சிதைவும் கட்டமைப்பும்:7

தேவகாந்தன்


1996ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ‘இலக்கு’ சிறுசஞ்சிகையைக் கொண்டுவருவதென்று நான் தீர்மானித்திருந்த வேளையிலும் தமிழ்நாட்டில் எழுத்துக் கோர்த்து அச்சடிக்கும் மரபார்ந்த முறையே அச்சுத் தொழிலுலகில் அதிகமாக இருந்தது. என் அனுபவத்திலும் விசாரிப்பிலுமாய் காளிதாஸ் பிரஸ் என்ற அச்சகத்தைக் கண்டடைந்தேன். சிறுபத்திரிகையென்பதால், ஒரு கணிசமான குறைந்த தொகைக்கு இதழை அச்சடித்துத் தர இணங்கினார் அச்சக உரிமையாளர். வடக்குப் பகுதித் தமிழ்நாட்டிலிருந்து எப்பவோ ஒரு காலத்தில் அச்சு வேலையைக்கொண்டு வாழ்ந்துவிடலாமென்ற நம்பிக்கையோடு சென்னை வந்த ஒரு குடும்பம் அது. மிக வைதீகமானது. பிரித்தானியர் காலத்துப் பழைய அச்சு எந்திரமொன்றை வைத்துக்கொண்டு வாழப் போராடிக்கொண்டிருந்தது. குடும்பம் முழுவதும் அச்சகத்தில் வேலை செய்தது. அச்சடித்த தாளை மடித்தல், புத்தகம் கட்டுதல், அச்சடித்த பின் அச்சுப் பாரத்தைப் பிரித்தல் என்பனபோன்ற வேலைகளை வீட்டுப் பெண்களே செய்தார்கள். மீதியானதை பள்ளி முடிந்து வந்ததும் அந்த வீட்டுச் சிறுவர்கள் செய்தார்கள். அச்சுக் கோர்ப்பதற்கு மட்டும் ஓரிரு பெண் தொழிலாளிகள் வந்து போய்க்கொண்டிருந்தனர்.

பத்திரிகையைக் கொண்டுவருவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டன. கட்டுரைகளும் கவிதைகளும் கேட்டுக்கொண்டிருந்தேன். தீவிரமாய் எழுதுகிற, வாசிக்கிற, சிந்திக்கிற பேர்களிடமிருந்துகூட கட்டுரைகள் பெற்றுக்கொள்வது சிரமமாகவிருந்தது. கூட்டங்களில் சந்திக்கிற எழுத்தாளர்களிடமெல்லாம் கட்டுரை கவிதைகளுக்குச் சொல்லிவைத்திருந்தேன். பத்திரிகையை 1996 ஜூனில் புதுமைப்பித்தன் நினைவு மலராகக் கொண்டுவருவதென்று ஏற்கனவே தீர்மானித்தாகிவிட்டது. இந் நிலையில் பிரசுர வி~யங்களுக்காக நான் நாயாய்ப் பேயாய் என்று சொல்வார்களே, அந்தமாதிரி அலைந்துகொண்டிருந்தேன். இதற்கெல்லாம் வசதியாக என்னிடம் சைக்கிள் இருந்தது. சென்னையின் தலை பிளக்கும் உச்சி வெய்யிலில் நான் திரியாத இடமில்லை. திரியாத தூரமுமில்லை.

ஜூனும் பிறந்தது. ஆனாலும் தேவையான கட்டுரைகள் வந்துசேரவில்லை. தொடங்கும்போதிருந்த உற்சாகம் இப்போது சோர்வாகிவிட்டது. எண்ணத்தைக் கைவிடுகிற யோசனை எழவில்லையெனினும், இந்த இடத்தில் நான் நிறைய யோசித்தேன்.

ஒரு சிறுபத்திரிகைக்கு காலாண்டு என்பது மிகக் குறைந்த காலம். பொருளாதாரத்தைச் சரி செய்து, வி~யங்களைச் சேகரித்து அடுத்த இதழைக் கொண்டுவர நிச்சயமாக அந்தளவு காலம் தேவைப்படும்தான். ஆனாலும் அந்தக் காலாண்டு கால அவகாசத்திலும்கூட குறிப்பிட்ட சஞ்சிகையின் அடுத்த இதழ் வருமென்பதை யாரும் அறுதியிட்டுக் கூறமுடியாது. ஓற்றை இதழோடு எத்தனையோ சஞ்சிகைகள் நின்றுபோயிருப்பதை சிறுபத்திரிகை வரலாற்றில் பரக்கக் காணமுடியும். ஒரு இதழுக்காக அனுப்பப்படுகிற வி~யம் அந்த இதழில் வெளிவராவிட்டால் மேலும் மூன்று மாதங்களுக்குக் காத்திருக்கவேண்டிய துர்ப்பாக்கியம் அப்படியான இடத்தில் தவிர்க்கமுடியாதபடி நிகழும். அப்போதும் இதழ் வந்தால்தான் படைப்பே வெளிவர வாய்ப்பு. அவ்வாறு காலதாமதத்தால் அல்லது இதழ் நின்றுபோனதால் எழுதிக்கொடுத்த வி~யத்தை இழந்து வருத்தப்பட்ட பலபேரை நானே பார்த்திருக்கிறேன்.

இந்த அவநம்பிக்கையும் அதனாலாலெழுந்த அச்சமும் எழுத்தாளர்கள் அனைவரிடத்திலுமே இருந்ததென்றுதான் சொல்லவேண்டும். அதனால் சிறுபத்திரிகைக்காக ஒரு வி~யதானத்தை எதிர்பார்ப்பது மிகக் க~;டமாகவே இருக்கும். புதுமைப்பித்தன் நினைவு மலருக்கான கட்டுரைகள் வந்துசேராத நிலையில் எஸ்.பொன்னுத்துரை அவுஸ்திரேலியாவிலிருந்து நீண்ட நாட்கள் தங்குகின்ற முடிவோடு சென்னை வருகிறாரென்ற சேதியை அறியப்பெற்றேன்.

என் மனது துளிர்த்தது.

எஸ்.பொ.வின் இலக்கிய வாழ்வு எவ்வளவு கோணல்களைக் கொண்டிருக்கின்றதோ, அவ்வளவுக்கு உன்னதங்களையும் கொண்டதாகும். கவிதை, நாடகம், அங்கதம், கட்டுரை, நாவல் என்று பலதுறை அளாவிய எழுத்துக்குச் சொந்தக்காரராகவிருப்பினும், அவரது சிறப்பு வெளிப்பட்டது அவரது சிறுகதைகளிலேயே என்பதுதான் எனது தீர்மானகரமான எண்ணம். ‘தேர்’, ‘குளிர்’, ‘வீ’ போன்ற அற்புதமான சிறுகதைகளை எழுதிய படைப்பாளி அவர். நான் மாணவனாயிருந்த காலத்தில் அவரது எழுத்துக்களைத் தேடித் தேடி வாசித்திருக்கிறேன். என்போன்ற பல இளைஞர்களுக்கும் அவர் பிடித்தமான எழுத்தாளராகவிருந்தார் அப்போது.

எங்களின் வாசிப்புக்கு ஒரு தளமாக எங்க@ர் வாசிகசாலையைச் சொல்லவேண்டும். தினசரிப் பத்திரிகைகளதும், இந்திய இலங்கைச் சஞ்சிகைகளதும் வாசிப்புக்கு நாம் நாடுகிற முதலிடம் அது. ஏதாவதொரு ஞாயிறில் போகிற போக்கில் ஒரு அ:ண்ணன், ‘டேய், தம்பியள்! இண்டையில் தினகரனிலை பொன்னுத்துரையின்ரை கதை வந்திருக்காம்’ என்றுவிட்டுப் போவார். உடனேயே விழுந்தடித்துக்கொண்டு வாசிகசாலை ஓடுவோம். அங்கே அதற்குள்ளாகவே பொன்னுத்துரையின் கதையினை வாசிப்பதற்கு ஒரு கூட்டம் சேர்ந்துவிட்டிருக்கும். வரிசைபோட்டு படித்துவிட்டுத்தான் வீடு திரும்புவோம். அப்படியொரு எழுத்தாற்றல் பொன்னுத்துரைக்கு அன்று இருந்தது.

இந்த ஆதர்~ம், அவர் கைலாசபதி, சிவத்தம்பி போன்றோர் மீதான தாக்குதலைத் தொடங்கும்வரை தொடர்ந்திருந்தது. பின்னால் நம் ஆதர்~ம் குறைந்துபோயிற்று. நம் விருப்பத்துக்குரிய பேராசிரியர்கள் மீதான எஸ்.பொ.வின் தாக்குதலே இதன் காரணமென்று சொல்லமுடியாது. வசையிலக்கியத்தில் அவர் ஆழ்ந்து செல்லச் செல்ல படைப்பாளுமை வரட்சிப்படத் துவங்கிவிட்டது என்பதே சரி. பொன்னுத்துரையின் எழுத்துக்களில் ஒரு போலி நடை வந்து விழுந்துவிட்டது. கலைத்தரத்தின் குறைபாட்டைக் காணாதவராக பொன்னுத்துரை தன்; ரோ~த்தில் மூர்த்ண்யமாய்ப் பொழிந்துதள்ளிக்கொண்டிருந்தார் வசை. எழுத்தில் மட்டுமில்லை, எந்தவொரு மேடைப்பேச்சானாலும்கூட பொன்னுத்துரைக்கு கைலாசபதி, சிவத்தம்பியை இழுக்காமல் பேச வராது.

அந்தக் காலத்துக்கு சுமார் 20 வரு~ங்கள் கழிய திரும்ப பொன்னுத்துரையைச் சந்திக்கப்போகிற நினைப்பு மிக இனிமையாகவே இருந்தது. பொன்னுத்துரையும் மனைவி சகிதம் வந்துசேர்ந்தார்.

பொன்னுத்துரை வந்ததும் நேரில் பார்த்துப் பேசினேன். என்ன கொடுமை! பொன்னுத்துரை மாறவேயில்லை. இன்னும் பேராசிரியர்கள் கைலாசபதியிலும் சிவத்தம்பியிலும் அதே கோபத்தின் வேகம். இருந்தாலும் தொடர்ந்தும் நாம் சந்தித்தோம். விட்டுவிட்டுப் போய் வேறு யாருடன் ஈழத்து இலக்கியம்பற்றிப் பேசுவது? அப்போது தமிழ்நாட்டில் ஈழத்துப் படைப்பாளிகளாக இருந்தது நான், செ.யோகநாதன், செ.கணேசலிங்கன் ஆகியோரே. மூன்றுபேரும் தனித்தனித் தீவுகள்போல. இதில் செ.க. கொஞ்சம் என்னோடு அணுக்கமாய் வரக்கூடிய மனிதர். இந்த நிலையில் பொன்னுத்துரையை விட்டுவிட எனக்கு மனமில்லை. சந்திப்பதற்கு வசதியாக இருவரது வீடுகளும் சமீபமாகவேயிருந்ததால் தினசரி சந்தித்துக் கொண்டோம். எம்.ஏ.ரகுமானின் ஏஆர் பிரஸ் சந்திப்பின் மையமாகவிருந்தது.

பேட்டியெடுப்பதற்கான நாளும் வந்தது. அவர் நவீன இலக்கியத்தில் காலூன்றியில்;லையென்று அப்போதுதான் தெரிந்தேன். ஆயினும் என்ன? அந்தப் படைப்பாளியை விட்டுவிட்டு அல்லது தவிர்த்துவிட்டு ஈழத்து இலக்கியம்பற்றிப் பேச முடியாது. கே.டானியலை, நீர்வை பொன்னையனைக்கூட ஒரு தேர்வில் ஒதுக்கிவிட முடியும். ஆனால் பொன்னுத்துரை இல்லாத ஈழத்துச் சிறுகதைத் தொகுப்பொன்று தொகுக்கப்படின் அது அபூர்ணம். ஆதலால் நேர்காணலை எடுக்க நான் தயங்கவில்லை. நான் அறிந்தவரையில் அந்த நேர்காணல் மட்டுமே இதுவரை காலங்களில் எடுக்கப்பட்ட பொன்னுத்துரையின் நேர்காணல்களில் கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோர் மீதான வசை இல்லாத நேர்காணலென்று என்னால் துணிந்து சொல்லமுடியும்.

புதுமைப்பித்தன் நினைவு மலரில் எஸ்.பொ. நேர்காணலே சிறப்பம்சம்.

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்