Sunday, February 03, 2008

பின்நவீனத்துவம் குறித்த சில ஆரம்பச் சிந்திப்புக்கள்


தேவகாந்தன்

புதிய புதிய ஆய்வுகளின் பின்பும், புதுப் புதுக் கண்டுபிடிப்புக்களின் பின்பும் புராதனமாய் நம்பப்பட்டு வந்த ஓர் உண்மை மாற்றமடைவது தவிர்க்கப்பட முடியாததுதான். ஆனாலும் இந்தத் தவிர்க்கப்பட முடியாதது என்ற விதியை வைத்துக்கொண்டு வரலாற்றுப் புரட்டுகளும் நடக்கின்றன என்ற உண்மையும் இருக்கிறது.

வரலாறு மாறும் என்று சொல்லப்படுவதுண்டு. இல்லை, அது வளர்வதுதான் செய்கிறது. புதிய வரலாறு ஒன்று தானாக உருவாகும். அது ஒரு புதிய கண்டுபிடிப்பின் பின்னாய் இருக்கலாம், தாங்கொணா வறுமையிலும் கொடுமையிலும் வெடித்த புரட்சிகளினாலாய் இருக்கலாம். ஆனால் வரலாற்றை மாற்றுவதென்பது புரட்டுகளினாலேயே நடக்கிறது. அது ஒரு திட்டமிடப்பட்ட இலக்கினை நோக்கிய பயணத்தின் பின்னணியாகவே நிகழ்கிறது. ஆனாலும் அது ஒரே நாளில் திட்டமிடப்பட்டோ நடைமுறைப்படுத்தப்பட்டோ விடுவதில்லை. மிகவும் அறிவுப் புலத்தோடுகூடிய ஒரு நீடிய காலத் திட்டம் அது.

சோவியத்தின் சிதறுலுக்கான திட்டம், மிகேல் கோர்ப்பசேவின் காலத்தில் போடப்பட்டதில்லை. அது ஜார் அலெக்ஸாண்டர் ஆட்சியதிகாரத்திலிருந்து இறக்கப்பட்டு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அன்று விழுந்தது.

இவற்றையெல்லாம் ஒரு பெரும் ஆட்பலத்துடனோ, படாடோபத்துடனோ செய்துமுடிக்க முடியாது. திட்டம்தான் முக்கியம். மீதியை அறிவும் பணமும் செய்து முடித்துவிடும்.

எதிரியை அழிக்க பில்லிப் பேயை ஏவிவிடுவது என்று ஒரு முறை இருந்ததாகச் சொல்வார்கள். சூனியத்தில் பில்லிப் பேயை ஏவி விட்டுவிட்டால் போதும். அது காரியமாற்ற முடியாமல் திரும்பிவரும் போதெல்லாம் தீனியாக அரிசிப் பொரி போடவேண்டுமாம். அவ்வளவுதான். அது சரியான நேரத்தில் காட்டப்பட்ட ஆளை முடித்துவிட்டு அப்படியே காற்றில் கலந்துவிடும்.

இங்கே தம் உறுதிப்பாட்டுக்காக நாடுகளை அழிக்க, ஏவி விடப்படுவது இன்றைய நவீன உலகில் கருத்துநிலையாகவே இருக்கிறது. ஒரு கருத்தை ஏற்றுக்கொள்வதற்கான மனநிலையை மக்களிடத்தில் உருவாக்குவது இதன் வேலை.

அண்மையில்   The Liveliest Art என்ற வார  சஞ்சிகையில் Knight என்பவர் எழுதிய சினிமா சம்பந்தமான நூலைப் படிக்கக் கிடைத்ததபோதும் இந்தக் கருத்து என் மனத்தில் மீளுருவாக்கம் பெற்றது. பிரான்சின் லூமியர் சகோதரர்களதும், இங்கிலாந்தின் றொபேர்ட் டபிள்யூ. போலினதும், ஜேர்மனியினது மக்ஸ் மற்றும் எமில் ஸ்கலடாநோவ்ஸ்கியினதும் சாதனைகளை ஒன்றுமேயில்லை என்னுமளவுக்கு எடிஸனின் சாதனைகளை வானளாவப் புகழ்ந்திருந்தது நூல்.

மேலாதிபத்தியம் என்பது மனித இயல்பாக ஆக்கப்பட்டிருக்கிறது. தன் சகல சவுகரியங்களை இழந்தும், இயற்கை அளித்த சுதந்திரங்களை இழந்தும் மனிதன் செல்வந்தனாக இருக்க இச்சித்தல் கொள்வது நடந்துகொண்டே இருக்கிறது. இதைத்தான் மாயை என்று மதவாதிகள் குறிப்பிட்டார்களோ என்பதுபற்றி நிறைய யோசிக்க முடியும். சைவசமயவாதி பதி, பசு, பாசம் என்று உலகத்தையே மூன்றாகப் பிரிப்பான். பாசம் என்பது மாயை. மாயை அநாதியானது என்பது அவனது வாதம். செம்பில் களிம்புபோல அது உயிரில்பு என்பான் அவன். பார்க்கப்போனால் ஏதோ ஒரு அந்தலையை அவன் பிடித்துள்ளதுபோலவே தோன்றுகிறது.

ஆசை வயப்பட்டதிலிருந்து இந்த மேலாதிக்க உணர்வு ஆரம்பித்ததாக நாம் இதற்கு விளக்கம் கொள்ளலாம். மேலாதிக்க உணர்வானது இனம், மதம், மொழி, நிறம் சார்ந்து எழுகிறது. ‘எல்லா நதிகளும் சமுத்திரத்தில் கலக்கின்றன, அதுபோல் எல்லா மதங்களும் கடவுளுடன் கலப்பதற்கானவை’ என்றுதான் மதவாதி மேலெழுந்தவாரியாகக் கூறுகிறான். ஆனாலும் ஆதாரத்தில் அந்த மேலாதிக்க உணர்வு இருக்கவே செய்கிறதுதான். ஜனநாயகமானது ஜனப் பெரும்பான்மை மூலமாக ஆட்சிமன்ற முறைப்படி நிர்ணயமாகிறது என்பது வெளிப்படையான விளக்கம். அதன் உள்விளக்கம் பணத்தின் பெரும்பான்மை என்பதுதான். இதற்கு மேலே கீழே அதன் உண்மை இல்லை.

‘ஆஹா என்றெழுந்தது பார் யுகப் புரட்சி’ என்று பாரதி கூவிய ரஷ்யப் புரட்சி ஒரு புதிய பாதையைத் திறந்த கணம், மேற்குலகும் ஐக்கிய அமெரிக்காவும் விதிர்ப்படைந்த கணமாகவும் இருந்தது. 1954  இல் ரஷ்யாவின் விண்வெளிப் பயணம் வெற்றியடைந்த நிமிடத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா போட்ட திட்டத்தின் வெற்றியே சோவியத்தின் சிதறல் என்பது மிகையான கூற்று அல்ல.

தன் விண்வெளிப் பயணத் திறன்களை அது அதிகரித்துக்கொண்டிருந்த வேளை, வேறு உபாயங்களையும் கைக்கொண்டிருந்தது. அதுதான் அதன் கருத்தியல் யுத்தம்.

இருண்ட காலத்திலிருந்து மறுமலர்ச்சி யுகம் தோன்றியது எப்படி நிஜமோ, அப்படியேதான் மறுமலர்ச்சி யுகத்திலிருந்து நவீன யுகம் தோன்றியதென்பதும் நிஜமானதே. மார்க்சியம் ஏற்கனவே தோன்றிவிட்டிருந்த அக்காலகட்டத்தில், ரஷ்யாவில் சோஷலிசக் குடியரசு தோன்றியிருந்த பின்னணியில் பின்நவீனத்துவம் அடியெடுத்து வைக்கிறது ஓரளவு நிலைகெட்டுப் போயிருந்த உலகத்தில். அது மார்க்சீயத்துக்கு எதிரானதென்று இடதுசாரிகளால்கூட காரசாரமாக விமர்சிக்கப்பட்டது. இத்தனைக்கு ரஷ்யர்களின் பங்களிப்பு கணிசமாக இருந்தது அதில்.

ஓருண்மையை நாம் நோக்கவேண்டும். பின்நவீனத்துவ தத்துவவாதிகள் அனைவருமே ஒருவகையில் மார்க்சீயர்களாய் இருந்தவர்கள்தான். மார்க்சீயத்தின் போதாமையை வளர்த்தெடுத்தவர்கள் அவர்கள். ஆனாலும் அக்காலகட்டத்து இடதுசாரி அரசுகளின் நடைமுறைப் பிழைபாடுகளில் அதிருப்திகொண்டு, அவ்வரசுகளை அவர்கள் விமர்சிக்கவே செய்தார்கள்.

இது மார்க்சீயத்தை அவர்கள் மறுதலித்ததாக ஆகாது. அதன் குறைகளை அவர்கள் சுட்டிக்காட்டியபோதும், அதை ஆரோக்கியமானதாகச் செய்தார்கள். சமூகத்தையும் அரசுகளையும் பொருளாதார அடிப்படையில் பகுத்தாய்ந்த கார்ல் மார்க்ஸ், இலக்கியத்தைப்பற்றி, கலைகளைப்பற்றி வெகுவாகப் பேசவில்லை. தம் மகத்தான நூலில் இலக்கியங்களைப்பற்றிக் குறிப்பிட்டு உதாரணங்கள் காட்டிய மார்க்ஸும் ஏங்கல்ஸஸும் யதார்த்த இலக்கியம்பற்றி அல்லது எந்த வகை இலக்கியத்தைப்பற்றியும்கூட அச்சொட்டாக எதையும் சொல்லிவைக்கவில்லை.

மார்க்ஸிலிருந்து வளர்ந்த மொழியியலாளர், தர்க்கவியலாளர், தத்துவார்த்தவாதிகள்தான் இலக்கியத்தை ஆராய்ந்தார்கள். நடைமுறை அரசியலின் ஒரு கூறையேனும் ஆய்வதற்கு, அதன் அடிநாதத்தை விளங்கிக்கொள்வதற்கு மார்க்சீயம் எப்படி உதவுகிறதோ, அதேபோலத்தான் இலக்கியத்தைப் புரிந்துகொள்ள பின்நவீனத்துவமே உதவுகிறது. பின்நவீனத்துவம் வெளிப்பாடடையும் முன்னர் ஒரேயொரு இலக்கிய நவீனத்துவமாக இருந்தது ‘புதிய விமர்சனம்’ ஆகும். அமெரிக்காவில் தோன்றி வளர்ந்தது. அதை உதைத்து விழுத்திவிட்டுத்தான் பிராக் பல்கலைக் கழகச் சூழலிலும், பிரான்ஸிலும் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் பின்நவீனத்துவம் பெருவளர்ச்சி கண்டது.

அதைச் சமயோசிதமாகப் பயன்படுத்திக்கொண்டன அமெரிக்காவும் மற்றும் சில முதலாளித்துவ நாடுகளும். ஐம்பதுக்களின் பின் இரண்டாயிரம் வரையான காலகட்டம் பின்நவீனத்துவத்தின் உச்சபட்ச நிலைபேற்றுக் காலமாக இருந்தது. அதைப் பேசாத, எழுதாத, தீவிர படைப்பாளியோ வாசகனோ இல்லையென்னும் அளவுக்கு அது பெருவீச்சுப் பெற்று கற்றோர் படித்தோர் எல்லார் மத்தியிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது. அதற்கான ஆதரவுப் புலங்கள் முதலாளித்துவ அரசுகளாயிருந்தன. அல்லது முதலாளித்துவ அரசுகளின் பின்னணியில் இயங்கிய நிறுவனங்களாயிருந்தன.

மார்க்சீயம் காலாவதியாகிவிட்டது என்ற மாயை படரும்வரை பின்நவீனத்துவத்தின் செல்வாக்கு வெகு ஜோராகத்தான் இருந்தது.

ஆனால் என்றைக்கு சோவியத் முற்றுமுழுதாய்ச் சிதறிப்போனதோ, அன்றிலிருந்து பின்நவீனத்துவத்தின் ஆதரவுப் புலங்கள் களத்திலிருந்து பின்வாங்கிக்கொண்டன.

அவற்றின் இலக்கு அடைந்தாயிற்று.

இலக்கியம் இருக்கும்வரை பின்நவீனத்துவம் இருக்கும். அரசுகள் இருக்கும்வரை மார்க்சீயமும் இருக்கும். படைப்பு உத்தியாக இல்லையெனினும், அதை விளங்கிக்கொள்வதற்கானதும், அதை விமர்சிப்பதற்கான மூலாதாரமாகவும் அது இருப்பதைத் தவிர்த்துவிடவே முடியாது.

இது பின்நவீனத்துக்கு நேர்ந்த சோதனையின் குறிப்புகள் மட்டுமே. தருணம் நேர்ந்தால் பின்நவீனத்துவம்பற்றி இன்னொரு தடவை பேசுவோம்.

00000
Thanks:VEEDU 2006

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...