Saturday, February 23, 2008

ஷோபாசக்தியின் கதைப் புத்தகம் ‘ம்’ குறித்து..


ஷோபாசக்தியின் கதைப் புத்தகம்
 ‘ம்’ குறித்து..


ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த கொரில்லா நாவலுக்கும், சென்ற ஆண்டு வெளிவந்த ‘தேசத்துரோகி’ சிறுகதைத் தொகுப்புக்கும் பின்னால் வெளிவந்திருக்கிற கதைப் புத்தகம் ஷோபாசக்தியின் ம். பெரிய எதிர்பார்ப்புக்களை விளைவித்ததோடு அடங்கிப் போய்விட்ட ஒரு நூலாகவே இது எனக்குத் தெரிகிறது. ஒரு  ஏமாற்றத்தையே நான் உணர்ந்தேன் என்பது மிகையான பேச்சில்லை. கொரில்லா பாதித்ததில் பாதியளவுகூட ம் செய்யவில்லையென்பதைச் சொல்லித்தானாக வேண்டியிருக்கிறது. மொழியும், மரபும் மீறியெழும் இவ்வகையான நவீன பிரதிகளையும் ஒழுங்கான ஆய்வுக்குட்படுத்த முடியும்.

ஆசிரியன் இறந்துவிட்டானென்பது ஆசிரியனின் பிரதிகுறித்த தலையீடு .இருக்கக்கூடாது என்பதுமாகும். ஆனால் அவனின் ஏனைய பிரதிகள் உடன்மறையாகவும் எதிர்மறையாகவும் இங்கே விவாதத்துக்கு வருவதும் அவற்றின் அடிப்படையில் விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதும் விமர்சன உரிமைகளாகும் என்பது அதனடியாய்க் கொள்ளக்கூடிய இன்னொரு கருதுகோள்தான். சமகால வேறு நூல்களையும் விமர்சகன் அலசிக்கொண்டு போவதுகூட இங்கே தவிர்க்க முடியாதபடி நிகழவும் முடியும். இவற்றின் அடிப்படையில் ம் கதைப்புத்தகத்தை இங்கே இனி விசாரணைப்படுத்தலாம்.

புலம்பெயர்ந்தோர் இலக்கியமானது ஈழ இலக்கியத்தின் ஒரு பகுதியேயென்பதை எப்போதும் நான் சொல்லி வந்திருக்கிறேன். அந்த முடிவில் மாற்றமெதுவும் வராதென்பதே என் நம்பிக்கை. அதனால் அது குறித்த விஷயங்களில் கொஞ்சம் கூடுதலான அக்கறை எனக்குண்டு. அந்த வகையில் புலம்பெயர்ந்தோர் இலக்கியத்தில் ஷோபாசக்திக்கான இடம் முதன்மையானது. ஆனால் படைப்பாளியின் அரசியலை முதன்மைப்படுத்தும் முனைப்பு ம் பிரதியை, அது அடையவேண்டிய அல்லது அடைந்திருக்கவேண்டிய இடத்தை தடைக்கல்லாய் நின்று தடுத்திருக்கிறது என்பது நிஜத்திலும் நிஜம். பிரதியாக்கத்தில் எந்த அரசியல், எவ்வளவு அரசியல் இடம்பெற வேண்டும் என்பதைப் படைப்பாளியேதான் தீர்மானிக்கிறான். 'நான் தமிழனில்லை, இலங்கையனில்லை, பிரான்ஸியனில்லை' என்று சொல்லிக்கொண்டிருப்பினும் இவையொன்றுள்தான் ஷோபாசக்தி இருக்கமுடியும். அந்தளவுக்கு அவருக்கு அரசியலும் இருக்கும். இருக்கலாம் என்பதே என் வாதமும்.

ஆனால் படைப்பை அது எந்தளவுக்கு வலிவுபடுத்துகிறது அல்லது நலிவுறச் செய்கிறதென்பதே என் கரிசனை. ஒரு  அரசியலைப் பேச வந்ததின் மூலம் படைப்பு எவ்வளவு தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது என்பதை இங்கே கவனிக்கவேண்டும். இங்கே அரசியல் ஒருகாலகட்டத்தினது இடதுசாரி இயக்க எழுத்தாளர்களது எழுத்துக்களிலிருந்த கருத்துக்கள்போல் துருத்திக்கொண்டு நிற்கவில்லையென்பது மெய்யிலும் மெய்யே. ஆனாலும் நோக்கம் அதுவாகவே இருந்ததென்பது எவர் கண்ணுக்கும் புலனாகாது போகமுடியாது.

கொரில்லா தீவான மொழியின் அத்தனை அழகையும் வீறையும் தன்னுள் அடக்கிக்கொண்டு வந்திருக்க, ம் ஒரு செயற்கை மொழியில் உருவாகியிருக்கின்றதெனவே எனக்குப் படுகிறது. குறிப்பாக நூலின் முதற் பாதியில் இந்தப் பலஹீனம் அதிகம். ஷோபாசக்தியின் எழுத்தில் இந்த அம்சம் மகாபிரதானமானது. எழுத்தை அத்தனை வீச்சோடு பிரயோகித்தவர்களுள் முந்திய தலைமுறையைச் சேர்ந்தவர்களில் எஸ்.பொ.வைச் சொல்ல முடியும். இளைய தலைமுறையில் ஷோபாசக்திதான். இந்த நிர்மாணம் இந்தப் பிரதியில் மறுவாக்கம் காணாது போனதேன்? இவை வருத்தப்படக்கூடிய கேள்விகள். எவருக்கும்.

நாவலென்பது தன்னுள் ஒரு விகாசத்தைக் கொண்டிருக்கவேண்டும். நாவல் பல் பரிமாணமெடுப்பதென்பதின் அர்த்தம் இதுதான். அது யதார்த்தவகையான நாவலென்றாலும் சரி, பின்நவீனத்துவ வகை நாவலென்றாலும்தான் சரி இந்த வரையறையைப் பெரும்பாலும் நீங்கி வந்துவிட முடியாது. நூறோ ஆயிரமோ பக்கங்கள் எத்தனையானாலும் ஒரு நூல் நாவலாவதென்பது அது தன்னுள் விகாசமெடுக்கும் இந்த அம்சத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. ம் விகாசமெடுக்க முடியாமல் தனக்குள் முனகுவது வாசகனுக்குத் தெளிவாகவே கேட்கிறது.  ஒரு  நாவலின் கட்டுக்கோப்போடு ம் வரமுடியாதுபோயிருக்கிறது. அது வெறும் சம்பவங்களாய்க் குறுகிப்போனது என்பதே இறுதியான முடிவாகிறது.

சொல்ல எடுக்கப்பட்ட விஷயம் சாதாரணமானது. நேசகுமாரன், பிறேமினி, நிறமி ஆகியோரின் கதைபோலத்தான் இது தோற்றம் காட்டுகிறது. ஆனாலும் இயக்க அரசியலில் இருந்த மோசமான அம்சங்களையே இது பகிரங்கப்படுத்த எழுந்தது என்பது இரகசியமான விஷயமில்லை..இது தவிர்க்கவியலாதவாறு அரசியலைச் சாரச் செய்திருக்கிறது. கலாபூர்வமான அம்சங்கள் தவிர்ந்து வரும் நோக்கமெதுவும் பிரசாரம் தவிர வேறில்லை. பிரசாரமென்பதென்ன? அதுதான் அரசியல். ஒரு அனுபவத்தின் பகிர்வுகூட நாவலாக வரமுடியும். பல அனுபவங்கள் அவ்வாறு நாவல்களாக வந்திருக்கின்றன. கொரில்லா வந்திருக்கிறது. இது ஏன் வரவில்லை? ஆசிரியனின் சொந்த அனுபவமாக அது இல்லாதிருந்ததினாலா? எனக்குத் தெரியவில்லை. ஆனால் புனைவுக்கான ஒரு மொழிநடை இந்தக் கதைப் புத்தகத்தில் இல்லையென்பது எவருக்குமேதான் தெரிகிறது. வெலிக்கட சிறைச்சாலையின் விவரணையும் அங்கு நிகழும் சம்பவங்களின் விபரிப்பும் அனாவசியமானவை. மட்டக்கிளப்புச் சிறையுடைப்பைச் சொல்ல மிக நீண்ட இடம் தேவைப்பட்டிருக்கிறது.அவை பாத்திர வளர்ச்சிக்கான எந்த உந்துவிசையையும் செய்வதில்லை. அவை எந்த நோக்கத்தையுமே ஆசிரியனுக்கு நிறைவேற்றிக் கொடுத்திருக்க முடியாது. புனைவின்றி எழுதப்பட்ட சி.புஷ்பராசாவின் 'ஈழ விடுதலைப் போராட்டத்தில் எனது சாட்சியம்' என்ற நூலில்கூட வெலிக்கட சிறைச்சாலையின் விவரணையும், நடைபெறும் சம்பவங்களின் விஸ்தரிப்புகள் சிலவும் வருகின்றன. அதை என்ன சொல்ல? ஏன், அடேல் பாலசிங்கம் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கமான 'சுதந்திர வேட்கை' சமகால அரசியல் நிகழ்வுகளின் ஓரு விவரிப்புதானே? அதைப் புனைவு இலக்கியத்தோடு சேர்த்தெண்ணிவிட முடியுமா? விவரிப்பு புனைவற்ற நிலையில் புனைகதை இலக்கியப் படைப்பானது தன்னில் குறையாகிப்போய் நிற்பதை எதனாலும் ஈடுகட்டிவிட முடியாது. ம் தன் குறைகளோடேயே நிற்கிறது.

பிரதியைப் பிரதியாகாமலும், நாவலாகாமலும் தடுத்த இக் குறைகளை நீக்கிப் பார்த்தால் இது தனியே கதைப் புத்தகமாக மட்டும் நிற்கவில்லை என்பது தெரியும். யதார்த்த நிகழ்வொன்றின் அலுக்காத கதையாக இது பிரமாதமாய் வார்க்கப்பட்டிருப்பதைச் சொல்லவேண்டும். ஷோபாசக்தியின் எழுத்து நடை கதையை கதையளவாக நிற்காமல் மேலெத்துச் சென்றிருக்கிறது. கொரில்லா சுட்டெண்கள் ஊடாகவும் கதை சொல்ல முயன்றது. இது வேறொருவகையான தொழில் நுட்பத்தைப் பிரயோகித்திருக்கிறது. மேலை நாடுகளில் பாடநூல்கள் இவ்வாறு பத்திகளும் சிறுசிறு தலைப்புகளோடு வரும். அந்த தொழில் நுட்பத்தை ஷோபாசக்தி பொருத்தமாக இந் நூலிலே கையாண்டிருக்கிறார். நாவலும் தன்னை ஒரு நவீன ஆக்கமாய்த்; தெளிவாகவே பிரதிநிதித்துவப் படுத்துகிறது.

குதிரை வண்டிக்காரன் ஒருவனின் கதையோடு கதைப்
புத்தகம் முடிவுபெறுகிறது. இக் கதை, ம் மேலே சொன்ன அத்தனை கதைகளையும்விட அழகானது. இதுபோல் ஷோபாசக்தியால் மட்டுமே முடியும். அப்படியான இந் நூல் பிரதியாகாமலும் நாவலாகாமலும் போனது எனக்குள் உள்ள மிகப்பெரிய சோகம். ஷோபாசக்தியின் முதல் நாவல் கொரில்லாவின் வெளியீடு சென்னையில் நடைபெற்ற வேளையிலே அதுபற்றிய சிறப்பான ஒரு விமர்சனத்தை நான் செய்திருந்தேன். பிரதியொன்று கொண்டிருக்கக் கூடிய அத்தனை அதிர்வுகளையும் பாதிப்புக்களையும் அது தன்னுள் கொண்டிருந்தது. அது ஈழத் தமிழிலக்கியத்தில் மெச்சப்படவேண்டிய படைப்பு. இது அதுவாகாமற்போன காரணத்தின் அலசல் சுகமானதாகவிருக்காது. வாசகனுக்குப் போலவே படைப்பாளிக்கும். விமர்சன முடிவுகளை படைப்பாளி தூக்கியெறிந்துவிட்டுப் போகலாம். ஆனால் விமர்சன தர்மம் அதைச் செய்யவே செய்துகொண்டிருக்கத்தான் செய்யும். கதைகள் புனையப்படுவனவுமாகும். ஆனால் இது நடந்ததும் புனையப்பட்டதும். புனைவு எங்கே தோற்கிறதெனில் அது அடையவேண்டிய எல்லையை அடையாமற்போகிற இடத்திலிருந்து தொடங்குகிறதெனலாம். ம்முக்கு நேர்ந்த சோகம் இவ்வண்ணமே நிகழ்ந்திருக்கிறது. கொரில்லாபோல் ஒரு உயர்ந்த படைப்பை ஷோபாசக்தியால் தர முடியும்.


00000


காலம் காலாண்டிதழ்


Thanks: KAALAM (LIT.MAG)

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...