தமிழ்த் தேசியம்பற்றிய ஒரு கண்ணோட்டம்
மார்க்ஸியர், இடதுசாரிகள், தேசியவாதம்: தமிழ்த் தேசியம்பற்றிய ஒரு கண்ணோட்டம் எப்போதும் கேட்பதற்குப் புதிது புதிதாக கேள்விகள் பிறந்துகொண்டே இருக்கின்றன. இது சுவாரஸ்யமானதும், அதேவேளை முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். புதிய கண்டுபிடிப்புக்களும், புதிய சிந்தனைகளின் தோற்றமும் இந்தக் கேள்விகளின் அவசியத்தை மனிதர்கள் மீது சுமத்திக்கொண்டிருக்கின்றன என்பதாக இதற்கான விடையை நாம் கண்டடைய முடியும். தேசியவாதம் அல்லது தமிழ்த் தேசியவாதம் குறித்து இன்றெழுந்திருக்கும் கேள்விகளும் புதிய சூழ்நிலைமைகளின் தாக்கத்தினால் விளைந்தவையே என்பது தெளிவு. தேசியவாதம் என்ற கருத்தாக்கம் ஓரளவு முதலாளித்துவ அமைப்பின் ஆதிக்கம் அரசியலில் வலுப்பெறத் தொடங்கிய காலகட்டத்தில் உருவானதென்றாலும், அது குறித்த சிந்தனை பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு மேலேயே அரசியற் புலத்தில் காலூன்றிவிட்டது. சரியாகச் சொன்னால் பதினெட்டாம் நூற்றாண்டின் எழுபதுகளில். இந்தச் சொல்லை ஒரு கருத்துருவத்தின் வெளிப்பாட்டுக்காக செதுக்கியெடுத்தவர் ஜோஹன் கொட்பிறைட் ஹெடர் என்பவர். எவ்வாறு போஸ்ட் மாடனிஸம் என்ற சொல், வரலாற்றாசிரியர் ஆர்னால்ட் ரொயின்பீ எ...