Saturday, March 08, 2008

சிதைவும் கட்டமைப்பும்: 5

தேவகாந்தன்


நா.பா.வின் எழுத்தை முதன்முதலாக என் பதினெட்டாவது வயதில் வாசித்ததாக ஞாபகம். விருப்பத்துக்கு வாசிக்கக் கிடைக்காத அக் காலத்தில், நூல் வைத்திருப்பவரின் கைவசத்துக்கே வாசிக்கும்படியான நிலைமை. ஒருநாள் புத்தகமேதும் இல்லையென்ற எனக்கு நூல் இரவல் தருபவர் ஒருவர், கல்கியிலிருந்து கட்டிய பார்த்தசாரதியின் பொன்விலங்கு என்ற தொடர்கதை இருக்கிறது, விருப்பமென்றால் கொண்டுபோய் வாசித்துவிட்டு அடுத்த கிழமையே தந்துவிடவேண்டும் என்றார். நைந்த அந்தப் புத்தகத்தை சற்றே விருப்பமின்மையுடன்தான் எடுத்துச்சென்றேன். வாசிக்க ஆரம்பித்த பிறகு புத்தகம் என்னை முற்றாகக் கவர்ந்து விட்டது. கவிதையின் போதையோடு வசனங்களில் வாசகனை இழுத்தாழ்த்தும் வலிமை நா.பா.வின் எழுத்துகளுக்கு இருந்தது. தனியார் பல்கலைக் கழகமொன்றில் தமிழ் விரிவுரையாளராகச் செல்லும் சத்தியமூர்த்தி என்ற கதாபாத்திரத்துக்கு, பல்கலைக் கழகத்திலேயும், அங்கத்தைய புறச் சூழலிலும் நடக்கும் நிர்வாக, வாழ்வியல்முறைச் சீர்கேடுகளின் தரிசிப்பினையும், அக் கொடுமைகளை எதிர்த்து தார்மீகக் கோபத்தோடு அது நடத்தும் போராட்டங்களையும் நா.பா. அத்தனை அழகோடும் விறுவிறுப்போடும் அதில் சொல்லியிருப்பார். ஒரு விரிவுரையாளனாக ஆகும் கனவு எனக்குள்ளும் முழைத்தது அக் காலத்தில் அவர் வாசிப்பின் காரணமாகவே.

பின்னால் எனக்கு வாசிக்கக் கிடைத்த நா.பா.வின் எழுத்து ‘மணிபல்லவம்’. சிலப்பதிகார காலத்துப் பழந் தமிழகத்தைக் கண்ணுக்கு முன்னால் கொண்டுவந்து காட்டிய ஒரு நாவல் தமிழிலே உண்டென்றால் அது ‘மணிபல்லவம்’தான் என்று தயங்காமல் சொல்லுவேன். இப்போதும்தான். சரித்திரக் கதைகளென்றாலே அரச வமிசக் கதைகள்தானென்ற கருத்துப் பரவலாக இருந்த காலத்தில் மணிபல்லவம் நாவல் எழுதப்பட்டிருந்தது. போரும் படைகளும் செங்கோலும் மந்திரியும் சேனாதிபதியுமின்றி, சாதாரண மனிதனின் வாழ்வு அற்புதமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் அதில். சிலப்பதிகாரத்தில் எப்படி சாதாரண குடிமக்களான வணிக குல கண்ணகியும் கோவலனும் காவிய நாயகியும் நாயகனும் ஆகியிருந்தனரோ, அவ்வாறே சாதாரண படைமறவ குலத்து இளங்குமரனென்ற பாத்திரத்தின் மல்யுத்தம், அடங்காமை, காதல் சண்டைகளையும், அவனுக்கெதிரானோரின் சூழ்ச்சிகளையும், ஆதரவானோரின் பாதுகாப்பு முயற்சிகளையும் பற்றி விளக்குகிறது நாவல். அவனது கதையை ஈழத்தில் நயினாதீவு என்று இன்று பெயர்பெற்றிருக்கும் மணிபல்லவத் தீவுவரை நடத்திச் சென்றிருப்பார் நா.பா. உடம்பின் வலிதோடு இந்திர விழாவிலே யவனனோடு மல்யுத்தம் புரியும் இளங்குமரன், உடல் வலிதானது உண்மையில் வலிதேயில்லையென்றும், அறிவின் வலிதே வலிதென்றும் உணரப்பெறும் பக்குவத்தை ஒருபோது அடையுமிடம் அற்புதமானது.

இந்திர விழாவிலே சமய வாதங்கள் நடைபெற்றன ஒருபுறம். அதில் புத்த துறவி ஒருவரின் புத்த ஞாயிறு தோன்றும் தத்துவத்தை எதிர்த்து விட்டேற்றியாய் விடலைகளோடு அலையும் இளங்குமரன் இலஞ்சி மண்டபத்திலுள்ள பிச்சைக்காரர், நோயாளிகள், அநாதரவானவர்களின் நிலைமைக்கும் அதுதான் விடிவோ எனக் கேட்டு ஆக்ரோ~மாக அவரோடு வாதம்புரிவான். வாத முறைப்படி அதில் அவன் தோற்றுப்போவான். அச் சமயத்தில்தான் அறிவின் வலிதை அவன் புரிவது. அதுகாரணமாக அவன் அறவண அடிகள் என்பவரிடம் குருகுல மாணவனாயிருந்து தர்க்கம், சமயம் முதலிய பாடங்களைக் கேட்டறிந்து, பின்னால் அதே துறவியுடன் இந்திர விழாத் தர்க்க சதுக்கத்தில் வாதம் புரிந்து தன் கொள்கையை நிலைநாட்டுவான். தலைக்கனம் பிடித்த பண்டிதரொருவரையும் தர்க்கப் போர் நடத்தி வெற்றிக் கொடி நாட்டுவான். தமிழிலக்கியத்தில் வாதப் போரை இவ்வளவு விஸ்தாரமாகப் பேசியதாய், அர்த்தமொடு ஆணித்தரமாகப் பதிவுசெய்ததாய் வேறு நாவல் இல்லை.

‘குறிஞ்சிமல’ரும் கல்கி இதழில் தொடராக வெளிவந்த கதைதான். மு.கருணாநிதியின் மகன் மு.க.ஸ்ராலின் நடித்து தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இக் கதை தொலைக்காட்சித் தொடராக வந்ததை இப்போது நினைத்துப் பார்க்;க முடிகிறது. அரவிந்தன், பூரணி என்ற இக் கதையின் பிரதம பாத்திரங்கள் பாதித்த அளவு வேறு எந்த எழுத்தாளரது பாத்திரங்களாவது தமிழ் வாசகரைப் பாதித்திருக்கும் என்று சொல்லவே முடியாது. ஒரு அச்சகச் சூழலின் பின்புலத்தில் அரவிந்தனதும், பூரணியினதும் காதலை மிக உயர்ந்தவொரு தளத்தில் வைத்து வளர்த்துச் சென்றிருப்பார் கதாசிரியர். அக் காதலும், அவர்கள்தம் பண்பும் வாசகரைப் பரவசத்தில் ஆழ்தின என்றாலும் தப்பில்லை. தம் குழந்தைகளுக்கு அரவிந்தன், பூரணியென்று வாசகர் வெறியோடு பெயர்வைத்தமை தமிழ்ச் சூழலில் நடந்த சம்பவம் வேறில்லை. அரவிந்தன் இறுதியில் மரணமாவதும், பூரணி அவனது ஞாபகங்களுடன் சத்திய நெறியில் தன் பொதுவாழ்வைத் தொடர்வதுமாய் நாவல் முடிகையில் தமிழ்நாட்டு வாசகர்களே துக்கம்கொண்டாடினார்கள் என்பார்கள். வாசக கடிதத் தொடர்பும் வேறுபேருக்கும் வேறு அவரது நாவலுக்கும்கூட இல்லாத அளவு நா.பா.வுக்கு இருந்திருக்கிறது இந் நாவல் காரணமாக.

‘தீபம்’ இதழை நா.பா. தொடங்கிய பிறகு, அதில் ‘கபாடபுரம்’ என்ற தலைப்பில் பழந்தமிழகத்தின் அழிந்த தலைநகரான கபாடபுரத்தை மையமாக வைத்து ஒரு நாவலை எழுதினார். ‘நெற்றிக் கண்’ நாவலும் அதில்தான் வெளிவந்தது. ஒரு பத்திரிகையாளனின் பொறுப்பும்,, சமகால புலத்தில் அவனது நேர்மைக்கு ஏற்படும் சோதனைகளும்பற்றிச் சொல்வது அது. இவ்வாறாக பதினைந்துக்கும் மேலான நாவல்களையும், பதினைந்துக்கும் மேலான குறுநாவல் சிறுகதைத் தொகுதிகளையும், இருபதுக்கும்மேலே பழந்தமிழிலக்கியக் கட்டுரைகளையும் கவிதைகளையும் இவர் எழுதியிருக்கிறார். கவிதைகளுக்காக இவர் பூண்;ட புனைபெயர் மணிவண்ணன் என்பது. ஆசிரியரின் பழந்தமிழிலக்கியப் பரிச்சயம்போல் வேறு தமிழ்ப் படைப்பாளிகளுக்கு இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். அதனாலோ என்னவோ ஒரு கவிப் பாங்கான நடையையே நா.பா. கையாண்டிருக்கிறார்.

இன்றைய வாசகனுக்கு இந்த நடை பிடிக்குமென்று நிச்சயமாகச் சொல்ல முடியாதெனினும், அவனது பழந்தமிழிலக்கியப் பரிச்சயமின்மையையும் ஒரு காரணமாகச் சொல்லலாம்போலவே தெரிகிறது. ஆயினும் இன்றும் எனக்குப் பிடித்த இருபத்தைந்து நாவல்களில் ஒன்றாக நா.பா.வின் ‘பாண்டிமாதேவி’யைச் சொல்ல எனக்குத் தயக்கமில்லை. அரசியல் சூதும், தந்திரங்களும், யுத்தமும் அதில் ஒரு நேர்த்தியான நடையில் சொல்லப்பட்டிருக்கும். முது கதா பாத்திரங்களான பாண்டிமாதேவியும், மகாமண்டலேஸ்வரருமே கதையை நடத்துபவராயிருக்கும் அதில். நடையும் ஒரு இறுகலை அதில் அடைந்திருக்கும்.

நாவலில் பாண்டிமாதேவியைப்போல், குறுநாவல்களில் எனக்கு ‘சொல் ஒன்று வேண்டும்’ பிடிக்கும். கவிதைப் பாங்கான நடையின் உச்சத்தை அக் காதல் கதையில் அடைந்திருப்பார் நா.பா. செல்லரித்த ஏட்டுச் சுவடியொன்றிலிருந்து அக் கதையைக் கண்டடையும் கதாசிரியர், மூலக் கவியின் செய்யுளில் இல்லாதுபோயிருக்கும் ஒரு சொல்லுக்காக வருந்திய வருத்தமும், அதை நிரப்ப தகுந்த சொல் தேடித் தான் செய்த உழைப்புத் தவமும்பற்றி முன்னுரையில் சொல்லியிருப்பார். சொல்லுக்கான அந்தத் தபசு என் மனத்துள் ஆணிவேராய் இறங்கியிருக்கிறது. மறக்க முடியாத கதை.

ரா.சு. நல்லபெருமாளின் ‘போராட்டங்கள்’ நாவல் இப்போது சுருங்கிய ஒரு வடிவில் இந்திய சாகித்ய அகடமியினால் வெளியிடப்பட்டிருக்கிறது. இவ்வாறாக நா.பா.வின் சில நாவல்கள் குறுநாவல்களையேனும் இன்றைய தமிழ் வாசகர்களுக்குக் கொடுக்கவேண்டுமென்ற ஓரேண்ணம் எனக்கு வெகுகாலமாக உண்டு. சத்தியத்தை அவ்வளவு ஆவேசமாகவும், நளினத்தை அவ்வளவு இங்கிதமாகவும் யாரும் இதுவரை தமிழில் சொல்லியதில்லை. தமிழ்ச் சமூகத்தின் நேர்மையும், உறுதியும், வண்ணமும் இன்று என்றையையும்விட அருந்தலாகியிருக்கிற நிலையில், நா.பா. போன்றோரின் எழுத்துக்களின் தேவை அவசியம். அதற்காகவேனும் இந்த மாதிரியான எழுத்துக்களை ஒரு சுருங்கிய வடிவில் வாசகனுக்குப் பரிச்சயமாக்குகிற தேவை இருக்கிறது. எல்லாவற்றையும் காலம்தான் அனுமதிக்கவேண்டும்.

இவைகளுக்காகவே மட்டுமில்லை, நான் நடத்திய ‘இலக்கு’ காலாண்டிதழில் மூன்றாவதை நா.பா. நினைவுமலராக வெளியிட்டதற்கு அவரின் நடைமுறைகளும், போக்குகளும் கூடத்தான் காரணம். திருப்பூர் கிரு~;;ணனுக்கு நா.பா.வோடு மிக நெருங்கிய தொடர்பு. ‘தீபம்’ நடந்த காலத்தில் தான் படிப்பு முடித்து வேலையில்லாமல் சென்னையிலிருந்தபோது தீபம் அலுவலகத்தில் பகுதிநேர வேலையொன்று போட்டுக் கொடுத்திருக்தாராம் நா.பா. அதனால் நா.பா.வோடு நெருங்கிப் பழக வெகுவான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது திருப்பூர் கிரு~;ணனுக்கு. இந்தப் பாதிப்பில்தான் இன்றும் நா.பா.போலவே வெள்ளை வேட்டியும் வெள்ளை ஜிப்பாவும் ( நாங்கள் அதை நா~னல் என்போம்) கதரில் அணிகிறார் கிரு~;ணன். நாங்கள் இருவரும் அறிமுகமாகி ஒருசில வாரங்களிலேயே நெருக்கமாகப் போய்விட்டோம். சந்திக்கிற வேளையெல்லாம் இலங்கை, தமிழக இலக்கிய உலகம்பற்றி விரிவாகப் பேசுவோம். திருப்பூர் கிரு~;ணன் எம்.ஏ. படித்தபோது தமிழுக்;கு அப்போது மஹாகவியின் கோடை நூல் பாடமாயிருந்திருக்கிறது. மட்டுமில்லை. அவருக்குமே ஈழத்து இலக்கியங்களைப்பற்றி அறிகிற ஆர்வமிருந்தது. எம் பேச்சிடையில் நா.பா. பற்றியும் வரும். பலவாறான அவ்வி~யங்களுக்குள் இன்றும் என் மனத்தில் இடம்பிடித்திருக்கிற ஒன்றை இங்கு குறிப்பிடலாமென நினைக்கிறேன்.

இந்திய சாகித்ய அக்கடமியின் தென் பிராந்தியக் கிளைக்கு நா.பா. தலைவராக இருந்தபோது சிறப்பான ஒரு விழா எடுக்கப்பட்டிருந்தது. அதற்கு சிறப்பு விருந்தினராக அப்போது தமிழக முதலமைச்சராகவிருந்த எம்.ஜி.ஆர். அழைக்கப்பட்டிருந்தார். தென் பிராந்தியங்களுக்கான சாகித்ய அகடமி அலுவலகம் சென்னையிலேயே இயங்கிக்கொண்டிருந்தும், அதற்கு ஒரு நிலையான இடமில்லாதிருந்தது. நிறைய வாடகை கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அதன் காரணமாக அதை வேறு பிராந்தியத்துக்கு, குறிப்பாக ஆந்திராவுக்கோ கன்னடத்துக்கோ, மாற்றுகிற திட்டத்தோடிருந்தது புதுடெல்லித் தலைமையகம். அதை எப்படியாவது தடுத்துவிடுவதெனில் அதற்கொரு சொந்தமான இடத்தை ஓதுக்குவதன் மூலம் நிறைவேற்ற முடியலாமென தமிழக எழுத்துத் துறையினர் கருதினர். அந்த வேண்டுகோள் அன்று முதல்வர் முன்னால் விடுக்கப்பட்டிருந்தது. அவரும் அதற்கு முடிந்தளவு தான் முயன்று பார்ப்பதாகத் தன் பேச்சிடையே கூறியிருந்தார். கூட்ட முடிவில் நன்றியுரையாற்ற வந்த நா.பா. அவ் வேண்டுகோள் பல காலமாகவும் பல முதல்வர்களிடமும் விடுக்கப்பட்டதாகவும், எவரும் கவனிக்கவில்லையெனவும், எம்.ஜி.ஆர். காலத்திலேயே அது அமைச்சர்கள் மூலமாக விடுக்கப்பட்ட வேண்டுகோளே எனவும் கூறிவருகையில் முதலமைச்சர் தலையிட்டு ஏதோ சொல்ல முற்பட்டீருக்கிறார். ‘உங்களுடைய நேரம் முன்பே முடிந்துவிட்டது, இது என்னுடைய நேரம், குறுக்கிடாதீர்கள்’ எனத் தடைபோட்டிருக்கிறார் நா.பா. யாருக்கு வரும் இந்தமாதிரியான அஞ்சாமை? ஏல்லோரும் காலில் விழுந்துகொண்டிருக்கிற கலாச்சாரத்தைக் கட்டியெழுப்பிக்ககொண்டிருக்கையில் எதிர்த்துப் பேச எவராவது துணிந்திருப்பரா? ஆனால் நா.பா. அதைச் செய்தார்.

‘நெற்றிக் கண்’ணில் ஒரு பத்திரிகாசிரியன் நிர்வாகத்தின் நசிப்புக்கு அடங்க மறுத்து போர்க்கொடி தூக்குவான். எக்ஸ்பிரஸ் பேப்பேர்ஸ் ஸ்தாபனத்தில் தினமணிக் கதிர் ஆசிரியாராகவிருந்தபோது நிர்வாகத்துக்கும் அவருக்கும் மோதல் ஏற்படவே வேலையைத் தூக்கியெறியவும் நா.பா. தயங்கவில்லை. எழுதுவது போல் வாழ எல்லாராலும் முடிந்துவிடுவதில்லை. நா.பா.வால் முடிந்திருக்கிறது. அதற்கான கௌரவத்தையே அன்று ‘இலக்கு’ செய்தது.

வல்லிக்கண்ணன், தி.க.சிவசங்கரன்,திருப்பூர் கிரு~;ணன் ஆகியோருக்குப் பிறகு பொன் விஜயனைப்பற்றிச் சொல்வது பொருத்தமாகவிருக்கும். நண்பர் திலீப்குமார் மூலமாகவே எனக்கு முதன்முதலில் பொன்விஜயன் அறிமுகமானது. எழுதாத சரித்திரங்கள்’ குறுநாவல் தொகுதியின் அச்சாக்கம் சம்பந்தமாக, ஒரு தொழிலார்த்தமான சந்திப்பாகவே அது இருந்ததெனினும், பின்னால் அது நெருங்கிய பழக்கமானது. மாலைகளில் சந்திப்பது நிரந்தரமாகிப் போனது. ரீ குடிப்பது, எங்காவது சைக்கிளில் சுற்றுவது, இலக்கியக் கூட்டங்களுக்கும் திரைப்பட விழாக்களுக்கும் போவது என்று எமது சந்திப்பு 2002 இல்; அவரது மரணத்துக்கு முன்னான சிறிது காலம் வரை தொடர்ந்தது.

பொன்விஜயன் ஜென்னிராம் என்ற அச்சகத்தை மட்டும் நடத்தவில்லை, ‘புதிய நம்பிக்கை’ என்ற சிற்றிதழையும் நடத்தினார். அச்சகத்தில் உழைப்பதைச் சிற்றிதழில் செலவு செய்துகொண்டிருந்தார் என்றாலும் சரிதான். கூட ‘நவீன கவிதை’ என்ற புதுக்கவிதைக்கான இதழ்.

அவரோடான எனது பழக்கத்தின் காரணமாகவே ஒரு குறுகியககாலத்தில் பல இலக்கியவாதிகளையும் எனக்கு அறிமுகமாகியிருந்தது. பல்வேறு சிற்றிதழ்களின் தோற்றம் மறைவுகளின் கதைகளையும் நாம் பேசினோம். அவரோடு இன்னுமொரு நண்பர் குறிப்பிடப்பட வேண்டும். அவர்தான் ஸ்ரீரெங்கன் என்ற நண்பர். கணித ஆசிரியராகவிருந்தார். படைப்பாளியல்ல. ஆனாலும் இலக்கியம் தெரிந்தவர். சிறந்த வாசகர். திருநெல்வேலிக்காரர். தாமிரபரணி வாசம் இருந்தது அவரில். அதாவது இலக்கியவாசம். அதனால்தான் ‘புதியன’ என்ற சிற்றிதழை அவர் ஆரம்பித்தார்.
இவர்களோடான பழக்கத்தின் காரணமாயிருக்கலாம், எனது கால்கள் தீவிர இலக்கியத்துள்ளும், மறுபடி ஒரு சிற்றிதழ் துவக்குவதற்கான முயற்சியினுள்ளும் மெதுமெதுவாக இறங்கிக்கொண்டிருந்தது. அது முற்றுமுழுதானதாக வெகுகாலம் பிடிக்கவில்லை.

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...