Sunday, February 03, 2008

‘துயருறுத்தற் பொருட்டன்று…’

ஆறாவது சர்வதேச குறுந் திரைப்பட விழா 2007, ரொறன்ரோ

-தேவகாந்தன்


கடந்த ஐப்பசி மாதம் 20 ஆம் திகதி நடந்து முடிந்திருக்கிறது, ரொறன்ரோ 6வது சர்வதேச குறுந் திரைப்பட விழா. ‘எமக்கான திரைப்பட மொழியை உருவாக்குவோம்’ என்ற கோஷத்தோடு கடந்த ஆறு ஆண்டுகளாய் விடாமுயற்சியோடு செயலாற்றி வரும் சுயாதீன கலைப்பட இயக்கத்தினருக்கு இந்த இடத்தில் நன்றி கூறிக்கொள்ள வேண்டும். இனியும் அவர்களது முயற்சி தொடர வாழ்த்துக்களோடு குறுந்திரைப்பட விழாவில் திரையிடப்பெற்ற படங்களின் தாரதம்மியத்தைப் பார்க்க இனி முற்படுகின்றேன்.

குடைஅ Cinema என்ற ஆங்கில வார்த்தைக்கான பதமாக திரைப்படம் என்ற சொல் தமிழில் வழக்கத்தில் இருக்கின்றது. அதேவேளை சினிமா என்ற சொல்லும் புழக்கத்தில் உண்டு. ஆங்கிலத்தில் போலத்தான்.

காமம் என்ற சொல் அதீத சுகவிழைச்சலை மய்யப்படுத்தும் அர்த்தவாக்கம் வழக்கத்தில் இருந்தாலும், ‘மலரினும் மெல்லிது காமம்’ என்ற குறளடியில் வரும் சொல்லுக்கான அர்த்தத்தை உன்னதமாகக் கொள்ளும் புரிதலும் நம்மிடம் உண்டு. இந்த இரண்டு காமங்களையும் யாரும் குழப்பிக்கொள்வதில்லை. இந்த அறிதல் திரைப்படத்தையும், சினிமாவையும் புரிந்துகொள்ள மிக்க அவசியம். வள்ளுவனின் ‘காமம்’, பண்டைத் தமிழர் வாழ்வியலையும், மனவுணர்களின் இரகசியங்களையும் வெளிப்படுத்தி நிற்பதுபோல, சினிமா என்ற பதம் அது குறித்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகள், விடாமுயற்சிகள், வெற்றி தோல்விகளென்று பல்வேறு விஷயங்களின் உள்ளடங்கலைக் கொண்டிருக்கிறது. நூல் - பிரதி என்ற பதங்களின் அர்த்த வித்தியாசம்போல் இதையும் கொள்ளலாம்.

இப் பகுப்பு இப்போது பெரும்பாலும் நடைமுறையில் இல்லையென்பது உண்மையே. எனினும், இந்த வித்தியாசங்கள் உண்டென்பதை அறிந்துகொள்ளலாவது குறும்பட விமர்சனத்துள் புகுவதன் முன்னர் அவசியமானது.

இன்னொன்றையும் இங்கு மீக்கொள்ளல் தக்கது. கட்டிறுக்கமும், கலைத்தன்மையும், கலகக் குணமும் கொண்டதாய் எதிர்பார்க்கப்படும் ‘Short cinema’ என்பதனைக்கூட நாம் குறும்படம் என்றே சொல்லிக்கொள்கிறோம் என்பது முரண்நகையாகவே இருக்கிறது.

1895க் காலம், கண்டுபிடிப்புக்களினதும், ஆய்வுகளினதும், பரீட்சார்த்தங்களினதும் விசைபெற்றதாக திரைப்படத் துறையில் இருந்தது மேற்கிலும் வடஅமெரிக்காவிலும். அப்போது கினெற்ரோஸ்கோப், வைற்றாஸ்கோப், பயஸ்கோப், சினிமாற்ரோகிறாஃப் என்று இத் கலைத் தொழில்துறை பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இவை புகைப்பட(camara), திரைப்பட (protecor)க் கருவிகளின் தன்மை சார்ந்த பெயர்களாகவே அமைந்தன என்பது நினைவுகொள்ளப்பட வேண்டும். சினிமாற்ரோகிறாஃப் என்ற பிரெஞ்சுச் சொல்லிலிருந்தே சினிமா என்ற ஆங்கிலச் சொல் உருவானது. எனின் தன் அர்த்த அடர்த்தியை இழந்த வரலாறாக இது தொடர்வதே நிகழ்கிறது.

இப் பரிமாணத்தைப் புரிந்துகொண்ட சமிக்ஞையைச் செய்யும் அளவிற்குக்கூட 6வது குறுந்திரைப்பட விழா அமையவில்லையென்பதை விரும்பாதபோதிலும் சொல்லவே வேண்டியுள்ளது.

விழாவில் திரையிடப்பெற்ற 22 படங்களில், பன்னிரண்டு படங்கள் போட்டிக்கானவை. இவற்றுள் விமர்சகர் தேர்வில் இடம்பெற்ற பி.எஸ். சுதாகரனின் ‘கதவுகள்’, பாஸ்கரின் ‘நதி’, நிரோஜன் சிவஹரியின் ‘வினை’ ஆகிய மூன்று சினிமாக்களில் ‘வினை’ கேடயம் வென்றது. ‘நதி’ போட்டி நடுவர்களின் பரிசுபெற்றது. ‘கண்ணால் காண்பதெல்லாம்’ திரையிடப்பட்டு முடிய எழுந்த கரகோஷத்தில் இது பார்வையாளர் பாராட்டைப் பெற்றதாகக் கொள்ள முடியும். எஸ்.எம்.தனபாலனின் ‘மௌன சுமைகள்’ திரையிடலின் பின் எழுந்த விவாதத்தின் மூலம் முக்கியத்துவம் பெற்ற படமாகிறது. இந்த ஐந்தினையுமே இங்கு விமர்சனத்துக்கு எடுத்தல் தக்கது.

பார்வையாளர், நடுவர், விமர்சகர் ஆகிய முத்தரத்தாரதும் தளம் சார்ந்த நிலைகளினூடாக அணுக இவ்வைந்தும் போதுமானவையே. எனினும் வேறு சில சிறப்புக் காட்சிப் படங்களின் விமர்சனச் சேர்மானமும் இங்கே தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.

‘கண்ணால் காண்பதெல்லாம்’ தான் சொல்ல வந்த விஷயத்தை மிக எளிமையாகச் சொல்லிச் சென்றது. ஆனால் எந்த மன அதிர்வையும் ஏற்படுத்தாத வெற்றுப் படமாக எஞ்சி நின்றதே நடந்தது. வி.ரவி ஏற்கனவே திரைப்பட அனுபவமுள்ளவர் என்கிற தளத்தில் அவரிடம் ஒரு நல்ல பார்வையாளன் மிகக் கூடுதலாக எதிர்பார்த்திருக்க வாய்ப்புண்டு. அந்த எதிர்பார்ப்பைப் பொய்யாக்கியிருக்கிறார் ரவி. மிக நொய்மையான கரு, அதன் தரத்துக்கு தொலைக்காட்சித் தொடர்ப் பார்வையாளர்களைக் குஷிப்படுத்தியதைத் தவிர சினிமாவாக ஒரு ரோமக் கூச்சளவுக்கும் எழுந்திருக்கவில்லை. அதில் சிலாகிக்கக் கூடியதாயிருந்தது மனைவிப் பாத்திரத்தின் நடிப்பு மட்டுமே.

‘மௌன சுமைகள்’ ஒரு இயல்பான விஷயத்தை யதார்த்தமாய்ப் பேசவந்தது. சொல்லப்போனால், இன்று மேற்குலகில் புலம்பெயர்ந்துள்ளோர் மத்தியில் முதிய பெற்றோர் குறித்த அக்கறையான விஷயம் இது. ஆனாலும் இதுபோன்று ஏற்கனவே சில குறுந் திரைப்படங்கள் வந்துள்ளமை இதன் அர்த்த வெளிப்பாட்டுக்கு மௌன அங்கீகாரங்களைக்கூட அளிக்காது போய்விட்டது. கே.எஸ்.பாலச்சந்திரனின் நடிப்பில், இதே சுயாதீன அமைப்பினரின் முந்திய திரைப்பட விழாவொன்றில் திரையிடப்பட்ட ஒரு படம் இருக்கிறது. அது ஏற்கனவே தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப் பட்டதாய்த் தெரிகிறது. இது குறித்த ஒரு பெண்ணின் மாற்றுக் குரல் அவையில் எழுந்தபோதும், விஷயமறியாத வேறுபேரால் அக் குரல் அடக்கப்பட்டுவிட்டமை துர்ப்பாக்கியமானது. மட்டுமில்லை. இதுவும் இன்னொரு தொலைக்காட்சித் தொடர்த் துண்டுபோலவே இருந்துவிட்டதையும் குறிப்பிடாமலிருக்க முடியாது.

‘நதி’ பாரிஸிலிருந்து போட்டிக்கு வந்திருந்த குறும்படம். உறவினராக நடித்தவர், நடிப்பில் கொஞ்சம் அடக்கி வாசிக்க முடிந்திருந்தால், இன்னும் கொஞ்சம் படத்தொகுப்பில் கூடுதலான கவனத்தைச் செலுத்தியிருந்தால் இந்தக் குறும்படம் ஒரு நல்ல படமாக நின்றிருக்கும்தான்.

இளைஞன் வீதியில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் வீட்டுக்கு இலங்கையிலிருந்து வரும் தொலைபேசி அவனது தாயாரின் மரணத்தைத் தெரிவிக்கிறது. தாயாரின் சுகவீன விபரமெல்லாம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுத்தான் கதை நகர்ந்துகொண்டிருக்கிறது. இளைஞனின் இக்கட்டான நிலைமையும் பார்வையாளர் மனத்தில் பதிவாகியாயிற்று. இந்தநிலையில் அவன் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் தாயாரின் மரணத்தைத் தெரியப்படுத்துவது எதற்காக? அதன்மூலம் அவன்மேலான அனுதாபத்தை வாசகன்மேல் திணிக்க நெறியாளுநர் முயற்சிக்கிறார் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்கக்கூடும் இதற்கு?

‘ Darkness at  Dawn’ நல்ல ஒரு குறும்படமாக உலகத் தீவிர சினிமாத் தளத்தில் நின்றிருக்கவேண்டியது. ஆனாலும் அதிகமாகச் சொல்ல வந்ததில் தன் தரமிழந்தது. ஒரு சிறுமியும் ஒரு முடச் சிறுவனும் இலவம் பஞ்சு ஊதிப் பறக்கவிட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஹெலியொன்று பேரிரைச்சல் இட்டவாறு பறந்து வருகிறது. ஹெலியை சத்தத்தினால் தவிர காட்சியினால் காணமுடியாதிருக்கும் பார்வையாளனால். ஹெலி பறந்து சென்று அச் சூழலிலிருந்து மறைய, மறுபடியும் சிறுமியும் சிறுவனும் விளையாடத் துவங்குகின்றனர். போரின் கொடுமையும், உலகத்தின் இயல்பும் தெளிவுறவே காட்டப்பட்டாகிவிடும் இந்தளவிலேயே. ஆனால் நெறியாளுநர் மேலே மேலேயாய்ச் சொல்லிக்கொண்டே போகிறார். சினிமா தன் தரமிழக்கிறது.

பார்வையாளன் விளங்கிக்கொள்ள இது போதுமானதில்லையோ என்று எப்போது ஒரு அய்யம் ஒரு நெறியாளுநன் மனதில் தோன்றுகிறதோ, அக் கணத்தில் அவன் காணாமல்போகிறான்.

‘அகம்’ படத்தில் அருண் சிவகுமாரனுக்கு நடந்தது இதுதான். சினிமாபற்றிய தெளிவு, அது குறித்த சரியான விமர்சனக் கண்ணோட்டமுள்ள அவர், மிக அதிகமாகச் சொல்லவந்ததில் அந்தக் காணாமல் போதல் நடந்தது.

தொலைக்காட்சிப் பார்வையாளருக்காக குறும்படம் எடுப்பதாக இனியாவது பாஸ்கர் போன்றவர்கள் நினைக்காதிருக்க வேண்டும். பாஸ்கரின் திறமை வெளிப்படையாகவே குறும்படத்தில் காணக்கிடந்தது. நல்ல நெறியாளுநராக, நடிகராக அவர் மிகக் குறைபட்டுப் போகவில்லைத்தான். ஆனாலும் படத்தில் துருத்தலான சில குறைகள் இருந்து அவரைக் கேள்விக்குட்படுத்துகின்றன. இக் குறைகளின் சுட்டுகை, இதுபோன்ற குறைகள் நீக்கப்பட்ட உன்னதமான குறும்படங்களை நாம் அவரிடமிருந்து எதிர்பார்க்க முடியுமென்ற நம்பிக்கைனாலேயே நிகழ்ந்திருக்கிறது.

‘கதவுகள்’ ஒரு நகைச் சுவைத் துணுக்குப்போலத்தான் திரையில் தன் முதலாவது நிமிட ஜீவியத்தைத் தொடங்கியது. படப்பிடிப்பு, தொகுப்பு, பின்னணி இசை என்ற அம்சங்களில் காத்திரமாகத் தொடங்கிய அப் படம், மனைவி பிரிந்ததால் தற்கொலைக்குப் பன்முறையும், பல்வழிகளிலும் முயலும் ஒரு கணவன் தன் குழந்தையைக் கண்டு மனம் மாறுவதான வெறும்வெளியாக ஐந்தாவது நிமிடத்தில் சுருங்கி மறைகிறது. அதன் இருப்புக்கான இலக்கு எய்தப்பெறவே இல்லை, அதன் ஜீவிய காலம் முழுக்க. ஆனாலும் தொழில்சார் நுட்பங்களால் அது கவனம் பெற முடியும்.

அதே ஐந்து நிமிட கால எல்லைகொண்டு பரிசீலனைக்கு வரும் படம் ‘வினை’. அது தொலைக்காட்சித் தொடர்ப் பார்வையாளர்களால், இந்திய அல்லது ஹாலிவுட் மசாலா பட ரசிகர்களால், இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் ‘சிவாஜி’ பட அலவாங்குத்தன சுவைஞர்களால் புரிந்துகொள்ளப்பட முடியாதது. அதற்கு கிரமமாக அடைந்துவந்துள்ள ஒரு சுவைத் திறன் தேவை. தக்க புரிதல் நுட்பத்தை யாசித்து நிற்கிற படங்களின் வகையானது அது. இதில் கணிதவகையான சிக்கல் எதுவும் இல்லை. புதிர்க் கணக்கு வகையான சுளிவுகளும் கிடையாது. ஒரு கலைத்தரமான புரிதலோடு வருபவர்களுக்கு மட்டும் அது தன் வாசலைத் திறக்கிற வகையான படம்.

கனடாவிலுள்ள இளம் சமூகத்தின் மனம்சார் நுட்பமே அதில் காட்சிப் படுத்தப்பட்டதாய் நான் கருதுகிறேன். கர்மா என்பது மெய்யா, அது தமிழ் இளஞ்சமுதாயத்தில் இறங்கியிருப்பது பகுத்தறிவுத் தளத்தில் நல்லதா என்பது பற்றியெல்லாமான விசாரணைகள் இந்த இடத்தில் அநாவசியமானவை. மட்டுமில்லை. கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்விகள் அர்த்தமற்றவையாயினும், நெறியாளுநரால் கொடுக்கப்பட்ட பதில் மொண்ணைத் தனமாகவிருந்தது. அப் பதிலைவிடவும் அச் சினிமா வெளிப்படுத்திய கருத்தினை மிக ஆழமாக மறுவாசிப்புச் செய்ய முடியும். காட்சி ஊடக வழியாய் அது எதையாவது சொல்ல முனைந்திருந்தாலும், சினிமாவின் மொழியை அது பேசுகின்றதா என்ற கேள்வியிலேயே அதன் தரம் பெரிதும் தங்கியிருப்பது நிஜம்.

அச் சிறிய குறுஞ்சினிமாவில் பல குறைகள் இருந்தபோதிலும், அது போட்டிக்கு வந்த ஏனைய சினிமாக்களினது அளவாக இல்லை. ஆனாலும் சுட்டிச் சொல்ல ஒன்று உண்டு.

பார்வையாளனுக்குப் புரியாதே, பார்வையாளன் புரிந்திருப்பானா என்ற அய்யம் எழுந்து எந்த நெறியாளுநன் உரைநடை ஊடகத்தைத் தன் படத்தின் முன்னிலோ, இடையிலோ, கடைசியிலோ துணைக்கழைக்கிறானோ அந்த நிமிடம் அந்தப் படம் தன் தன்மை இழக்கிறது. தன் வினை தன்னைச் சுடும் என்ற மாதிரியான புராண, இதிகாச, கிராமியக் கதைகளெல்லாம் நிறையவே தமிழ்ப் பரப்பில் உண்டு. அந்தத் திசையில் நடப்பதற்கு ஒரு நெறியாளநுக்கு மிகுந்த ஜாக்கிரதைத் தனம் தேவை.

பார்வையாளன் தக்க தகவலும் பகுதிறனுமுள்ளவன் என்ற தளத்திலிருந்தே இனி வரும் காலங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது விதியாக அறைந்தாயிற்று.

‘வினை’ சினிமாவும் இக் குறையைக் கொண்டிருக்கிறது.

மற்றும்படி ‘வினை’, இயக்குமுறைப் பிழையினால் காட்சிப்படுத்தப்பட முடியாதுபோன Nun என்ற படம் தவிர்ந்த ஏனைய போட்டிக்கான படங்களில் சிறந்ததாயிருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.

இப்போது இன்னொரு கேள்வியை நாம் முகங்கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம்.

தமிழ்க் குறுஞ் சினிமாப் பரப்பில் வரவர வீச்சான ஆக்கங்கள் ஏன் வெளியாகின்றனவில்லை? அல்லது வெளிவந்திருந்தும் இப்போட்டிக் களனில் அவை கால் பதிக்காதிருக்கின்றனவா? இந்த இரண்டு கேள்விகளும் முக்கியமானவை.

இக் கேள்விகளுக்குத் தக்கதொரு விடை கிடைக்காது போகிறபட்சத்தில் சுயாதீன கலைத் திரைப்பட இயக்கத்தினரிடம் கேட்க என்னிடமொரு கேள்வி இருக்கின்றது.

போட்டிக்கு வரும் குறும்படங்களில் போட்டிக்கானவற்றின் தேர்வு எவ்வாறு நிகழ்கிறது? இதற்கான விளக்கம் பல சிக்கல்களை நீக்க உதவும் என்பதால் அத்தியாவசியமானதாக நான் கருதுகிறேன். அத்துடன், ஒரு பார்வையாளனுக்கு போட்டிக்கு வருகின்ற குறும்படங்களின் பட்டியல், அவசியமெனில் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனவற்றினைப் பார்ப்பதற்கான வாய்ப்பு எல்லாம் எய்தற்குரியனவாக்கப்படவேண்டும் என்ற என் சிபார்சினையும் முன்வைக்கிறேன்.

தொழில்நுட்பரீதியாய் இத்துறையில் நாம் கணிசமான அளவு முன்னேறியிருக்கிறோம்தான். ஆனாலும் சினிமா என்கிற கலைத்துறையாக நாம் விரிவடையவில்லை என்பதே உண்மை. தமிழரை மட்டுமன்றி, மற்றைய சமூகத்தின் தீவிர திரைப்படத் துறை சார்ந்தோரையும் ஈர்க்கும் நிலை உருவாகிற ஒருநாளில்தான் நாம் எல்லோரும் பெருமைப்பட வாய்ப்பிருக்கிறது.

‘துயருறுத்தற் பொருட்டன்று விமர்சனம்!’

Thanks: THAIVEEDU,2007

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...