இலக்கியச் சந்திப்பு: 2



      இலக்கியச் சந்திப்பு :
      இலங்கை எழுத்தாளர் செங்கை ஆழியான்  

(இலங்கையின் நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான செங்கை ஆழியான் (கந்தையா குணராசா) நாற்பது வரையான நூல்களின் ஆசிரியர். அவற்றில் முப்பத்தைந்து நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு ஆய்வு சம்பந்தமான சரித்திர நூல்கள். தேசிய அளவிலும் சாஹித்ய மண்டல பரிசினை எட்டு தடவைகள் பெற்றிருக்கிறார். இவரது‘வாடைக்காற்று’ நாவல் திரைப்படமாக வந்தது. ‘மரணங்கள் மலிந்த பூமி’ நாவலுக்குக் கிடைத்த பரிசினை ஏற்கும்பொருட்டு தமிழகம் வந்த இவரை சென்னையில் சந்திக்க முடிந்தது. யுத்தத்தை, மனிதாயத சிதைவை வெறுக்கும் இந்தப் படைப்பாளி ஈழத்தின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவர். அவருடனான சந்திப்பிலிருந்து..)

சந்திப்பு: தேவகாந்தன்


தேவகாந்தன்:அண்மைக் காலத்தில் தீவிரமாக நடந்த யுத்தங்களின் பின்னால் யாழ்ப்பாணத்தில் நிலைமை எப்படி இருக்கிறது?

செங்கைஆழியான்: அழிவுதான். யாழ்ப்பாணம் மரங்களற்ற வெறுமையும், இடிந்த கட்டிட சிதிலங்களும், நிறைந்த மரணங்களுமாய் இருக்கிறது. முந்திய பதினேழு ஆண்டுக் காலத்தில் ஏற்படாத அழிவு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டிருப்பதாக நினைக்கிறேன். போர் நிறுத்தப்பட்டாக வேண்டும். மரணங்கள் தடுக்கப்பட்டாக வேண்டும். மக்களின் வாழ்நிலை பழையபடி திரும்பியாகவேண்டும். ஆனாலும் நிலைமைகள் நம்பிக்கை அளிப்பனவாய் இல்லை.


தேவகாந்தன்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பரிசை ஏற்பதற்காகத்தான் தமிழ்நாடு வந்தீர்களா?

செங்கைஆழியான்: ஆம். எட்டயபுரத்தில் பாரதி நினைவு நாளை பெருமன்றம் ஆண்டுதோறும் கொண்டாடுகிறது. பாரதி பிறந்ததும், பின்னால் கல்கி முதலியவர்களால் மணி மண்டபம் கட்டப்பட்டிருப்பதுமான  ஊராகையால் அவ்வாறு செய்கிறார்களாம். போட்டிக்கு அனுப்பப்பட்ட நாவல்களில் இரண்டு நாவல்கள் பரிசு பெற்றன. எனது ‘மரணங்கள் மலிந்த பூமி’ என்பது ஒன்று. மற்றது மா.நடராசனின் ‘ஊர் கலைஞ்சு போச்சு’ என்பது.


தேவகாந்தன்: உங்களது பரிசு பெற்ற நாவல்பற்றி கொஞ்சம் சொல்லங்களேன்.

செங்கைஆழியான்: எனது நாட்டின் நிலைமைபற்றிய கதைதான் அது. 1995இல் ஏற்பட்ட புலப்பெயர்வை, திரும்புகையை மய்ய நிகழ்வுகளாக வைத்து கதையை அமைத்திருந்தேன். வடக்கிலிருந்து, குறிப்பாக வலிகாமத்திலிருந்து பெருவாரியான மக்கள் அந்தச் சமயத்திலே புலம்பெயர்ந்தார்கள். சுமார் ஐந்து லட்சம் பேர் அவ்வாறு புலம்பெயர்ந்ததாய்த் தெரியவருகிறது. அதை விரிவாக நாவல் பதிவு செய்திருக்கிறது. எனக்கு ஆத்மார்த்தமான திருப்தியும், மகிழ்ச்சியும் தந்த என் நாவல்களுள் ‘மரணங்கள் மலிந்த பூமி’யும் ஒன்று.


தேவகாந்தன்: அப்படியானால் மற்றைய நாவல்கள் எவை?

செங்கைஆழியான்: ஒன்று ‘காட்டாறு’, இன்னொன்று ‘குவேனி’. காட்டாறு எழுபத்தேழிலும், குவேனி எண்பத்தாறிலும் வெளிவந்தன. குவேனி நாவல் அதனளவில் முடிவுற்றிருந்தாலும் ‘தர்மராஜா வீடு’ என்கிற நீண்ட வரலாற்றுப் புனைகதையில் ஒரு அத்தியாயம்தான் அது. காட்டாறு நாவல் என் சமூக அக்கறையின் பதிவு. கச்சிதமான பாத்திரங்கள் அமைந்து, இயல்பான நடையும் சேர்ந்து வந்த நாவல் அது. அது இப்பொழுது சிங்களத்தில் மொழியாக்கம் பெற்றிருக்கிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரான சுவாமிநாத விமல் அதை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். கூட எனது சிறுகதைத் தொகுதியான ‘இரவு நேரப் பயணிக’ளும் மொழிபெயர்ப்புபாகியிருக்கிறது.


தேவகாந்தன்: நீண்டகால போர்ச் சூழல் காரணமாக இலங்கையில் நவீன தமிழ் இலக்கிய வாசிப்பு குறைந்திருப்;பதாகச் சொல்லலாமா?

செங்கைஆழியான்: அதிகரித்திருக்கிறது. இந்த வாசகப் பரப்பின் அதிகரிப்பு ஒருவகையில் ஒன்றில் ஆழ்ந்து சூழ்நிலையை மறப்பதற்கான உபாயமாகத் தொழிற்படினும், பாரபட்சமற்றுச் சொல்லுவதானால் இலங்கை கல்;வித் துறையின் சிறந்த செயற்பாட்டையும் ஒரு காரணமாகச் சொல்லவேண்டும். நவீன இலக்கியப் பரிச்சயத்தை ஏழாம், எட்டாம் வகுப்புகளிலிருந்தே இலங்கையில் ஆரம்பித்துவிடுகிறார்கள். பல்கலைக் கழக பட்டப் படிப்பு வகுப்புகளுக்கு நவீன இலக்கியங்கள் பாடப் புத்தகங்களாய் அமைந்திருக்கின்றன.

இன்னும் …தமிழ்ச் சிறப்புப் பட்ட வகுப்புக்கு ஒரு முழுத் தாள் நவீன இலக்கியத்துக்கானதாய் இருப்பதைச் சொல்லவேண்டும். கலாநிதிப் பட்டப் படிப்பு வகுப்புக்குப்போல் சிறப்புத் தமிழ்ப் பட்டப் படிப்புக்கும் இலங்கைப் பலகலைக் கழகத்தில் ஒரு மாணவன் ஒரு பொருளை நவீன இலக்கியத்தில் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்திருக்கவேண்டும். இதன் முக்கியமான விளைவு என்னவென்றால், பல சிற்றிதழ்களையும், பல படைப்பாளிகளையும், பல ஆக்கங்களையும் தேடியெடுத்து தொகுத்து, ஒழுங்குபடுத்தி, சேகரமாக்கியுள்ளார்கள் பல்கலைக்கழத்திலே என்பதுதான்.
இன்னும் அத்தேடல்களுடன் ஒழுங்குபடுத்துதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

யாழ்.பல்கலைக் கழகத்தில் பதிவாளராய் இருந்த காரணத்தால் இந்த விவரங்களை உயர்ந்த பட்ச துல்லியத்துடன் என்னால் சொல்ல முடியும். இடைவெளி ஏற்பட்டுவிடாதபடி தமிழிலக்கிய வரலாற்றைப் பதிவுசெய்ய இது பெரிய வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்றே நம்புகிறேன். தமிழ்நாட்டில் இத்தகைய நிலைமை இன்னும் ஏற்படவில்லையென்றே தெரிகிறது.


தேவகாந்தன்: உங்கள் எழுத்துக்கள் அவ்வாறு ஆய்வுக்கு எடுக்கப்பட்டுள்ளனவா?

செங்கைஆழியான்: ஆம். நான்கு தலைப்புகளில் என் எழுத்துக்களை இதுவரை ஆய்வு செய்திருக்கிறார்கள். 1. செங்கைஆழியான்: வாழ்வும் எழுத்தும் 2. செங்கைஆழியான் சிறுகதைகள் 3. செங்கைஆழியானின் பெண் பாத்திரங்கள் 4. காட்டாறு நாவல் முழுமையான ஆய்வுக்குப் போயிருக்கிறது.


தேவகாந்தன்: பேராசிரியர்கள் கா.சிவத்தம்பி, நா.சுப்பிரமணியன் போன்றோரிடமும் இதுகுறித்து உரையாடியிருக்கிறேன். நீங்களும் ஒரு படைப்பாளி என்கிற வகையில் என் கேள்விக்கு உங்களுடைய பதில் எவ்வாறு அமையுமென்பதை அறிய மிகவும் ஆவலாயிருக்கிறது. இப்போது பாருங்கள்;;;…ஆரம்ப காலம் தொட்டே அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகள் குறித்த மாற்றங்கள் வளர்ச்சிகளெல்லாம் இந்தியாவின் பிரதிபலிப்புகளாகவே அமைந்திருந்திருக்கின்றன. கலையும், இலக்கியமும் இதற்கு விதிவிலக்காயிருக்கவில்லை. பத்திரிகை, நாவல், சிறுகதை என்று எல்லாமே இலங்கையில் தமிழ்நாட்டு நிலைமைககளையே பிரதிபலித்தெழுந்தன என்று சொல்வதில் தப்பில்லை. அது இன்றுவரைகூட தொடர்வதாக ஒரு தோற்றம் இருக்கவே செய்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

செங்கைஆழியான்: நீங்கள் சொன்னதுபோல அரசியல் பொருளாதார சமூக மாற்றங்கள் இந்திய உபகண்டத்தின் பிரதிபலிப்பாக, பாதிப்பாகவே இங்கு ஏற்பட்டன என்று வேண்டுமானால் சொல்லலாம். இலக்கியத்தைப் பொறுத்தவரையும்கூட நவீன இலக்கியத்தின் காலம்வரையும் அவ்வாறு சொன்னால் தவறில்லை. ஆனால் பின்னாலே அப்படியில்;லை. ஈழத்து இலக்கியம் தனித்துவ அடையாளங்களுடன்தான் முன்னேறிக் கொண்டிருக்கிறது. நிறைய புதுப்புது எழுத்தாளர்கள் ஈழத்திலே தோன்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லாம்ஈழத்து இலக்கிய பாரம்பரியத்தை அடுத்த காட்டத்துக்கு எடுத்துச் செல்கிறவர்களாய்த்தான் இருக்கிறார்கள்.

நீங்கள் சொல்லியவிதமாக ஒருவேளை புலம்பெயர்ந்த நாடுகளிலே இருப்பதாகக் கொள்ளலாமென நினைக்கிறேன். அங்குள்ள எழுத்தாளர்கள்தான் தமிழகத்துப் பாணியைப் பின்பற்ற அல்லது அதன் பாதிப்பில் எழுத முயன்றுகொண்டிருக்கிறவர்கள். உங்களுடைய எழுத்தை அந்த மாதிரியானதெனச் சொல்லமுடியாது. அது ஈழத்து இலக்கியத்தின் தன்மைகளோடு இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்தியாவுக்கு அப்பால் புலம்பெயர்ந்தவர்களிடம்தான் அந்தப் பிரதிபலிபோ மாற்றமோ இருப்பதை நான் கவனித்து வருகிறேன்.


தேவகாந்தன்: தமிழகத்தில் சமீபத்தில் வெளியான நாவல்கள்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

செங்கைஆழியான்: நிறைய நாவல்கள் இப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் உடனுக்குடன் வாசித்துவிடக்கூடிய வசதி வாய்ப்புகள் யாழ்ப்பாணத்தில் இல்லை. ‘வி~;ணுபுரம்’ வாசித்தேன். பலபேர் புரியவில்லை, விளக்கமில்லை என்றெல்லாம் சொன்னார்கள். வாசிப்பில் பெரிய சிரமம் இருக்கவில்லை எனக்கு. ஆனால் புதிதாக அது எதையும் சொன்னதாக எனக்குத் தோன்றவில்லை. எமது அத்வைத மரபில் இல்லாத எது அதில் இருக்கிறது? நல்ல நடையாலும், தேர்ந்த சொற்கள் மூலமும் நன்றாகக் கட்டப்பட்ட நாவல்தான் அது. அதன் செய்நேர்த்தி அற்புதம். அதேவேளை படைப்புரீதியாக அதைப் பாராட்ட என்னால் முடியவில்லை. தமிழ் நாவலின் கட்டமைப்பையும், மொழி நடையையும் ஒரு புதிய தளத்தில் வைத்து பரீட்சார்த்தம் செய்த நாவல் மட்டுமே அது.


தேவகாந்தன்: சுந்தரராமசாமியின் எழுத்துக்கள்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

செங்கைஆழியான்: சுந்தர ராமசாமியின் எழுத்துகள் நிறைய வாசித்திருக்கிறேன். ‘ஒரு புளியமரத்தின் கதை’ அக்காலகட்டத்து தமிழிலக்கியத்தை கொஞ்சமேனும் முன்னகர்த்திய நாவல். பின்னால் ‘ஜே. ஜே. சில குறிப்புகள்’ வேறுவகையான எழுத்தில் வந்தது. ஆனாலும் அதன் பின் வந்த‘குழந்தைகள்-பெண்கள்-ஆண்கள்’ நாவல் அவரது நடையின் படிமுறையான வளர்ச்சியின் சிகரம்.


தேவகாந்தன்: யதார்த்த வகை படைப்புகளுக்கான மாதிரி நடையென்று இந்த நடையைச் சொல்லலாம். ஆனால் ஒரு தர்க்கத்தைப் புரியவும், தத்துவத் தளத்தில் விசாரிப்புக்களை மேற்கொள்ளவும்கூட இந்த நடையால் முடியும். ஒவ்வொரு சொல்லும் செதுக்கி வைத்த மாதிரி அவரது நாவல்களில் அமைவு பெற்றிருக்கும், இல்லையா?

செங்கைஆழியான்: நிச்சயமாக. புதியவகை எழுத்துக்கள் பரவலாக உருவாகி வருகின்றன. அவற்றுள் இது ஒன்று. வாசிப்புக்கும், சிரமமற்ற புரிதலுக்கம் இந்த நடை மிக்க வசதியானது. ஈழத்தில் பரவலான படைப்பாக்க முயற்சிகள் இலக்கியத்துக்காகத் தெரிந்தெடுத்த ஒருஇடைநிலை நடையிலேயே நடைபெற்று வருகின்றன என்று சொல்லவேண்டும். என் நிலைப்பாடும் இதுதான். மக்களை இலக்கியம் சென்றடைவது மிக முக்கியமானது. வாசிக்கப்படாவிட்டால் எழுதுவதில் அர்த்தமில்லை. அதேவேளை இன்னொன்றையும் நான் தவறாது சொல்லவேண்டும். எழுத்துகளால் பெரிய சமூக, அரசியல் மாற்றங்களேதும் இதுவரை காலத்தில் நிகழ்ந்ததாகச் சொல்ல முடியாது. அதாவது…எழுத்தினால் புரட்சியென்று எதுவும் ஏற்பட்டதில்லை. ரசிப்பும், புரிதல் திறனுமுள்ள ஒரு தளத்தினருக்கானதே எழுத்து.


தேவகாந்தன்: சரி, விட்டுவந்த வி~யத்துக்கு வருவோம். வி~;ணுபுரம் தவிர உங்களுக்குப் பிடித்த வேறு படைப்புகள் என்னென்ன?

செங்கைஆழியான்: தோப்பில் முகம்மது மீரானின் ‘துறைமுகம்’ நாவல் எனக்குப் பிடிக்கும். அடுத்ததாக ராஜம் கிரு~;ணனின் ‘அலைவாய்க் கரையில்’. இந்த இரண்டையும் காரணத்தோடுதான் சொல்கிறேன். ‘அலைவாய்க் கரையில்’ நாவலில் படைப்பாளி சார்ந்திராத களத்தில் கதை விரியும். கள ஆய்வு நிகழ்த்த கடலோரம் சென்று, அங்குள்ள மக்களோடு மக்களாய்ப் பழகி மிகுந்த ஈடுபாட்டோடு இந்த நாவல் எழுதப்பட்டிருக்கும். தன் அனுபவத்தில் அறியாத ஒரு களம்பற்றி எழுத வருகிற படைப்பாளிக்கு இந்தளவு முயற்சிகள் அவசியம். ஆனால் ‘துறைமுகம்’ நாவலோ அந்தக் களத்தில், அந்தச் சமூகத்தில் வாழ்ந்த ஓர் எழுத்தாளனின் படைப்பு. ‘அலைவாய்க் கரையில்’ காண்கின்ற குறையும்,‘துறைமுக’த்திலிருக்கிற நிறையும் இதுதான்.


தேவகாந்தன்: இவையும் யதார்த்த வகைப் படைப்பாக்கத்துக்குரிய நடையிலேயே வந்திருக்கின்றன.

செங்கைஆழியான்: கல்கியின் எழுத்துக்களை இலக்கியமாய் இப்போது அங்கீகரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுபோல‘கடல்புறா’வும்,‘வேங்கையின் மைந்த’னும், நா.பார்த்தசாரதியின் எழுத்துக்களும்கூட காலதாமதமாகவேனும் அங்கீகரிக்கப்படும். ஏனெனில் அவை பலபேரின் யோசிப்புக்கும் சிந்தனைக்கும் காரணமாய் இருந்திருக்கின்றன. வெகுஜன மட்டத்தில் வாசிப்புச் சுகமும், யோசிப்புக்கு உந்துதலும் ஏற்படுத்திக் கொடுத்த அத்தகைய எழுத்துக்களை ஒதுக்கி விடுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்றே எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.


தேவகாந்தன்: இப்போது ஈழத்தில் விமர்சன தளத்தில் ஏற்பட்டுவரும் ஒருவகை மாற்றத்தை இது குறிப்பதாகக் கொள்ளலாமா?

செங்கைஆழியான்: நிச்சயமாக அப்படித்தான்.


தேவகாந்தன்: மறுமலர்ச்சி இதழ்ச் சிறுகதைத் தொகுப்பு உங்களுக்கு எப்படியான அனுபவத்தைத் தந்தது?

செங்கைஆழியான்: அதுபோல சிரித்திரன் இதழ்த் தொகுப்பும் வெளிவந்திருக்கிறது. ஈழகேசரி,ஈழநாடு, சுதந்திரன் போன்ற இதழ்களில் வெளிவந்த சிறுகதைகளையும் தொகுக்க முனைந்துகொண்டிருக்கிறேன். கடந்த சில காலமாய் நான் இவைகளுக்காக வாசித்த சிறுகதைகளின் எண்ணிக்கையே ஆயிரத்துக்கு மேலாக வரும். ஈழத்துச் சிறுகதைகளின் விஸ்தீரணம் மட்டுமில்லை, ஆழமும் இப்போதுதான் தெரிகிறது.

முப்பதுகளிலே ஈழத்தில் அருமையான சிறுகதைகளை எழுதிய பாணன் போன்றவர்கள் என்னைப் பிரமிக்கவே வைத்துள்ளனர். சிறுதைக்கான உருவ, உள்ளடக்க, உத்திகளுடன் அவை நேர்த்தியாக இருக்கின்றன. ஈழம் இலக்கிய வகைகளில் தமிழகத்தைப் பின்பற்றுவதான ஒரு தோற்றம் இருப்பதாக முன்பு சொன்னீர்கள். எனக்க அவை இரண்டும் தத்தம் தனிப் பதையில் செல்வதாகத் தெரிகிறது. யாழ். பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய காலங்கள் எனக்கு இத்துறையில் ஆழ்ந்து ஆழ்ந்து செல்ல வசதியாக இருந்தன. இதில் என்போல் ஆழ, அகலச் சென்றவர்கள் வேறுபேர் இல்லையென்றுகூடச் சொல்லலாம். அந்தத் துணிவில் இந்தக் கருத்தைக் கூறுகிறேன்,சற்று வற்புறுத்தலாகவே. அச்சு சாதன வசதிக் குறைவு காரணமாய் ஒரு பின்னடைவு இருந்தாலும், அது பரப்பளவைப் பாதித்ததே தவிர, தரத்தைப் பாதிக்கவேயில்லை.

இந்த தேடல் காலத்தில் நான் கண்டடைந்த ஒரு சிறந்த படைப்பாளிதான் முனியப்பதாசன். இளமையிலேயே காலமாகிவிட்ட இப்படைப்பாளியின் இருபது கதைகளே மொத்தத்தில் வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது. இவற்றில் பதினான்கு கதைகளைத் தேடி எடுத்துவிட்டேன். மீதி ஆறு கதைகளும் அகப்பட்டதும் தொகுப்பாக வெளியிடுகிற திட்டம். அது வெளிவந்தால்,ஈழத்தின் சிறுகதை வளத்தினை திரட்டிக் காட்டுவதாக அமையக் கூடும். உலகத் தரத்துக்கு இணையான சிறுகதைகள் அவருடையவை. விரைவில் என் முயற்சி ஈடேறும் என்று நம்புகிறேன். ஏழு வாரங்கள் மட்டுமே வெளிவந்து இடையில் நிறுத்தப்பட்ட இந்த அற்புதமான படைப்பாளியின் நாவலொன்றும் இருக்கிறது. ‘கேட்டிருப்பாய் காற்றே’ என்ற தலைப்பிலான அந்தக் குறை நாவல்,ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்தது. ஒருவகையில் முனியப்பதாசன் என்ற படைப்பாளி பரவலாகத் தெரியவர ‘ஈழநாடு’ நிர்வாக ஆசிரியர் கே.பி.ஹரன் ஒரு காரணமாயிருந்தார் என்பதை இந்தச் சமயத்தில் குறிப்பிடவேண்டும்.


தேவகாந்தன்: புவியியல் ரீதியிலான ஆய்வுகளின் மூலம் சரித்திரத்தை அணுகி, அதிலிருந்து புனைவு பெற்றனவாக உங்களின் சில படைப்புகளைச் சொல்லமுடியும். ஊதாரணமாக ‘பழைய வானத்தின் கீழே’ என்ற குறுநாவல். இன்னொன்று ‘ஜன்ம பூமி’ நாவல். குறுநாவல் ஈழத்தின் புராதன வரலாறு, பூகோள நிலைமைகளை அடிப்படையாய்க் கொண்டு எழுந்திருக்கிது என்றும், நாவலோ சமகால அரசியல் பிரச்னைகளுக்கான மூலத்தை புவியியல் சார்ந்து தேடுகிற முயற்சியில் பிறந்திருக்கிறது என்றும் சொல்லலாம். இல்லையா?

செங்கைஆழியான்: நிச்சயமாக. ‘பழைய வானத்தின் கீழே’ குறுநாவல் புவியியல் ஆதாரங்களைக்கொண்டு வரலாற்றை அணுகியதன் விளைவு. தாய்வழிச் சமூக அமைப்பு நிலவிய காலத்தில் கதை நிகழ்கிறது. சுமார் 500000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலக் களம். இந்தியாவிலிருந்து கால்நடையாக-தரைமார்க்கமாக- இலங்கை வருகிற நகுலி என்கிற பெண்ணுக்கும், கூட பயணிப்போருக்கும் ஏற்படுகிற அனுபவங்களே இதில் கதையாக வருகிறது.
குவேனி நாவல் இதன் அடுத்த கட்டம். ‘ஜன்மபூமி’ சமகாலக் கதையெனினும், அதிலும் புவிசார் நிலைமைகள் ஒரு சக்தியாக தொழிற்படுவதை அது விளக்குகிறது. கல்லோயா குடியேற்றத் திட்டமென்கிற பாரிய ஒரு குடியேற்றத் திட்டத்தை ஆரம்பிக்கிறது அரசு. நிறைய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு சிங்கள மக்கள் அங்கே குடியேற்றப்படுகிறார்கள். அதுபோல காட்டுவாசி இனத்தவரையும், மலைவாழ் பழங்குடியினரையும் அது அங்கே குடியேற்றிவிட முயற்சிக்கிறது. பலரும் வசதிகளில் மயங்கி தம் பூர்வீக நிலத்தைவிட்டுப் போய்விடுகிறார்கள். சிலர் போக மறுத்து தன் ஜன்ம பூமியையே ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் ‘ஜன்ம பூமி’ நாவல் கதையாய்ச் சொல்கிறது.


தேவகாந்தன்: ‘ஜன்ம பூமி’யை அது வெளிவந்த உடனேயே வாசிக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கட்டிறுக்கமான நடையும், இறுகிய கதைப் போக்குமுள்ளதாக உங்கள் நாவல்களில்  ஜன்மபூமியைத்தான் சொல்ல முடியும். 1992இல் அது வெளிவந்ததென்று ஞாபகம். அது போகட்டும். இலங்கை முற்போக்கு இலக்கிய இயக்க காலத்தில் உங்கள் நிலைப்பாடு உடன்பாடாக இருக்கவில்லைப்போல் எனக்குத் தோன்றுகிறது.

செங்கைஆழியான்: மெய்தான். ஆனாலும் ஆரம்பத்தில் உடன்பாடாகத்தான் இருந்தது. பின்னால் கட்சிக் கொள்கைகள் உட்பிரவேசித்து ஆதிக்கம் பெறத் துவங்க, நான் ஒதுங்கியது தவிர்க்க இயலாததாயிற்று. அப்போதும் வேறு சில எழுத்தாளர்களைப்போல அதன் எதிர்நிலையை நான் எடுக்கவில்லை. மக்களுக்கான இலக்கியம் என்ற கருத்தில் நம்பிக்;கையுள்ளவன் நான். இன்றும் இதுவே என் கருத்தாக இருக்கிறது. அதனால் … ஒரு இடைநிலையை எடுத்து இயங்கிக்கொண்டிருந்தேன்.


தேவகாந்தன்: இப்போதைய உங்கள் எழுத்து முயற்சி என்ன?

செங்கைஆழியான்: யுத்த நிலைமை ஒருவகையில் எழுத்துக்கு குந்தகம் செய்கிறதென்றே நம்புகிறேன். அதாவது… பிரசுர ரீதியாக. ஏற்கனவே ‘குந்தியிருக்க ஒரு குடிநிலம்’ என்ற நாவலை எழுதி முடித்திருக்கின்றேன். ‘வானும் கனல் சொரியும்’ என்ற நாவலும் எழுதி முடிந்திருக்கிறது. ‘போரே நீ போ’ என்பதும் எழுதி முடிந்து பல மாதங்களாகியும் வெளிவராது இருக்கின்ற ஒரு நாவல்தான். இவற்றை வெளியிட சூழ்நிலை சரியில்லை. யாரையும் பகைத்துக்கொள்ள முடியாது. சமாதான காலமொன்று வரும். அப்போது இவையெல்லாம் வெளிவரும். அந்தக் காலத்துக்கான காத்திருப்புத்தான் இப்போது. வேறென்ன சொல்ல?

(நிறைந்தது)

(இது அம்பலம்.காமில் வெளியான சரியான திகதி, திகதி தெரியவில்லை. சரியாகச் சொல்லக்கூடியது இது நா.சுப்பிரமணியனின் யாழ்மணம் நேர்காணலுக்கு முன்னால் எடுக்கப்பட்டது. குமுதம்.காமுக்கு முன்னான காலம். ஆண்டளவாகச் சொன்னால் 1998-9 ஆக இருக்கலாம்- தேவகாந்தன்)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்