கலித்தொகைக் காட்சி: 4


‘பிரிவினால் துயருறும் கலித்தொகைத் தலைவி’
-தேவகாந்தன்

‘விறல் மலைவெம்பிய  போக்கரும் வெஞ்சுரம்’  மேவிவிட்டான் தலைவன்.

இந்தப் பிரிவால் துயருழப்பது இறைவன் வகுத்தவிதிமாதிரி, தமிழிலக்கியம் பாலைநிலத் தலைவிக்கு  வகுத்துவிட்ட  விதியாகும்.

தலைவர் பிரிவும், தலைவிவியர் துயரும்தான் அகத்திணைச் செய்யுள்களுள்ளே இன்சுவை ப யப்பன. அதனால்தான்போலும் நானூறு பாடல்களைக்கொண்ட அகநானூற்றிலே இருநூறு பாலைத் திணைச் செய்யுள்களாக இருக்கின்றன.

ஆங்கில இலக்கியத்திலும்  இத்தகைய  பிரிவுத் துயரப்  பாடல்களே  அதிகம் என்கிறார் ஐ.எம்.முர்ரே. அந்தச் சுவை  பிரிவிலேதான் என்றால் நாமும் பாலையைவிட்டு  ஏன் விலகவேண்டும்?

பாலையென்பது  பிரிவுத் துயரடைந்த  தலைவியரின் பொறுமை  நிலை. ‘பசப்புறுபருவரல் ’என இலக்கணம் இதனைக் கூறும். பசப்புஎன்பதும் பசலைஎன்பதும் ஒன்றே.

‘பாடின்றிப் பசந்தகண் பைதல பனிமல்க
வாடுபு களைப்போடி
வளங்கிறை வளை ஊர..’
வாடுகின்றாள் தலைவி.

தலைவியின் இந்த  நிலையில் அவள் முகத்தை  கலித்தொகை, ‘பாழ்பட்ட முகம்’ என்று கூறுகிறது. பாழ் என்ற  ஒரு  சொல் எழில் வாய்ந்த  தலைவியின் முகம் எப்படி  உருக்குலைந்து  அழிந்து  கிடக்கிறது  என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது. தலைவியின் சோகநிலையை இப்படித் தவிர  வேறுமாதிரி கூறிவிடமுடியாது.

அசோகவனத்திலே  சிறையிருந்த  சீதையின் நிலையினை வர்ணித்த கம்பர் புகைபடிந்த  ஓவியம், இடையறாது  நீர் சொரியும் கண், நல்ல சஞ்சீவி  மருந்து  பயனற்றுக் கிடப்பது  என்பவற்றை உதாரணமாய்க் கூறிவந்து, ‘துயரெனும் உருவுகொண்டனையள்’என்று இறுதியாக விவரிப்பார். சீதை துயரத்தோடு இருந்தாள் என்று கூறிவந்தவர் இறுதியாக சீதைதான் துயரம், துயரம்தான் சீதைஎன்கிற  அபேத  நிலையைக் காட்டுவார்.

அந்த வர்ணனை கவித்திறமை எல்லாவற்றையுமே பின்தள்ளக்கூடிய அளவுக்கு கேட்போரின் மனத் துயரைச் சொல்லின் பின்னே நிறுத்தக் கூடியதாய் பாலைக்கலியின் ‘பாழ்பட்டமுகம்’என்ற அந்த அடி பாடலில் விளங்குகின்றது. பாழ் என்ற  சொல்லிலுள்ள  ஓசைநயம், பொருள் நயம் யாவும் உய்த்துணரத் தக்கன.

இவ்வாறு துயருழன்ற தலைவியின் நிலை இரங்குதற்குரியது. தலைவன் தலைவியைப் பிரிந்துவிட்டால் சமுதாயத்திலே  அம்பலும் அலரும் ஆகிவிடும். இது  ஒருநிலை. இன்னொருநிலை  பிரிந்துவிட்ட  தலைவனின் செயலையே தூற்றத் தொடங்குதல். இரக்கமில்லாதவன், கருணையில்லாதவன் என்று அந்தச் சமூகம் தூற்றும். இதற்குப் பயந்தே, அதாவது  தலைவனை  அயலவர் தூற்றுவர் என்றஞ்சியே, தலைவி தன் துயரத்தைஅடக்கிக்கொள்வாள். ஆனால் தலைவியையே தூற்றுகிறநிலை இருக்கிறதே இதயம் நெகிழுகின்ற  சோகக் காட்சி அது.

தலைவனின்  பிரிவினால் வாடுகின்றாள் தலைவி. அந்தப் பிரிவு  தலைவியின் ஜீவமரணப் போராட்டம்போல.  அந்த நிலையில் சமூகம் தலைவியைத் தூற்றுவதை  அதன் அற்ப  செயலென்று இலக்கியம் இடித்துரைக்கின்றது. ‘அறனின்றி அயல் தூற்றும் அம்பலை  நாணியும்’ என்று  பாலைக் கலிச் செய்யுள் கூறுகிறபோது  அறன் அற்ற  அச்செயலை  இடித்துரைக்கவே  தோன்றும்.

பலவகையாலும் இத்தகைய  துயரங்களை அடைந்துகொண்டிருக்கிற தலைவி, தன் மேனியில் பசலை  படர்ந்ததற்கு  ஒரு காரணம் கூறுகிறாள்.
‘தமியார்ப் புறத் தெறிந்து
எள்ளி முனிய வந்து
ஆர்ப்பது போலும் பொழுது
எண்ணி  அந்நலம்
போர்ப்பது போலும் பசப்பு’ (பாலைக்கலி: 32).

ஆம்! தலைவரைப் பிரிந்து  வாடும் தலைவியரை, ‘அவரோ வாரார் தான் வந்தன்றே’என்று வந்துவிட்ட இளவேனில் வெளியே தள்ளி  எள்ளி நகையாடுகிறதாம்.

மங்கையர் கண் புனல் பொழிய
மழைபொழியும் காலம்
மாரவேள் சிலைகுனிக்க
மயில் குனிக்கும் காலம்
கொங்கைகளும் கொன்றைகளும் 
பொன் சொரியும் காலம்
கோககனக் கொடிமுல்லை
முகைநகைக்கும் காலம்
அங்குயிரும் இங்குடலும்
 ஆனநெடுங் காலம்’
என்று நந்திக் கலம்பகத்தில் கூறப்பட்டமாதிரி பூக்களும் தும்பிகளுமாய், பனித் துளியும் இளந் தென்றலுமாய், நீர் நிலையும் நறுமணமுமாய் வந்து எள்ளிநகைப்பதால் தலைவியின் அழகு அழிந்துவிடுமே என்று எண்ணி பசலையானது தன் முகத்தை மூடி மறைத்திருக்கிறதாகத் தலைவி கூறுகின்றாள்.

பசலை படர்ந்ததே  தலைவியின் அழகு பாழ்பட்டதற்கு  அறிகுறி. அப்படியிருக்க அந்தப் பசலை தன் அழகைக் காத்து  நிற்பதாகக் கூறும் தலைவியின் துன்ப உணர்வு  செறிந்த  பாடலை ஏனைய தமிழ் இலக்கியங்களில் காண்பதரிது. தலைவி துயரத்தின் எல்லையைத் தாண்டிவிட்டதன் அறிகுறியை இது தெரிவிக்கிறது.

000

(ஈழநாடு வாரமலர், 28.01.1969)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்