Sunday, November 16, 2014

புலம்பெயர்ந்தோர் படைப்புக்கள்

தமிழ்ப் புனைகதைப் பரப்பில்
புலம்பெயர்ந்தோர் படைப்புக்கள்

இரு கவிதைத் தொகுப்புக்களை முன்வைத்து
ஒரு மாறுகொள் சிந்தனை


தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மிக்க எதிர்ப்பார்ப்போடும் நம்பிக்கையோடும் கவனிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்கிற கருதுபொருள், ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளின் பின்னரான இக் காலகட்டக் கணிப்பில் எந்தத் தளநிலையை அடைந்திருக்கிறது என்பதை ஒரு வரைகோட்டு விழுத்தலாக அமைத்துப் பார்க்கிறபோது, முன்பிருந்த எதிர்பார்ப்புகளும், நம்பிக்கைகளும் சறுக்கலடைந்து இருப்பதையே ஒருவரால் காணமுடியும். அதன் காரணங்களையும், காரணங்களின் பின்னணிகளையும் சுருக்கமாகவேனும் அலசுகின்ற தேவையிருக்கிறது.

தொண்ணூறுகளில் ஒரு நூலைத் தயாரிப்பதற்கான செலவை இந்திய ரூபாயில் வெளிநாட்டுப் பண மாற்றாகக் கணித்த நம் தமிழ் எழுத்தாளர்களுக்கு அது மிகவும் குறைவாகத் தென்பட்டதாயே கொள்ளக்கிடக்கிறது.  ஒரு நூலை எவராவது எழுதிவிட்டிருந்தால் அதன் அச்சாக்கத்துக்கு பெரிய தடையேதும் ஏற்பட வாய்ப்பிருக்கவில்லை. அச்சாக்கமல்ல, எழுதுவதுதான் தேவையானதாக இருந்தது அன்றைய நிலையில். அதன்படி சிலபல நூல்களும் வெளிவந்தன. அவை வந்த சுவடுமில்;லாமல் மறைந்தன. ஆக நம்பிக்கை அளிப்பனவாக எழுந்தவை அவர்களது சிறுபத்திரிகை முயற்சிகளே. பிரான்ஸ் அதற்கான ஒரு முக்கிய கேந்திரமாக இருந்தது.

இந்த அலையோடு எழுதத் துவங்கிய கலாமோகன், ஷோபா சக்தி போன்றவர்கள இன்றும் பேசப்படுபவர்கள். புலம்பெயர்ந்தோரின் இலக்கிய ஊடகம் கவிதையாகவிருந்தும், புனைகதைத் துறைகளிலேயே சாதனைகள் நிகழ்ந்தன. ஓரிரு நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். ஒன்று, ஷோபா சக்தியின் ‘கொரில்லா’. இன்னொன்று, விமல் குழந்தைவேலுவின் ‘வெள்ளாவி’. ஈழத்தில் மிக்க காத்திரத் தன்மைபெற்று கவிதையானது வீச்சுடன் நடக்கவாரம்பித்திருந்த வேளையில், புலம்பெயர் சூழலில் புனைகதையே முக்கிய படைப்பாக்க ஊடகமாக இருந்திருக்கிறது.

இதுவொன்றும் திட்டமிட்டுச் செய்யப்பட்ட முயற்சிகளல்ல. இயல்பில் அமைந்தவை. துன்பியல் நாடகங்கள் மிக்க காத்திரத்துடன் மனத்தில் பதிந்துவிடுகின்றன. சேக்ஸ்பியரின் நாடகங்களில் துன்பியல் நாடகங்களே மிக்க இலக்கிய நயம்பொருந்தியன என விமர்சகர்கள் கூறுவர். கவிதைக்கும் அது ஆதாரத்தளம்தான். மண் இழக்கும் சோகம், உற்றார் உறவினர் குடும்பங்களை மரணம் காவுகொள்ளும் சோகமென பல சோகங்கள் பாடு பொருளாக இருந்தன கவிதைக்கு. மண்ணை இழக்கும் சோகத்தை ஆரம்ப காலக் கவிதைகள் பாடுபொருளாய்க் கொண்டிருந்தமை இவ்வண்ணமே நிகழ்ந்தது. ‘எங்கும் ஒலிக்கிறது காற்று, எனது நிலம்! எனது நிலம்!’ என்ற சேரனின் கவிதை வரிகளில் ஒரு மகத்தான சோகத்தின் நிதர்சனம் இருக்கிறது.

ஆனால் புலம்பெயர்ந்து வந்ததன் பின்னால் இந்தச் சோகம் ஒரு அவதி பற்றியதாக மாறிவிடுகிறது. இந்த அவதி புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கைத் தளமாற்றத்தினால் விளைகிறது. நாடு மட்டுமில்லை, வீடும் விட்டு வந்தவர்கள் அவர்கள். வீடு எங்கேயும்தான் வாழ்க்கையின் ஆதாரம். வீடு இல்லாவிட்டாலும் வெப்ப வலய நாடுகளில் நடைபாதைகளில்கூட வாழ்ந்துவிடலாம்தான். கோயில் மடங்களில் படுத்தெழும்பிவிடலாம். ஆனால் தட்ப வலய நாடுகளில் நம் சமூகத்தவர்களுக்கு அது சாத்தியமாகாத ஒன்று. பிற சில சமூகத்தவர்கள் இன்றும் வீதிக்கரைகளில் வாழ்வு கழிப்பவராய் கனடாவிலேயே இருக்கிறார்கள். தொழில் புரிய முடியாதவர்களாய், பாலியல் தொழில் செய்பவர்களாய், வறுமைக்  கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களாயுள்ள விளிம்பு நிலை மக்கள் இங்கும்தான் இருக்கிறார்கள். இவர்களில் அரசு அக்கறை காட்டுகிறதுதான். ஆனாலும் போதுமானதில்லையென்பது அவர்களது நியாயம்.

தமிழர்களுக்கு இந்தமாதிரியெல்லாம் வாழ்ந்துவிட முடியாது. அவர்கள் வாழ்ந்து பார்த்தறியாத காலநிலை கொண்டதாயிருக்கிறது இந்த நாடு. இந்த வீடு என்பது தமிழர் வாழ்வில் மிக முக்கியமாய் அமைந்ததன் காரணம் இதுவேயாகும். இந்த வீடுபேறடைதலில் அமிழ்ந்துபோனது புலம்பெயர்ந்தோர் வாழ்க்கை. இப்போது அவர்களது வாழ்வு அவலத்திலல்ல, அவதியிலேயே மூழ்கிப்போய்க் கிடக்கிறது. இலக்கியம் மட்டுமில்லை, கலை கலாச்சார முயல்வுகளும்கூட ஒரு சரிவைச் சந்திக்கவே செய்திருக்கின்றன. இங்கே தமிழ்ச் சமூகத்தின் வாழ்நிலை கொண்டிருக்கும் இந்த அம்சம் முக்கியமானது. படைப்புக்கும் ரசனைக்குமான ஓய்வு இல்லாதிருக்கும் ஒரு சமூகம் என்னத்தை சாதித்துவிடப் போகிறது? இங்கே கவிதை சீரழிந்த கதை இதுதான். புனைவிலக்கியத்தின் வீச்சின்மைக்குமான வரலாறும் இதுவே.

புலம்பெயர் இலக்கியத்தின் மீதான சந்தேகம் முன்னரே கிளப்பப்பட்டது. இதுகுறித்து கறாரான கருத்துச் சொன்னவர்களில் முக்கியமானவர் தமிழகத்தில் ஜெயமோகன். ஈழத்தில் மு.பொன்னம்பலம். நான்கூட என் பல கட்டுரைகளிலும் புலம்பெயர் இலக்கியம் ஈழ இலக்கியத்தின் ஒரு துறையாக இனங்காணப்படுவதன் மூலமாகவே தன் வாழ்நிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமென வற்புறுத்தியிருந்தேன். அது நான் கனடா வருவதற்கான காலத்துக்கு முன்னர். இப்போது அந்தக் கருத்து வலுப்பெறப் பெற்றுள்ளேன்.

இந்தப் புரிதல்களோடு குறிப்பிடத்தகுந்த இரண்டு கவிதை நூல்களை இப்போது நாம் வாசிப்புச் செய்யலாம். ஒன்று ஐரோப்பியப் புலத்திலிருந்து 2005 மார்கழியில் வெளிவந்த றஞ்சினியின் ‘றஞ்சினி கவிதைகள்’. மற்றது கனடாப் புலத்திலிருந்து வெளிவந்திருக்கும் செழியனின் ‘கடலைவிட்டுப் போன மீன் குஞ்சுகள்’. இது 2007 ஆடியில் வெளிவந்தது.

இரண்டும் வெவ்வேறு பாடுபொருள்களைப் பேசுபவை. றஞ்சினியின் கவிதைகள் பெரும்பாலும் பெண்ணியம் சார்ந்தும், செழியனது பெரும்பாலும் போரின் அவலமும் பேசுபவை. இரண்டுமே ஓரளவில் தம் குடும்ப, சமூக தள நிலைமைகளை மீறி எழுந்தனவாகவே கொள்ளல்வேண்டும். அதற்கான அவர்களது அர்ப்பணிப்பு அதிகமானது என்பதை ஒருவரால் மிகச் சுலபமாக உணரமுடியும்.

செழியனை நான் நேரில் அறிவேன். அவரது கவிதைகளில் எனக்கு ஒரு ஆதர்~மே இருந்தது. 1980களில் கவிதையெழுத ஆரம்பித்தவர் செழியன். சிறுசிறு தொகுப்புகளாக அவரது கவிதைகள் வெளிவந்தபோது சிலவற்றைப் படித்துவிட்டு சில கிடைக்காமல் நான் கொண்ட வருத்தம் அதிகம். இப்போது அது ஒட்டுமொத்தமான தொகுப்பாக வெளிவந்திருக்கிற வேளையில் கவிதைகளை ரசனையோடு படிக்க முடிந்தது. றஞ்சினிபற்றி நிறைய நான் அறியேன். தொகுப்பாகு முன் அவரது சில கவிதைகளைப் பத்திரிகை, சஞ்சிகைகளில் வாசித்துக் கொண்ட பிரமிப்பில் நினைவில் நின்றவர். தொண்ணூறுகளில் கவிதையெழுத ஆரம்பித்ததாகக் கொள்ளலாம். இந்த வகைப்பாடு அவரது பாடுபொருளிலிருந்து நான் கொண்டதுதான்.

பெண்ணியம் என்பது ஒரு பெருந்துறை. அரசியல், சமூக, இலக்கியக் களங்களிலும், அவற்றின் செயற்பாட்டுப் புலத்திலும் கருத்துநிலை, சித்தாந்தப் பின்னணி கொண்டது. றஞ்சனியின் பெண்ணியம் பொதுப்புத்தி சார்ந்தது என்பது தெளிவாகவே கவிதைகளில் தெரிகிறது. மிக இறுக்கமான, இளக்கமான பெண்ணியச் சிந்தனைகள் உண்டு. முதலாளித்துவப் பெண்ணியச் சிந்தனைகளும், சோசலிச பெண்ணியச் சிந்தனைகளும் வௌ;வேறு பரிமாணம் கொண்டவை. வெகு ஜனநாயகப்பட்ட பெண்ணியச் சிந்தனையும், நுகர்வுக் கலாச்சார பெண்ணியச் சிந்தனையும்கூட வேறுவேறுபட்டவை. இவைபற்றிய றஞ்சினியின் தெளிவின்மை கவிதைகளூடு பரந்துபடக் காணக்கிடக்கின்றது. றஞ்சினி உண்மையான காதலுக்காக ஏங்குவதும், காதல் துரோகத்தில் அல்லது பெண்ணாய்த் தன்னை மதிக்காத ஆணாதிக்க மனோபாவத்தில் குமுறுவதும் அவரது பல கவிதைகளின் உள்ளுறையாகியிருக்கின்றன. அவரது வாழ்நிலையிலிருந்து இந்த நிலைப்பாடு தோன்றியதாகவே நாம் பார்க்கவேண்டும்.

எனினும் இது முதன்மையாகக் கவனிக்கப்பட வேண்டியதில்லைத்தான். கவிதையின் தரமே முக்கியம். அவர் சொல்லவந்த விடயம் கவிதையாகியிருக்கிறதா என்பதே பிரதானம்.

தொகுப்பின் பல படைப்புகளில் கவிதை இல்லை. இன்னும் பல சுமாரான படைப்புகளே. ஆனால் மீதிக் கவிதைகள் முக்கியமானவை. அவற்றில் ‘இனிய நண்பனுக்கு’, ‘தோற்ற மாயை’, ‘உன் தனிமை’, ‘விட்டுவிடுதலையாகி’, ‘கிருசாந்தி’, ‘என் ஜமெக்க காதலனுக்கு’, ‘காலம் மாற்றம் தலையிடி’ போன்றவை சிறந்த கவிதைகள். வீச்சோடும், அதற்கான மொழியோடும், தேவையான இடைவெளிகளையும்கொண்டு இவை. ‘இருப்பு’ கவிதை அற்புதனான வார்ப்பு. அது ஒரு பெண் என்பவள் யாரென்பதை மிகச் சிறந்த சிந்தனைத் திறனோடும், மிகச் சிறந்த மொழியினோடும் வெளிப்படுத்துகிறது. அது இது:

இருப்பு

எனது இயக்கம்
எனது ஆற்றல்
எனது சிந்தனை
எனது திறமை
அனைத்தும்  எனக்கே
இருக்கக் கூடியவை
இவற்றை யாரிடமாவது இருந்து பெற்றிருந்தால்
நான் பெண்ணாக இருக்க முடியாது
நீங்கள் உருவாக்கிய
பெண்மை
எனது அடையாளமல்ல
நான் பெண்
பிறக்கும்போதே.

செழியனின்  கவிதைகளது பொதுத்தன்மை மரணம், பிரிவு, தனிமையிரக்கம் ஆகியவையே. இவையே ஆரம்ப கால ஈழக் கவிதைகளின் பாடுபொருளாகவும் இருந்தன. அவ்வையின் கவிதைகளில் மண்ணும், உறவுகளின் பிரிவும் அற்புதமானவகையில் விழுந்திருக்கும். வன்னிப்புலம்பற்றிய வ.ஐ.ச.ஜெயபாலனின் கவிதைகள் கவிதையின் உச்சம் எடுப்பவை. ஆனால் செழியனின் கவிதையின் தனித்துவம் கவிதை நயத்தோடு சேர்ந்தது. ‘மழை பெய்த நாள்’ செழியனின் சிறந்த கவிதைகளில் ஒன்று. ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை’ தொகுப்பில் தலைப்பற்று வந்த ‘மழை, உடைப்பெடுத்து, வயல்’ எனத் துவங்கும் கவிதை மனத்தை அதிர வைக்கும். அதில் வரும் அசாதாரணக் கேள்வி அப்படியானது.

மழை
உடைப்பெடுத்து
வயல்

சோளம்
நாற்று விழுந்து
உருண்டை மணிகள்

மகிழமரம்
புதர்
தாண்டி புதைமணல்
பாளம்வெடித்து
நாய்க்குடை காளான்

கிளை நுனியில்
நெல்லிக்காய்

நீ
எப்படி இருக்கிறாய்?

‘எழுதியே முடிப்போம்’ கவிதை அதன் முடிப்பிலும் அழகும், உணர்வும் செறிந்து நிற்பது. கவிதை மொழியென்பது நம் கடித மொழியிலிருந்தும் வேறானதல்ல. மாறாக ஒரு சொல்லை கவிதை மொழியாக்குவதே அது வந்து விழும் இடம்தான். இக் கவிதையில் வெறும் சொற்கள் இவ்வாறு விழுந்து கவிதைமொழி ஆகின்றன.

‘….

இருளுக்குப் பின்னும் அச்சமின்றி
ஓற்றையடிப் பாதையில்
சிறுவன்

இன்னமும் முகில்களுக்கு மேலே
தெரியும் நட்சத்திரங்கள்

எஞ்சியிருப்பவை
கரித்துண்டுகளாயினும்
எழுதியே முடிப்போம்.’

செழியனின் தனித்துவமே இத்தகைய கவிமொழியின் கண்டுபிடிப்பிலிருந்தேதான் ஆரம்பமாகிறது என்றாலும் பொருத்தமானதே.

‘அம்மாவுக்கு’ என்பது இத் தொகுப்பிலுள்ள இன்னுமொரு நல்ல கவிதை. ‘வாழ்க்கை நினைத்ததைப்போல் அழகாக இல்லை’ எனத் துவங்கும் அக் கவிதை ‘தவிப்புமட்டும் எஞ்சியிருக்கிறது, சொல்வதற்கு என்ன இருக்கிறது, அம்மா?’ என்று முடிகிறபோது நிகழ்கால வாழ்வு அனைவருக்கும் கொடுத்திருக்கும் வெறுமையே துலக்கமாய்த் தெரிவது.

செழியனுக்கு ஓர் அரசியல் இருக்கிறது, எல்லாருக்கும்போலவே. ஆனாலும் அது தூக்கலாய்த் தெரிவதில்லை அவரது கவிதைகளில். மரணங்களுக்காக அவர் அழுவது சிலவேளைகளில் அதிகமாக இருந்தபோதிலும் அவரது அரசியல் அங்கெல்லாம் அடையாளமாகாது. அப்படியே கவிதைத் தனத்தைக் கெடுக்காத விதமாக அது அடையாளமானால்தான் என்ன?

றஞ்சினியினதும், செழியனுடையதும் கவிதைகளுக்கான விமர்சனமல்ல நான் இங்கே வைத்திருப்பது. புலம்பெயர் சூழலில் கவிதை கொண்டிருக்கும் தளத்தின் அடையாளத்தைக் காண இவற்றின்மூலம் முயன்றிருக்கிறேன் என்பதே உண்மை.

இந்த அவதித்தனம் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. இதையே இன்றைய புலம்பெயர்ந்தோர் கவிதைப் போக்காக நாம் கொள்ளமுடியும். புனைகதையில் பேசப்பட்ட இரண்டு நாவல்களும் ஈழத்தைக் களமாகக் கொண்டவை. அவற்றின் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணம். ஒருவேளை புனைகதையிலக்கியம் தளத்தைப் பேச வருங்காலத்தில் கவிதைபோல் தரமிறங்கவும் வாய்ப்புண்டு. புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தை ஈழ இலக்கியத்தின் ஒரு துறையாகப் பார்க்கவேண்டியதின் வலுவான நியாயம் இதிலிருந்தே பிறப்பதாக நான் காண்கிறேன்.

00000
Written for Nankooram magazine, 2007
No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...