Monday, November 10, 2014

நூல் விமர்சனம் 9 ‘கடல் கடந்தும்’வெங்கட் சாமிநாதனின்

‘கடல் கடந்தும்’   புலம்பெயர்ந்தோர் இலக்கியம், இலக்கியவாதிகள், அவர்தம் வாழ்நிலையென ஆழமான பார்வையில் வெளிவந்திருக்கும் இந்நூல்போல் புலம்பெயர்ந்தோர் சூழலில்கூட ஒரு நூல் தோன்றிற்றென்று இத்தனை காலத்திலும்கூட கூறமுடியாதே இருக்கின்றது.

2014 அக்டோபர் நடுப்பகுதியில் திரு.வெங்கட் சாமிநாதனை கர்நாடகாவில் சிமோகா செல்லவிருந்த வழியில் பெங்களூருசென்று சந்திக்க  வாய்ப்புக் கிடைத்தது.

1990களிலிருந்து அவர் நேரடியாக எனக்கு அறிமுகமாகியிருப்பினும், அவரை அவரது ‘பாலையும் வாழையும்’  நூலை வாசித்த 1980களிலிருந்து அறிந்திருந்தேன். 2003வரை நான் சென்னையில் வசித்திருந்த காலத்தில், நாங்கள் தங்கியிருந்ததும் ஒரே இடமாக இருந்த காரணத்தால் ஓய்வு நேரங்களில் சந்தித்து கதைப்பதும், கூட்டங்களுக்குச் சேர்ந்து செல்வதுமென எமது பழக்கம் இறுக்கமாகியிருந்தது. அக்டோபரில் நிகழ்ந்த எமது சந்திப்பு ஏறக்குறைய பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரானது.

நக்கலும், நளினமும், கிண்டலுமான அவரது விமர்சன முறைமை எனக்குப் பிடித்ததாயினும், அவருடைய சார்புநிலையற்ற விமர்சனமுறைமை எனக்கு மிகமிகப் பிடிக்கும். இந்தப் பிடிப்பே அன்றைய சந்திப்பின் முதன்மைக் காரணம்.

பல்வேறு இலக்கிய உரையாடல்களுக்குப் பிறகு, நீண்ட வருடங்களின் பின்னான சந்திப்பின் ஞாபகார்த்தமாக இரண்டு நூல்களை கையெழுத்திட்டு தந்திருந்தார். அதிலொன்றுதான் ‘கடல் கடந்தும்’.

தாம் சரியென்று நினைப்பதில் தீவிரமாயிருந்து எதிர்க் கருத்தாளியை மாங்குமாங்கென்று வாங்குவதில் பிரமிள், வெ.சா.,  இப்போது ஜெயமோகன் ஆகியோருக்கு ஈடாகச் சொல்ல நானறிந்தளவில் தமிழ்ப் புலத்தில் வேறுபேர் இல்லை. இருந்தும் இவர்கள்  தங்கள் கருத்துத் தீவிரத்துக்காகவே எனக்கு மதிப்பானவர்களும். இதில் வெ.சா. முதன்மை. எங்கோ ஓரிடத்தில் இவரின் கருத்துக்கு மாறுபாடனதை நான் கொள்ளவும் கூடும். அப்போதும் இந்த மதிப்பு என்னிடத்தில் அணுவளவும் குறைந்துவிட மாட்டாது.

‘கடல் கடந்தும்’ நூலை அடுத்த நாளிலேயே நான் வாசித்து முடித்துவிட்டிருந்தேன். எனக்கு பிரமிப்பைத் தந்தவிடயங்கள் நூலில் நிறைய இருந்தாலும், ஒட்டுமொத்தமாக அந்நூல் தெரிவித்த கருத்துக்களின் தளம் புலம்பெயர்ந்தோர்  இலக்கியமாகவும், இலக்கியவாதிகளாகவும், அவர்களது வாழ்நிலையாகவும்  இருந்தமையே வெகுவாக என்னைஆகர்சித்தது.
நேர்காணல், விமர்சனம், மதிப்புரை, ஏற்புரையென பதினேழு விடயங்களைக் கொண்ட  இந்நூலில் மூன்று தலைப்பிலானவற்றையே பிரதானமாகச் சொல்லப்போகிறேனென்றாலும், மற்றவற்றின் இருப்பும் இந்நூலுக்குச் சிறப்புச் சேர்ப்பவை என்றவகையில் அவைபற்றி சுருக்கமாகத் தெரிவித்துவிடுவது சிலாக்கியமானது.

‘எதையும் எதிர்பாராது என் இயல்பில்’ என்பது முதலாவதாக அமைந்துள்ள கட்டுரை.  இது 2003ஆம் ஆண்டின் அவரது இயல் விருது ஏற்புரை. ஒருவகையில் தன்னையே  அவர் செய்த மீள்பார்வையெனவும் இவ்வுரையைச் சொல்லமுடியும். கனடா இலக்கியத் தோட்டம் பெருமைப்படக்கூடிய விடயங்களில் இவருக்கான இந்த விருதளிப்பையும் ஒன்றாகக் கூறுவேன். திரு.வெ.சா.வின் ஆளுமை தனியே விமர்சனம் மட்டும் சார்ந்ததில்லை. அது நாடகம், சினிமா, சிற்பம், ஓவியமென்று பல்துறை அளாவியது.  ஏறக்குறைய நாற்பத்தைந்து ஆண்டுகளின் விடாப்பிடியான இயங்குதலுக்கு இயல்விருதே மிகக் குறைவு என்பது என் கணிப்பு.

அடுத்து குறிப்பிடக்கூடிய கட்டுரை 2003ஆம் ஆண்டுக்கான ஆய்வுப் பரிசினைப் பெற்ற ஐராவதம் மகாதேவனின் ‘ஆரம்பகால கல்வெட்டுக்கள்: தொடக்கத்திலிருந்து ஆறாம் நூற்றாண்டுவரை’ என்ற ஆய்வுநூல்பற்றிய அறிமுகவுரை. சலனமற்ற சீரான எழுத்து. இதில் விரிந்த பார்வையில் பட்ட தன் கருத்துக்களை சுருங்கிய அளவில் சொல்லியிருப்பதன்மூலம் நூலின் அறிமுகத்தைச் செவ்வனே நிறைவேற்றியுள்ளதாய்ச் சொல்லலாம். உரைக்கட்டின் வடிவம் செறிவாக அமைந்து மாதிரியாகக்கூடிய சிறப்பு வாய்ந்து இது  விளங்குகிறது.

‘தமிழ்நாடு சிற்றரசர்களால் ஆளப்பட்டாலும் அவர்கள் சுதந்திரஅரசர்களாக இருந்தனர். பலமான பரந்த நிர்வாகக் கட்டமைப்புகள் இருந்தன. தமிழ் அரசுமொழியாக, மக்கள் மொழியாக,  இலக்கியமொழியாக, சமூகம் சகலமட்டங்களிலும்  கல்விப் பெருக்கம் கொண்டதாக இருந்த காரணங்களால் தமிழ் நாட்டுக்கு ப்ராஹ்ருத மேலாண்மையின் தேவை இருக்கவில்லை. இவை அரசியல் மேடைப் பேச்சுகளில் வெற்றுப் பெருமையின் முரசொலி அல்ல.  கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.ஆறாம் நூற்றாண்டுவரைய தமிழ் ப்ராஹ்மி கல்வெட்டுக்கள் தரும் சாட்சியம்’ என்றவாறான உரைக்கட்டின் முடிப்பு இதை உறுதிப்படுத்துகிறது.

அடுத்ததாகவுள்ள ‘தொடங்கும் ஒரு உரையாட’லும், அதைத் தொடரும் ‘தொடரும் உரையாட’லும் கனடாத் தமிழர்களின் வாழ்வியலையும், இலக்கிய இயங்கு தளத்தையும், சில படைப்புகளையும்பற்றிப் பேசுவன. குந்தவையின் ‘யோகம் இருக்கிறது’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், சோ.ப.வின் ‘தென்னிலங்கைக் கவிதைகள்’ என்ற தொகுப்பினையும் ‘தொடரும் உரையாடல்’ விஸ்தாரமாகப் பேசுகிறது.
தொடர்ந்து குறிப்பிடவேண்டிய தலைப்பு ‘பதிவாகும் சரித்திரங்கள்’. இதில் கோவிந்தனின் ‘புதியதோர் உலகம்’, கே.டானியலின்  நாவல்கள் சில, சோபாசக்தியின் ‘ம்’, ‘தேசத்துரோகி’ ஆகியனவும், கலாமோகனின் ‘நிஷ்டை’யும் விசாரிப்பாகின்றன.

அடுத்து ‘ஈழம்: உணர்வின் ஆரம்பங்கள்’ என்ற கட்டுரை. இதுவும் பின்னால் தொடரும் கட்டுரையும், நேர்காணலும் முக்கியமானவை.
இலங்கை அரசியல் பின்புலம் சார்ந்த மூன்று நாவல்கள்மூலம் இனப் பிரச்சினை தொடர்பில் மூன்று கட்டங்கள் வகுத்துக் காட்டப்படுகின்றன. முதலாவது, 1962இல் வெளிவந்த மு.தளையசிங்கத்தின் ‘ஒரு தனி வீடு’. இதை முதல் கட்ட ஈழப் பிரச்சினையைப்  பின்னணியாகக் கொண்டது என்கிறார் விமர்சகர். அடுத்ததாக அவர் எடுப்பது 1973இல் வெளிவந்த அருள்.சுப்பிரமணியத்தின்  ‘அவர்களுக்கு வயதுவந்துவிட்டது’ என்பதாகும். மூன்றாம் கட்ட ஈழப்  பிரச்சினை சார்ந்த நாவலாக அவர் சுட்டுவது கோவிந்தனின் ‘புதியதோர்  உலக’த்தினை. இது ஒரு முக்கியமான கவனிப்பு. சிங்களருக்கும் தமிழருக்கும் இடையிலான உறவு ஒரு கொடுக்கல் வாங்கல் நிலைமையிலிருந்து உடைந்து எவ்வாறு படிப்படியாக துவேஷமாகப் பரிணமித்தது என்ற  வரலாற்றுப் போக்கினை அக்காலகட்டங்களில் எழுந்த மூன்று நாவல்களின் மூலம் வெ.சா. வரையறுக்கிறார் என்பது அவதானிக்கப்படவேண்டிய விடயம். இந்தளவு துல்லியத்தில் ஈழ விமர்சகர்களால்கூட இந்த விபரம் இவ்வாறு அணுகப்படவில்லை என்று தெரிகிறபோது அதன் முன்மாதிரியை நாம் கவனித்தாகவேண்டும். இக்கட்டுரை Mirrors of Eelam Movement என்ற தலைப்பில் நியூடெல்லியிலிருந்து வெளிவரும் Patriot என்ற ஆங்கிலப் பத்திரிகையில் 1988இல் வெளிவந்ததாகும்.

அதுபோலவே அப்பத்திரிகையில் அதே ஆண்டில் ஆங்கிலத்தில் வெளிவந்த Of Conflicts that Eelam Conceals என்ற கட்டுரையும் முக்கியமான கட்டுரை. ‘ஈழத்தின் தலித் குரல்’என்ற தலைப்பில் நூலில் அது வெளியாகியள்ளது. கே.டானியலின் நாவல்களை மிக ஆழமாக கவனித்த கட்டுரை இது. பஞ்சமர் தவிர்ந்த கே.டானியலின் மற்றைய நாவல்களை அவர் இனங்காணும்விதம் அற்புதமானது. அந்நாவல்களை ‘தமிழில் வெளிவந்த முதல் தலித் நாவல்கள்’எனப் பிரகடனம் செய்கிறார் வெ.சா.  எனினும் தலித் எழுத்துக்கள் என்பதற்காக அல்ல, வெ.சா.வின் கவனம் குவிவதற்கான ஒரே காரணம் அவற்றின் இலக்கியத் தகுதியே. கே.டானியல்பற்றி அவர் சொல்லும் கருத்து இலக்கிய வரலாற்றாசிரியர்களால் உற்றுணரப்படவேண்டும். அக்கட்டுரையில் வெ.சா. கூறுகிறார்: ‘டேனியலின் இலக்கிய வெற்றியின் ரகசியம் அவர் தனக்கு உண்மையாக இருப்பது. இவர் தான் பெற்ற அனுபவங்களையே  எழுதுவது. அந்த அனுபவத்திற்கு, வாழ்ந்த வாழ்க்கைக்கு, தான் பிறந்த சூழலுக்கு , தன்னுடன் வாழும், தான் மிகநன்றாக அறிந்த மக்களுக்கு உண்மையாக இருப்பது. எந்த அரசியல் கொள்கைகளுக்கும்  தான் ஒரு கருவியாகும் தூண்டுதலுக்கு ஆட்படாமல், தன்னை இரையாக்காமல் இருப்பதும். அவர் அக்கறைகள் தான் எந்த மக்களிடையே பிறந்துவளர்ந்துள்ளாரோ அம்மக்களும், அவர்களின் வதைபடும் வாழ்க்கையும்தான்.’

வெ.சா.வின் நாடக ஈடுபாட்டின் அடையாளமாக வருவது ‘செழியன் நாடகங்கள்’ என்ற தலைப்பிலுள்ள கட்டுரை.  செழியனின்  ‘என் தாத்தாவுக்கு ஒரு குதிரை இருந்தது’ என்ற நாடக நூலை விஸ்தாரமாக அலசுகிறது அது.

பின்னால் வரும் இரண்டு கட்டுரைகளும் மலேசிய,சிங்கப்பூர் இலக்கியங்கள்பற்றிய விசாரிப்பு.  இவையும் அந்நாடுகளின் இலக்கியம்மீதான நம்  கவன இழப்புக்களைச் சுட்டிக்காட்டுகின்றவையே.
முக்கியமாக இந்நூலில் குறிப்பிடத் தகுந்ததாகவிருப்பது, நான் முன்னரே குறிப்பிட்டபடி, அவரது நேர்காணல்.  சிபிச்செல்வன் நேர்கண்டிருந்தார். தன்னைத் தானாக இனங்காணாது பிறக்கும் கேள்விகளுக்கு வெ.சா. தரும் பதில்கள் கோபமும், வேகமுமாய்த் தனிரசனை தருபவை. இந்நூலிலுள்ள இயல் விருது ஏற்புரையை தன்னைத் தானாக ஒரு மறுவாசிப்பில் முன்னிறுத்தும் வெ.சா., நேர்காணலில் தன்னைத் தானாக  நிறுத்திக்கொண்டு சூழ்நிலையோடு விவாதம் செய்கிறார். ஒருநேர்காணல் எப்படி அமையவேண்டுமோ அவ்வாறு அமைந்து வெ.சா.வுக்கும், சிபிச்செல்வனுக்குமே, வெற்றியாக இது அமைகிறது.

மொத்தத்தில் புலம்பெயர்ந்தோர்பற்றி, அவர்களது இலக்கியம்பற்றி, வாழ்முறைகள்பற்றி அலசும் இந்நூல் புலம்பெயர்ந்தோரைப் பொறுத்தவரையும்கூட இதுவரை கவனம்பெறாதே போயிருக்கிற மர்மம் இன்னும்தான் எனக்கு விளங்கவில்லை. என்று எழும் எங்களின் பிரக்ஞையில் ஒருசலனம்?


00000


தாய்வீடு, 2014
No comments:

நேர்காணல் (ஞானம் 216) மே 2018: தேவகாந்தன் ---- நேர்கண்டவர்: அரவிந்தன் (தமிழ்நாடு)

விமர்சனங்களிலிருந்துதான் நான் மாறவேண்டுமென்ற அவசியத்தை  உணர்ந்தேன். ( தேவகாந்தன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வச...