சிறுகதை: தாவோவின் கதை

சிறுகதை:

தாவோவின் கதை



பளீரென்ற வெண்பனி பார்வைக்கெட்டிய தூரம்வரை கொட்டிக்கிடந்தது. மரங்களும் பனி போர்த்திருந்தன. நீண்ட நெடுந்தார்ச் சாலைகளில் வெள்ளி மாலையின் கனதியோடு வாகனங்கள் சீறிப் பாய்ந்துகொண்டிருக்கும் ஒலி பின்னே எழுந்துகொண்டிருந்தது. துண்டாக்கி தனிமைப் படுத்தப்பட்டதுபோல் சலனமும் சத்தமும் அற்றுக் கிடந்த முன்புற வெளியில் ஜோர்ஜி றெஸ்ரோறன்ரில் இருந்தபடி நான் பார்வை பதித்திருந்தேன்.
வெளியின் அசரங்களில் பரந்துகொண்டிருந்த என் பார்வையில் திடீரென சின்னதாய் ஓர் அசைவு. நான் பார்வையைக் கூர்ப்பித்தேன். பிரதான சாலையைத் தொட்ட சிறிய தொழிற்சாலை வீதியில் தாவோவின் சின்ன உருவம் வந்துகொண்டிருந்தது.

நான் வேலைசெய்யும் அதே தொழிற்சாலையில்தான் தாவோவும் வேலைசெய்கிறான். ஒன்றாக வேலை செய்த அவனை கடந்த மூன்று நான்கு மாதங்களுக்கு முன்னர் அதே தொழிற்சாலையின் வேறு பகுதிக்கு மாற்றிவிட்டிருந்தார்கள். எனினும் எனக்கு வேலை முடிந்தபோதிலேயே அவனுக்கும் முடிந்திருக்கவேண்டும். இருந்தும் நான் முதலாவது போத்தில் பியர் அருந்தி முடிகிற நேரத்தில்தான் தாவோ அங்கிருந்து வருகிறான். நான் ஆச்சரியப்படவில்லை. கடந்த சில மாதங்களாக தாவோ அவ்வாறே செய்துகொண்ருப்பது எனக்குத் தெரியும்.

தாவோ அங்கு வேலைக்குச் சேர்ந்து ஒரு வரு~மாவது இருக்குமென்று நினைக்கிறேன். அண்மையில்தான்  வேலை நிரந்தரமாக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலை வேலைகளை தாவோ நன்கு செய்யக்கூடியவனாகவிருந்தும் பணி நிரந்தரமாக்கலின் மூன்று மாதத் தவணை முடிந்தபிறகுகூட நிர்வாகம் அவனுக்கு வேலை நிரந்தரம் கொடுக்கவில்லை. அடுத்த மூன்று மாத தவணை முடிந்தபோதுகூட நிர்வாகம் சுணக்கியடிக்கவே செய்தது. அந்தத் தவணையிலாவது தனக்கு வேலை நிரந்தரம் கிடைத்துவிடுமென்று  தாவோ பிடிவாதமாக நம்பிக்கொண்டிருந்தான்.  அதனாலேயே அளவுக்கு அதிகமாக வேலைசெய்தான். ஒன்பது மணிநேரத்தில் ஒரு நிமிடத்தைக்கூட தொழிற்சாலையில் விரயமாக்கியதில்லை. இரண்டு ஆள் வேலையை அவன் ஒருவனே செய்தான். இவையெல்லாம் அவனில் ஒரு பற்றையும் இரக்கத்தையும் என்னிடத்தில் ஏற்படுத்தியிருந்தன.
வேலைக்கு வந்துசேர்ந்த முதல் நாளிலேயே அவன் என் கவனத்தில் விழுந்தவன்.

அந்த நாள்  இன்னும் எனக்கு ஞாபகமாயிருந்தது.

தாவோ சீனாவின் கிராமப்புறமொன்றிலிருந்து வந்திருப்பான்போல் தோன்றினான். மற்ற சீனக் குடியேறிகளைப்போலக்கூட அவனுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாதிருந்தது. இருந்தும் எல்லோருடனும் சளசளவென அவன்தான் அதிகமாகப் பேசித் திரிந்தான். சனிக்கிழமைகளில் புதிய குடியேறிகளுக்காக ஒழுங்குசெய்யப்பட்டிருந்த ஆங்கிலப் பாட வகுப்புகளுக்குப் போக அப்போதுதான் ஆரம்பித்திருந்தானாம். இத்தனைக்கு அவன் கனடா வந்து இரண்டாண்டுகள் முடியப்போகின்றன என்பது எனக்கு வியப்பாக இருந்தது.
முதல்நாள் அவனை பிளாஸ்ரிக் கழிவுகள் அரைக்கும் இயந்திரத்தில் வேலைசெய்ய விட்டிருந்தார்கள். சிறிதுநேரத்தில் பாரம் தூக்கியேற்றும் இயந்திரத்தைக் கண்டுவிட்டு அதையே சுற்றிச் சுற்றி வந்து பார்த்துக்கொண்டிருக்க ஆரம்பித்துவிட்டான் தாவோ. சுப்பவைசர் பல முறை வந்து அவனைக் கத்தியழைத்து வேலைசெய்விக்க வேண்டியிருந்தது. அவன் தொடர்ந்தும் அவ்வாறேதான் செய்துகொண்டிருந்தான் இரகசியமாக.
மறுநாள் அவன் கண்காணிப்பாளரைக் கேட்டானாம், தனக்குக் காட்டித்தந்தால் தன்னால் பாரந் தூக்கியேற்றும் இயந்திரத்தை இயக்க முடியுமென்று. அவன் சீனாவில் உழவு இயந்திரம் ஓட்டியிருக்கிறானாம்.

அவனது அப்பாவித்தனத்தில் வழக்கமாக சிடு முகத்தோடு இருக்கும் சுப்பவைசர் சிரித்துவிட்டு, ‘நல்லது. எதற்கும் இந்த கையினால் பாரமிழுக்கும் பம் ட்றக்கை சிலநாட்களுக்கு உபயோகித்துக்கொண்டிரு. இது அந்த போர்க் லிப்டின் சின்ன வடிவம்தான். இரண்டுமே பின் சக்கரங்களில் செலுத்து திசையைத் தீர்மானிக்கின்றவை. நீ இதில் நன்றாகத் தேர்ச்சிபெற்ற பிறகு போர்க் லிப்டை இயக்கத் தருகிறேன்’ எனக் கூறியிருக்கிறார். அதிலிருந்து அரைவை இயந்திரத்துக்கு அருகாக கிட்டத்தட்ட ஆயிரம் றாத்தல் நிறையுடைய பெரிய பெட்டிகளையெல்லாம் இழுத்துச் செல்லவேண்டிய தருணங்களில் கைப்பாரமிழுப்பியான பம் ட்றக்கை உபயோகித்தே தன் தேவைகளை நிறைவு செய்துகொண்டிருந்தான் தாவோ.

     அதிலிருந்துதான் அதிகரித்தது அவன்மீதான என் அன்பும், அனுதாபமும்.
நான் தன்னில் மிக்க அனுதாபம் கொண்டிருந்தது தாவோவுக்கும் தெரிந்திருந்தது. தன் முதுகுக்குப் பின்னால் மற்றவர்கள் கேலிசெய்து சிரித்துப் பேசுவதை அவன் அறியாமல் இருந்திருக்க முடியாது. அதனால் எவரையும்விட என்னோடு மிக ஒட்டுதலாக இருந்தான். வேலை முடிய கூடிக்கொண்டு வெளியே வருவது, பஸ்ஸெடுக்க நடப்பது எல்லாம் என்னோடு ஒன்றாகத்தான் செய்தான். இதே சிற்றுண்டிச்சாலையில் எத்தனையோ நாட்கள் ஒன்றாக அமரந்திருந்து பியர், சிலவேளை கோப்பி குடித்திருக்கிறோம். குடும்ப விடயங்களைக்கூட என்னோடு பகிர்ந்துகொண்டிருக்கிறான் அவன்.

இந்தளவு அந்நியோன்யத்தில் ஒருநாள் தனது வீட்டுக்கும் கூட்டிப்போனான். மறுக்காமல் கூடிச்சென்றேன். ஒரே பஸ் பாதையில் அவனது வீடு இருந்ததால் எனக்கு மறுக்க சுலபமான காரணம் கிடைக்கவில்லை என்பதோடு, அவன் சிரித்துக்கொண்டு கேட்ட முறையும் என்னிடத்தில் மறுப்பதற்கான மனநிலையை அழித்திருந்தது.

பேஸ்மென்ற் வீடு. சின்னதுதான் என்றாலும் அளவான வசதியோடு அழகாக இருந்தது. மனைவி தேநீர் தந்து உபசரித்தாள். தனக்கு ஒரேயொரு மகள் என்றிருந்தான் தாவோ. அந்நேரம் வெளியே போயிருப்பாள்போலும். காணக் கிடைக்கவில்லை. அழகான மனைவி. ஒரு வாரிசு. அவளும் அழகாகத்தான் இருப்பாள். இந்த இல்லறத்துக்காக தாவோ எவ்வளவு க~;டப்பட்டு உழைத்தாலும் தகுமென்றுதான் அப்போது நான் நினைத்திருந்தேன்.
தாவோ சிறிதுநேரத்தில் வெளியே சென்று பியர் வாங்கிவந்தான். வீட்டிலேயே வைத்துக் குடித்தோம். சில தமிழ்ச் சனங்களின் வீடுகளில்போலன்றி முகம் சுளிக்காமல் தாவோவின் மனைவி முட்டை வறுவலெல்லாம் போட்டுத் தந்து அனுசரணையாக இருந்தாள்.

அன்று நான் வீடு திரும்பியபோதில் அந்தச் சீனத்தியின் கிலுக்கிட்டி நடையும், ஏனைய சீனப் பெண்களுக்குப் போலன்றியிருந்த அவளது தனங்களின் துள்ளலும்தான் என் மனக்கண்ணில் படிந்திருந்தன.

அவனது குதூகலமான மனநிலை, கலகலப்பான போக்குகளெல்லாம் சில வாரங்களில் திடீரென மாறத் தொடங்கிவிட்டன. நான் ஏனென்று கேட்கவில்லை. வீட்டுக்கு வீடு வாசல்படிதானே! ஆனால் தாவோ ஒருநாள் தானாகவே சொன்னான், தனது மனைவி ஊருக்குப் போய்விட்டதாக. ‘சீனாவுக்கா’ என்று கேட்டேன். ஆமென்று பதிலளித்தான். எப்போது திரும்பிவருவாள் என நான் கேட்டதற்கு என்னை ஒருமுறை நிமிர்ந்து நிர்ச்சலனமாய்ப் பார்த்துவிட்டு, ‘ஐந்தாறு மாதங்களில் வந்துவிடுவாள்’ என்றான். அதை ஓர் உள்ளார்ந்த கோபத்தோடு அவன் சொன்னதுபோலிருந்தது எனக்கு. ‘அவ்வளவு காலமாகுமா?’ என நான் கேட்க, ‘எப்போதாவது வரட்டும். அதுபற்றி எனக்கு கவலையில்லை’ என்றுவிட்டு, பள்ளி செல்லும் தனது ஒரே மகளை பாதுகாப்பாயிருந்து வளர்த்தெடுப்பதுதான் தான் தினசரி வேலைக்குப் போய்வந்துகொண்டிருக்கும் நிலையில் சிரமமாயிருக்கப் போகிறது எனவும் தொடர்ந்து தன்பாட்டில் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

மேல்வந்த கிழமைகளில் அவனது மனநிலை இன்னும் மாறுதலடைந்து போனது. யாரோடும் பேசாதவனானான் தாவோ. அதைக் கண்டிருந்தாலும் அக்கறையெடுத்து விசாரிக்க நேரம் வாய்க்கவில்லை எனக்கு. பின் அவனும் பணி நிரந்தரமாக்கப்பட்டதோடு வேறு பகுதிக்கு மாற்றப்பட்டுவிட்டான். தொடர்பு குறைந்துபோனது. எப்போதாவதுதான் காணமுடிந்தது. காணுகிறபோதும் நின்று பேச நேரம் கிடைப்பதில்லை.

அன்று கண்ணெதிரே அவன் வந்துகொண்டிருந்த நிலையில் அவன்பற்றி நிறைய யோசிக்கவேண்டும்போல் இருந்தது எனக்கு. அவன் எங்கேயோ நொறுங்கிப் போயிருக்கிறான்! எங்கே? எனக்குள் கேள்வி விழுந்தது. இதற்கான பதிலை நான் அவனது நடத்தைகளிலிருந்துதான் கண்டுகொண்டாக வேண்டியிருந்தது. ஆனால் அந்த முயற்சிகளையெல்லாம் அவசியமற்றவை ஆக்கிக்கொண்டு தாவோவே றெஸ்ரோறன்ருக்கு வந்துவிட்டான்.

என்னை அங்கு எதிர்பாராதவன் ஒரு வெங்கிணாந்திச் சிரிப்பை உதிர்த்துவிட்டு எனது மேசைக்கு வந்தான். “என்ன குடிக்கப்போகிறாய், தாவோ?” என்று நான் கேட்டேன். “வழக்கம்போல கோப்பியா?”

“இல்லை. பியர்தான் குடிக்கப்போகிறேன். கொஞ்சம் குடிக்காவிட்டால் நித்திரை வராது” என்று கூறிய தாவோ, எனக்கு எதிரே நாற்காலியில் பாய்க்கை வைத்துவிட்டுப் போய் பியர் வாங்கிக்கொண்டு வந்து அமர்ந்தான்.
வீட்டிலிருந்து குளித்து வெளிக்கிட்டு வருவதுபோல் பளீரென்று இருந்தான் தாவோ. இதற்காகத்தான் இவ்வளவு நேரத்தை வேலைத்தலத்தில் செலவளிக்கிறானா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. வீடு செல்கிறவன் இவ்வளவு தூரம் கைகால் கழுவி, முகம் கழுவி, தலைவாரி வரவேண்டிய அவசியமென்ன? ஒருவேளை அவன் வீட்டுக்குப் போகவில்லையோ? கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இவ்வாறு செய்கிறானெனில், இத்தனை காலமும் வீடு போகாமலா இருக்கிறான்? ஏன்? வீட்டுக்குப் போகாவிட்டால் எங்கே தங்குவான்? ஒருவேளை வேறு பெண் எவளுடனாவது தொடர்புகொண்டு இருக்கிறானோ? மகள் தனியாக இருப்பாளே என்று அவன் அன்றொருநாள் சொன்ன கரிசனையான பேச்சு இன்று என்ன ஆனது?
நான் என்னுள் விளைந்த கேள்விகளால் மேலும் மேலும் ஆச்சரியமாகிக்கொண்டிருந்தேன்.

பாதி பியர் குடித்தவளவில் தாவோவுக்கு பேச்சு மூட்டம் வந்துவிட்டது. சளசளவெனப் பேசினான். பல வி~யங்களை அவனிடம் கேட்டறியவிருந்த எனக்கு வாயே மூடிக்கொண்டதுபோல் ஆயிற்று. ஆனாலும் அவன் வாயிலிருந்தே என் கேள்விகளுக்கான விடைகளின் கூறுகள் வெளிவருவதுபோல் தோன்ற இடையறுக்காமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.
ஒருபோது தாவோ சொன்னான்: “எங்க@ரிலே ஒரு கதை இருக்கிறது, சிவா. பல ஆண்டுகளுக்கு முன்னால் அங்கே இருந்த ஒரு ஞானி சொன்ன கதைதான் இது. எனக்கு இதை என் அம்மா சொன்னாள். தான் காணாத உலகையெல்லாம் கண்டுவர ஒரு மனிதன் தன் மனத்தை வெளியே அனுப்புகிறான். ஆனால் சலனப்பட்டுவிடும் அந்த மனமோ தறிகெட்டு அலைகிறது. செல்லக்கூடாத இடமெல்லாம் சென்று, பார்க்கக் கூடாததெல்லாம் பார்த்து, நடக்கக்கூடாத விதமெல்லாம் நடக்கிறது அது. அதை அறிந்த அந்த மனிதன் கவலையில் செத்துப்போகிறான். மனம் திரும்பிவந்தபோது மனிதன் இறந்துபோய்க் கிடக்கிறான். பிறகுதான் தன் நடத்தையின் பிழை அந்த மனத்துக்குத் தெரிகிறது. உடலற்ற அந்த மனம் பின்னால் ஒரு ஞானமாக காற்றில் ஏறிச் சஞ்சரிக்கத் தொடங்குகிறது. இன்றும் அந்த மனம் அலைந்துகொண்டே இருக்கிறதாக என் ஊரிலே நம்புகிறார்கள்.”

நான் அவனது தேர்ச்சியற்ற ஆங்கிலத்தைப் பின்தொடர முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தேன். உச்சரிப்பு விளங்காத வார்த்தைகளை வி~யத் தொடர்ச்சியிலிந்தே கண்டடையவேண்டி இருந்தது. அப்போது, “என் மனம்மட்டும் சலனம் அடையாது என்பதற்கு என்ன நிச்சயம்? விழிப்பில்போல் நித்திரையிலும்கூட ஒரு சலனம் வந்துவிடக்கூடாது. அதற்குப் பயந்தே ஓடித்திரிகிறேன், சிவா. அலைச்சலோ அலைச்சல், அப்படியொரு அலைச்சல்” என்று ஒரு பெருமூச்சோடு முடித்தான் தாவோ.

தாவோ இதை ஏன் சொன்னான் என்று எனக்கு விளங்கவில்லை. இனிமேலும் பேசாமல் இருந்துவிட முடியாதென்று அவனிடமே விளக்கம் கேட்டேன். “நீ சொல்வது சரிதான், தாவோ. ஆனால் இதை எதற்காக இப்போது என்னிடம் கூறினாய்?”

அதற்கு ஒரு போத்தல் பியர் முடிந்தவளவில் மிழற்றும் நிலையிலிருந்த அவன், எனக்கு எப்படிச் சொன்னாலும் அது புரியாதென்றும், நானே அதுபோல ஓர் அனுபவத்தை அடைந்தால்தான் புரிவேன் என்றும் கூறி அந்த வி~யத்தை அத்தோடு முடித்துக்கொண்டான்.

மேலே எங்களிருவருக்காகவும் நானே ஒவ்வொரு போத்தல் பியர் வாங்கிவந்தேன். தாவோவின் பேச்சதிகாரத்தில் நேரம் நகர்ந்தது. பியர் முடிய நாங்கள் புறப்பட்டோம்.

அதிகநேரம் காத்திருக்கத் தேவையற்று பஸ் வந்தது.

போய்க்கொண்டிருந்தபோது தனது வீட்டுக்குப் போகலாம் என்றான் தாவோ. நான் மறுத்தும் விடவில்லை. வற்புறுத்தி அழைத்தான்.

வீடு சென்றபோது அழைப்பு மணியின் அழுத்தத்தில் ஒரு பெண் வந்து கதவைத்திறந்தாள். அவளைக் கண்ட மாத்திரத்தில் நான் திகைத்துப்போனேன். எவள் கூடஇல்லை, எப்போது வருவாளோ, வருவாளோ மாட்டாளோ என்று எனக்குச் சொல்லியிருந்தானோ, அந்த அவனது மனைவியே வீட்டில் இருந்துகொண்டிருந்தாள்.

தாவோ நான் திகைப்பதைப் பார்த்துவிட்டு, “ இது எனது மகள்” என்றான்.
நான் அதிர்ந்துபோனேன். ஒருவரின் இரு பிரதிமைகள்! ஒரே முகம், ஒரே உயரம், ஒரே நிறம், ஒரே மொத்தம், ஒரே சிரிப்பு, சுருள் விசைக் கம்பிகளில் நின்றிருப்பதுபோல ஒரே துள்ளல், ஒரே நெளிவு!

உள்ளே சென்று அமர்ந்தபிறகு கவனித்தேன், அவளது நடையும் தாயினது போன்றதாகவே இருந்தது. அதே கிலுக்கிட்டி நடை! அப்போது அவள் மார்புகள் குலுங்கிய விதமும் என் மனத்துள் ஆழக்கிடந்த அந்த இன்னொரு பிரதிமையின் நினைவையே மேலே இழுத்துவருவதாயிருந்தது.

சிறிதுநேரத்தில் நான் புறப்படப் போவதாகச் சொல்ல, தாவோவும் எழுந்தான். வாசல் கதவுவரை வந்தான். நான் சொல்லிக்கொண்டு நடக்க, வாசலிலே அந்தக் குளிருக்குள் நின்றபடி என்னையே பார்த்துக்கொண்டிருந்தான்.

பஸ்ஸ_க்கு நடந்துகொண்டிருந்தபோது நான் குழம்பியிருந்தேன்.

தாவோவின் நடத்தைகள், முகபாவங்களெல்லாம் பெரிதும் மாறுபட்டிருந்ததாக எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. சொந்த வீட்டில் அந்நியன்போலவே அவன் அன்று நடந்துகொண்டிருந்தான். அவனது தோள் பையும் எடுக்கப்படத் தயாராகப்போல் அவனருகிலேயே இருந்துகொண்டிருந்தது. நான் சொல்லிக்கொண்டு எழும்ப, தானும் கூடவரத் தயாரானவன்போல் அவசரமாகி பின் சட்டெனத் தன்னை அடக்கியிருந்தானே தாவோ, அது ஏன்? அவன் சொன்ன  அலையும் மனத்தின் கதையினுடைய உள்ளார்த்தம் என்ன? அவனது அச்சமும், அதனாலான அலைச்சலும் எதிலிருந்து பிறந்தன?

எல்லாம் யோசிக்க கொஞ்சம் புரிவதுபோல இருந்தது.

அன்று வீட்டிலே ஹோலுக்குள் இருந்தபோது தாவோவின் மகள்பற்றி என் மனைவியிடம் கூறினேன். ஏற்கனவே தாவோபற்றி நான் அவளுக்குக் கூறியிருக்கிறேன். மகள் நடந்துவந்தபோது அந்தத் துள்ளலும் தாயினதுபோல இருந்ததா என்று கேட்டுச் சிரித்தாள் அவள். “பகிடி விடாதை,
சீரியஸாய்த்தான் சொல்லுறன்” என்று நான் சினக்க, சிரத்தை காட்டினாள்.
நான் சொன்னேன்: “ தாவோவின்ரை மனிசி சீனாவுக்குப் போகேல்லை. இஞ்சைதான் எங்கையோ இருக்கிறாள். அவைக்குள்ளை ஏதோ பிரச்சினை இருக்கு.”

என்ன பிரச்சினை என்று வனிதா கேட்டதற்கு, “படுக்கைப் பிரச்சினைதான்” என்றேன்.

“சும்மா விசர்க்கதை கதையாதையுங்கோப்பா” என் சள்ளென விழுந்தாள் அவள்.

“விசர்க்கதையில்லை, செல்லம். வி~யமான கதை. தாவோ சொன்ன கதைக்கு வேற அர்த்தமிருக்க ஏலாது. தாவோவும் இப்ப வீட்டிலை தங்கிறேல்லையெண்டதுதான் அடுத்த விடயம்.”

சிறிதுநேரம் எதையோ யோசித்துக்கொண்டிருந்த வனிதா, “உங்கட நண்பருக்கு இங்கிலீ~; பேச நல்லாய் வராதெண்டு சொன்னியள். அப்படியிருக்கேக்க இந்தக் கதையைத்தான் அவர் சொன்னாரெண்டு எப்பிடி அவ்வளவு நிச்சயமாய்ச் சொல்ல உங்களால முடியுது?” என்று கேட்டாள்.

மிச்சம்மீதியிருந்த என் போதையும் உடனே இறங்கியது. தாவோ சொன்னதிலும், நடந்துகொண்டதிலுமிருந்து ஒரு கதையை நான் புனைந்துகொண்டேனா? அல்லது தாவோ இந்தக் கதையைத்தான் சொன்னானா?

மனைவியினதும் மகளதும் அந்தத் தோற்றவொருமையில் அவன் மனச்சிதைவு அடைதல் ஏன் ஏற்பட்டிருக்கக்கூடாது? அந்தச் சிதைவில் விளைந்தது அவனது மனைவியின் பிரிவெனில், அதே சிதைவின் ஒரு முகம்தான் அவனை வீட்டிலும் தங்கச்செய்யாமல்  விரட்டிக்கொண்டிருக்கிறது என்று கொள்வதில் என்ன பிழையெனக் கேட்க நான் திரும்பியபோது வனிதா அங்கே இல்லை.
நான் சொன்னவற்றை முற்றிலுமாய்த் திரஸ்காரம் செய்துவிட்டாளா அவள்?

நான் நிலைகுத்தி யோசனையிலாழ்ந்தேன்.

யாருடைய கதை அது? தாவோ சொன்னதா? அல்லது அவன் சொன்னதிலிருந்தும், நடந்துகொண்டதிலிருந்தும் நானே புனைந்துகொண்டதா?

000
ஞானம், 2010

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்