Saturday, March 08, 2008

சிதைவும் கட்டமைப்பும்: 6

தேவகாந்தன்

நூல் வேறு; பிரதி வேறு. நூல் கையால் தாங்கப்படுவது; புpரதி
மொழியால் தாங்கப்படுவது.
-ரோலன்ட் பார்த் (From Text to Book)


நவீனத்துவ இலக்கியக் கருத்துக்களை வளர்த்ததில் ‘கல் குதிரை’க்கு ஒரு கணிசமான இடம் ஒதுக்கப்படவேண்டுமென நினைக்கிறேன். கோணங்கியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த அந்த இதழ் அதிகமாகவும் மலர்களையே வெளியிட்டது. மார்க்வெய்ஸ், தாஸ்தாவ்ஸ்கி என்று பலவாறான மலர்கள். அதில் ஓரிரு இதழ்கள் ஜென்னி ராம் அச்சகத்தில் அச்சானதாக ஞாபகம்.

இத் தருணத்தில் ‘குதிரை வீரன் பயணம்’ என்ற இதழையும் குறிப்பிடவேண்டும். ய+மா வாசுகி இதற்கு ஆசிரியர். மாரிமுத்து என்ற பெயரில் வனைந்து வந்த ஓவியரும் இவர்தான். இவையெல்லாம் வசதியாக வாசிக்கக்கிடைத்தன. மட்டுமில்லை. இவர்களோடான நேரடி அறிமுகமும் தொடர்பும்கூட எனக்கிருந்தது.

மேலைத் தேயத்தில் வீச்சாக வளர்ந்திருந்த பின்நவீனத்துவ முகாம் தமிழகத்தில் பெரிதாக அறியப்படாதிருந்த காலமாக இதைக் கொள்ளமுடியும். தமிழவன், அ.மார்க்ஸ், நாகார்ஜுனன், ரவிக்குமார் ஆதியோர் பலபேரின் வாசிப்பில் மாற்றத்தை உருவாக்கிய முக்கியமான நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியோராவர். முன்னைய இருவரினதும் பல்கலைக்கழக ஆய்வின் அடிசார்ந்தவையாகவும், பின்னைய இருவரினதும் அறிவார்த்தமான எழுத்துக்களாகவும் இருந்தன. தமிழவனும், சாரு நிவேதிதாவும் படைப்புரீதியாகவும் தொழிற்பட்டவர்கள். இவர்களோடு பின்னால் பிரேம் ரமேi~யும் சேர்த்துக்கொள்ள முடியும்.

இந்த இடத்திலிருந்து என் வாசிப்பின் திசையும் பரப்பும் மாறத்தொடங்கிவிட்டதைக் குறிப்பிடவேண்டும். யதார்த்த வகையான எழுத்து வாசகனில் ஒரு வதையாக இறங்கிக்கொண்டிருந்தது. ஒரு மாற்றத்தின் அவசியத்தைப் படைப்பாளிகள் உணரத் துவங்கியிருந்தனர். இந்தளவில் தெலிங்கானாவிலும், மகாரா~;டிராவிலும் வலிமை வாய்ந்திருந்த தலித் இலக்கிய இயக்கம் தமிழ்நாட்டளவில் எட்டிப்பார்க்கவுமில்லை. இடதுசாரிகள் அரசியலில் எப்படியோ, இலக்கியத்தில் வலுவான இடத்தில் இருந்துகொண்டிருந்தார்கள். கேரளாவின் பிரபல எழுத்தாளர்களின் யதார்த்த வகையான எழுத்தின் ஆதர்~மும் இக்காலகட்டத்தில் முற்றாக நீங்கிவிட்டதென்று கூறமுடியாதிருந்தது. முற்போக்கான எழுத்துக்கு மார்க்ஸீய போக்குடையவர்களின் இலக்கியங்களையே இன்னமும் நாடவேண்டிய சூழல்.

பின்நவீனத்துவம்பற்றிய புரிதல்கள் என்னில் வளர்ந்துகொண்டிருந்தன. ஆனாலும் படைப்பாய் அவை வெளிவரக் காலமாகுமென்றே தெரிந்தது. பின்நவீனத்துவ நடையென்பதோ படைப்பாக்கமென்பதோ ஒருவர் நினைத்ததும் வெளிப்பாடடைகிற சங்கதியில்லை. மரபார்ந்த இலக்கிய நடையொன்றில் காலகாலமான பழக்கமிருந்த ஒருவருக்கு பின்நவீனத்துவப் பாணியில் எழுதுவதென்பது எளிதில் சாத்தியமாகக் கூடியதாய்த் தெரியவில்லை. அதற்கு முதலில் படைப்பாளியின் மனநிலையில் மாற்றம் ஏற்படவேண்டும். நொன்-லீனியர் எழுத்துவகைக்கு படைப்பாளியின் மனத்துள் கலகமொன்றே நிகழவேண்டும். அவன் கலகக்காரனாக மாறியாகவேண்டும். சமூக நிறுவனங்களுக்கும், தனிமனித அவலங்களுக்கும் எதிரான குரல் அவனது மனத்துள் ஒலித்துக்கொண்டிருக்கவேண்டும். கட்டுக்கதையியல் துறை சார்ந்த எழுத்தில் மார்க்வெய்ஸ் அசுர சாதனை படைத்தவர். அவர்போல் அவன் சுபாவ குணமுள்ளவனாயினும், பின்நவீனத்துவம் வரும். ஆனால் கலகமில்லாதவன் மனத்தில் பின்நவீனத்துவம் படைப்பு வீறுகொண்டு வெளிப்படவே மாட்டாதென்பதைத் துணிந்து சொல்ல முடியும்.

இந்தக் கலக நிலைக்குள் என் மனம் புகுந்துகொள்ளச் சிலகாலம் வேண்டியிருந்தது. அந்தக் காலத்துள் இன்னும் பல முக்கியமான படைப்பாளிகள் விமர்சகர்களோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அது பற்றிச் சிறிது சொல்லிக்கொண்டு இலக்கு சிற்றிதழை நான் துவக்கிய கதைக்கு வரலாமென நினைக்கிறேன்.

மூத்த படைப்பாளி என்ற வகையில் அப்போது அம்பத்தூரில் குடியிருந்த லா.ச.ரா.வை சிலமுறை சென்று சந்தித்திருக்கிறேன். அற்புதமான மனிதர். எவ்வளவு காலமாக எழுதுகிறீர்கள்? என்று ஒருபோது என்னைக் கேட்டார். நான் 1968இலிருந்து எழுதுகிறேன் எனப் பதிலளித்தேன். இவ்வளவு காலமாக எழுதுகிறீர்கள், ஏன் உங்களுடைய பெயர் இன்னும் ஸ்தாபிதமாகவில்லை? என்று மறுகேள்வி கேட்டார். அதற்கு நான், எழுதுவதுதான் என் வேலை, ஸ்தாபிதமாகிறது எழுத்துக்குப் பிறிம்பான வேறொருவேலை என்றேன். பெரிதாகச் சிரித்து அந்தப் பதிலை ரசித்தார் லா.ச.ரா. ‘நெருப்பென்றால் தீப்பிடிக்கவேண்டும்’ என்று சொல்லின் வீறுபற்றிச் சொன்னவர் இந்த லா.ச.ரா.தான். நான் சொல்லிய மொழியை, எழுதுகிற மொழியை சிங்களத் தமிழ் என்று ஒருமுறை அவர் குறிப்பிட்டபோது பெரிதாக மாறுபாடுகொண்டு அவரோடு ஒருசமயம் நான் வாதாட நேர்ந்தது. சிங்களத் தீவு எனப் பாரதி சொல்லவில்லையா? ஏன்று திருப்பி லா.ச.ரா. என்னைக் கேட்டபோது, பாரதி நல்ல கவிஞன்தான், அதற்காக அவரைச் சிறந்த வரலாற்றாளனாய் நாம் எடுக்கவேண்டியதில்லையென நான் கூறிய பதில் அவருக்கு உடன்பாடானதாய் இருக்கவில்லையெனினும், பொருத்தமான பதிலாக எடுத்துக்கொண்டு பேசாமல்விட்டுவிட்டார்.

எழுதும் ஒவ்வொரு சொல்லையும் மந்திரச் சொல்லாக மாற்றிவிடும் என்னுடைய வேட்கை லா.ச.ரா.வின் எழுத்துக்களை வாசித்ததனாலும், அவரோடான என் நேரடித்தொடர்பினாலும் ஏற்பட்டதென்றாலும் தவறில்லை. இயல்பான சொல்லுகள், அதேவேளை தம்முள் பொறியை உள்ளடக்கி வைத்திருக்கக் கூடிய சொற்களின் தேடுதல் எனக்குள் உற்பவித்த விந்தை இப்படித்தான் நிகழ்ந்தது.

எனது முதல் சிறுகதைத் தொகுதி ‘நெருப்பு’. அது அத் தொகுதியிலுள்ள ஒரு சிறுகதையின் தலைப்பேயெனினும் அத் தொகுதியிலுள்ள கதைகளின் ஒட்டுமொத்தமான தன்மையின் காரணமாய் ஒரு காரணப் பெயராகவே அத் தலைப்பை நான் வைக்க நேர்ந்ததாக அத் தொகுப்பின் ‘என்னுரை’யிலேயே நான் குறிப்பிட்டிருக்கிறேன். மணிவேலுப்பிள்ளையின் அண்மையில் வெளிவந்த நூல் ‘மொழியால் சமைந்த வீடு’ என்பது. மொழிபற்றி, மொழிபெயர்ப்புப்பற்றிச் சொல்கிற நூல் அது. ஒரு மொழியின் இலக்கியம், அறிவியல், அம் மொழி பேசும் மக்களின் சிந்தனையெல்லாம் மொழிவழியானவையே என்ற கருத்தின் பிரமாண்டத்தை அந் நூலின் தலைப்பு தன்னுள் அடக்கி நிற்கிறது.

மொழியானது கருத்தின் ஊடகம் என்பதை மேவி, கருத்தாகவே எனக்குள்ளான அர்த்தம் வலுத்திருக்கிறது. மந்திரச் சொல் வேண்டுமென யாசித்து நின்றவன் பாரதி. சொல் ஒன்று வேண்டும் என இரந்து நின்றவர் நா.பா. நெருப்பென்றால் சுடவேண்டும் என்றவர் லா.ச.ரா. சொல் எனக்குள் வேட்கையானதன் வரலாறு இதுதான்.

பின் நவீனத்துவத்தின் முன்னோடியாகச் சொல்பற்றிய பிரக்ஞைதான் உருவானதென்று சொன்னாலும் மிகையில்லை. லெப்டினன்ட் டி சசூர் குறியியல்பற்றிய பகுப்பாய்வைச் செய்ததன் பின்னரே, அது இலக்கியப் பகுப்பாய்வின் முக்கியமான தளமாகப் பார்க்;கப்பட்டது. சொல் , பொருள் என்ற இருமைக்குப் பதில் குறிப்பான் , குறிப்பீடு , குறி என்ற மும்மையை முன்வைப்பதன்மூலம் பொருளைப்பற்றிய அறுதியான உண்மையை வெளிப்படுத்தும் சாத்தியத்தை அமைப்பியல் கவனத்திலெடுத்தமை இங்கிருந்துதான் துவங்குகிறது. குறிப்பீடுகளைவிட, குறிப்பான்களுக்கு அமைப்பியல் முக்கியம் தந்ததை நாம் இந்த அடிப்படையில்தான் விளங்கிக் கொள்ளவேண்டும்.

இலக்கியச் சிந்தனை அமைப்பு சென்னையில் முக்கியமான ஒரு அமைப்பு. மாதத்தின் கடைசிச் சனிக்கிழமைகளில் மாலைநேரங்களில் அது சென்னை கஸ்தூரி காந்தி மண்டபத்தில் கூடிக்கொண்டிருந்தது. சென்னையிலிருந்த காலத்தில் பெரும்பாலும் அனைத்துக் கூட்டங்களுக்கும் நான் சென்றிருக்கிறேன். படைப்பாளிகள் பா.ராகவன், இரா.முருகன், இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ம.இராஜேந்திரன் என்று பiரையும் நான் பழக்கமானது இங்கேதான். இந்த இடத்தில் ஒன்று சொல்லவேண்டும்.

‘ஈழத்து முன்னோடிச் சிறுகதைகள்’ என்ற தலைப்பில் 2001இல் செங்கையாழியானின் நூலொன்று பூபாலசிங்கம் பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. அதில் இலக்கியச் சிந்தனையின் வருடாந்தர சிறுகதைத் தொகுப்பில் மாதாந்தர சிறுகதைத் தேர்வுபெற்;று தொகுப்பில் இடம்பிடித்த சிறுகதைகளை எழுதிய ஈழத்தவராக செங்கையாழியான், பிரேமிள், எம்.ஏ.நுஃமான், சுதாராஜ் ஆகியோரே குறிப்பிடப்பட்டுள்ளனர். உள்ளும் வெளியும், அப்புஹாமிகள் இன்னும் உயிரோடிருக்கிறார்கள் என்ற எனது இரண்டு கதைகள் வௌ;வேறு இலக்;கியச் சிந்தனைத் தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கின்றன. செங்கையாழியான் இதுபற்றி மூச்சுக்கூட விடவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை தொகுப்பில் எழுதியோர் கவனிக்கப்படக்கூடாதென்ற விதியேதுமிருக்கிறதோ?

உள்ளும் வெளியும் என்ற சிறுகதை கதிரில் வந்தது. அப்புஹாமிகள் இன்னும் உயிரோடிருக்கிறார்கள் என்ற சிறுகதை இந்தியா டுடேயில் வந்தது. இக் கதைபற்றி பிரான்சிலிருந்து சி.புஸ்பராஜா தமிழ் நாடு வந்திருந்த தருணம், சிங்கள மக்களில் ஓரிருவரே இரக்கமுள்ளவர்களாக இருப்பதாய்க் கதை கூறுவதாகச் சொன்னபோது , அப்படியில்லை, அப்புஹாமிகள் என்று குறிப்பிடுவதன்மூலம் பலரையே குறிப்பிட்டதாக நான் பதில் கூறியிருந்தேன்.

அவ்வாறு பல வாதப் பிரதிவாதங்களை உருவாக்கிய சிறுகதைகள் அவை. 2001 வரை எனது மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. நெருப்பு, இன்னொரு பக்கம், காலக் கனா என்பன அவற்றின் தலைப்புகள். இருந்தும் 1996இல் வெளிவந்த என் நெருப்பு சிறுகதைத் தொகுப்பை மட்டும் 2000இல் வந்ததாக பட்டியலில் குறிப்பதோடு ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற தலைப்பில் 2001இல் வெளியிட்ட தனது பெரும் நூலை முடித்துவைத்திருக்கிறார் அவர். எனது நூல்கள் குறிப்பிடப்படாமல், ஆய்வுக்கெடுபடாமல் தவறிப்போனமையில் எனக்கொன்றும் நட்டமில்லை. செங்கையாழியானுக்குத்தான் நட்டம். அவர் தகவல்களைத் தவறவிடுகின்றவர் என்ற பெயர் அவருக்கு நல்லதில்லை.

நல்லது. இலக்கியச் சிந்தனை மூலமாக நான் கண்டடைந்த இன்னொரு நண்பர் ஆர்.டி. பாஸ்கர் என்ற ஈழத்தவர். நிறைந்த வாசிப்புப் பின்னணியிருந்தது அவருக்கு. சினிமா குறும்படமென்று அலைந்துகொண்டிருந்தார். அவரோடான என் பழக்கம் கணையாழி கவிதை வட்டக் கூட்டங்களுக்குச் சென்றுகொண்டிருந்தபோதுதான் அதிகமாகியது. கணையாழி கவிதை வட்டத்தை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தவர் சுஜாதா என்றே சொல்லவேண்டும். நா.முத்துக்குமார், யுகபாரதியென்று நல்ல கவிஞர்களை பத்திரிகையுலகுக்கு இனங்காட்டியவர் அவர்தான். இன்று செல்வாக்குப்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர்களாக அவர்களிருக்கின்றார்கள். சுஜாதா, பா.வெங்கடே~;, மாலன் என்று என் அறிமுக வட்டமும் இங்கே விரிந்தது.

‘சுபமங்களா’ இப்போதும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. ‘தாய்’ நடந்துகொண்டிருந்த காலத்தில் அதன் உதவியாசிரியராக இருந்த கீதப்பிரியன் இப்போது சுபமங்களாவில் உதவியாசிரியராகவிருந்தார். கோமலைத் தெரிந்திருந்தேன். ஆனாலும் சுபமங்களாவோடு எனக்கு அந்நியோன்யம் ஏற்படவில்லை. அது ஒரு இடைநிலைப் பத்திரிகையாகவே இயங்கிக்கொண்டிருந்தது. ஸ்ரீராம் நிறுவனத்தின் பண பலத்திலும், கோமலின் ஆசிரியத்துவத்திலும் பத்திரிகை நன்கு நடைபெற்றதுதான். ஆயினும் அது ஒரு இடைநிலைப் பத்திரிகையென்ற வட்டத்தை மீறி நவீனத்துவ எழுத்துக்களுக்கான களமாக இருக்கவி;ல்லையென்பதும் நிஜம். அதனால்தான் அது ஒரு அலையை உருவாக்கத் தவறியது. அந்தவகையில் அது இன்னொரு ‘தீபம்’.

என் வாசிப்பும் சிந்திப்பும் பெரிதாக என் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லையெனினும் , ஒரு புதிய உலகத்தின் பிரவேசம் எனக்குள் மெல்லமெல்ல நிகழ்ந்துகொண்டிருந்தது. இதன் வெளிப்பாட்டினால்போலும் ‘இலக்கு’ சிறுசஞ்சிகையைத் துவங்குவதெனத் தீர்மானித்தேன். அதை விரைவிலேயே நண்பர்களிடமும் கூறினேன். 1996 இல் ஜூன் 30ம் தேதி முன் புதுமைப்பித்தன் நினைவுமலராக இலக்கு காலாண்டிதழ் வெளிவந்தது. எட்டு இதழ்களை வெளியிட்டேன். ஓன்பதாவது இதழ் ந.பிச்சைமூர்த்தி நினைவு மலராக வெளிவர கணினித் தட்டச்சுவரை முடித்துவைத்திருந்தேன். எனினும் அது வெளிவராமலே என் நீண்ட சுகவீனத்தின் காரணமாய் இதழ் நின்றுபோனது.

இலக்கு இதழ்கள் முக்கியமானவை. அவைபற்றி சற்று விரிவாகச் சொல்லவேண்டும்.

1 comment:

விருபா - Viruba said...

[ 1991 May தினமணி கதிர் உள்ளும் புறமும் ] என்றுதான் வானதி வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.

எது சரியான தலைப்பு

உள்ளும் புறமும் அல்லது உள்ளும் வெளியும் ?

அறியத் தருக

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...