Sunday, February 03, 2008

மறைபொருள்’ குறும்படத்தில் மறைந்திருக்கும் பொருளும் வெளியாகும் விவகாரங்களும் மீதான-தேவகாந்தன்-சுயாதீன கலைப் பட இயக்கத்தினரின் ஐந்தாவது தமிழ்க் குறுந்திரைப்பட விழா அண்மையில் கனடா, ரொறன்ரோ ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் நடைபெற்றது. பதினாறு படங்கள் திரையிடப்பட்டன. நெறியாளர்கள் சந்திப்பு உட்பட சுமார் எட்டு மணி நேரமும், பின்னால் பரிசு அறிவிப்புக்கள், பரிசளித்தல்கள், உரை நிகழ்வுகளென்று சுமார் இரண்டு மணி நேரமுமாக ஒரு நீண்ட வெளியில் நடந்து குறுந்திரைப்பட விழா முடிந்துள்ளது.

நல்லது. பத்து மணிநேர அவ் விழாவில் பார்வையாளன் பெற்றதென்ன? இக் கேள்வி மிக முக்கியமானது. ஏனெனில் இது விழா அமைப்பாளர்களின் செயற்பாட்டுத் திறன் முந்திய போதுகளைவிட பெருகியிருந்தும் பார்வையாளன் பலனற்றுப் போனான் என்பது சிந்திக்கவேண்டிய விஷயம்.

கனடாவிலிருந்து அதிகமான குறுந்திரைப்படங்கள் போட்டிக்கு வந்திருந்தன. போட்டிக்காகத் தயாரிக்கப்பெற்று அவசர அவசரமாக கொட்டுண்ட குறும்படங்கள் அவையென்பது கடந்த சில விழாக்களையேனும் உன்னிப்பாய்க் கவனித்திருபோருக்குப் புலப்பட்டிருக்க முடியும். கமராத் தொழில்நுட்பம் தவிர்ந்து வேறெந்த துறையிலும் ஒரு முன்னேற்றத்தையும் பார்வையாளன் கண்டிருக்க வாய்ப்பில்லை. என்னளவில் சென்ற ஆண்டைவிட தரம்குறைந்த படங்களையே இளம் நெறியாளுநர்கள் இம்முறை தந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. தமிழகத்திலிருந்து வந்து போட்டியில் பங்குபெற்ற படங்களைப் பொறுத்தவரை, திரைப்பட மொழியை சென்ற ஆண்டைவிடச் சிறப்பாக வெளிப்படுத்தியதைக் காண முடிந்திருந்த அதேவேளை புலம்பெயர் சூழலில் வெளியாகும் படங்களின் தரம் பெரிதாகச் சொல்ல ஏதுமற்றுப்போனது துர்ப்பாக்கியமே.

நில வரையறை கடந்து ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இரண்டு குறும்படங்கள் மட்டும் சொல்லும் தரத்தனவாயிருந்தன அவ் விழாவில். ஒன்று கனடாவிலிருந்தும், மற்றது தமிழகத்திலிருந்தும் வந்திருக்கின்றன. அவையவையும் அவையவைக்கான குறைபாடுகளைக் கொண்டிருக்கிற போதும் அவை தவிர வேறு எதுவுமே பார்வையாளனிடத்தில் ஒரு மயிரளவு சலனத்தைக்கூட ஏற்படுத்தவில்லையென்பதைச் சொல்லவே வேண்டும்.

இதில் முதலில் நான் குறிப்பிட விரும்புவது ரூபனின் நெறியாள்கையில் வெளிவந்த The  Movie as Name என்ற குறும்படம். தலைப்பளவில் வுhளை This Movei  Has Not Get Rated  என்ற அமெரிக்கத் திரைப்படத்தை நினைவுறுத்தியதைத் தவிர, புறவய பாதிப்புகளின்றி வெளிவந்திருப்பதை முக்கியமாக நான் கருதுகிறேன். மாற்றுத் திரைப்படங்களுக்கான நம் இயக்கத்தை ஒரு புள்ளியாகத் தொடும் குறும்படமாக இதைப் பார்க்கமுடியும். திரைப்பட மொழியென்பது மொழியற்று  இயங்குவதில் இல்லையென்பது மெய்யே. மொழியற்ற தளத்தில் அதன் விகசிப்பைக் காட்டுவது இன்னும் கடினமான விஷயமாகவே இருக்கமுடியும். அதை ஓரளவு கூர்மையற்ற தளத்தில் சொல்லிமுடித்திருக்கிறது ரூபனின் குறும்படம். ஆனாலும் நம் திரைப்பட இயக்கத்தை அது அடையாளப்படுத்தியிருக்கிறது.

படத்தின் முதற் காட்சியிலேயே மய்யமாக்கப்படவேண்டிய புள்ளியிலிருந்து விலகிப்போய்விடுகிறது கமரா. உரையாடலற்ற ஒரு படத்தில் இந்த மய்யப்படுத்தல் முக்கியமானது. அக்கிரா குரோசவாவின்  Rashamon  ஐ  இப்போது நினைக்கவேண்டும். அதன் முதற்காட்சியிலேயே மழை துவங்கி தவிர்க்கவியலாத குறியீடாகத் தொடர்ந்துகொண்டிருக்கும். அது காட்சியின் விழுமியத்துக்கானதல்ல என்பதை தேர்ந்த பார்வையாளன் அறிவான். அது காலத்தின் குறியீடு. ஆடியடங்கி வல்லமைகொண்டு வாழ்ந்திருப்போரையும்கூட அடங்கிப்போக வைத்துவிடுகிறது காலம். அதைக் குறியீடாக திரைப்படம் முழுக்க நீள விட்டிருப்பார் குரோசவா.

இங்கே மய்யமாய்த் தொடர்ந்துகொண்டு இருந்திருக்கவேண்டியது மலர். உலகத்து மொத்த இயற்கையினதும் சிரிப்பு அது. அதைக் காட்டியிருப்பதன்மூலமே பல தளங்களிலும் தரங்களிலும் இருக்கக் கூடியவர்களின் கவனயீனத்தை செறிவுபடுத்தியிருக்க முடியும். இறுதிக் காட்சியில் மலர்மீதான குழந்தையின் கவனவீர்ப்பு இன்னும் அழுத்தமாக விழுந்திட இந்தக் காட்சிமுறை அவசியமானது. ஒரு தொய்வு ஐந்து நிமிட குறும்படத்தில் கெட்ட பாதிப்பினைச் செய்துவிடுகிறது.

ஆனாலும் தன் பிரதியாக்கத்தால் அது நிமிர்ந்து நின்றிருக்கிறது.

அடுத்ததாய் நான் குறிப்பிட விரும்புவது பொன் சுதாவின் ‘மறைபொருள்;’. ‘மறைபொருள்’ தன் பொருளை ஒரு பூடகமாய்த்தான் காட்டத் துவங்குகிறது. சராசரிக் குடும்பத்து ஒரு இளம்பெண் வேலைக்கோ கல்லூரிக்கோ செல்ல தன்னை ஆயத்தம் செய்கிறாள். குளித்து வந்து தலைவாரிப் பூ முடித்தல், கண்ணுக்கு மை தீட்டுதல், உடையணிதல் எல்லாம் ஒழுங்காக முடிகின்றன. கண்ணாடி முன் நின்றவளின் முகம் தன் அலங்காரத்தைக் கண்டு திருப்தியில் பிரகாசமடைகிறது. பின் முஸ்லிம் பெண்ணுக்கான கறுப்பு உடையை எடுத்து அணிகிறாள். முகம் மறைக்கப்பட்டு கண்கள்மட்டும் ஒரு சோகத்தை அப்பியனவாய் கனத்து மூடுகின்றன. அவை மறுபடி திறந்து மூடுகின்றன. பார்வையாளன் தன்னுள் சிதறுகிறான்.

இத்தகைய பாதிப்பு விளைக்கக்கூடியதாய் அண்மையில் வெளிவந்த தமிழ்க் குறும்படமேதும் நம்மிடமில்லை.

ஒரு முஸ்லிம் பெண் தானணியும் பர்தாவினால் தன்னழகு மறைக்கப்படுவது குறித்து அடையும் வலி இக் குறும்படத்தில் இன்னும் சிறப்பாகக் காட்டப்பட்டிருக்க முடியும். ஆனால் அதுவல்ல நம் முன் கேள்வியாவது. இக் குறும்படம் பரிசு பெறாது போனதுக்கான காரணமும் கேள்விக்குரியதல்ல. நடுவர்கள் தீர்மானித்த பிறகு அப்படியொரு கேள்வி அநாவசியம்.

ஒரு முஸ்லிம் இளம்பெண்ணின் மனநிலையைப் பிரதிபலிப்பதன் மூலம் பொன் சுதா இஸ்லாம் மதத்தை அவமதித்து விட்டாரா அல்லது சில அடையாளங்களைக் கேள்விக் குறி ஆக்கிவிட்டாரா என்பதே இங்கு பிரச்னையாவது.

‘Inch Allah Dimanche’ என்றொரு பிரான்ஸ் சினிமா 2001 இல் வெளிவந்தது. பிரான்ஸ் அல்ஜீரியா நெறியாளுநர் யாமினா பென்கிகி இயக்கியது. அல்ஜீரியாவிலிருந்து வந்து பிரான்ஸில் குடியேறும் ஒரு திருமணமான முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்படும் தகவமைதல் சம்பந்தமாக எழும் பிரச்னைகள் சார்ந்த ஒரு சினிமா அது. தன் மரபார்ந்த தடைகளுடன் புதுநிலத்தில் தனக்கேற்படும் கலாச்சார முரண் தடைகளையும் உடைக்க அவள் செய்யும் போராட்டமே படத்தின் ஜீவன். இருந்தும் அது இஸ்லாத்துக்கெதிரானதென்று எந்த இஸ்லாமிய ரசிகனும் கூறவில்லை. மதவாதிகளும் சொல்லவில்லை.

டென்மார்க்கில் முகம்மது நபியைக் கேலி செய்யும் சித்திரங்களை ஒரு பத்திரிகை வெளியிட்டதன் பின் சில மத விஷ யங்களை, குறிப்பாக இஸ்லாம் மத சம்பந்தமான விஷயங்களை, பேச ஓர் அச்சமெழுந்திருக்கிறது. இந்தியாவின் தலைசிறந்த ஓவியரான எம்.எப்.உசேன் இந்துக் கடவுளான சரஸ்வதியை நிர்வாணமாகத் தீட்டியதை ஆக்ரோஷமாக எதிர்த்த இந்துத்துவவாதிகளுக்கும், முகம்மது நபி கேலி செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குமிடையே அடிப்படையில் வித்தியாசமில்லை. என்றாலும் அவை அவையவைகளுக்கான கேள்விகளைச் சந்தித்தாகவேண்டுமென்பதிலும் எனக்கு மறுப்பில்லை.

ஆனால் பொன் சுதாவின் ‘மறை பொருள்’ பேசுவது ஒரு தனிமனித மனநிலைபற்றி. அதனை மறுப்பற்கான எந்தக் காரணமும் வெளிப்படையாக இல்லை. இது காரணமாகவே பரிசு கிடைப்பதில் அது சில சிக்கல்களைச் சந்தித்ததோ என்ற அய்யமும் என்னுள் உண்டு. அதை இங்கு நான் விசாரணைப்படுத்தப் போவதில்லை. என் விசாரணை இவ்வாறு நிகழ்கிறது: எந்த ஒரு பெரிய சக்தியையும் எதிர்ப்பதற்கான ஒரு ஆயுதமாக இஸ்லாத்தை நாம் முன்னிறுத்த வேண்டுமா? இஸ்லாம் வாழ்வியலாக மட்டுமே ஏன் தொடரக் கூடாது?

இவைக்கான பதில்களைக் கண்டடைவது சுலபமில்லைத்தான். ஆனாலும் ஒன்றை இங்கே வற்புறுத்த வேண்டும். மத அடிப்படைவாதம் எங்கேயும்தான் மனித வாழ்வை நாறடித்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கத்தோலிக்க மத அடிப்படைவாதம், இந்தியாவில் இந்துத்துவ அடிப்படை வாதம், இலங்கையில் புத்த மத அடிப்படைவாதம், ஆப்கானித்தானிலும் ஈரானிலும் பாகிஸ்தானிலும் இஸ்லாமிய மத அடிப்படைவாதங்கள் அந்தந்த நாடுகளின் அரசியலையே தீர்மானிக்கின்றன என்பது பகிரங்கப்படுத்தப்படவேண்டியதே. ஆனால் அமெரிக்காவின் எதிர் சக்தியாக இஸ்லாமை முன்னிறுத்துவது பேதமை. அதைச் சரியான சித்தாந்தத்தில் எதிர்க்க முடியும். அதைச் செய்வோம்.

பொன் சுதாவின் தனிமனித சுதந்திரத்திற்காக நான் இங்கே குரல் கொடுக்கவில்லை. இது வேறு. ஒரு கலைப் பிரக்ஞையுடைய தனிமனிதனாய் அவர் எதைச் சொல்வதற்கும் உரிமையுடையவர் என்பதே என் வாதம். இதற்காக அவர் ஒரு முஸ்லீமாக இருக்கவேண்டியது என்பது எந்தவகையிலும் தேவையற்ற சமாச்சாரம். அப்படியானால் தமிழில் சல்மாவுக்கும் எச்.ஜி.ரசூலுக்கும், ஆங்கிலத்தில் சல்மான் ருஷ்டிக்கும் மட்டுமே அத் தகைமைகளை நாம் ஒப்புக் கொடுத்தவர்களாகிவிடுவோம்.

Water திரைப்படம் இந்தியாவின் புராதன அழுக்கைப் படம் பிடித்து வியாபாரம் செய்தது. மெஹ்றியா அசிசியின் Afghanistan Unveiled விவரணப் படமும் அதையே செய்தது. மேற்கில் விற்பனைக்கான பண்டம் எதுவென்பது இவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறதுதான். நல்லது. அதை நாம் கருத்தளவில்தான் சொல்லிக்கொள்ள முடியும். ஆனாலும் மெஹ்றியா அசிசியிடம் குரான் கூறுவதுபோல் நீ முகத்தை மறைக்கத்தான் வேண்டும் என்று கூறிவிட முடியாது. அவரும் தன் முகத்தை மீண்டும் தான் மறைக்கப்போவதில்லை என்பதில் தீர்க்கமாகவே இருக்கிறார்.

‘மறை பொருள்’ அதுபோன்ற ஒரு பொருளைப் பேசுகின்றது. பெண்ணடிமைத்தனத்தின் ஒரு கூறாகவும் இதனைக் காணமுடியும்.

நம் பார்வைகள் விசாலிக்கவேண்டும். அப்போது மறைக்கப்பட்டுள்ள இன்னும் பல கூறுகளை நாம் சந்திக்க முடியுமாயிருக்கும். இவற்றை மறுதலித்துக்கொண்டு நம்மால் ஆரோக்கியமாக வளர்ந்துவிட முடியாது. சிந்தனையிலும் சினிமாவிலும்தான்.

(‘வைகறை’ அக்.06,2006 வார இதழில் வெளிவந்தது.)

00000

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...