Sunday, November 23, 2014

கலித்தொகைக் காட்சி:2


‘உடன்போக்குப் பாலை 
சங்க மகளிரின் அன்புநெறி’


‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’என்பதுபொய்யாமொழி. மன்னவன் நடுவுநிலைநீங்காமல் நாட்டைக் காக்கவேண்டும், அப்போது அமைதி தழைக்கும். இல்லறத்தார் இரப்பவர்க்கு ஈயவேண்டும், அப்போது அறம் பெருகும். நாட்டிலே நிறைந்தஅமைதியும், இல்லங்கள் வளர்க்கும் அறமும் செம்மையான வாழ்வின் அறிகுறிகளாகுமென கலித்தொகை போற்றுகின்றது.

பொருள் இல்லறத்தார்க்கு அவசியம் என்பது வெளிப்படை. ஆனால் அந்தப் பொருள் மலைகள் தாண்டியோ, கடல் கடந்தோ எவ்வித இடரினிடையும் வருந்திச் சேர்க்கப்படவேண்டுமே தவிர, செம்மையிலிருந்து பிறழ்ந்து சேர்க்கப்பட்டதாக இருக்கக்கூடாது. அப்படிச் சேர்க்கப்படுகிற பொருள் இம்மைக்கு மாத்திரமல்ல, மறுமைக்கும் கேடு விளைக்கும் என்கிற நம்பிக்கை சங்ககால மக்களின் மனத்திடையே ஊறிக்கிடந்தது என்பது, ‘செம்மையின் இகந்தொரீஇப் பொருள்செய்வார்க் கப்பொருள்  இம்மையும் மறுமையும் பகையாவதறியாயோ..’என்ற பாலைக் கலியின்  பதின்மூன்றாம் செய்யுளால் அறியப் படுகிறது.

பொருளின் அவசியத்தையும், அது  எவ்வழியில் ஈட்டப்படவேண்டும் என்பதையும் அறிந்த  தலைவன் ஒருவன் பொருளீட்டப் புறப்படுகின்றான். தன்னுடையபிரிவைப்பற்றி தன் இளம்மனைவிக்கு அவன் எதுவுமே கூறவில்லையாயினும், தலைவனின் செயல்களிலிருந்து அவனது பிரிவை உற்றுணர்ந்துகொள்கிறாள் தலைவி. பாலைநிலக் கொடுவழியும், அதைத் தாண்டும் அருமையும் அவளது மனத்திரையிலே நிழலாடுகின்றன.

கடுமையான வெப்பத்தால் மூ எயில் பொடிபட்டதுபோல் மலைகள் பிளவுபட்டுக் கிடக்கின்றன. நீர் வேட்கை மிக்க பெரிய யானைகள் ஓரிடத்தே சிறிதளவு நீரைக் கண்டு வேட்கையோடு ஓடிச்சென்று வாயை வைக்க, கொதிக்கின்ற அந்நீர் அவற்றின் வாயைச் சுட்டுவிடவே வேதனை தாளமாடட்டாது ஓடுவதால் பழகிய வழிகளெல்லாம் பாழ்பட்டுக் கிடக்கும்.

இப்படியான கொடுவழியைத் தாண்டக்கூடுமேயாயினும், அப்பகுதியிலே வாழும் ஆறலை கள்வருடைய நினைவு அவளைப் பீதியடையச் செய்கின்றது.

வலிமுன்பின் வல்லென்றயாக்கைப் புலிநோக்கின் 
சுற்றமைவில்லர் சுரிவளர் பித்தையர் 
அற்றம் பார்த்தல்கும் மறவர் தாம்
கொள்ளும் பொருளிலராயினும் வட்பவர்
துள்ளுநர்க் காண்மார் தொடர்ந் துயிர் வெளவும்;…’
இயல்புடையவர் ஆறலை கள்வர். பாலை வழியைக் கடப்பவரிடம்  கொள்ளை கொள்ளக்கூடிய பொருள் இல்லையாயினும், அப்படி வருபவர்கள் வருந்துவதைக் காணும் வெறிமிகுந்த அக்கள்வர்கள் தொடர்ந்துசென்று அவர்களைக் கொலைசெய்கின்ற கொடூரத்தை நினைக்கின்றாள்.

தலைவனைப் பிரிந்து வாழமுடியாது என்பது ஒரு புறமிருக்க, பொருள் தேடச் செல்லும் தலைவனுக்கு ஏற்படக்கூடிய இடுக்கண்களை அவளால் நினைத்தும் பார்க்கமுடியவில்லை.

உறுதியோடு புறப்படுவதற்குவேண்டிய ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கும் தலைவனை இனிமேல் தடுத்துவிட முடியாது என்பது அவளுக்குக்குத் தெரியும். எனவே அவனுடைய துன்பத்திலே தானும் பங்குகொண்டு அவனுடனேயே செல்ல துணிகின்றாள்.

ஏற்கனவே பாலைநிலத்தின் வழியைப்பற்றி தலைவன் அவளுக்குக் கூறியிருக்கிறான்.

‘மழை வரண்டுபோனதால் எதுவித பசுமையையும் அங்கு காணமுடியாது. மரை ஆமரங்கவரும் நிலைதான் அங்கிருக்கும். உரல்போன்ற அடிகளையுடைய பெரிய யானைகளெல்லாம் நீர் வேட்கையாலும், கானலின் பின்னோடிக் களைத்ததினாலும் சேற்றினைச் சுவைத்து செல்லுகின்ற தம் உயிரைப் பிடித்திருக்கின்ற வறட்சி மிகு தனி உலகம் அது. அங்கே உன் சீறடிகள் கல்கள் பட்டுச் சிவந்துபோகும். இனிய நிழலின்மையால் உனது அழகுப் பொன் மேனி வகைவாடிவிடும்’ என்றெல்லாம் அவ்வழியின் தன்மைபற்றித் தலைவன் கூறியிருப்பவும் அந்த வழியில் தலைவனுடைய துன்பத்தைப் பொறுக்க ஆற்றாத தலைவி உடன்செல்லப் புறப்படுகிறாள்.

தலைவனின் பிரிவின்போது தானும் உடன்போவதை ‘உடன்போக்குபாலை’ என்று இலக்கியம் சிறப்புறக் கூறும்.

தலைவி ஒருவாறு தன் கருத்தைத் தலைவனிடம் கூறினாள். ‘உன்னுடையசெலவைத் தடுக்கும் மதுகைஎமக்கிலை. உன்னுடையபிரிவினால் இங்கிருந்துஅழிவதைக் காட்டிலும் உன் துன்பத்தில் பங்குகொள்ளுகின்ற மனநிறைவையாவது கொடு’ என்றும், ‘துன்பம் துணையாக நாடின் அதுவல்லது இன்பமும் உண்டோஎமக்கு?’ என்றும் இரந்துநின்றாள்.

இவ்வாறு துன்பத்தில் துணைசென்று, அதையே தமது இன்பமெனக்கொண்ட சங்ககாலத் தமிழகத்து மகளிரின் காதல் மனமும், கருணையும், திண்மையும் போற்றப்படவேண்டிய உயர் குணங்களாகும்.

துன்பத்தில் பங்குகொள்வது அன்பு மனத்தைக் காட்டலாம். ஆனால் துன்பத்தில் பங்குகொள்வதே தமக்கு இன்பமெனக் கொள்ளவல்ல தலைவியின் சீரியநெறி தமிழ் மகளிரின் செம்மையான மனதுக்கு ஓர் உரைகல்லாக மிளிர்கிறது.

000

ஈழநாடு வாரமலர் 26.12.1968
நன்றி:    ஸ்ரிபன் ரமேஷ்

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...