Monday, November 24, 2014

கலித்தொகைக் காட்சி: 3


‘தலைவனுடன் செல்லுதலை ‘பிரிதலறம்’என
இலக்கியம் போற்றுகிறது’
-தேவகாந்தன்

பாலைநில வழி.

நெடுவேல் நெடுந்தகையுடன் புறப்பட்டுச் சென்றுவிட்டாள் தலைவி.

கொஞ்சுமொழி பேசும் பைங்கிளி, பந்தாடிய ஆயம் அத்தனையும் மறந்து, பெற்றதாய், செவிலித்தாய், உயிர்த் தோழி ஆகியோரைப் பிரிந்து பாலைநில வழியிலே தலைவனைப் பின்பற்றிவிட்டாள். ‘தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே’ என்று தேவாரம் கூறும். கடவுள் ஆன்மாத் தத்துவம்போல ‘சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்’ என்கிற பாலைக் கலியின் வரி தலைவனைப் பின்பற்றிய தலைவியின் நிலையைப் புலப்படுத்துகிறது.

கங்குல் புலராத காலைநேரம் அது. பாலைநில வழியில் போய்க்கொண்டிருக்கிற தலைவனையும் தலைவியையும் அந்தணர் சிலர் கடந்துவருகின்றனர். தலைவியின் அச்சமும், தலைவனின் நிலைமையும் அவர்களுடைய மனத்திலே மலர்ச்சியை ஏற்படுத்துகின்றன. மென்மையான முறுவலொன்று அவர்களுடைய இதழ்க் கோடியிலே ஜனித்து மடிகிறது. அவ்வளவுதான். அவர்கள் தொடர்ந்து நடந்துவிடுகின்றனர்.

மகள் தன்னைப் பிரிந்துவிட்டாள் என்று  தாய்க்குத் தெரியவருகிறது. தன்னுடைய மகளை பாவையரோடு பந்தாடும் சிறுமியாகவேஅவள் எண்ணியிருக்கிறாள். பெற்றதாயின் பெருஞ்சிறப்பல்லவா இது?
தன் மகளை அவ்வைகறைப் போதிலே தேடிவருகின்ற தாய், அவ் அந்தணர்களைச் சந்திக்கிறாள். உடனே,‘என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர், அன்னார் இருவரைக் காணீரோ, பெரும’ என்று கேட்கிறாள்.

மகளைப் பிரிந்து அவலப்படும் அத்தாயின் மனநிலை ‘வேறு ஓராஅ நெஞ்சத்து’ அவ்வந்தணர்களையே கலங்கவைக்கிறது. உண்மை நிலையைக் கூறி அந்தத் தாயை அமைதிப்படுத்த பலவற்றையும் எடுத்துக் கூறினர்.

“தாயே,ஆணெழில் அண்ணலோடு உன் மகளைக் சுரத்திடையே கண்டோம். மனம் கலங்காமல் இவற்றைச் சிந்திக்கவேண்டும்.

‘மணம் மிக்க சந்தனம் மலையிலேதான் பிறக்கிறது. இனிய இசை யாழிலேதான் பிறக்கிறது. ஆயினும் இவற்றினால் மலைக்கோ யாழுக்கோ நன்மையுமில்லை, பெருமையுமில்லை. சந்தனத்தை அரைத்து மார்பிலே பூசிக்கொள்கின்றவர்களுக்குத்தான் நன்மை. மலைக்கும் அப்போதுதான் பெருமை. இன்னிசை யாழிலேயே பிறந்தாலும் அது அனுபவிக்கப்படும் போதுதான் யாழுக்கே பெருமையாகிறது.

‘சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செயும்’ (பாலைக் கலி-8)
அதுபோல் உன் மகள்  தான் விரும்பிய ஒருவனுடன் போய்விட்டதாலேயே கற்பெனும் அணியும் கைவரப் பெற்றனள். களவொழுக்கம் கற்பொழுக்கமாகிவிட்ட அறநிலை இது. எனவே  உன் மகளைப்பற்றிய வருத்தத்தைக் கைவிட்டு திரும்பிச் செல்வாயாக’ என்று கூறிவிட்டு அப்பாற் செல்கின்றனர்.

தாம் விரும்புகின்ற நெறியிலேயே மனத்தைச் செலுத்தும் வன்மைபடைத்த அவ் அந்தணர்களின் உரைகளை எடைபோடுகின்ற  அந்தத் தாயின் மனத்துக்கும்  உண்மைநிலை புரிகின்றது.

ஆயினும், மனம் நினைவை மறக்கமுடியாமல் தவித்தது.  பாலைக் கலியில் மகளைப் பிரிந்த  அந்தத் தாயின் மனநிலையை  நற்றிணை, அகநானூறு முதலிய  சங்க இலக்கியங்கள் தொடர்ந்து  காட்டுகின்றன.

‘அணி இயல் குறுமகள் ஆடிய மணியேர் நொச்சியும் பெற்றியும் கண்டு’ நற்றிணைத் தாய் வருந்துகின்றாள். அவள் இவ்வாறு வருந்திக்கொண்டிருக்கிறபோது காகம் கரைகிறது. எங்கே, தன் மகள்தான் வரப்போகிறாளோ என்று ஆவலோடு வாசலைநோக்கி விழிபாய்ச்சுகின்றாள் அவள்.

காகம் கரைதல், பல்லி இசைத்தல், தோள் கண் முதலியன துடித்தல் இவற்றினை உற்பாத நிகழ்ச்சிகளாகக் கொண்டனர் சங்கத் தமிழர். தலைவனைப் பிரிந்து வருந்திக் கொண்டிருக்கும் தலைவிக்கு கலித்தொகைத் தோழி, ‘பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன. அதனால் உன் தலைவன் வந்துவிடுவான். பிரிவினால் முன்கை தளர்ந்து கழன்று வீழ்ந்த வளைகளெல்லம் இனி மீண்டும் செறியட்டும்’ என்று கூறுகிறாள். அசோகவனத்திலே சிறைவைக்கப்பட்டிருந்த  சீதாபிராட்டி தனக்குக் காவலிருந்த நல்லவளான திரிசடையைநோக்கி, ‘இடம் துடித்தது. எனக்கு என்ன  நன்மை  விளையக்கூடும்’  என்று கேட்பதாய் கம்பராமாயணத்துச் சுந்தரகாண்டம் கூறுகிறது. இவைபோல,காகம் கரைய தன் மகள்தான் வந்துவிட்டாளோ  என்று வாசலைப் பார்க்கின்றாள் இத்தத் தாய்.
தாய்மைஉள்ளமும், அவர்களது நிமித்தநம்பிக்கையும் இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

அகம் இரண்டு வகைப்படும். ஒன்று களவொழுக்கம், மற்றது கற்பொழுக்கம். களவாவது, தலைவியின் உற்றமும் சுற்றமும் கொடுக்காமல் தலைவனும் தலைவியும் கண்டு  கருத்தொருமித்துக் கூடுதல். இவ்வாறு கூடிய இக் காதலர் உலகநெறிக்குட்பட்டு  திருமணம் செய்துகொள்வது கற்பொழுக்கமாகும். பாலைநிலத் தலைவியும் தலைவனொருவனைக் கண்டு  காதலித்தாள். காலமும் நேரமும் வந்தபோது  தலைவனுடன் புறப்பட்டுவிட்டாள். இப்படிச் செய்வதனாலேயே  அவளுடைய  கற்புநிலையும் சிறக்கிறது. மகளைப் பிரிந்து  வருந்திய   தாயைத் தேற்றிய  அந்தணர், ‘இறந்த கற்பினாட்கு  எவ்வம் படரன்மின்’-- அதாவது கற்புநெறி சிறந்தவளை நினைத்துக் கவலைப்படவேண்டாம் -- என்று  கூறுகின்றனர். அவ்வளவுக்கு கற்புநெறி  அந்த  ஒரு  கணத்திலிருந்து  திண்மையடைந்து  நிற்பதைக் காணமுடிகிறது.

மேலும், இவ்வாறு தலைவனைப் பின்பற்றிச் செல்வது உலகநெறிக்கோ, அறமுறைகளுக்கோ புறம்பானதும் அல்ல. அவ்வந்தணர்கள் கூறுகின்றனர்: ‘அறம் தலைப்பிரியாஆறும் மற்றதுவே.’

‘தோழி  செவிலிக்  குரைத்தல்,செவிலி  நற்றாய்க்  குரைத்தல், நற்றாய் தந்தை தனயர்க் குரைத்தல்’ என்று  சங்ககாலத்திலே  திருமணம் நடக்கும் முறையை  வரையறுத்திருந்தனர். பெற்றோரும்  உற்றமும் சுற்றமும் கொடுக்கும் இந்த நிலை மாத்திரமல்ல, தான் விரும்பிய ஒருவனொடு தலைவி சென்றுவிடுவதும் நெறிமுறையானதாக  நினைக்கப்பட்ட  காலம் சங்ககாலம். அதுவே அறமென்றும், பிறந்த இடத்துக்குப் பெருமை சேர்க்கும் செயலென்றும் பாலைக் கலியின் எட்டாம் செய்யுள் போற்றுகிகின்றது. கலித்தொகையின் இந்தப் பாடலிலிருந்து தமிழ் மாதர் நடப்பும், அவற்றின் அறமும், மகளைப் பிரிந்த தாயின் மனநிலையும் தெளிவாகப் புலனாகின்றன.
000
ஈழநாடுவாரமலர், 08.01.1969

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...