Sunday, November 23, 2014

கலித்தொகைக் காட்சி - 1


‘இரந்தார்க்கு  ஈய முடியாமை 
இழிவெனக் கொண்டனர்
சங்ககால  மக்கள்’சங்கத் தொகை நூல்களுள்ளே கற்றறிந்தார் போற்றும் தொகைநூல் கலித்தொகை. இந்நூலைப் பொதுவாக சங்ககாலத்ததெனக் கொண்டாலும் இதிலுள்ள சில பாடல்கள் சங்கமருவிய காலத்தவை என்பதை இலங்கைத் தமிழறிஞர் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒருசெய்யுள் எந்தக் காலப் பகுதியைச் சேர்ந்தது என்பதை அதன் சொற்றொடர், பொருள், மரபு, மக்கள் வாழ்க்கைமுறை முதலியவற்றிலிருந்து பகுத்துணரமுடியுமென்பது மொழிவல்லுநர் கருத்து.

இந்தவகையில் சிலசெய்யுள்களைசங்ககாலத்தைவையெனக் கொண்டாலும் பொதுவாக கலித்தொகைப் பாக்கள் சங்ககாலத்து மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளைஅறிந்துகொள்ளச் சாலவும் உதவுகின்றன. எனவேகலித்தொகைச் செய்யுள்களின்மூலம் மக்களின் பண்பாட்டையும்,கற்றறிந்தோர் ஏற்றக் காரணமானஅதன் இனிமை, எளிமை, செழுமைகளையும் காண்போம்.

பாலை என்பது‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பிழந்து நடுங்குதுயருறுத்து பாலையென்பதோர் படிவம் கொள்ளும்’எனத் தொல்காப்பியம் உரைக்கின்றது. அகத்திணையுள் பாலைக்குரியஒழுக்கம் பிரிதல் ஆகும். இந்தப் பிரிவு பல திறத்ததாய் அமையும். ‘ஓரா தூது பகையிவை பிரிவே’ என தொல்காப்பியம் புகன்றிருந்தபோதிலும், பாலைக்கலி பொருள்வயிற் பிரிவொன்றினையே கூறுகின்றது.  இதிலிருந்து சங்ககாலத் தமிழ் மக்களின்  பகுத்துண்டு பல்லுயிரோம்பியபோக்கும், திரைகடலோடித் திரவியம் சேர்த்த பாங்கும் தெற்றெனப் புலனாகின்றன.

‘ஈதல் இசைபடவாழ்தல் அதுவலது- ஊதியம் இல்லைஉயிர்க்கு’என்று குறள் கூறும். கொடுத்தலையும், அதன் காரணமான புகழையும் இந்தக் குறள் விதந்து கூறுகின்றது. ‘வண்மையில்லைஓர் வறுமையின்மையால்’ என்ற கூற்று கவிஞனின் கற்பனைக் காட்சியேதவிர , ஈதலும் இரத்தலும் அன்றுதொடக்கம் இன்றுவரை சமுதாயத்தில் ஊறித்தான் கிடக்கின்றன. பொதுமையுணர்வு படைத்த சங்ககால மக்கள் ‘ஈதலறம்’ என்று இதனைப் போற்றினர்.

 தம்பொருளைப் பொதுமையாக்க அவர்களுக்கு இந்த அறவுணர்வு மூலகாரணமாய் அமைந்துநின்றது.

இருப்பதை இரந்தவர்க்கு கொடுக்காமை இழிவு என்பது வெள்ளிடை. ஆனால் சங்ககால மக்கள் அப்படி இரந்தவர்க்கு ஒன்றை ஈய முடியாமல் இருப்பதுவும் இழிவு என்று எண்ணியதாக பாலைக் கலியின் முதலாம் செய்யுள் கூறுகின்றது. ‘தொலைவாகி இரந்தோர்க்குஒன்றுஈயாமை இழிவு’என்று பாலைக் கலித் தலைவன் நினைக்கிறான்.

தலைவன் பிரிந்து சென்றுவிட்டால் தலைவியின் நிலை என்னாகும் என்பது தோழிக்குத் தெரியும். தலைவனையே தன்னுயிராகக் கொண்டவள் தலைவி. தலைவன் பிரிந்துசென்று பொருள்தேடி மீண்டும் வரும்போது, ‘வல்வரவு வாழ்வார்க்குரை’க்கும் நிலை ஏற்பட்டுவிடும் என்பது தோழி அறிந்தவள். அதனால் தலைவனுடைய பிரிவைத் தடுப்பதற்கு நினைத்ததோழி, இல்லையென்று இரந்தவர்க்குப் பொருளை ஈய முடியாமை இழிவு என நினைத்து பொருள் தேடப் புறப்படுகிற தலைவனுக்கு,
நிலைஇயகற்பினாள் நீநீப்பின் வாழாதாள்
முலையாகம் பிரியாமைபொருள் (பாலைக்கலி-1)
என்று பலவற்றையும் கூறி அவனது செலவைத் தடுத்து நிறுத்தினாள்.

இது எவ்வாறு இருந்ததாமென்றால், அடக்கமுடியாத யானையை இசையானது அடக்கியாண்டதைப் போல. எதற்குமே மனம் மாறாத தலைவன் 'நீ பிரிந்துவிட்டால் தலைவியின் அழகுஅழிந்துவிடும் 'என்று தோழி கூறியதும் மனம் மாறிவிட்டான். அவளைப் பிரிவதில்லையென்று முடிவு செய்துவிட்டான். ‘ தாழ்வரை நில்லாக் கடுங்களிற்றொருத்தல் யாழ்வரைத் தங்கியாங்கு' தலைவன் அடங்கியதாகப் புலவர் கூறுகின்றார்.

அறவுரையினால் தலைவனின் பிரிவைத் தடுக்கமுடியாததோழி, அவனது உணர்ச்சிகளின் எல்லைகளைப் புரிந்துகொண்ட வார்த்தைகளினால் தடுத்த திறமை உய்த்துணர்ந்து பாராட்டுதற்குரியது.

000

(ஈழநாடு வாரமலர், 18.12.1968)

குறிப்பு: இவ்வாண்டுஆரம்பத்தில் நண்பர் ஸ்ரிபன் ரமேஷ் இலங்கைசென்றிருந்தபோதுஎனதுவேண்டுகோளுக்காக இலங்கைசுவடிகள் காப்பகத்திலிருந்துஎடுத்துவந்தஎட்டுகாட்சிகள் அடங்கியகட்டுரைத் தொகுதியில் இது முதலாவது. ரமேஷு க்கான நன்றியுடன் அதை இங்கு பதிவேற்றம் செய்கிறேன். தேவகாந்தன்

No comments:

நேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)

விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வச...