சமூகமும் கலையும்

எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் கட்டுரைக்கான எதிர்வினை

-தேவகாந்தன்

எம்.எஸ்.எஸ்.பாண்டியனின்  கட்டுரையானபடியாலேயே சிவாஜி படம் குறித்த வைகறையில்  வெளிவந்த  மொழிபெயர்ப்புக் கட்டுரைக்கு இந்த எதிர்வினையை எழுதவேண்டி நேர்ந்தது. நான் சிவாஜி படம் இதுவரை பாரக்கவில்லை. தமிழ்ப்படங்களை திரையரங்கு சென்று பார்த்து வெகுகாலம். பார்த்த சிலவும் புலம்பெயர்ந்தவர் படங்களே. சிவாஜி படத்தைப் பார்க்காமலேகூட பாண்டியனின் கட்டுரைக்கு ஒரு எதிர்வினையை எவராலும் ஆற்றிவிட முடியும். ஏனெனில் அது சமூகமும் சினிமாவும் என்ற தளத்தில் வைத்துப் பார்க்கப்படவேண்டிய கட்டுரை.

சிவாஜி படம் பார்த்ததில் மிகவும் பரவசப்பட்டுப்போய் பாண்டியன் எழுதியிருக்கிற கட்டுரை அது. ஏதோ, ரஜினி கோயில் வீதியில் அல்லது தெருவில் கூத்தோ தெருநாடகமோ போட்டமாதிரியும், அதை மக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ரசித்த மாதிரியும் அளந்துகொட்டியிருக்கிறார். சொல்லப்போனால் அதை ஷங்கர் படம் என்றுகூடச் சொல்லலாம். இன்னும் ஏவிஎம்’மின் படம் என்று சொன்னாலும் தகும்.

இதற்கெல்லாம் ஒரு எதிர்வினையை ஆற்றவேண்டியது துரதிர்ஷ்டமேயானாலும், இதுமாதிரிக் கட்டுரைகளும், இதுமாதிரி மொழிபெயர்ப்பு முயற்சிகளும், இதுமாதிரிப் பிரசுரமேடைகளும் அமைந்துவிடாதிருக்கும் ஒரு மேல்நடவடிக்கை முயற்சியாக இதைச் செய்யவேண்டி நேர்ந்துள்ளது. தோமஸ் அல்வா எடிசன்கூட மக்களை யதேச்சாரப் போக்கிலிருந்து காப்பாற்றவே அல்லது திசைதிருப்பவே திரைப்படக் கமராவைக் கண்டுபிடித்தார் என்று பாண்டியன் சொல்லாத வகையில், இதைச் செய்யமுடிவது பெரிய ஆறுதல்தான்.

சந்திரபாபு, என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ் , கவுண்டமணி, செந்தில், வடிவேலு என்று எல்லோரும் தமாஸ் பண்ணிவிட்டுப்போக, ரஜினி வந்துதான் மக்களை சிரிப்பில் ஆழ்த்தி அவர்களுடைய ரென்ஷனைக் குறைத்துப்போகிறார். ஒரு படத்தின் சினிமாத் தனங்களை எடுத்து விமர்சித்திருந்தால் அக் கட்டுரை அதனளவிலாவது மதிப்புப்பெற்றிருக்கும். அதைவிட்டுவிட்டு ஏதோவெல்லாம் எழுதி… ரஜினியின் அரசியல் சக்திபற்றிய கதைவேறு.

ஒரு சினிமாவின் வெற்றியின் பின்னால் தொழிற்படும் வியாபார உத்திகள், ஒரு நடிகன் தன்னை தன் சமூகத்தில் ரசிகர்மன்றங்கள் மூலம் கட்டமைத்து தக்கவைத்திருக்கும் வித்தைகள் எவரும் அறிந்ததுதான். சிவாஜி படத்துக்கு ஒரு ரிக்கற் மிகக்கூடுதலான பட்சமாக 500 ரூபா விலைபோயிருக்கிறது என அறியமுடிகிறது. குறிப்பிட்ட அல்லது எதிர்பார்த்த தினத்துக்கு மேலாக வாரங்கள் பலவற்றை விழுங்கிக்கொண்டும் ஒரு தருணம் பார்த்து வந்திருக்கிறது, இதோ வருகிறார், இதோ வருகிறார் பராக்! பராக்! என்கிற பாணியில். இவையெல்லாம் ஒன்றுமேயில்லையா. வியாபாரத்தனத்தின் மேலான கோடுகளை அதன் தயாரிப்பான ஜெமினியில் முன்பு பார்க்க முடிந்தது. இப்போது சிவாஜியில். இது உச்சம். பல கோடிகளுக்கான உச்சம்.

ஏவிஎம்’மின் மகத்தான திட்டமிடல் திறமை, வியாபார தந்திரங்களைக் கணக்கிலெடுக்காமல் அதை மொண்ணைத்தனமாய் ரஜினி படமென்றும் வெற்றிமேல் வெற்றியென்றும் பரணிபாடி வந்திருக்கிறது பாண்டியனின் எழுத்து.

ஒரு சமூகத்தின் கலை ஆர்வம் அவசியமானது என்பதில் எனக்கு மறுதலிப்பான கருத்தில்லை. காலகாலமாக, கலை மனித சமுதாயத்தின் மீது செலுத்திவரும் செல்வாக்கு நயமாக அறியப்பட்டேயிருக்கிறது. கோயில்களில் இசை, நடனம் என்பவை வளர்ந்த வரலாறெல்லாம் இவ்வாறுதான் நிகழ்ந்தது. அங்கேயுள்ள காமம் ததும்பும் சிலைகளின் நிர்மாணம்கூட ஒரு வடிகாலின் அக்கறைக் கண்கொண்டே பார்க்கப்பட்டிருக்கின்றன.

நசிவுச் சினிமாக் கலாசாரம் தமிழகத்தை விழுங்கி ஏப்பம் விட்டிருப்பது குறித்து சமூக அக்கறையுள்ளோர் எல்லாரும் விசனப்பட்டிருக்கையில், ரஜினி படத்துக்கு கூடிய இளைஞர் தொகையை, பாலாபிஷேகம் செய்தவர் கணக்கையெல்லாம் எண்ணி எண்ணிப் பிரமிக்கிறார் பாண்டியன். ஒரு சினிமாவை ஒரு நடிகருடையதாக்கியிடும் தமிழகக் கலா சீரழிவை பாண்டியன் பிரதிபலிப்பதுதான் இதில் ஆச்சரியமான விஷயம். ஒரு
வெய்யிலும் , ஒரு பருத்திவீரனும் சமீபத்திய சினிமா உலகில் கண்ட வெற்றிகள் குறித்து ஒரு நம்பிக்கை ஏற்படுகிற சமயத்தில், பாண்டியன் எழுதுகிறார் ‘பலே ரஜினி’ என்று. இதை எங்கே போய்ச் சொல்லி தலையை முட்டிக்கொள்ள? வெய்யிலும், பருத்திவீரனும்கூட அவையவைக்கான குறைபாடுகளைக் கொண்டிருப்பவைதான். பருத்திவீரனில் இன்னும் கூடுதலான கருத்தியல் அம்சங்களின் குறைபாடு இருக்கிறதுதான். ஆனாலும் அவை சினிமா என்கிற கண்ணோட்டத்தில் தமிழ்ச் சினிமா வரலாற்றில் குறிப்பிடப்படவேண்டியவையே.

சிவாஜி படம் நல்லதாய்க்கூட இருக்கலாம். அது இங்கு பிரச்சினையே இல்லை. ஒரு படத்தின் அறுதியான வெற்றியாக பாண்டியன் எதைக் கொள்கிறார் என்பதுதான் கேள்விக்குரியதாகிறது. குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்கள் இருந்த நாடு அது. ரஜினிக்கு பாலாபிஷேகம்… சுண்டைக்காய். தளபதி படம் வெளிவந்தபோது படம் துவங்க திரை மேடையிலேறி கற்பூர ஆராதனை காட்டியவர்கள் அந்த ரசிகர்கள். பாண்டியன் அதை மறந்தது விந்தை.

ஆண்டுக்கு சுமார் ஐந்நூறு படங்கள் வெளிவரும் ஒரு நாட்டில்தான் எழுபதுகளில் எமேர்ஜென்சி வந்து நாட்டின் சுதந்திரத் தன்மைகளை ஒரு உறிஞ்சு உறிஞ்சிவிட்டுச் சென்றது. இந்திரா காந்தி படம் பார்ப்பதில்லையென்று சொல்வீர்களா, அல்லது ரஜினி அப்போது படங்களில் நடிக்கவில்லையென்று சொல்வீர்களா? எல்லாம் எப்படி சார் மறந்தீங்க?

ஒருவர் சறுக்கிவிடலாம். பாதகமில்லை. இப்படியொரு சறுக்கல் … கூடவே கூடாது.

(2006 ‘வைகறை’யில் வெளிவந்தது)

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்