மு. புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்'

'மீண்டும் வரும் நாட்கள்'
கவிதை நூல் குறித்தும் விமர்சன அரங்கு குறித்தும்





'மீண்டும் வரும் நாட்க'ளின் மீதான விமர்சன அரங்கு 05-06-2005 இல் ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் நடைபெற்றது. அன்றைய மாலையில் அதைத் தொடர்ந்து சுமதி ரூபனின் யாதுமாகி நின்றாள் கதைத் தொகுப்புக்கான விமர்சனக் கூட்டம் இடம்பெற்றது. விமர்சன அடிப்படையில் அச்சொட்டாக மட்டுமே கருத்துக்களை என்னால் அங்கு முன்வைக்கக்கூடியவளவான கால அவகாசமே தரப்பட்டிருந்தேன். அந் நூல் குறித்து மேற்கொண்டும் விவாதிக்க நிறைய விஷயங்கள் இருந்தபோதும், உடன் மறையாகத்தான், காலம் கருதியே அதை நான் தவிர்க்க நேர்ந்தது. அவைபற்றியெல்லாம் கட்டுரையாக எழுத எண்ணம் கொண்டிருந்தேன். காலம் இழுபட்டுப் போனது. அதற்கிடையில் மு.புஷ்பராஜனின் எதிர்வினை பதிவுகளில் வந்திருக்கிறது. நல்லது. புதிவுகளில் வரும் தேவகாந்தன் பக்கத்துக்கு நீண்ட நாட்களாக எழுதவில்லை என்ற என் மன உறுத்தல் இத்தோடு தீர்ந்ததாக ஆகட்டும்.

இந் நூல் குறித்து அன்று நான் வெளியிட்டதில் இரண்டாம் அபிப்பிராயம் என்னிடத்தில் இல்லை. ஆனாலும் சிலவற்றுக்கான விரிவுகள் அவசியமென்றே இப்போது படுகிறது. குறிப்பாக புஷ்பராஜனின் எதிர்வினை வந்தபிறகு படுகிறது.

எவரிடத்திலும் சரி, எழுச்சி மிகும் ஒரு கணத்திலேயே கவிதை பிறக்கிறது.
ஒரு காட்சி பற்றி, ஒரு கருத்துப்பற்றி, ஓர் உணர்வுபற்றியெல்லாம்கூட அது இருக்கலாம். கவிஞனுக்கு அதற்கான வரையறுப்பு இல்லை. அப்படி இருக்கக்கூடாது. ஆனால் அது எழுச்சிக் கணத்திலானதாய் மட்டும் இருக்கவேண்டுமென்பது வரையறை. என்னால் எதையும் கவிதையில்தான் சொல்ல வரும் என்பதுமாதிரியெல்லாம் பிடிவாதம் பிடிக்கக்கூடாது. இன்றும்கூட சங்கப் பாடல்களுக்கிருக்கும் மதிப்பு அவை வீரமும் காதலும் பேசின என்பதினாலில்லை. எழுச்சிக் கணங்களில் அவை கவிஞனின் மனசாட்சியாய் வெளிவந்தன என்பதினாலேயே ஆகும். அதையே தன்னுணர்ச்சிப் பாடல்களென இலக்கியம் சொல்லிநிற்கிறது. அவற்றிலும் அவசியங்களுக்காய்ப் பாடப்பட்டுச் சோடைபோனவை உண்டு அல்லவா?

செய்யுளின் தளையுடைத்து மொழியடைந்த சுதந்திரமே உரைநடையென்று சொன்னாலும் தப்பில்லை. அது ஒரு மேலாதிக்கக் குடியின் மொழியதிகாரத் தடையுடைப்பும். நாவலரிடம் எனக்குள்ள கவுரவத்தின் ஒரே காரணம் அவர் 'வன்ன நடை வழங்குநடை வசனநடை' கைவந்த வல்லாளராகத் திகழ்ந்தார் என்பதில்தான். அதை எந்தக் காரணம் சுட்டி அவர் செய்திருந்தாலும், அந்தப் பெருமையிலிருந்து அவரை இறக்கிவிட நான் உடன்படமாட்டேன்.

தமிழின் இன்றைய மேன்நிலைக்கு உரைநடையே முழுக் காரணமாக இல்லாவிடினும், மக்களுக்கான மொழியாக அது மாறியது அந்தக் கணத்திலிருந்துதான். இன்று இன்னும் தளையறுத்து அது புதுமொழியாக வலம் வருகிறதெனில் அது ஏதோ நினையாப்பிரகாரம் நிகழ்ந்ததொன்றல்ல. யாப்பின் கட்டுடைப்பை, உரைநடையின் அவசியத்தை பாரதி எவ்வளவு அவசியமென்றான் என்பது எமக்குத் தெரியாததல்ல. அதுவும் கருத்துப் பரிமாற்றத்துக்கான சாதனமே. உரைநடையினதும் கவிதையினதும் மொழிக்கிடங்குகூட ஒன்றுதான். எந்த ஒரு கருத்தைச் சொல்வதற்கும் வல்லபம் வாய்ந்துதான் தமிழுரைநடை இன்று இருக்கிறது. இல்லாவிட்டால் இதுவரை காலமான தமிழின் புனைகதை முயற்சிகளுக்கெல்லாம் என்ன பொருள் இருக்கமுடியும்?

உரைநடை இலக்கியத்தின் பங்குதாரியாகிய பிறகு சாமான்யமான விஷயங்களை அதில் சொல்வதில்தான் அர்த்தமிருக்க முடியும். கவிஞர்களானாலும் உரைநடையில்தானே கடிதமெழுதிக் கொள்கிறார்கள்? புஷ்பராஜன் புதுக்கவிதையில்தான் நான் கடிதமெழுதுவேன் என்று அடம்பிடித்தால் நான் என்ன செய்ய முடியும்? முடிந்தது, இவ்வாறான விஷயங்களைப் பேச புதுக்கவிதையை எடுக்காதீர்கள் என்று சொல்வது மட்டும்தானே? பாலஸ்தீனத்துக்கான வாழ்த்தை கவிதையில் சொல்ல புஷ்பராஜனுக்கு என்ன அவசியம் இருந்தது? அதுவும் இரண்டு பாகங்களில். அது கவிதையாக வரவில்லையே. இல்லை, கவிதையாகத்தான் வந்திருக்கிறதென்று கவிஞனேதான் வந்து சண்டை பிடித்துக்கொண்டு நிற்பானா? கவிதை|கவிதையில்லை என்று சொல்கிற தகுதி வாசகனுக்குத் தானுண்டு. சிறிது விமர்சகனுக்கும். வேறு யாருக்கும்-யாருக்குமே - இல்லை.

கவிதையில் ஒரு பூடகமும் உள்ளோடியிருப்பது நல்லது. நான் புரியாத் தன்மையைக் குறிக்கவில்லை. மர்மம் அல்லது மாந்திரீகப் பயன்படுத்துதல்கள் பற்றிக் கூறவில்லை. இந்தப் பூடகம் ஒரு இடைவெளியாகவுமிருக்கலாம். வாசகனின் தன் அனுபவப் பொருத்தலுக்கானது இந்த வெளி. அதுதானே முக்கியம். கவிஞன் தன் அனுபவத்தை வாசகனுடன் பகிர்கிறானென்றில்லை. கவிதையே அனுபவமாகவேண்டும் என்பதுதான் என் கட்சி. அதற்கானவைதான் கவிதையின் இடைவெளிகள். இது தெரியாததால்தான் எல்லாவற்றையும் சொல்லப்போய் அழகிய கவிதையொன்று கெட்டது. 'புரிதல்' இன்னுமே ஒரு நல்ல கவிதை. அது மிகமிக நல்லவொரு கவிதையாக வந்திருக்கவேண்டியது. இப்படி எல்லாவற்றையும் சொல்லப்போய்த்தான் கெட்டது.

இயற்கையின் உள்ளுணர்வுகளுக்காய்
இதயத்தைத் திறந்துவிடு
மௌனமான அதன் மொழிகள்
உன்னில் புரிகையில்…

என்றுமட்டும் அக் கவிதை முடிந்திருந்தால், அது உச்சமேறுவதை எதனாலுமே தடுத்திருக்க முடியாது. புரிதல் கவிதை பரவாயில்லை. நல்லதாகத் தப்பிப்பிழைத்திருக்கிறது. இக் கணத்தில் 'வாழ்ந்துவிடு' வுக்கு நேர்ந்தது பெரும் சோகம். வேண்டியவரிகளாய் முன் பகுதியிலும் பின் பகுதியிலும் மட்டும் நான் சொல்லவில்லை. இடையிலுள்ள வரிகள் சிலவற்றையம் சேர்த்தே சொன்னேன். அவ்வாறாயின் கவிதை இவ்வண்ணம் அமைந்திருக்கும்:

யசோதரா
இக் கணத்தில் வாழ்ந்துவிடு

முற்றத்தில்
விரித்த பாயில் மனைவி அருகிருக்க
மல்லாந்து படுத்தபடி
என்ன நினைக்கிறாய்?

விண்ணில் வெள்ளிகள் மினுங்க
கள்ளப் பார்வையும் செல்லச் சிரிப்பும்
அருகில் ஒலிக்க
ஆயிரம் எண்ணங்கள்
வீதி மருங்கில் பூத்துப் பொலிகிறதா?

வாழ்ந்துவிடு வாழ்ந்துவிடு
கற்பனையிலாவது வாழ்ந்துவிடு.

மரணம்
கள்வனைப் போல் வரும்
அதுவும் உங்களுக்குத் துப்பாக்கியாலும்
சித்திரவதையாலும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கவனம்
நள்ளிரவில்
சப்பாத்தின் ஒலிகளினால்
உனது வீட்டின்
விளக்கின் ஒளி நடுங்கும்

இழுத்துச் செல்லப்படுவாய்
பிள்ளைகள் கதற
மனைவி திகிலில் உறைய.
அக் கணத்தில்
துப்பாக்கி ஏந்திய ஒருவன் தீர்மானித்தால்
உனது மனைவியும்.

இப்படித்தான்
ஒரு பகற் பொழுதில்
உனது நண்பனும் மனைவியும்
இழுத்துச் செல்லப்பட்டார்கள்

எனவே யசோதரா
நீ
இக் கணத்தில் வாழ்ந்துவிடு.



புதுக் கவிதை ஓரளவு வடிவத்தாலும் வாழ்வது என்பார்கள். அதாவது புதுக்கவிதையின் வடிவம் கட்புலன் சார்ந்தது. செய்யுள், பாட்டு என்றெல்லாக் கவிதையினமும் செவிப்புலன் சார்ந்திருக்க, புதுக்கவிதை மட்டும் கட்புலன் சார்ந்திருப்பது, அது அச்சியந்திரச் சூழலில் உருவான குழந்தை என்பதனாலேயாகும். புதுக் கவிதையின் மிடுக்கு அதன் வரிகளில். இங்கே வரிதான் ஓசையைத் தருகிறது. அதில் ஏற்படக்கூடிய பின்னம், கவிதைத் தன்மையைப் பாதிக்கிறது. இம் மாதிரி வரிகளின் இடர்ப்பாட்டோடுள்ள சில கவிதைகளும் இத் தொகுப்பில் உள.

மொத்தப் படைப்பையும் தொகுப்பாக்குற தேவையொன்றிருக்கிறபோது இம்மாதிரிச் சில கவிதையல்லாதனவும் சேர்ந்துவிடுகின்றனதான். அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. என் ஆதங்தகமெல்லாம் இக் குறைபாடுகள் நீங்கிய கவிதைகள் தொகுபட்டிருப்பின் சிறந்த ஒரு கவிதைத் தொகுப்பாக இது வந்திருக்குமே என்பதிலிருந்து பிறந்ததுவே.

அதிர்ச்சி விமர்சனங்களில் எனக்கு நம்பிக்கையிருப்பதில்லை. என் விமர்சனத்தின் தாத்பர்யமே படைப்பை அது அதுவாக இனங்காட்டுவதே. 'மீண்டும் வரும் நாட்கள்' கவிதைத் தொகுப்பில் குற்றங்கள் குறைகள் உள்ளவை மட்டுமல்ல, நிறைவான .. உன்னதமானவையும் உண்டு. அவற்றுளொன்று 'தனிமை' கவிதை. தனிமையைப் பற்றியது. தனிமைதான் யாருக்கு யாரால்? என்று அக் கவிதை முடிகிற இடம் அற்புதமானது. அக் கவிதையில் இகழ்வின் நகைப்பிருக்கும். 'ஐயோ, இவன் அழகென்பதோர் அறியா அழகுடையான்' என்பதுமாதிரியான முடிவு கூறமுடியாக் கம்ப கையறுநிலை அதில் இருக்கிறது. பிரிவின் கொடுமையை இவ்வளவு பாதிப்புடன் சொன்ன வேறு கவிதை புலம்பெயர் சூழலில் நான் அறியாதது. இன்னும் தமிழ்ச் சூழலில் என்றும் சொல்வேன். 'அகலிப்பு' இன்னொரு நல்ல கவிதை. பிறந்த ஆண்டு போடப்படவில்லை. மொழி தன் பன்முகமெடுத்து விசாலம் காட்டும் விந்தை சத்தியமாக இங்கே நடந்திருக்கிறது. கட்டிறுக்கமும் படிமமும் உணர்வடக்கமுமாய் அது. கவிதைகளின் தலைப்புகள் பெரும்பாலும் தமிழ்ச் சூழலில் குறிப்பீட்டுக்கானவையே. தலைப்பை ஒரு புள்ளியாக்கி அதிலிருந்து விரிந்தெழுந்து மேலே மேலேயாய்ச் செல்லும் கவிதைகள் தமிழில் இல்லாமலில்லை. தலைப்புகளில் பெருங் கவனம் செலுத்தப்படுவதில்லையென்பதே நான் சொல்ல வருவது. 'மீறல்' கவிதை குறுகியது. ஐக்கூக் கவிதையல்ல அது. ஆனாலும் சிறந்த ஒரு ஐக்கூ கவிதையைவிடவுமே உச்சமடையும் கவிதை . அதை இங்கே பார்ப்பதும் நல்லதுதான்:


மீறல்


வீதிக்காய்
விரித்து நெரித்த கற்களிடையே
சிறு
புல்லொன்று பூத்திருக்கு.

சில நல்ல கவிதைகள் கூட ஒருபோது ரசனை தந்து, இன்னொருபோது சாதாரணமாகிப் போகின்றன. எப்போதும் ரசனை தரக்கூடிய கவிதையை மிக நல்ல கவிதையென்று சொல்லலாம். அதுமாதிரியான கவிதை 'ஓயாத அலை' என்கிற கவிதை. அனைவரினதும் பார்வைக்குமாக அதை முழுமையாக இங்கே:

ஓயாத அலை

இடி மின்னலோடு
காற்றுச் சினம் கொள்ள
அலையின் தினவி;ல்
அணை உடைந்தது

ஓ…வென்ற இரைச்சலுடன்
பொங்கிய பெருவெள்ளம்
ஊற்றை நோக்கி
வேகம்கொண்டு விரைந்து
ஓரமாய் நின்ற
தடைகள் அனைத்தையும்…

சூரிய வெம்மையில்
வெடித்த பாளங்களிடையே
நீர் புக
நிலம் குளிர்ந்தன
நிலமூறிய வெம்மை
ஆவியாய் அகன்றன

காற்றின் அனலும்
அகன்று குளிர
வீட்டு முற்றத்தில் தென்னோலைகள் நிழல் விழுத்தி
நிலவெறிக்கும் காலத்தில் நாட்டார் பாட்டொலிக்க

செட்டை அடித்த
வெள்ளடிச் சேவலின் கூவலோடு
காலடியில் கேட்கிறது ஓயாத அலை.


படிமங்களில் தன் அர்த்தங்களைப் பொதிந்து, அதற்கான சொல் தெரிந்து உருவான கவிதையென்று இதைச் சொல்ல முடியும். இது மாதிரி இன்னும் சில கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கவே செய்கின்றன. இவற்றையெல்லாம் நான் விமர்சன அரங்கிலேயே சொல்லியுமிருக்கிறேன்.



கவிதையை இம் மாதிரி அறுவைச் சிகிச்சை செய்வது மகா கொடூரம். விமர்சகன் எவனும் சரி , வாசகன் கூடத்தான், இம்மாதிரிச் செய்யவே செய்யக்கூடாது. ஆனாலும் ஒரு அவசியம் கருதி இவ்வளவு தூரம் வர வேண்டியதாயிற்று. மிகுந்த சாத்தியப்பாடுகளை நோக்கி மொழியை முன்னகர்த்ததிச் செல்லக்கூடிய தராதரம் வாய்ந்தது கவிதை மட்டும்தான். அதன் சாத்தியப்பாடுகளை புரிந்தும், உள்வாங்கியும் கொண்டிருக்கவேண்டியது கவிஞன் கடமையென்றே எனக்குச் சொல்லத்தெரிகிறது.

தமிழ்ப் பரப்பில் நீண்ட கவிதைகள் பெருமளவில் இல்லை. கவிஞர்கள் சிற்பி, நகுலன் போன்றோரைத் தமிழகத்திலும், மு.பொ., மஹாகவி, இ.முருகையன் போன்றோரை ஈழத்திலும் இலகுவாய் இனங்காண முடியும். மு.பொ.வினது 'விலங்கிடப்பட்ட தேசம்', 11|9 சம்பவத்தின் மூலம்தேடிக் கண்டடைந்து அதை சரித்திர , தொன்ம கதையுருவங்களைக் கொண்ட அடைதற் சாத்தியத்துடன் கூடிய கவிதையாகவே இன்னும் பார்க்கிறேன். அது கவிதை அனுபவத்தைத் தந்தது என்பதைவிடவும், உரைநடையில் சாத்தியமற்ற கவிக் கூறுகளைக் கொண்டிருந்தது என்பதே நிஜம். வடிவம் நேர்த்தியாகிற, உள்ளடக்கம் நேர்த்தியாகிற, அனுபவத்தை நேர்த்தியாய்த் தருகிற என்று கவிதைகள் தரம் தரமாகவே அமைகின்றன. இவற்றில் பல கூறுகளின் இயைவு ஒரு நல்ல கவிதையைத்தருகிறது. இக் கூறுகளின் கூடுதலான இயைவு உன்னதமான கவிதையைத் தருகிறது. இதில் நானெங்கே தெளிவில்லாமல் இருக்க நேர்ந்தது? இந்த விதிகளின் படியேதான் சகல கவிதைகளையும் நான் தரம் பார்க்கிறேன்.

நான் அதிகம் சொல்லாதது மு.புஷ்பராஜனின் 'மீண்டும் வரும் நாட்கள்' என்ற நீண்ட கவிதை பற்றியே. அது கவிதைபோல் தன்னைக் காட்டிக்கொண்டிருப்பினும் கவிதையாக மாற இழுவாணிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் அனுபவத்தை வாசகன் அடையவே முடிவதில்லை. ஆயினும் அது கவனத்துக்குரியதே. ஈழ நெடுங்கவிதைப் பரப்பு குறுகியதாய் இருக்கிற அளவில் அது நெடுநாளைக்கு நினைக்கப்படும். வளர்ச்சியில் அக் கவிதை ஒரு கட்டம். அதற்காகவேனும். கட்டுமானம் நன்றாயும் வாசல் பிழைத்ததாயும் சில வீடுகள் அமைந்திருப்பதில்லையா, அதுபோல் என்று வைத்துக்கொள்ளவேண்டியதுதான்.

மீண்டும் வரும்தான் நமக்கு அந்த நாட்கள். மீண்டும் வரும் நாட்கள் என்பது ஒரு நம்பிக்கை. வாழ்வுக்கான நம்பிக்கை. அதை இந் நூல் கவிதையில் தந்துகொண்டிருக்கிறது என்பது நிஜமே. இதுவே அதன் ஒட்டுமொத்தமான பெறுமானம் , மதிப்பீடு எல்லாம். இந்த நம்பிக்கை தமிழினத்துக்கு என்றைக்கும்விட இன்றைய காலகட்டத்தில் அதிக தேவையாயுமிருக்கிறது. ஆனால் அதைப் மு.புஷ்பராஜனிடமிருந்து அடைந்துகொள்ளாமலே போதுமான நம்பிக்கையோடிருக்கிறோம்.

0

பதிவுகள்.காம் 2007


Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்