மரபு கலைத்தெழுந்து.....


நிரூபாவின் ‘சுணைக்கிது’ சிறுகதைத் தொகுப்பு பற்றிய மதிப்பீடு



புலம்பெயர் புலத்தில் கவிதை பேசப்பட்ட அளவு சிறுகதையோ, நாவலோ பேசப்படவில்லையென்பது மிகவும் சரியான வார்த்தையென நினைக்கிறேன். கவிதை தனக்காக எடுத்துக்கொண்ட தீவிரத் தளம் அந்த நிலைமைக்கான காரணமாகவும் இருக்கலாம்.

‘கொரில்லா’வும் ‘வெள்ளாவி’யும் ஓரளவு நன்கு பேசப்பட்ட  நாவல்களேயெனினும், அத்துறையில் போதுமான ஆக்கங்கள் வெளிவந்தனவெனக் கூறமுடியாதே உள்ளது. புலம்பெயர் வாழ்வின் இயங்குநிலை சார்ந்த விஷயமாக இதைக் கொள்ள முடியும். இத்தகு இயங்குதளத்தில் உரைநடை சார்ந்து கருத்து வெளிப்பாட்டுக்கான வடிவமாக இருப்பது சிறுகதை. இருந்தும் வேற்றுப் புல வாழ்வின் அவதி, பிற பண்பாட்டுக் கலப்பின் முறைமைகள், ஏகாதிபத்தியப் பெருவெடுப்பில் இனங்கள், தொழிலாளர், பெண்கள், பாலியல் தொழிலாளர், ஒருபாலின கலவியாளர், குழந்தைகள் ஆகியோரின் நிலைமைகள் பேணப்படாமை, சுற்றுச் சூழல் மாசுப்பாடு, வனவழிப்பு என பெருகும் ஆகக்கூடிய கவலைகள்கூட எடுபொருளாகாதிருக்கின்றன.

மனிதன் பிறரைத் தின்று கொழுப்பதான வாழ்வியல் நிலை மாறி, தன்னையே மெல்லமெல்லத் தின்றுகொண்டிருப்பதான மிகவும் மோசமான நிலைமை இன்று ஏற்பட்டிருக்கிறது. எப்படி இவையெல்லாம் மறக்கப்பட முடிந்தன? ஒரு மாயையில்போல் மேற்கின் வாழ்வியலில் விழுந்துகிடக்கும் மக்கள்பற்றி ஒரு கவனமும் எழவில்லையா? இவையெல்லாம் படைப்பாக்கமாகாமல் போனமைக்கான காரணம் என்னவென்பது விசாரிக்கப்பட வேண்டிய கேள்வியேயெனினும், இங்கே அதை நான் செய்யப்போவதில்லை. இத்தகு சூழ்நிலைமையிலும் வெளிவரும் படைப்பொன்று கவனமற்றுப் போவது எதைக் காட்டுகிறது என்பதே எனது ஆதங்கம்.

மொழியின் மிக்க வீரியத்தோடும், பாசாங்குத் தனமற்ற வெளிப்பாட்டுத் திறனோடும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கிடையில் வெளிவந்திருக்கிற நூல்களில் முக்கியமானது நிரூபாவின் ‘சுணைக்கிது’ சிறுகதைத் தொகுப்பு. இதன் வெளியீடும் கருத்தாடலும் ஸ்கார்பரோ சிவிக் சென்ரரில் அப்போதே நடந்திருந்தன. நூல் கிடைத்த உடனடியாகவே அதை நான் வாசித்திருந்தேன். அந்த மொழிநடையில் எனக்குப் பிரமிப்பே ஏற்பட்டிருந்தது. அதுபற்றி எழுதவேண்டுமென்றிருந்தும், பல்வேறு காரணங்களால் அப்போது அது முடியாது போனது.

இப்போது மீண்டும் அந்நூலை வாசிக்க நேர்ந்தது. முன்னரைவிட அதிகமாக அது என்னை ஆகர்ஷித்திருக்கிறது. அதன் விளைவே எனது இந்த எழுத்து.

1) ஒரு பழம் தப்பிச்சிண்ணு 2) போட்டுவாறன் 3) சுணைக்கிது 4)பயந்தாங்கொள்ளி 5) கடுதாசிப்பூ 6) காதல் 7) அடி அடியாய் 8) கூட்டுக்கொலை 9) முதல்நாள் 10) மழை ஏன் வந்தது? 11) மாயமனிதன் 12) யாருடைய பிள்ளை? என பன்னிரண்டு சிறுகதைகள் இத் தொகுப்பில்.

பன்னிரண்டாவதை விட்டுவிடலாம். மீதி பதினொன்றிலும் முதல்கதை தன்னிலைக் கதையாய்த் துவங்க, மீதி சிலவற்றில் வெவ்வேறு
பாத்திரங்களும், சிலவற்றில் ஒரே பாத்திரமே திரும்பத் திரும்ப வருவதுமாய்க் கதைகள்.

இவை தனிக்கதைகளாய் இருக்கும் அதேவேளையில் ஒரு நாவலின் வடிவத்தை ஏறக்குறைய அடைவதற்கான சாத்தியத்தையும் கொண்டிருக்கும். இதுதான் வடிவரீதியாக இதன் விசேஷம்.

இதிலுள்ள எந்தக் கதையாவது சிறுகதை வடிவத்தை அடைந்திருக்கிறதா என்றால் சிறப்பான பதிலொன்று வர நியாயமில்லை. ஆனால் அண்மைக்காலமாய் நம் தமிழ்ப் பரப்பில் விளங்கும் குதர்க்கமான கேள்விபோல் இங்கேயும் கேட்கப்பட முடியும்.

ஏன், இது சிறுகதையில்லையா? சிறுகதையின் வடிவத்தைத் தீர்மானிப்பது யார்? விமர்சகனா, வாசகனா, படைப்பாளியா? மூன்று பக்க சின்னக் கதையை எழுதிவிட்டு சிறுகதையென்பாரும் நம்மிடையே இருக்கிறார்கள். முன்னூறு பக்கச் சிறுகதையையே தாகூர் எழுதவில்லையா என்று முப்பது பக்கச் சிறுகதையை எழுதுபவர்களும் இருக்கிறார்கள். ஒரே மூச்சில் வாசித்துவிடக்கூடிய கதையே சிறுகதை என எட்கார் ஆலன் போ கூறியதைச் சொல்லி சிறுகதை வடிவத்தை வரையறுப்பாரும் உண்டு.

சிறுகதைக்கான இலக்கணங்கள் மதிக்கப்படவேண்டும்தான். இலக்கணங்கள் இன்றி இலக்கிய வடிவங்கள் கணக்கிலெடுக்கப்படுதல் தவிர்க்கப்படவேண்டும்தான். ஆனாலும் மீறல்களுக்கும் இடமுண்டு என்பது நோக்கப்பட வேண்டும்.

இங்கே எப்போது இலக்கணம் மீறப்படலாமென்ற கேள்வி எழும்.

படைப்பின் வெளிப்பாட்டுக்கு வடிவ வெளி போதாமையாயிருக்கிறபோது மீறல் நியாயமானது என்பதுதான் அதன் பதில்.

நிரூபாவின் பல கதைகள் வடிவம் மீறியவை. அவற்றில் பல செழுமையற்றவையாயும் தோன்றும். ஆனால் அவற்றின் உள்ளடக்கம், அது வெளிப்படுத்தும் பாத்திரத்தின் தன்மை போன்ற காரணங்களை வைத்துப் பார்க்கிறபோது அதுவே அதன் சரியான வெளிப்பாட்டு வழியாய் இருப்பதையும் ஒரு ஆழ்ந்த வாசிப்பு காட்டும்.

நம் வாசிப்பின் போதாமைகளை பிரதியின்மேலேற்றி கவனமழியவிடல் இலக்கிய நேர்மையாகாது. 2005 இல் வெளிவந்த இந்நூல் இதுவரையில் மிக்க கவனம் பெற்றிருக்கவேண்டும். ஆனால் இது வந்த சுவடேயின்றி அடங்கிக் கிடக்கிறது.

ஒரு குழந்தையின் பார்வையில் யாழ்ப்பாணத்தின் வாழ்வியல்பு பார்க்கப்படுகிறது. இது எதனையும் விசாரணை செய்யவில்லை. ஒரு சமூக அமைப்பு இவ்வாறு இருக்கிறதென்று ஆதங்கப்படவுமில்லை. ஆனால் தான் தேர்ந்துகொண்ட களத்தை மிகத் துல்லியமான வார்த்தைகளால் பதிவாக்கியிருக்கிறது. இது நாவலின் வடிவத்தையும் ஒருவகையில் எடுத்திருக்கிறது என்றிருந்தேன் முன்பு. அப்போதும் அதன் மய்ய பாத்திரம் சமூகமாகவே இருக்கிறது. தன் புலமிழந்து வந்த ஒரு பறவையின் இறக்ககையடிப்பே இக்கதைகள் எனினும், இவை கலைத்துவமானவையாய் இருப்பதுதான் இவற்றின் சிறப்பு.

இவற்றின் வடிவம் சிறிது செழுமைப்படுத்தப்பட்டிருக்கலாமோ என ஒருபோது நான் எண்ணினேன்தான். ஆனால் பின்னர் யோசிக்கத்தான் தெரிந்தது, இதுவே இதன் சரியான வடிவம் என்பது. இதன் சில பகுதிகளின் விளக்கக் குறை அச்சாக்க முறைமைப் பிழையினால் நேர்ந்திருப்பதைச் சொல்லவேண்டும்.

எழுத்து, படைப்பு ஆகியவற்றுக்கிடையே இருக்கும் வித்தியாசங்கள்போல்தான், நூல், பிரதி என்பனவற்றுக்கிடையேயும் பாரிய வித்தியாசங்கள் உண்டு. எழுதப்படுவனவெல்லாம் பிரதியாகிவிடுவதில்லை. பிரதி மொழியால் தாங்கப்படுவது என்பான் ரோலன் பார்த். ‘சுணைக்கிது’ சிறுகதைத் தொகுப்பு மொழியால் தாங்கப்பட்டிருக்கிறது. பேச்சு மொழியின் வலு அது. ஆனால் அது செம்மொழியின் வீறார்ந்தும் அவ்வப்போது வெளிப்பாடடையும்.

'மழை ஏன் வந்தது?' என்ற கதையில் ஒரு நாகம் வருகிறது. உருவமாக அல்ல, அருவமாக.

‘தீபாவிற்கு தலை சுற்றியது. நிறைந்திருந்த கிணற்றைப் பார்த்தாள். அப்படியே விழுந்துவிடவேண்டும்போலிருந்தது. விழுந்தால் எல்லாப் பிரச்சனையும் முடிந்துவிடுமென்றில்லை. சாகிற மாதிரி விழவேணும்.

‘ஆனால் கிணத்துக்குள்ள விழுந்தவுடன செத்துப்போவினம் எண்டில்லைத்தானே. ஆராவது காப்பாற்றீட்டா, கோதையக்காவ காப்பாத்தினமாதிரி? பழுத்து விழுந்த சில இலைகள் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தன. எத்தனை நாட்களாய் மிதக்கின்றனவோ தெரியாது. பார்க்கப் பரிதாபமாகவே இருந்தன.

‘அவைகளைப் பார்க்கும்போது தானே மிதப்பதாக உணர்ந்தாள். இன்று வரப்போகும் இரவுபற்றியே சிந்தித்தாள். நாகம் இப்போது தலைக்குள் ஒரு மூலையில் படுத்துக் கிடந்தது.’

மழை ஏன் வந்தது, சுணைக்கிது இரண்டு கதைகளும் சிறுபெண்களின்மீதான பாலியல் தாக்கங்களைக் காட்டும் கதைகள். ஆண்களின் வக்கிரம் பிடித்த பாலியல் எழுச்சிகள் எந்தமாதிரியெல்லாம் குழந்தைப் பெண்களில் பாய்கிறதென்பது இக்கதைகளில் அற்புதமாய் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்.

‘அந்த உருவம் இவ்வளவு விரைவாக ஓடி அப்பாவாகவோ, அண்ணாவாகவோ, மாமாவாகவோ மாறிவிட்டதே. அதுதான் எப்படியென்று அதிசயமாக இருந்தது தீபாவிற்கு.’

மழை ஏன் வந்தது கதையில் தீபா பிரலாபிப்பது கிராமம்தோறும் நகரம்தோறும் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

சுணைக்கிது கதை வேறொரு காட்சியைக் காட்டுகிறது.

‘கடகத்தைப் போட்டுவிட்டு ஓடுவதற்கு முன்…

“விடுங்கோ நித்தியண்ணை..விடுங்கோ…”

‘இறுக்கமான மாட்டுப்பிடி. இல்லையில்லை. ஐயோ! இது மோட்டுப் பிடி. இம்மியளவும் அசைய முடியவில்லை ஜீவியால்.

‘புன்னை மரத்திற்கு இடித்துப் பார்த்தது சின்னக் கால்கள். அசையவேயில்லை.

“விடடா. விடு. என்னை இப்ப விடு. பனங்கொட்டை. சொறி நாய். இப்ப என்னை விடு. நாயே.”

‘அவள் அழ அழ பூப்பூ யங்கியை கீழே விழுத்திவிட்டு றொக்கற் வேகத்தில் மசுக்குட்டி…’

என்று முடிகிறபோது எந்த மனதுதான்  பதறாமல் இருக்கும்?

‘சுணைக்கிது’ நூலைப் புரிந்துகொள்ள கொஞ்சம் வாசிப்புப் பயிற்சி அவசியம். கடிதம் படிக்கத் தெரிந்த, கனடா வாரப் பத்திரிகளைப் படித்துப் பழக்கமான சுளுவோடு இதை வாசித்துப் புரிந்துவிட முடியாது. அல்லது ரமணிசந்திரன் மாதிரியான வாசிப்புப் பழக்கமும் உதவிசெய்யாது. இலக்கியம் தனி வாசிப்புக்கானது. அதற்கு முயற்சியும் பயிற்சியும் அவசியமான கூறுகள்.

நாம் பின்தங்கியிருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் ஒரு நல்ல பிரதியை நாம் ஒதுக்கத்தில் போட்டுவிடக்கூடாதல்லவா?

‘சுணைக்கிது’ அண்மையில் தமிழில் வெளிவந்த முக்கியமான வாசிப்புக்குரிய நூல். புலம்பெயர் சூழலிலும், ஈழத் தமிழிலக்கியமாயும் இது கவனம்பெற வேண்டியதாகும்.

0

தாய்வீடு. 2007

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்