அதை அதுவாக 15
உள்ளது உணர்ந்தபடி (தேர்ந்த குறள்கள்) 15 ‘திருக்குறளில் படிமத்தின் பயில்வுகள்.’ - தேவகாந்தன் - (38) பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். (பொருள், அரசு, ஊக்கமுடைமை 9) குறள் 599 பருத்த உடம்பும், கூரிய தந்தங்களும் உடையதாயினும் புலி தாக்க வந்தால் யானை அஞ்சுமென்பது இந்தக் குறளின் பொருள். வெளிப்படையான அர்த்தத்தில் பார்த்தால் ‘ஊக்கமுடைமை’ என்ற அதிகாரத்தில் இந்தக் குறள் பொருத்தம் பெறாது. அதனால் ‘ஊக்கமுடைய’ என்ற பெயரெச்சத்தை வருவித்து ஊக்கமுடைய புலி எனப் பொருள் கொள்ளவேண்டும். இவ்வாறு வருவித்துப் பொருள்கொள்ளும் மரபு தமிழ்ச் செய்யுளியலில் உண்டு. இந்தக் குறளுக்கு இரண்டு குறள்கள் முந்திப் பார்த்தால் அங்கேயும் ஒரு யானை வந்திருப்பது தெரியும். அந்த யானையின் பருத்த மேனியில் அம்புகள் புதையுண்டு நிற்கின்றன. இருந்தும் அது தன் கம்பீரம் குலையாமல் நிற்கின்றது. அப்படிப் பெருமை பார்க்கிற வகையின விலங்குதான் யானை. அப்படிப்பட்ட யானையே ஊக்கம் நிறைந்த புலி தாக்கினால் அஞ்சுமாம். ஊக்கமுடைமையின் சிறப்பை இது இங்கே அழுத்தி நிற்கிறது. உவமை, உருவகம் என்று இயைபு பெறாத இடத்தில...