் குழுவில் வேலைசெய்தவனாக அறிமுகப்படுத்தினேன். மிகவும் அவதானமாகவே செ.க. என்னோடு பேச்சைத் துவங்கியதாய் எனக்குப் பட்டது. தமிழகத்தில் நிறைய இயக்கங்கள் இருந்துவந்த சமயமாதலால் அந்த அவதானத்தில் வலுத்த நியாயமிருந்ததுதான்.

இனக் கலவரம் குறித்தான பேச்சுக்குப் பிறகு, எங்கள் பேச்சு இயல்பில் ஈழ அகதிகளின் தமிழக வருகை குறித்துத் திரும்பியது. மன்னார், மற்றும் யாழ் குடாவின் கரையோரப் பகுதிகளிலிருந்து நிறையப் பேர் தமிழகத்துக்கு அப்போது வந்துகொண்டிருந்தார்கள். சிறீலங்கா ராணுவத்தின் அட்டூழியங்களையும், ஈழத் தமிழ் மக்களின் இன்னல்களையும் பற்றிய பிரஸ்தாபத்தின்போதுதான் ஒருமுறை ஆயுதப் போரட்டத்தைத் தவிர்க்கமுடியாதென்று செ.க. சொன்னது.  இனக் கலவரத்தை நியாயப்படுத்தாவிடினும், தம் சார்புநிலை வழுவாமல் மௌனத்தால் விழுத்திய இடைவெளியினாலேயே அதற்குச் சார்பான ஒருகருத்து உருவாகவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்த இலங்கை இடதுசாரிகள் - இடதுசாரி சார்பானவர்களிடையே,  இயக்கங்களின் ஆயுதப் போராட்டம் நியாயமானதென்ற முதல் குரல் வெடித்தது செ.க.விடமிருந்துதான் என்றே நினைக்கிறேன். ‘அரசியல் தீர்வுகளையும் மாற்றங்களையும் மக்களது போராட்டங்களினூடாக விளைவதையே நாங்கள் வற்புறுத்துகிறோமெனினும், இத்தகைய இன வன்முறைக் காலகட்டத்தில் ஆயுதப் போராட்டங்கள் இயக்கங்கள் வழியாக ஏற்படுவதைத் தவறென்று சொல்லமுடியாது’ எனச் சொன்னவேளையிலும் தேவையான இடங்களில் அழுத்தங்கள் தந்து தான் ஒருசரியான மார்க்சிஸ்ட் என்றுதான் செ.க. இனங்காட்டினார்.

பின்னர் நாம் ஈழ இலக்கிய நிலைமைகள் குறித்துப் பேசினோம். அப்போதுதான் பேச்சு சகஜ நிலைக்குத் திரும்பியது. அன்று என் நண்பன் தொடக்கவிருந்த பத்திரிகைக்காக ஒரு கட்டுரை கேட்டேன் அவரிடம். சொல்லியபடிசிலதினங்களிலேயே ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற கட்டுரையை எழுதித் தந்தார். இதுதான் செ.க.வுடன் எனக்கு ஏற்பட்ட முதலாம் சந்திப்பு.

தமிழகத்தில் அகதி முகாங்களுக்கு வெளியேயிருந்த ஈழத் தமிழர் வாழ்வில் 1995வரையான காலகட்டம் மிகமுக்கியமானது. இதை 1985-90, 1990-1995 என இரண்டாக வகுத்து நோக்குவதுகா லகட்டங்களின் கனதியைப் புரியசுலபமாயிருக்கும். 1985-90 வரையான காலம், வெளிஅகதிகளுக்கு வெகுபரபரப்பையும்  அதனால் இயங்குதளங்களின் அதிகரிப்பையும் ஏற்படுத்திக் கொடுத்த காலமாகும். ஈழத் தமிழர் நலனுக்கான, ஆதரவுக்கான கூட்டங்கள் ஊர்வலங்கள் மாநாடுகள் முன்னெடுக்கப்பட்டமையை இக் காலப் பகுதியின் முக்கியமான அம்சமாய்க் கொள்ளலாம். இன்னொருபுறத்தில் மேற்குலகு நோக்கிய ஓட்டம் நடைபெற்றதையும் சொல்லவேண்டும். அதனால் பலவகையான ஒப்புக்கொள்ளக் கூடிய - கூடாத சட்டமீறல்கள் நிகழ்ந்தமை இக் காலகட்டத்தின் இருண்மை. ஒரு மாய ஈர்ப்பு இவ்வகையில் எந்நேரமும் இருந்துகொண்டிருந்தது ஓர் ஈழத் தமிழனை நோக்கி. இதிலிருந்து தவறுவது எல்லோருக்கும் சுலபமாய் இருக்கவில்லை.

1990 காலகட்டமும்,அதற்குப் பின் தொடர்ந்த காலமும் பெரும் அவலம் படைத்தது. பத்மநாபா கொலை, பின்னால் ராஜீவ் காந்தி கொலையென பெரும்பழி ஈழத் தமிழர்மேல் விழுந்தது. அதுவரை காலமிருந்தஅவர்கள்மீதான அனுதாபமும்  நல்லுறவும் ஒருபுள்ளியிலிருந்து அரசியல் தளத்திலும் விபரம் புரியாத பொதுமக்கள் தளத்திலும் தலைகீழ் மாற்றமடைந்து போயின. இந்த வெறுப்பின் அக்கினித் தகிப்பு மனசெல்லாம் சுட்டது. பத்து மடங்கு அக்னிநட்சத்திர காலத்தைக்கூட தாங்கலாம்போல இருந்தது. அக் காலத்தில் மனம் சார்ந்து  இயங்கிய பலர் காணாமலே போயிருந்தனர்.

இத் தகிப்பை நானே உணர்ந்தேன். ஆனாலும் ஒதுங்க படைப்பிலக்கிய நிழல் இருந்தது. 1985இல் ‘எங்கும் இரண்டாய்’என்ற சிறுகதை கணையாழியில் வெளியாகியிருந்ததிலிருந்து தினமணிகதிர், அரும்பு, சூர்யோதயா, கல்கி, தாமரை என்று இந்தியப் பத்திரிகைகளில் பரவலாக எழுதிக்கொண்டிருந்தேன். இந்தஆழ்ச்சயே ஒருவகையில் வெளி அழுத்தங்களின் தகிப்புக்களின் பாதிப்புகளிலிருந்து தப்பிப்பதற்கான உபாயமாகவும் இருந்தது.  படைப்புவும், இலக்கியக் கூட்டங்களுக்குச் செல்லலும், இலக்கியவாதிகளுடனான அளவளாவுகையும் விமோசனங்களாய்த் தெரிந்தன. ஆனாலும் பொருளாதாரவகையில் ஏற்பட்டுக்கொண்டிருந்த தீரா நசிப்பு படைப்பின் மென்னியை நெரித்தது. இந்தநிலையிலும் ‘எழுதாதசரித்திரங்கள்’ என்ற குறுநாவல் தொகுப்பையும், ‘விதி’ என்ற நாவலையும் தொண்ணூற்று மூன்றளவில் மகாபிரயத்தனத்தில் வெளிக்கொண்டு வந்திருந்தேன்.
ஆனால் மேலே எதுவும் முடியவில்லை.  என் இருப்பை புதிய படைப்பாக்கங்கள் மூலம் வெளிப்படுத்தும் முயற்சிகள்கூட சாத்தியமாகவில்லை. இந்த நிலைமையில் ஒருசிறுகதைத் தொகுப்பாவது ஆசுவாசமாய் இருக்குமென எண்ணினேன். அதற்கும் முகாந்திரமற்றுப் போனமை ஒரு பாதிப்பாகவே என்னில் இறங்கியிருந்தது.

‘இலக்கு’ காலாண்டிதழை நடத்த ஆரம்பித்தமை ஒரு தீவிர இலக்கியச் செயற்பாட்டுக் களத்துள் என்னை இழுத்துவிட்டிருந்தாலும், ஒரு வெளிமனிதனாயிருந்து உள்ளே நிகழ்பவைகளைக் கண்டுகொண்டிருக்கும் ஒரு படைப்பாளியாகவே நான் இருந்துகொண்டிருந்தேன். விதி நாவலுக்குப் பிறகு, என் இருப்பை வெளிப்படுத்தும்படியான ஒரு தொகுப்போ நாவலோ எனக்குக் கொண்டுவருவது சாத்தியமற்றிருந்தது.

இந்த பத்து அல்லது பன்னிரண்டு வருட காலத்தில் செ.க.வை  நான் பலமுறை வீட்டிலும் வெளியிலும் சந்தித்திருக்கிறேன். சுய லாபம் கருதிய  இலக்கியப் பேச்சில் -பேச்சில் எப்போதும் நான் ஈடுபட்டதில்லை. ஒருபோது என் எண்ணத்தை வெளிப்படுத்தும் உந்துவிசையை மனம் பெற்றிருந்தவேளை என் தவிப்பை செ.க.விடம் சொன்னேன். செ.க. அதைப் புரிந்துகொண்டார். மட்டுமில்லை, தனது குமரன் பப்ளிசர்ஸ் மூலமாகவே ஒரு நூலை வெளியிடவும் முன்வந்தார்.  இவ்வாறு வெளிவந்ததுதான் என் ‘நெருப்பு’ சிறுகதைத் தொகுப்பு. அது அந்த ஆண்டில் லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கியப் பரிசு, திருப்பூர் தமிழ்ச் சங்கப் பரிசு ஆகிய இரண்டு பரிசுகளையும் ஒருங்கே பெற்றது. என் எழுத்து முயற்சிகளின் மறு அவதாரம் ஆரம்பமாகிற்று. நான் ஓர் உயிர்த்த மனிதனாக அப்போது இருந்தேன் என்பது உண்மையான பேச்சு.

‘கனவுச் சிறை’ மகாநாவல் முயற்சியில் நான் தீவிரமாய் இறங்கியிருந்தவேளை, அதன் இரண்டாம் பாகமான ‘வினாக் கால’த்தைக் கொண்டுவர சிறிதுசிரமப்பட்டுக்கொண்டிருந்த பொழுதில், கணிசமான உதவிசெய்தவர் செ.க. என்பதை எப்போதும் நான் நன்றியோடு நினைவுகொள்வேன். இலக்கியவாதிகளுக்கு உதவுகிற இலக்கியவாதியாய் இருத்தலென்பது சாதாரணவிசயமில்லை. செ.க.வுக்கு அப்படியான ஒரு பெருமை எப்போதும் இருக்கும்.

இக்காலங்களில் எல்லாம் கண்டிப்பு நிறைந்த ஒரு மூத்த சகோதரரினது போன்றே அவரது தொடர்பு  இருந்துகொண்டிருந்தது. கால விரயத்தை விரும்பாமலும், தம் கொள்கையில் இறுகிய பிடிமானத்தோடும், கவனம் சிதறும் பேச்சுக்களில் பெரிதும் அக்கறை காட்டாமலும் இருந்த செ.க.வுக்கும் எனக்குமிடையே வயதில் சுமார் இரண்டு தசாப்த கால இடைவெளியுண்டு. அது அக்கறையைஅ திகரித்து, அறிவுரை கூறும் தளத்துக்கு அவரை தானாகவே உயரவைத்தது.  அதை என் பெறுபேறாகவே நினைக்கிறேன்.

பிறிரின் குறைகளைப் பேசுகிறவரில்லை செ.க. ஆனாலும் ஒருபோதில் ஒரு சகஎழுத்தாளர் தன்மீது சொன்ன புறணியும் பொல்லாப்பும்பற்றி என்னோடு மனம் நொந்து பேசி உணர்ச்சிவசப்பட்டார். அண்ணா சதுக்கத்தில் பஸ் ஏறி வடபழனி வரும்வரை செ.க. கோபம்கூட படவில்லை, தன் மனநோவையே சொன்னார். அவற்றையெல்லாம் கேட்டு அச் சகஎழுத்தாளர்மீது நான்தான் கோபப்;பட்டேன்.

தமிழகத்தில் வைத்துப் பார்த்தால் சுமார் பதினெட்டுவருச  தொடர்பு எனக்கும் செ.க.வுக்கும். மிகநெருங்காமலும், மிகவிலகாமலும் இருக்கிற இந்த அணுகுமுறை மிக இதமாக  இருக்கிறது.  இருவருக்குமே.  இலக்கியத்தின் வேறுவேறு ஓடு பாதைகளில் ஒரே குறியைநோக்கிய நகர்வில் நாங்கள். எனினும் இன்னும் வியக்கவும், போற்றவும் கூடியதாகவே செ.க.வின் ஆளுமைகள். கொள்கையாளராய், எழுத்தாளராய், பதிப்பாளராய் பல முகங்கள் அவருக்கு இன்று.  எனக்கு முதலில் தெரிவதெல்லாம் அந்த மூத்த சகோதரரின் முகம்தான். அதை அவரின் பவளவிழா மலரில் பதிவுசெய்வதில் எனக்கு பெருமகிழ்வு.
000
(இது செ.க. பவளவிழா மலருக்காக நான் எழுதிய கட்டுரை. இது மலரில் வெளியானதா இல்லையா என்பதும்  எனக்குத் தெரியாது. இதுபற்றி நான் மறந்தே போயிருந்தேன். அண்மையில் (2014) தமிழகம் சென்றிருந்தவேளை என் எஞ்சியிருந்த புத்தகக் கட்டுகளுக்கிடையில் அக் கட்டுரையின் பிரதியொன்று கிடைத்தது. அதுவே ஒரு பதிவுகருதி  இங்கே வெளியிடுகிறேன். –தேவகாந்தன்)

No comments:

நேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)

விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வச...